கட்டுரைகள்

மாமனிதருக்குச் செய்யும் மரியாதை

 அன்று முதல் இன்றுவரை அறச்செயல் புரிவதே தமிழர்தம் வாழ்வியல் பண்பாடாகப் போற்றப்படுகிறது. அறவியல் இலக்கியங்கள் பல்கிப் பெருகியதன் காரணமும் அதுவேதான். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளும் அடைவதைய

உதயை மு. வீரையன்

 அன்று முதல் இன்றுவரை அறச்செயல் புரிவதே தமிழர்தம் வாழ்வியல் பண்பாடாகப் போற்றப்படுகிறது. அறவியல் இலக்கியங்கள் பல்கிப் பெருகியதன் காரணமும் அதுவேதான். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளும் அடைவதையே வாழ்வின் பயனாகக் கருதினர்.

 இந்த அறச்செயல்கள் எண்ணற்றவை. அன்ன சத்திரம் வைத்தல், ஆலயம் கட்டுதல், சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை நடுதல், நீர் ஊற்றுகள் அமைத்தல் என்னும் அறச்செயல்களில் ஏழைகளுக்கு எழுத்தறிவிப்பதையே மிகச் சிறந்த புண்ணியமாகப் போற்றி வந்தனர்.

 "அன்ன யாவினும் புண்ணியம் கோடி

 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்''

 -என்று பாரதி பாடியதும் அதனால்தான்.

 ஏனைய தருமங்கள் எல்லாம் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்படுவன. ஆனால், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஏழையருக்கு எழுத்தறிவிப்பதே அறங்களில் தலைசிறந்தது எனப் போற்றி வந்த காலம் மாறிவிட்டது.

 இன்று கல்வியளிப்பது பெரிய வணிகமாகத் தலைதூக்கி நிற்கிறது. இந்தத் தலைகீழ் மாற்றம் சமுதாயச் சீரழிவின் அடையாளமாகும் என்றே பெரியவர்கள் கருதுகின்றனர்.

 வறுமையே எட்டிப் பார்க்காத வளமையான தமிழ்நாட்டில் வள்ளல்களுக்குக் குறைவில்லை. பண்டைய தமிழ்நாட்டில் கடையேழு வள்ளல்கள் இருந்தனர்; பிற்காலத்திலும் கல்விக்கென அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் இல்லாமல் இல்லை.

 அண்ணாமலைச் செட்டியார், அழகப்பச் செட்டியார், கலவல கன்னன் செட்டி, பச்சையப்ப முதலியார், என்.கே. திருமலாச்சாரியார், மேல்விசாரம் சி. அப்துல் ஹக்கீம் - இன்னும் பெயர் தெரியாத கல்வி வள்ளல்களை மறக்க முடியுமா? அவர்களுடைய பூத உடல் மறைந்தாலும், அவர்களுடைய புகழ் மறையவில்லை.

 அவர்கள் விட்டுச்சென்ற கல்விக்கூடங்கள் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம், செட்டிநாடு எனத் தமிழ்நாடெங்கும் அவர்களின் புகழ் பரப்பிக் கொண்டிருப்பதைக் காணலாம். அரசுப் பள்ளிகளோடு அரசு உதவிபெறும் பள்ளிகளும் கைகோத்துக் கொண்டு அமைதியாகச் செயல்பட்டு வந்தன. அந்த அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்தோடு "மெட்ரிகுலேஷன்' என்னும் தனியார் சுயநிதிப் பள்ளிகள் புற்றீசல்களாகப் புறப்பட்டுள்ளன.

 குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 1-4-2009 முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. என்றாலும் இந்தச் சட்டம் கல்வித்துறையில் ஏதேனும் மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறதா?

 நமது அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய பெருமக்கள் 10 ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி வழங்கப்படும் என்று 1950-ல் உறுதியளித்தனர். ஆனால், அதற்கு ஒரு சட்டம் இயற்றவே மேலும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.

 பள்ளியில் சேர்க்கைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பெற்றோரையோ பிள்ளைகளையோ நுழைவுத் தேர்வுக்கோ நேர்காணலுக்கோ உள்படுத்தக் கூடாது. எந்தக் குழந்தையையும் உடல் ரீதியான தண்டனைக்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாக்கக் கூடாது.

 அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்தி அதில் நான்கில் மூன்று பங்கு இடங்களில் பெற்றோர்களை இடம்பெறச் செய்ய வேண்டும்.

 இதற்கெல்லாம் மேலாக அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்களை நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், நடந்தது என்ன? பல தனியார் பள்ளிகள் அவ்வாறு மாணவர்களைச் சேர்க்க மறுத்து வருகின்றன.

 இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வகைசெய்யும் கல்வி உரிமைச்சட்டம் பல்வேறு குறைபாடுகள் நிறைந்ததாக உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

 அருகில் வசிக்கும் நலிவடைந்த பிரிவு குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் குறைந்தபட்சம் 25 விழுக்காடு மாணவர்களுக்கு தங்கள் பள்ளியில் பயில்வதற்கான அனுமதியைத் தனியார் பள்ளிகள் வழங்க வேண்டும் என்று 2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான செலவை அந்தப் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் என்றும் அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 எனினும் நலிவடைந்த பிரிவினர் யார் அல்லது வசதி படைத்தோர் யார் என்பதற்கான எவ்வித வரையறையும் அந்தச் சட்டத்தில் கூறப்படவில்லை. ஒரு பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அருகமைப் பள்ளிகள் இருக்கும்போது, எந்தப் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்கும் உரிமை பெற்றோருக்கு உள்ளது என்பது பற்றியும் இந்தச் சட்டத்தில் எதுவும் இல்லை.

 இந்தச் சட்டத்தின்படி 25 விழுக்காடு நலிவடைந்த மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது பற்றியும் எதுவும் கூறப்படவில்லை.

 இந்தச் சட்டத்தின்படி 25 விழுக்காடு இடங்கள் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடும் இல்லை.

 கல்வி உரிமைச் சட்டத்தின்படி தங்கள் பள்ளியில் 25 விழுக்காடு இடங்கள் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகம் நியாயப்படுத்துமானால் அதுவே அந்தச் சட்டத்தை அமல்படுத்தியதற்குப் போதுமானது என்பதே இப்போதைய நிலையாக உள்ளது.

 மாணவர் சேர்க்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர் ஒருவர் உரிமை கோருவதற்கு இந்தச் சட்டத்தில் எவ்வித இடமும் அளிக்கப்படவில்லை.

 தங்கள் அருகமைப் பள்ளியொன்றில் தன் குழந்தைக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால், தொடர்புடைய அரசு அதிகாரிகளைத்தான் பெற்றோர் அணுக முடியுமே தவிர, இந்தச் சட்டத்தின்படி பள்ளி நிர்வாகத்திடம் அவர்களால் உரிமை கோர முடியாது. இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 அரசமைப்புச் சட்டம் வழங்கிய உறுதிமொழியின்படி 60 ஆண்டுகள் கழித்து கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தில் இத்தனை குளறுபடிகள் இருக்குமானால், அரசாங்கத்தின் மேல் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? குடிமக்களை உயர்த்தி, நாட்டையும் உயர்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருக்குமானால், அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை எப்போதோ நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டாமா?

 ஆரம்பக் கல்விதான் இப்படியென்றால் உயர் கல்வியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏழை-எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. உலக மயமும், தனியார் மயமும் இந்திய இறையாண்மைக்குச் சவால் விடுகிறது. வெளிநாடுகளின் நெருக்குதலுக்கு இந்திய அரசாங்கம் அடிபணிகிறது.

 அதனால்தான் இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் "வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அனுமதித்தல் மற்றும் செயல்படுதலை முறைப்படுத்தும் மசோதா - 2010' தேசிய சட்டக் கல்வி மசோதா - 2011 ஆகிய மசோதாக்களைச் சட்டமாக்கி மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.

 இந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சாதாரண மக்களுக்கு கொஞ்சநஞ்சம் கிடைத்துவரும் கல்வியும் கிடைக்காமலேயே போய்விடும். மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்கு உற்பத்தி செய்யப்படும் இயந்திரங்களாக மாணவர்கள் உருவாக்கப்படும்போது அவர்களுக்குத் தாய்நாட்டுப் பற்று எப்படி வரும்? நமது பண்பாடும், கலாசாரமும் எப்படி வளரும்?

 அத்துடன் பாடதிட்டம், நிர்வாகம், துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட அதிகாரங்கள் மத்திய அமைப்பிடம் குவிந்துவிடும்; இது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது இல்லையா? அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வியைத் தம் பொறுப்பிலிருந்து விலக்கி, தனியாரின் கையில் ஒப்படைத்து விடுவதற்கான ஏற்பாடாக இந்தச் சட்டங்கள் அமையும் என்று தேசிய கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர்.

 இந்த அச்சத்தின் காரணமாகவே நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். தேசிய சட்டக்கல்வி மசோதா சட்டமானால் தற்போதுள்ள மாநில பார் கவுன்சில் மற்றும் இந்திய பார் கவுன்சில் அதிகாரம் பறிபோகும். வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

 கடந்த ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை நாடு கோலாகலமாகக் கொண்டாடியது. அந்த மாமனிதரின் பிறந்த நாளைத் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த நன்னாளில் கல்வியின் இப்போதைய நிலைமையை எண்ணிப் பார்ப்பது பொருத்தமாகும்.

 "எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் உடை, எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் வேலை - இதுவே எனக்குப் புரிந்த சோசலிசம்...' என்று தெளிவாக எடுத்துக் கூறினார் காமராஜர். விவாதிப்பதைவிடவும், போதிப்பதைவிடவும், சாதிப்பதே சாலச் சிறந்தது என்று அவர் கருதினார்; அப்படியே செயல்பட்டார்.

 ஏழை-எளிய மக்களின் பிள்ளைகளும் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளைப்போல கல்வி பெற வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் வறுமையும், பசியும் போக்கப்பட வேண்டும் என்பதற்காகவே முதன்முதலில் "மதிய உணவுத் திட்ட'த்தைக் கொண்டு வந்தார். 1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டமே சத்துணவுத் திட்டமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; உலகமே வியக்கிறது.

 "அனைவரும் படிக்க வேண்டும்; அதற்குத் திட்டம் தாருங்கள்; பணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம்' என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். தாம் படிக்காத நிலையிலும் தம் நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக ஓடி ஓடி உழைத்தார். இன்றைய கல்வியின் வளர்ச்சிக்காக அன்றே அடிக்கல் நாட்டினார் இந்தப் படிக்காத மேதை.

 ""கற்கை நன்றே கற்கை நன்றே

 பிச்சை புகினும் கற்கை நன்றே''

 - என்று பாடுகிறது நீதிநூல்.

 ஏழ்மையால் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதே காமராஜரின் கருத்தாகவும் இருந்தது; அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி தர வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என்பதைச் சாதித்துக் காட்டியவர் அவர்.

 மாமனிதர்கள் எப்போதும் பிறப்பது இல்லை; எப்போதாவது பிறக்கின்றனர். அவர்களது கனவுகளை நிறைவேற்றுவதே நாடு அவர்களுக்குச் செய்யும் மரியாதையாகும்.

 ""மாணவர் சேர்க்கை வெளிப்படையாக இருக்க

 வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, ஒரு

 குறிப்பிட்ட பள்ளியில் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர் ஒருவர் உரிமை கோருவதற்கு இந்தச் சட்டத்தில் எவ்வித இடமும் அளிக்கப்படவில்லை''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT