முகப்பு
கட்டுரைகள்

சென்னை வானொலிக்கு பவள விழா

காதுகளுக்கு இனிமை தந்து, கேட்பவரின் நெஞ்சங்களைக் குளிர வைத்து, சிந்தையைத் தூண்டிவிடும் ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலிக்கு வயது 75 - பவள விழா கொண்டாடி வருகிறது.  ஆல் இந்தியா ரேடியோ, ஆகாசவாணி என்ற

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:25 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:26 PM

காதுகளுக்கு இனிமை தந்து, கேட்பவரின் நெஞ்சங்களைக் குளிர வைத்து, சிந்தையைத் தூண்டிவிடும் ஆல் இந்தியா ரேடியோவின் சென்னை வானொலிக்கு வயது 75 - பவள விழா கொண்டாடி வருகிறது.

 ஆல் இந்தியா ரேடியோ, ஆகாசவாணி என்று இந்தியில் அழைக்கப்படும் வானொலி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பிரசார் பாரதி நிறுவனத்தின்கீழ் இயங்கி வருகிறது. கவி ரவீந்திரநாத் தாகூர்தான் வானொலிக்கு ஆகாசவாணி என்று பெயரிட்டார்.

 ஆல் இந்தியா ரேடியோ தொடங்கப்படுவதற்கு முன்பாகவே "இந்திய ஒலிபரப்பு கம்பெனி' என்ற தனியார் நிறுவனம் 1927 ஜூலை 23 அன்று முதன் முதலாக செய்தி அறிக்கையை மும்பை நிலையத்திலிருந்து ஒலிபரப்பியது. அதற்கு ஒரு மாதம் கழித்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொல்கத்தா வானொலி நிலையத்தியிலிருந்து முக்கிய செய்தி அறிக்கை வங்க மொழியில் வாசிக்கப்பட்டது.

Advertisement

 1936 மார்ச் திங்களில் இந்திய ஒலிபரப்பு கம்பெனி கலைக்கப்பட்டதையடுத்து, செய்தி ஒலிபரப்பு சேவை இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு அதற்கு "இந்தியன் ஸ்டேட் ஒலிபரப்பு சேவை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 பின் 8.6.1936-ம் ஆண்டு "ஆல் இந்தியா ரேடியோ' என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 1936-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் நாள் முதல் செய்தி அறிக்கை தில்லியிலிருந்து ஒலிபரப்பானது. 1937-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி "மத்திய செய்திகள் அமைப்பு' என்று செய்திகளை வெளியிடும் பிரிவு தொடங்கப்பட்டது. சார்லஸ் பார்ன்ஸ் அச்செய்திப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவ்வமைப்பின் இயக்குநராக உயர்ந்தார்.

 1939-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போதுதான் வானொலியின் மகத்துவம் உலகுக்குத் தெரியவந்து, அதன் வளர்ச்சிக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்தது. வெளிநாட்டுச் செய்திகளைக் கண்காணிக்க வெளிநாட்டு செய்திகள் கண்காணிப்பு சேவை 1939-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. செய்திகள் இயக்குநரகத்தின் கீழ் வெளிநாட்டு செய்திகள் ஒலிபரப்புப் பிரிவு 1943-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 1945-ஆம் ஆண்டு முதல் இந்திய மொழிகள் பலவற்றில் மத்திய செய்திகள் அமைப்பு செய்திகள் ஒலிபரப்புச் சேவையை வெளிநாட்டுச் செய்திகளுடன் விரிவுப்படுத்தி தொடங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் ஆல் இந்தியா ரேடியோவின் தரமும் எண்ணிக்கையும் உயர்ந்து, மக்களின் இதயங்களில் இரண்டறக் கலந்தது.

 அதன் பிறகு மத்திய அளவிலும், மாநில அளவிலுமாக செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

 16.6.1938 அன்று சென்னை வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது நிலைய இயக்குநராக விக்டர் பரஞ்சோதி இருந்தார்.

 இவர் லண்டன் பி.பி.சி-யில் பயிற்சி பெற்றவர். துணை இயக்குநராக ஜி.டி.சாஸ்திரி இருந்தார். 1939-ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.

 வாரியார் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார் போன்ற பலரின் ஆன்மிகச் சொற்பொழிவுகள், இலக்கியச் சொற்பொழிவுகள் வானொலி மூலம் ஒலிபரப்பாகி அவர்களின் புகழைப் பரப்பின. கர்நாடக இசைக் கச்சேரிகளைக் கேட்க வானொலி ஆற்றிய பங்கு அளவிட முடியாதது.

 இப்போதும்கூட காலையில் ஒலிபரப்பாகும் ஆன்றோர் சிந்தனை, மாநிலச் செய்திகள், பிரபலங்களின் தத்துவம், சுற்றுப்புறச் சூழல் குறித்த தகவல்கள், தமிழ்ச் சுவை, நகர் வலம், காந்தி அஞ்சலி, நேயர் விருப்பம், உங்கள் விருப்பம், பிரபலங்களின் கவிதைகள், நேயர் பங்கு பெற்று தங்களது கருத்துகளை ஒலிக்கும் நிகழ்ச்சிகள், மதியம் ஒலிபரப்பாகும் பூவையர் பூங்கா, சட்டசபையில் இன்று, உழைப்போர் உலகம், விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் ஆகியன செவிக்கு விருந்து படைத்து உள்ளத்தைச் செம்மைப்படுத்துகிறது.

 வானொலி அண்ணா என்று இப்போதும் அன்போடு அழைக்கப்படும் கூத்தபிரான் வழங்கிய நிகழ்ச்சிகளை அப்போது கேட்டு, இப்போது 50 வயதைக் கடந்தவர்கள் இன்றும் நினைவு கூருகிறார்கள்.

 வானொலி நாடக நடிகர்கள் பார்வதி ராமநாதன், எம்.கே.மூர்த்தி, ஜெயங்கொண்டான்.

 ஹெரான் ராமசாமி, பூரணம் விசுவநாதன் போன்ற ஒப்பற்ற குரல்வளம் மிக்கவர்களின் நாடகங்களைக் கேட்கும் போதே நிகழ்ச்சிகள் மனத் திரையில் ஓடும். கண்கள் குளமாகும்.

 விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு அக்கால இளைஞர்களைப் பெரிதும் ஈர்த்தது.

 குறிப்பாக உங்கள் விருப்பம்., இரவில் தேன் கிண்ணம், வண்ணச்சுடரில் ஒலிபரப்பாகும் நாடகங்கள், இந்திப் பாடல்கள் போன்றவை இதில் அடங்கும்.

 வானொலியில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றிய தொழில்நுட்ப ஊழியர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், செய்திகளை வாசித்தோர், கலைஞர்கள் என்று அனைத்துத் தரப்பாரையும் இந்த நேரத்தில் மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை சிறப்புப் பரிசுகளுடன் நினைவுப்பரிசுகளும் வழங்கி பொது நிகழ்ச்சியில் கெளரவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.