இந்திய நாட்டில் - குறிப்பாகத் தமிழ்நாட்டில் - நீதிநூல்களுக்குக் குறைவில்லை. நாகரிக சமுதாயம் அறவழியில் நிற்க வேண்டும்; அறவழியில் நடக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு உண்டோ? அதற்காகவே ஆன்றோர்கள் அறநூல்களை இயற்றி வைத்தனர். அதன்படி நடக்க வேண்டும் என்று விரும்பினர்.
ஆனால், நீதி இலக்கியங்களைப் படிக்கிற மக்கள், "படிப்பது வேறு, (அதன்படி) நடப்பது வேறு' என்று இரட்டை நிலையை மேற்கொள்வதே சமுதாயச் சீர்கேட்டுக்குக் காரணமாக அமைகிறது. பெரியவர்களைப் போற்றவும், வழிபடவும் செய்கிறோம். ஆனால், அவர்கள் சொன்ன மொழிப்படியும், காட்டிய வழிப்படியும் நடக்கிறோமா என்றால் அதுதான் இல்லை.
அறிவும், ஆற்றலும் மிக்க பெரியோர்களின் அறிவுரைகளை சடங்குகளுக்குள் ஆழ்த்தி விடுகிறோம். அவர்கள் இயற்றிய பாடல்களை மனனம் செய்து ஒப்பித்து விடுவதோடு கடமை முடிந்துவிடுகிறது. அவர்களது வழிகாட்டி நெறிகளை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை; கேட்டால், அவையெல்லாம் நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களால் கடைப்பிடிக்க முடியாது என்று கூறி திசைதிருப்பி விடுகிறார்கள்.
"ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப் பேதையின் பேதையார் இல்'
-என்று குறள் கூறுவதும் இவர்களைப் பற்றித்தான். இந்த அறநூல்களைப் படித்தவர்கள் முன்மாதிரியாக இல்லாவிட்டால் படிக்காத பாமர மக்கள் எப்படி இருப்பார்கள்?
அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் பேசியிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. "இப்படியும் நடக்குமா?' என்ற கேள்வியை எழுப்பி, "நாடு இந்த அளவுக்கு சீர்கேட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதா?' என்ற கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர் மீது ஊழல் புகார்கள் இருப்பதாகத் தலைமை நீதிபதி வேதனையுடன் தெரிவித்ததாக பத்திரிகைகளில் வெளியானது. சென்னையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 167 உரிமையியல் நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து, நடைபெற்ற விழாவில் இவ்வாறு பேசியதாக அச் செய்தி தெரிவிக்கிறது.
""இதுவரை சுதந்திரப் பறவையாக வாழ்க்கையை அனுபவித்த நீங்கள் இன்று முதல் நீதிபதிகளாகச் செயல்பட இருக்கிறீர்கள். இந்தப் பணியில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்; தொழில் தருமத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் கடைசியாக நிவாரணம் தேடி வருவது நீதிபதிகளிடம்தான். எனவே விமர்சனங்களுக்கு ஆளாகாமல் செயல்பட வேண்டும்...'' என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் தவறு செய்தால் அதைக் கண்காணிக்க ஊழல் தடுப்புப் பிரிவு இருப்பதுபோல நீதிபதிகள் தவறு செய்தால் கண்காணிக்க உயர் நீதிமன்றத்திலும் ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளது. நீதிபதிகளின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 50 வயதில் பணிநீக்கம் செய்யப்பட்டால் குடும்பத்தினரின் மன உளைச்சல் எப்படியிருக்கும்; குழந்தைகளின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்த்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எனவே, சாதாரண மக்களும் நீதிபதிகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை ஒழிக்க பல்வேறு இயக்கங்கள் இப்போது தோன்றியுள்ளன. எனவே, சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். நீதியின் மாண்பைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம்.
ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் உரிமையியல் நீதிபதியாக இருந்தாலும், மாவட்ட நீதிபதியாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நீதிபதி மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டால் அவர் வழக்கறிஞர் தொழிலுக்குத் திரும்பிவிடலாம் என்று தலைமை நீதிபதி தெளிவாகவும், உறுதியாகவும் கூறியுள்ளார்.
இந்திய சமுத்திரத்தில் எல்லாக் கப்பல்களும், ஊழல் என்னும் சூறைக்காற்றால் உருக்குலைந்து கிடக்கின்றன. கப்பலை ஓட்ட வேண்டிய மாலுமிகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை; கப்பல்கள் திசை தெரியாமல் திண்டாடுகின்றன. நங்கூரங்கள் எல்லாம் புயல்காற்றால் தூக்கி எறியப்பட்டுவிட்டன. கப்பல் பயணிகள் கலங்கி நிற்கின்றனர்.
ஜனநாயகக் கப்பலைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறையும் ஊழல் புயலில் அகப்பட்டுவிடுமானால் இந்த நாட்டு மக்களை யார் காப்பாற்றுவது? ஏழை, எளிய நடுத்தர மக்களின் இறுதிப் புகலிடமே இதுதான். இதுவும் நம்பிக்கையிழந்து போகுமானால், இந்த நாட்டை யாராலும் காப்பாற்றவே முடியாது போய்விடும்.
தமிழ்நாட்டில் காலியாக இருந்த உரிமையியல் நீதிபதி பதவிகளை நிரப்புவதற்கான தேர்வை முதன்முறையாக சென்னை உயர் நீதிமன்றம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் 185 இடங்களுக்கு நடந்த தேர்வில் 167 பேர் சிவில் நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகளாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.
நீதிபதிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டாலோ, ஒருவருக்குச் சாதகமாகவோ, எதிர்ப்பாகவோ நடந்து கொள்வதாக யாராவது சுட்டு விரல் நீட்டினாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் உடனே பதவியை விட்டு விலகிவிடுவது நல்லது. அதுவே அவர்கள் நீதித்துறைக்குச் செய்யும் நன்றிக் கடப்பாடு ஆகும் என்று நல்லோர் கூறுகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த செப்டம்பர் 8 அன்று நடைபெற்றது. இப்போதையக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார். வழக்கு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சரிடம் வைத்த கோரிக்கை இன்னும் கோரிக்கையாகவே இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றம் பாரம்பரியப் பெருமை மிக்கது. மக்களின் நம்பிக்கைக்குரிய நீதியின் சின்னமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக திருவாரூர் முத்துசாமி ஐயர் பெருமை சேர்த்தார். வசதியற்ற குடும்பத்தில் பிறந்த இவர் தெருவிளக்கில் படித்து, வாழ்க்கையில் உயரிய இடத்தைப் பிடித்தவர் மட்டுமல்ல, நீதிபதிகளுக்கே ஒரு முன்மாதிரியாகவும் விளங்கினார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1948-இல் பி.வி. ராஜமன்னார் முதல் மரியாதையைப் பெற்றார்.
இந்த உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பல நீதிபதிகள் காலத்தால் மறக்க இயலாதவர்களாகத் திகழ்ந்தனர். கம்பர் மற்றும் ஷேக்ஸ்பியர் காவியங்களில் தோய்ந்த நீதிபதி மகராஜன், மு.மு. இஸ்மாயில் இவர்களை மறக்க முடியுமா? நீதிபதி சிவசாமி ஐயர் பெரும் கல்வி வள்ளலாகவும் விளங்கினார்.
அண்மையில் நடந்த உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தேர்வு எழுதினர். இதில் 185 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மீது கிரிமினல் வழக்குகள் இருந்ததால் அவர்களின் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 167 நீதிபதிகள் மட்டுமே பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய நீதிபதிகளும் தங்கள் முன்னோடிகளைப் பின்பற்றி நீதித்துறைக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நீதியின் சின்னமாக "துலாக்கோல்' திகழ்கிறது. "சமநிலையிலிருந்து எடையை உள்ளவாறு காட்டும் துலாக்கோல்போல அமைந்து, ஒரு பக்கமும் சாயாமல் நடுநிலையோடு இருப்பதே சான்றோருக்கு அழகாகும்' என்பது குறளின் கூற்று. இதுவே நீதிபதியின் இலக்கணமாகும்.
விருப்பு, வெறுப்பு இல்லாமல் ஒரு பொருளை ஆராய்வது அறிவுடையோர் செயலாகும். வெறுப்புடன் நோக்கும்போது அதன் குணம் தெரியாமல் போகும். விருப்புடன் அணுகும்போது அதன் குற்றம் குறைகள் தெரியாமல் போய்விடும் என்பதை நீதிபதிகள் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும். இதை "அறநெறிச்சாரம்' என்ற நீதிநூல் கூறுகிறது.
நாட்டில் சட்டமும், ஒழுங்கும் சரியாக இருக்க வேண்டுமானால், நீதித்துறை நடுநிலையோடும், நேர்மையோடும் செயல்பட வேண்டும்.
அரசின் சட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்படுபவருக்குத் தெரியும் ஒரே திசை நீதிமன்றங்கள்தாம். அந்த நம்பிக்கையைப் போற்றி வளர்க்க வேண்டியது நீதிபதிகள் எழுதும் தீர்ப்புகளே!
இந்தத் தீர்ப்புகளை எதிர்பார்த்து நாடெங்கும் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்பதை அறிந்தால் வேதனைதான் மிச்சமாகிறது. "தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதியாகும்' என்பதுதான் சட்டத்தின் மொழி. விசாரணைக்கே வராத வழக்குகளும், விசாரணைக்காகக் காத்திருக்கும் கைதிகளைப் போலவே திசை தெரியாமல் பயணம் செய்கின்றன.
"வழக்குகளை நீண்டநாள் ஒத்திவைப்பது நீதியை ஒத்திவைப்பது போன்றதாகும்' என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். நாட்டின் மக்கள்தொகைக்கேற்ப நீதிமன்றங்கள் இல்லை என்றும், நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளும் காலியாக இருப்பதும் வழக்குகள் தாமதத்துக்குக் காரணமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல வழக்குகளில் தீர்ப்பு வரும்போது, வழக்குகளைப் போட்டவரே உயிரோடு இருப்பதில்லை. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகள் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிவு பெறுவதில்லை.
உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு வரும் தீர்ப்புகளால் என்ன பயன்? இப்படிப்பட்ட வழக்குகளில் நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கே காரணமும், களங்கமும் கற்பிக்கப்படுகிறது. நீதிமன்றங்களின் தேவையும், சேவையும் பயனற்றுப் போய்விடுகின்றன.
""உலகத்துக்கு உபதேசிக்கப் புதிதாத என்னிடம் எதுவும் இல்லை. மலைகள் எவ்வளவு பழைமையானவையோ அவ்வளவு பழைமையானவை சத்தியமும், அகிம்சையும்'' என்றார் காந்தியார்.
"வாய்மையே வெல்லும்' என்பது அரசாங்கத்தின் தாரக மந்திரமாகவும் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் எதிர்மாறாகவே செயல்படுகிறது.
அரசாங்கங்கள் குடிமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும். ஆனால், காவிரிப் பிரச்னையில் கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
தீர்ப்புகள் திருத்தப்படலாம்; நீதிகள் திருத்தப்பட முடியுமா? நீதி தேவனின் நெடிய பயணம் தொடரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.