முகப்பு
கட்டுரைகள்

ராகுலின் தப்புக் கணக்கு!

உத்தரப் பிரதேசத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கப் போராடியும் காங்கிரஸýக்குக் கிடைத்த பலன் படுதோல்வியாகும். "இந்தியாவின் இளவரசர்' என்று வர்ணிக்கப்படும் காங்கிரஸ் பொதுச்செயலர் ர

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கப் போராடியும் காங்கிரஸýக்குக் கிடைத்த பலன் படுதோல்வியாகும். "இந்தியாவின் இளவரசர்' என்று வர்ணிக்கப்படும் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலின் தோல்வியாகவே இதை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ராகுலின் அரசியல் பயணம் சரியான திசையில் செல்கிறதா என்பதுதான் இப்போது பலருக்கும் எழுந்திருக்கும் கேள்வி.

இதேபோன்ற நிலை கடந்த ஆண்டு ராகுல் பொறுப்பேற்று பிரசாரம் மேற்கொண்ட பிகார் சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஏற்பட்டது. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலங்களின் சட்டப் பேரவைப் பொதுத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் எதிர்காலத்தை மங்கச் செய்வதாகவே உள்ளன. ராகுலுக்கு இத்தேர்தல்கள் பெரும் சவாலை முன் வைத்துள்ளன.

1980-ல் இளைஞர் காங்கிரûஸ வலுப்படுத்திய சஞ்சய் காந்தி, திறமையான இளைஞர்கள் பலரை அரசியலுக்குக் கொண்டு வந்தார். இவர்களில் பலர் இன்று கட்சியிலும், ஆட்சியிலும் அங்கம் வகித்து வருகின்றனர். இதேபோல், இளைஞர், மாணவர் அமைப்புகளையும் வலுப்படுத்த ராகுல் விரும்பி, அதற்கான நடவடிக்கையையும் எடுத்தார்.

"அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும்' என ராகுல் அழைப்பு விடுத்தாலும், காங்கிரஸிலும், ஆட்சி அதிகாரங்களிலும் வாரிசுத் தலைவர்கள் அங்கம் வகிப்பது தொடர்கதையாக உள்ளது. இளைஞர்கள் கோட்டாவில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யா சிந்தியா உள்ளிட்டோரும், மக்கள் பிரதிநிதிகள் பலரும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள்தான்.

கூட்டணிக் கட்சிகளிடம் ராகுல் நெருக்கம் காட்டுவதில்லை. இதனால், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வெறுப்பை சம்பாதித்ததிலும், பல கட்சிகள் வெளியேறியதற்கும் முக்கிய காரணகர்த்தாவாகவே ராகுல் மாறிவருகிறார்.

8 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசில் முக்கிய துறைகளை தாரை வார்த்தும், தமிழகத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி புரிய நிபந்தனையற்ற ஆதரவு அளித்தும் வந்த காங்கிரஸ் மீதே திமுக முன்னணித் தலைவர்கள் சாடி வருகின்றனர். இதற்குக் காரணம், தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் சந்திக்காததே என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒவ்வாதக் கூட்டணியாகவே இருந்தது. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.

2008-ம் ஆண்டில் அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பெரும்பங்கு வகித்தவர் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். இவருடனான கூட்டணி அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலிலும், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலும் கூட தொடரவில்லை. இதேபோல், மத்திய அரசோடு இணக்கமாக இருந்த ராஷ்டிரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக ஜன சக்தி தலைவர் ராமவிலாஸ் பாஸ்வான் ஆகியோருடனான கூட்டணியும் 2009 மக்களவைத் தேர்தலின்போதும், அடுத்து நடைபெற்ற பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின்போதும் தொடரவில்லை.

ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர், அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ உரிய அங்கீகாரம் கூட அளிக்கப்படவில்லை. அவர் நடத்திய ஆறுதல் யாத்திரைக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டதோடு, சமரசமும் செய்யப்படவில்லை.

இவரைப் புறக்கணித்த வேளையில், பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சீரஞ்சீவிக்கு முக்கியத்துவம் அளித்து கட்சியில் சேர்த்ததால், ஜெகன் மோகன் ரெட்டியும் தனிக்கட்சியைத் தொடங்கி காங்கிரஸýக்கு எதிராகவும் சென்றுவிட்டார்.

இதேபோல், புதுச்சேரியிலும் நடைபெற்ற கோஷ்டி பூசலையும் சரிசெய்யாமல் விட்டதால், ரங்கசாமி தனிக்கட்சியைத் தொடங்கி, ஆட்சியை பிடித்துள்ளார். கட்சிப் பணிகளை முழுமையாக ராகுல் மேற்கொண்ட நேரத்திலேயே, காங்கிரஸி ல் இருந்து பிரிந்து 2 கட்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இலங்கைத் தமிழர்கள், தெலங்கானா, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரம் போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு சரியான அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை என்பது நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

"ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிறேன்' என்பது ராகுலின் மற்றொரு பேச்சு. ஆனால் 2ஜி, ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்ட ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகள் காங்கிரஸ் மீது அவநம்பிக்கையைத்தான் மக்களிடையே விதைத்துள்ளது.

மேலும், ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை ஒடுக்க முயன்ற காங்கிரஸின் நடவடிக்கைகள், காங்கிரûஸ ஒரு ஊழல் கட்சியாகவே காட்டின, மக்களின் மனதில் அதிருப்தியை வளர்த்தன.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) எனும் திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. பெரிதும் வரவேற்கப்பட்ட இத்திட்டத்தின் மூளையாக இருந்தவர் ராகுல் என்று சொல்லப்பட்டது. அரசியலின் தொடக்கத்தில் அருமையானத் திட்டத்தை ராகுல் கொண்டு வந்ததால் பாராட்டப்பட்டார்.

ஏழைகளின் வீட்டுக்கு சென்று சாப்பிடுதல், மக்களோடு நெருங்கிப் பழகுவது போன்ற தோரணை, கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடனான சந்திப்பு, இளைஞர்களுடனான சந்திப்பு, தெருமுனைக் கூட்டங்களில் பங்கேற்றல் போன்ற எண்ணற்ற வியூகங்களை அமைத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டார்; ஆனால், கிடைத்தது தோல்விகள்தான்!

நொய்டா அருகே தொழிற்பேட்டை அமைப்பதற்காக விவசாயிகளின் நிலம் பறிக்கப்படுவதாகப் புகார் எழுந்தவுடன், அதிரடியாக அங்கு சென்று போராட்டம் நடத்திய ராகுல் கைதும் செய்யப்பட்டார்.

எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் ராகுல் உணவருந்திவிட்டால், அச் செய்தி ஊடகங்களில் இடம்பெற்றுவிட்டால் அக் கிராம மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுவிடுமா? இதுதான் அடித்தட்டு மக்களின் கேள்வி. இதுதான் 5 சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் எதிரொலித்திருக்கிறது. ராகுலை கொண்டாடிய ஊடகங்கள் இப்போது பின்வாங்கத் தொடங்கிவிட்டன.

நேரு குடும்பத்தின் வாரிசு காங்கிரஸின் தலைவராக வருவதற்கு மக்களின் ஆதரவு தேவையில்லை. ஆனால் பிரதமராவதற்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.