முகப்பு
கட்டுரைகள்

புதிய பணவீக்கக் கொள்கை

இந்தியாவின் கார்ப்பரேட் செக்டாரையும், நிதியமைச்சரையும் 17-4-2012 அன்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஷயம், ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் ரெப்போ வட்டியை அரை சதவிகிதம் குறைத்ததுவே.  சென்ற ஆண்டு சுப்பா

கட்டுரைகள்

புதிய பணவீக்கக் கொள்கை

இந்தியாவின் கார்ப்பரேட் செக்டாரையும், நிதியமைச்சரையும் 17-4-2012 அன்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஷயம், ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் ரெப்போ வட்டியை அரை சதவிகிதம் குறைத்ததுவே.  சென்ற ஆண்டு சுப்பா

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

இந்தியாவின் கார்ப்பரேட் செக்டாரையும், நிதியமைச்சரையும் 17-4-2012 அன்று மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஷயம், ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் ரெப்போ வட்டியை அரை சதவிகிதம் குறைத்ததுவே.

 சென்ற ஆண்டு சுப்பாராவ், ""எக்காரணம் கொண்டும் பணவீக்கத்தை அனுமதிக்க முடியாது'' என்று பேசியவர், இன்று வளர்ச்சியைக் கவனத்தில் கொள்வதாகப் பேசுவதைக் கவனித்தால் நிதியமைச்சர் தரும் நெருக்குதலைப் புரிந்துகொள்ளலாம்.

 நிதிக் கொள்கையை நிதியமைச்சர் வகுத்தாலும் அவர் மனம்போன போக்கில் செலவுகளை அனுமதித்து நோட்டை அச்சடித்து வழங்கும்படி ரிசர்வ் வங்கியை நிர்பந்திக்க முடியாது.

 புழக்கத்தில் எந்த அளவுக்குப் பணம்விட வேண்டும் என்பதில் பல சட்டதிட்டங்கள் உள்ளன. பணப்புழக்கம் உயர்ந்தால் வளர்ச்சி ஏற்படுகிறதோ இல்லையோ பணவீக்கம் அதிகமாகும்.

 பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே ரெப்போ வட்டி கூட்டப்படுகிறது. உணவு மொத்தவிலைக் குறியீட்டெண் சற்றுக் குறைந்ததைக் காரணம் காட்டி ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதத்திலிருந்து 8-ஆகக் குறைத்துள்ள பின்னணியில் நிதியமைச்சகத்தின் நெருக்கடி புலனாவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

 மொத்தவிலைக் குறியீட்டெண் 7 சதவிகிதமாகக் குறைந்தாலும் நுகர்வோரைப் பாதிக்கும் சில்லறை விலைக் குறியீட்டெண் 9 சதவிகிதத்தில் உள்ளது. நெல்விலை குறைந்தாலும் அங்காடியில் அரிசி விலை குறையவில்லை.

 வளர்ச்சி 6.1 சதவிகிதமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டதால் வட்டி விகிதம் தளர்த்தப்பட்டது என்று கூறப்படுவதற்கு எதுவும் பொருள் உள்ளதா என்று யோசிப்பது நல்லது. வளர்ச்சிக்கும் வட்டிக்கும் உள்ள தேவை - வழங்கல் நிலை தெளிவாக இல்லை.

 வளர்ச்சி ஏன் குறைகிறது? தேவை - வழங்கல் கொள்கையில் பொருத்தம் குலையும்போது வளர்ச்சி குன்றுகிறது.

 தேவைப்பக்கம் உள்ள செலவினங்களில் நுகர்வுச் செலவு, முதலீட்டுச் செலவு, அரசுச் செலவு ஆகியவை உள்ளன.

 வழங்கல் பக்கம் உள்ள வரவுகளில் தொழில் - வேளாண்மை உற்பத்தி அல்லது ஜி.டி.பி என்ற ஒட்டுமொத்த உற்பத்திகளின் வருமான மதிப்பு.

 தேவை - வழங்கல் ஆற்றலைச் சீர்குலைய வைக்கும் சக்திகளில் ஏற்றுமதி - இறக்குமதிச் சமன்நிலை, அனைத்துலக எண்ணெய் விலை, அனைத்துலக உணவு விலை என்று பல உள்ளன.

 இன்று ரூபாயின் நாணய மதிப்பு பலவீனமாயுள்ளது. இந்தப் பலவீனத்துக்குக் காரணமே பணவீக்கம். வட்டிக்குறைப்பால் இந்தப் பலவீனம் மோசமாகும்.

 இந்தப் பலவீனத்தால் இறக்குமதி மதிப்பு உயர்ந்து ஏற்றுமதி மதிப்பு குறைந்தவண்ணம் உள்ளது. இந்த வர்த்தகப் பற்றாக்குறையைச் சரிப்படுத்தாமல் வட்டியைக் குறைப்பதால் ஒரு நன்மையும் இல்லை. தவிரவும் மத் திய அரசு ஏப்ரல் - செப்டம்பர் 2012 - காலகட்டத்தில் 3,70,000 கோடி ரூபாய் பொதுக்கடன் பெறத் திட்டமிட்டுள்ளது.

 இந்தப் பணம் புழக்கத்தில் வரும்போதும் தேவை - வழங்கல் சமன்பாட்டைச் சீர்குலைத்துப் பணவீக்கத்தையே ஏற்படுத்தும்.

 தேவைகளின் பக்கத்தையும் வழங்கலின் பக்கத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வளர்ச்சியும் பணவீக்கமும் தேனிலவு நிகழ்த்தி வருவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

 எனவே பணவீக்கக் கரு என்ற புதிய அகராதியைக் கற்பித்துள்ளனர். இந்தப் பணவீக்கக் கரு என்பது சிரஞ்சீவி. எந்தக் காலகட்டத்திலும் இருக்கும்.

 குறிப்பாக உணவு, எரிசக்தி எண்ணெய் விலை ஏற்றத்தைப் பற்றிப் பொருள்படுத்தாமல் வளர்ச்சிச் சக்கரத்தை உருட்டுவதற்குப் பணவீக்கக் கருவின் ஆட்சியை நீடிக்கச் செய்வதுதான் புதிய பணவீக்கக் கொள்கை.

 வளர்ச்சியுற்ற மேலைநாடுகளில் பணவீக்கக் கருவின் நீட்சி போற்றப்படுகிறது. அங்குள்ள மக்களின் வரவு - செலவுக் கணக்கில் உணவு - எரிபொருள் எண்ணெய் வகிக்கும் பங்கு குறைவு. எல்லாவற்றிலும் அமெரிக்காவைப் பின்பற்றும் நாம் பணவீக்கக் கொள்கையை மட்டும் விட்டு வைப்பானேன்?

 இந்தியாவில் இப்படிப்பட்ட பணவீக்கக் கருவை நிலைப்படுத்த முயலும்போது நிறைய சிக்கல் ஏற்படும். நுகர்வோர் செலவுகளில் இந்தியாவில் உணவும் எரிபொருளும் வகிக்கும் பங்கு வளர்ச்சியுள்ள நாடுகளைப்போல் குறைவானது அல்ல.

 ஆகவே, எந்த நிலையிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினால்தான் விலைவாசி குறையும்.

 குளத்து வேலைத் திட்டம், இலவச அரிசித் திட்டம் போன்ற உற்பத்தித்தன்மையில்லாத செலவினங்களினால் ஓரளவுக்குத்தான் ஏழைகள் "பணவீக்கக் கரு' நிவாரணம் பெறலாம் என்றாலும் தொழில் பொருள் உற்பத்தி மூலம் வருமானம் பெருகினால்தான் பணவீக்கம் கட்டுக்குள் வரும்.

 ரெப்போ வட்டி அரை சதவிகிதம் குறைந்துவிட்டதால் தொழில் முதலீடு பெருகுமா - வர்த்தக முதலீடு பெருகுமா என்று யோசித்தால், இதனால் நிவாரணம் பெறக்கூடியவர்கள் வீட்டு வசதி - கட்டுமானத் தொழில் முனைவோர்கள் மட்டுமே.

 இது ஒட்டுமொத்த ஜி.டி.பி கணக்கில் வராது. இந்த ஆண்டு முழுவதும் 6.5 சதவிகிதம் பணவீக்கக் கரு நிலை பெறுவதுடன் இதர பொருள்களின் விலை ஏற்றத்தால் இந்த 6.5 சதவிகிதம் பணவீக்கம் 8 அல்லது 9 சதவிகிதம் வரை உயர்ந்தாலும் வியப்பில்லை.

 கடந்தகாலம்வரை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடும் பணத்தின் அளவு ஒட்டுமொத்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை தேவையால் உயரக்கூடிய வருமானத்தால் பெருக்கி, கூடவே 4.5 சதவிகிதப் பணவீக்கத்தை அனுமதித்து கரன்சி நோட்டுகளை அச்சடிப்பது மரபு.

 இப்போது புதியதோர் பணவீக்கத்தை அனுமதித்து, அதாவது 6.5 சதவிகித பணவீக்கம் நிலைத்திருக்கும் அளவில் கரன்சி நோட்டுக்களை அச்சடித்து விநியோகமாகப் போகிறது.

 சமீபத்தில் குறைக்கப்பட்ட ரெப்போ வட்டிவிகிதம் கிராமத்திலோ நகரத்திலோ வாழ்ந்து வரும் நடுத்தர வர்க்கத்துக்கு நன்மை தருமா?

 குறைந்த வட்டி விகிதம் என்பது விவசாயத்துக்கோ ஏற்றுமதிக்கோ பொருந்தாது. மேற்படி இரண்டு துறைகளும் எப்போதும் குறைந்த வட்டிகொண்டு பலன் பெறுகின்றன.

 விவசாயக்கடன் வட்டிக் குறைப்பு விவசாயிகளுக்கு அல்ல. விவசாய இடுபொருளாகிய உரம், பூச்சிமருந்து, இயந்திர விற்பனையாளர்களுக்கு உதவும்.

 முன்பெல்லாம் கிராமங்களில் விலைவாசி குறைவாகவும் நகரங்களில் விலைவாசி கூடுதலாகவும் இருக்கும். இப்போது எல்லா ஊர்களிலும் விலைவாசி கூடிக்கொண்டேதான் செல்கிறது. தொழில்துறையைப் பொருத்தவரை, ஒரு பொருளின் ஆக்க மதிப்பில் வட்டி விகிதம் பெறும் பங்கு அற்பமே.

 இதைத் தொழில் நிறுவனங்களின் நிதி அறிக்கை - ஆடிட்டர் அறிக்கைகளின் மூலம் நிரூபிக்கலாம். ஆகவே, இந்த வட்டிக் குறைப்பால் தொழில் உற்பத்திப் பொருள் விலை குறைய வாய்ப்பே இல்லை.

 கார்ப்பரேட் செக்டாருக்கு அரை சதவிகித வட்டிக் குறைப்பு என்பது அவர்களின் பையில் போடும் லாபமே. மக்கள்தான் விலை ஏற்றத்தைப் பொறுத்துக்கொண்டு புதிய பணவீக்கக் கொள்கையை வரவேற்றுத் தோள் கொடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →