தேவை தரமான தரநிர்ணய அமைப்புகள்!
ஒரு நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து அதன் தரம் உயர்ந்துள்ளதா, தாழ்ந்துள்ளதா என்று அறிவிப்பதற்கான தகுதியை எந்த ஓர் அமைப்புக்கும் எவரும் இதுவரை வழங்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, ஐ.எம்.எப
ஒரு நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து அதன் தரம் உயர்ந்துள்ளதா, தாழ்ந்துள்ளதா என்று அறிவிப்பதற்கான தகுதியை எந்த ஓர் அமைப்புக்கும் எவரும் இதுவரை வழங்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, ஐ.எம்.எப் என்கிற சர்வதேச நிதியம் ஆகியவையும் ஒரு நாட்டின் தரநிர்ணயத்திற்கான விதிமுறைகளை வகுக்கவில்லை.
ஆனால், பல ஆண்டுகளாக சில மதிப்பீடு நிறுவனங்கள் பல நாடுகளின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து மதிப்பீடுகள் வழங்கி வருகின்றன. இந்த மதிப்பீடுகள் தலைப்புச் செய்திகள் ஆகின்றன. இந்த மதிப்பீடுகளுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவத்தால், உலக அளவில் இது ஒரு தாக்கத்தை உருவாக்குகிறது. இதனால், அந்த நாடுகளுக்கு பொருளாதார ரீதியில் நன்மையோ தீமையோ ஏற்படுகிறது என்பது உண்மையே.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தரநிர்ணய அமைப்புகள் சர்வதேச அளவில் பல உள்ளன. அவற்றில் "ஸ்டாண்டர்டு அண்ட் பூர்' மற்றும் "மூடீஸ்' என்கிற இரண்டு நிறுவனங்கள் இப்போதைக்கு பிரபலமாகத் திகழ்கின்றன.
இந்த நிறுவனங்கள் பொருளாதார தரவரிசையை எப்படி வரிசைப்படுத்துகின்றன என்றால், பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கிரேடு வழங்குவது போல், வரிசைப்படுத்துகின்றன. அஅஅ என்பது முதலிடம்; அஅ+ என்பது இரண்டாவது இடம். அதன் பிறகு அஅ, அஅ-, ஆஆஆ+, ஆஆஆ, ஆஆஆ- என விரிகிறது.
குறிப்பிட்ட இடைவெளியில் மறு பரிசீலனை செய்து தரவரிசையை தேவைப்பட்டால் மாற்றுவார்கள்.
சில நேரங்களில் "ஸ்டாண்டர்டு அண்ட் பூர்' கொடுக்கும் தரத்தை, மற்றொரு நிறுவனமான "மூடிஸ்' ஒப்புக்கொள்வதில்லை. ஒரு நிறுவனம் உயர்ந்த மதிப்பீடு கொடுக்கும்போது, இன்னொரு நிறுவனம் குறைந்த மதிப்பீடு கொடுத்ததும் உண்டு.
கடந்த ஆண்டு (2011) இவர்கள் அமெரிக்காவுக்கு அஅஅ யிலிருந்து அஅ+ ஆக தரத்தை மாற்றினார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் தரத்தையும் அஅஅ யிலிருந்து அஅ+ ஆக குறைத்தார்கள்.
இப்படி தரம் குறைக்கப்பட்ட நேரத்தில், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் கடும் கண்டனக்குரல் எழுப்பினார்கள். அமெரிக்கா பற்றிய அடிப்படைத் தகவல்களையும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கியமான செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே தரவரிசையை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது என்று குற்றம் சாட்டியது அமெரிக்கா. பிரான்ஸ் நாடும் அதேபோல் குற்றம் சாட்டியது.
சமீபகாலம் வரை, இந்தியாவுக்கு ஆஆஆ+ தரம் வழங்கப்பட்டிருந்தது. இந்தியப் பொருளாதாரம் நிலையானது என்பதை தெரிவிக்கும் "தரம்' அது. இதை இப்போது ஆஆஆ- (நெகடிவ்) எனக் குறைத்து மதிப்பீடு செய்துள்ளது "ஸ்டாண்டர்டு அண்ட் பூர்' நிறுவனம். அதாவது, இந்தியப் பொருளாதாரம் சரியத் தொடங்கி உள்ளது என்பது இதன் பொருள்.
இதற்கு, எஸ் அண்ட் பி கூறும் விளக்கம் இதுதான்: ""வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் உயர்கிறது. அன்னியச் செலாவணி கையிருப்பும் குறைகிறது. அரசின் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற முடியாத நிலை இருக்கிறது'' என்று "எஸ் அண்ட் பி' நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் தாக்கிரா ஒகாவா கூறியுள்ளார். சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறார் தாக்கீரா ஒகாவா.
தற்போது குறைக்கப்பட்டுள்ள தரத்திலிருந்து, முந்தைய தரத்துக்கு (அதாவது நாட்டின் பொருளாதாரம் நிலையானது என்பதைக் குறிக்கும் குறியீடு) திரும்ப வேண்டுமானால், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்; பெட்ரோல், டீசல், உரம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை "சீர்படுத்த' வேண்டும்; புதிய சரக்கு மற்றும் சேவை வரியை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்கிறார் ஒகாவா.
இதைச் செய்யத்தவறினால், தரநிர்ணயத்தில் இதற்குக்கீழ் உள்ள "முதலீடு செய்வதற்கு உகந்த நாடு அல்ல' என்கிற கட்டத்துக்கு இந்தியா செல்ல நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
"ஸ்டாண்டர்டு அண்ட் பூர்' நிறுவனம் இந்திய அரசு மட்டும் அல்லாமல் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 10 பெரிய வங்கிகள், 4 நிதி நிறுவனங்கள், 3 மென்பொருள் நிறுவனங்கள், 3 பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் தரத்தையும் குறைத்து மதிப்பீடு செய்து இருக்கிறது.
இதுதொடர்பான செய்திகள் வெளியானபோது மத்திய அரசு மட்டும் அல்லாமல் ஊடகங்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், தரநிர்ண அமைப்புகள், சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரம், அரசியல் நிலவரம் ஆகியவற்றை அலசும்போது, வழக்கமான பொருளாதார அளவுகோல்கள் தவிர, ஆய்வாளர்களின் சொந்தக் கருத்துகளும் ஆய்வில் கலந்துவிடுகின்றன என்பதுதான். அவர்களது சொந்தக் கருத்துகள் நியாயமானதாகக்கூட இருக்கலாம். ஆனால், 100-க்கு 100 சரியான அடிப்படையிலானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே.
குறைந்துவரும் வளர்ச்சி விகிதம், அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை, உயர்ந்துவரும் பணவீக்கம் ஆகியவற்றைச் சீர் செய்திட வேண்டும் என்பதில் இரு கருத்துகள் இருக்க முடியாது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்க வேண்டும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
உலக நாடுகளின் வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதத்துக்கு மேல் இருப்பதே ஆறுதல் அளிக்கும் விஷயம் அல்லவா? சராசரியாக 8 முதல் 9 சதவிகிதம் வரையில் இருந்த இந்திய வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கு வந்ததற்கு காரணமே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி என்பதை அனைவரும் அறிவார்கள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதும் உண்மையே.
அன்னியச் செலாவணி கையிருப்பு 4-5-2012 நிலவரப்படி 293.17 பில்லியன் டாலர் என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். இதை மேலும் உயர்த்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி முனைப்புக் காட்டி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவணி கணக்குகளில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் டாலர்கள் இந்தியாவுக்கு வருவது அதிகரிக்கும்.
ஏற்றுமதியாளர்கள், தங்கள் லாபத்தை டாலரில் பெறுகிறார்கள். இந்த டாலர்களை அவர்கள் வெளிநாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று இதுவரை இருந்த விதிமுறையை இப்போது மாற்றி உள்ளனர். இதன்படி, 50 சதவிகித டாலரை உடனே இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும். இவையெல்லாம் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதற்கு வழி வகுக்கும்.
அடுத்தபடியாக, அரசின் திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என்கிறது எஸ் அண்ட் பி. எந்தத் திட்டங்களை அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது நன்றாகவே புரிகிறது.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம். இந்தியா ஒரு சுதந்திர நாடு. இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில், ஒத்த கருத்தை உருவாக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படலாம். அதற்காக, திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என்று சொல்ல முடியாது. அதேபோல், உரிய நேரத்தில் மேலும் பல பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. அப்படி இருக்க, ""இதில் அன்னியர் புகுவது என்ன நீதி?''
ஆக, "தர நிர்ணயம்' என்ற பெயரில் ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டின் பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் தலையிடுவதுதான் இந்தத் தர நிர்ணய நிறுவனங்களின் உள்நோக்கமா?
ஒரு நாட்டுக்கு வர இருக்கும் பொருளாதாரச் சரிவை முன்கூட்டியே அறிந்து, எச்சரிக்கை மணியைச் சரியான நேரத்தில் ஒலிக்கச் செய்வதுதான் தரநிர்ணய நிறுவனத்தின் நோக்கமாக இருத்தல் வேண்டும். வரலாற்றில், எந்த ஒரு நிறுவனமும், அதைச் செய்யவில்லை.
1967-ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை இந்தத் தரநிர்ணய நிறுவனங்கள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. 2006-இல் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு அஅஅ மற்றும் அஅ மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த நாடுகள் 2008, 2009-களில் கடும் பொருளாதார வீ ழ்ச்சியைச் சந்தித்தன. ஏன் முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடிக்கப்படவில்லை?
150 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த அமெரிக்க நிறுவனமான "லேமேன் பிரதர்ஸ்' என்னும் நிதி நிறுவனம் 2008-இல் திவால் ஆனதே, ஏன் எந்த ஒரு தரநிர்ணய நிறுவனமும் "தரத்தை' முன்கூட்டியே குறைக்கவில்லை.
2008-இல் அமெரிக்க நிதி நெருக்கடிக்கு மூலகாரணமாக இருந்த வீட்டுக்கடன்களைப் (சப்-பிரைம் லோன்) பற்றி தரநிர்ணய வல்லுநர்கள் "மூச்சே'விடவில்லையே, ஏன்?
இந்தியாவில் 2011 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அன்னியச் செலாவணி கையிருப்பு 5.7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான இறக்குமதி செய்வதற்குப் போதுமான அன்னியச் செலாவணி கையில் இருப்பு; கடன் / ஜி.டி.பி. விகிதம் 67 சதவிகிதம்; ஏற்றுமதி வளர்ச்சி 40 சதவிகிதம்; நிதிசாராத சேவைகள் வளர்ச்சி 17.1 சதவிகிதம் என எல்லாமே ஏறுமுகத்தில் இருக்கும்போது, ஸ்டேண்டர்டு அண்ட் பூர் இந்தியாவின் தரத்தைக் குறைத்தது புரியாத புதிராக உள்ளது.
ஆக, பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. உண்மையில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் அவல நிலையும் வேலையில்லாத் திண்டாட்டமும், மேலும் மோசமாகவில்லை என்றாலும், நிச்சயமாகத் தொடர்கின்றன என்பதுதான்.
ஆனால், அதைப்பற்றி ஸ்டேண்டர்டு அண்ட் பூர் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்குக் கவலை இல்லை. நாம்தான் கவலைப்பட வேண்டும்; வேலைவாய்ப்புகளுடன் கூடிய வளர்ச்சிக்கு முனைப்புக் காட்டி, முன்னேற வேண்டும்.