மன்னராட்சி, ஜனநாயக ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்று பொதுவாக 3 பிரிவுகளாக ஆட்சி முறை பிரிக்கப்படுகிறது.
மன்னராட்சி என்பது இப்போது விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலான நாடுகளில்தான் உள்ளன.
இரண்டாவதாக ஜனநாயக ஆட்சி. இப்போது பெரும்பாலான நாடுகளில் உள்ள ஆட்சி முறை.
"மக்களால், மக்களுக்காக' என்ற வரையறையுடன் உலகின் பெரும்பாலான நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஆட்சி முறை ஜனநாயகம்.
ஜனநாயகம் என்ற பெயரில் மறைமுக மன்னராட்சி (குடும்ப ஆட்சி) நடைபெறும், இந்தியா போன்ற பல நாடுகளும் உள்ளன.
ஜனநாயகத்தில் நடக்கும் அட்டூழியங்களால் விரக்தியடைந்து, "நல்ல' சர்வாதிகாரி கிடைத்தால் பரவாயில்லை என்ற மனநிலைக்கும் மக்கள் வந்துவிட்டார்கள்.
அடுத்ததாக சர்வாதிகார ஆட்சி. "இம்' என்றால் வனவாசம், "ஏன்' என்றால் சிறைவாசம் என்று அதற்கு இலக்கணம் கூறுவர்.
காட்டில் உலவும் சிங்கம்,புலி, ஓநாயைவிடக் கொடூரமானவர் சர்வாதிகாரி என்றே சித்திரிக்கப்படுகிறது. சர்வாதிகாரிக்கும் (டிக்டேடர்), கொடுங்கோலனுக்கும் (டைரன்ட்) வித்தியாசங்கள் உண்டு.
தன்னிடம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ள ஒரு சர்வாதிகாரி, அதனை மக்கள் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காவும் பயன்படுத்துவார். ஆட்சியில் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அதிகம் இடம் தரமாட்டார். நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அவர் எடுக்கும் சில முடிவுகள், மக்களுக்கு இன்னலைத் தருவதாகவும் இருக்கலாம். சில நேரங்களில் அவரது கணிப்புகள் தவறாகக் கூட அமையலாம்.
இருந்தபோதும் நாட்டுநலன் கருதி பெரும்பான்மை மக்கள் அதனை ஏற்பார்கள். மக்கள் ஆதரவுடன் அந்த சர்வாதிகாரி தொடர்ந்து ஆட்சியில் இருப்பார்.
அதிகார போதை அவர்களது கண்ணை மறைக்காது. துதிபாடிகளை அருகில் வைத்துக்கொள்வதில்லை, சுகபோக வாழ்க்கையை விரும்புவதுமில்லை. ஆனால் இத்தகைய "சர்வாதிகாரிகள்' கிடைப்பது அபூர்வம்.
எனினும் இதுபோன்றவர்களை வேண்டாத எதிரி நாடுகள், அவர்களை மோசமாகவே வர்ணிக்கும். அவர்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள் கிளப்பி விடப்படும். கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ, ரஷியாவின் லெனின் உள்ளிட்ட மிகச்சிலரே இதற்கு உதாரணம்.
அடுத்ததாக கொடுங்கோல் ஆட்சியாளர். இங்கு ஆட்சியாளரின் சுயநலமே முதலில் இருக்கும். இதற்காக மக்கள் பலி கொடுக்கப்படுவார்கள்.
மக்கள் நலன் என்பது பேச்சளவில்தான் இருக்கும். ஆட்சியாளரை விமர்சித்தால் குறைந்தபட்சம் சிறைத் தண்டனையோ அல்லது அதிகபட்சம் மரண தண்டனையோ உறுதி. தன்னைத் தவிர வேறு யாரும் உயர்ந்தவர் இல்லை என்ற மனப்பாங்குதான் ஆட்சியாளரிடம் மிகுந்திருக்கும்.
அடுத்தவர்களைத் துன்புறுத்தி அதில் இன்பம் காணும் கொடூர மனநிலை கொண்ட கொடுங்கோல் ஆட்சியாளர்களையும் சில நாடுகள் சந்தித்து இருக்கின்றன. பிற உயிர்கள் இவர்களுக்கு அற்பம்.
ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடி அமீன், கம்போடியாவின் போல் பாட் உள்ளிட்ட பலர் கொடுங்கோல் ஆட்சியாளருக்கு உதாரணம். இவர்கள் ஆட்சிக்காலத்தில் கூட்டம் கூட்டமாக கொன்று புதைக்கப்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் இப்போதுவரை கிடைத்து வருவதே இவர்கள் எத்தகைய கொடூர கொடுங்கோலர்கள் என்பதற்கு உதாரணம்.
ஆனால் இப்போது ஜனநாயகத்திலேயே கொடுங்கோல் ஆட்சியாளர்கள் உருவாகத் தொடங்கிவிட்டார்கள். அன்று கொடுங்கோல் ஆட்சியாளர் ஒருவர் இருந்தார்.
இன்று ஆளும் கூட்டணியின் தலைவர் என்ற தலைமைக் கொடுங்கோலரின் கீழ், பிரதமர், அமைச்சர்கள் என்ற பெயரில் துறை வாரியாக துணைக் கொடுங்கோலர்கள். இவர்களின் ஆட்சிக்கு உள்ளே, வெளியே இருந்து ஆதரவளிக்கிறார்கள் சுயநலப் பிரபுக்கள்.
உயிர் போகாமல் மக்களைச் சித்திரவதை செய்வதில் வல்லவர்களான இந்தக் கூட்டத்தினர், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகளை அவ்வப்போது உயர்த்தி மக்களை "உயிர் போகாமல்' எரிப்பார்கள்.
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டு கொள்ளாது மக்கள் வயிற்றில் அடிப்பார்கள். தங்கள் வீட்டு நலனுக்காக, நாட்டின் வளங்களை பெரும் முதலாளிகள் சூறையாட அனுமதிப்பார்கள். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி என்று சாமானிய மக்களுக்குப் புரியாத புள்ளி விவரங்களைக் காட்டி அதை எட்டுவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிப்பர்.
தங்களது எஜமான விசுவாசத்தைக் காட்ட முதலாளித்துவ சக்திகளிடம் நாட்டை அடிமையாக்கும் இத்தகைய ஜனநாயகக் கொடுங்கோலர்களை என்னவென்பது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.