மகாஜன சபை' பற்றிய வரலாற்று அதிர்வுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. காந்திஜியின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாகப் படித்தவர்களால் உருவாக்கப்பட்டது இந்த இயக்கம். அதன் இரண்டாவது மாநாடு 12-11-1920 அன்று புதுக்கோட்டையில் நடந்தது.
அந்த மாநாட்டில் எழுச்சியுடன் பேசிய தீரர் சத்திய மூர்த்தி இன்று வெறும் கான்கிரீட் கட்டடமாக மட்டுமே நிற்கிறார்.
புதுக்கோட்டையின் அன்றைய ""மன்னர் (மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்) நீண்ட நாள்களாக வெளிநாடுகளில் தங்கி இருப்பதையும், அன்னிய (ஆஸ்திரேலிய) நாட்டுப் பெண்மணியை மணந்துகொண்டு, அவர் மூலம் பிறந்த சிட்னி மார்த்தாண்டனுக்கு ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதையும், இது இந்து தர்ம சாஸ்திரங்களுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டி, மக்கள் இதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமெனவும், அன்னிய மாதுவுக்குப் பிறந்த சிட்னி மார்த்தாண்டனை மன்னராக ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் சமஸ்தான மக்களைக் கேட்டுக் கொண்டார் (தீரர் சத்திய மூர்த்தி)'' என்று எழுதுகிறார் அரசு அருங்காட்சியக முன்னாள் உதவி இயக்குநர் டாக்டர் ஜெ. ராஜா முகமது. (புதுக்கோட்டை வரலாறு, அரசு அருங்காட்சியக வெளியீடு, எழும்பூர், சென்னை, நான்காம் பதிப்பு 2004, பக்கம் 178).
நூற்றாண்டு கண்ட ஒரு பழைய ராஜ சமஸ்தான அரசியல் குறித்த நினைப்பு மனதில் எழுவதில் அர்த்தம் இருக்கிறது.
அரசியல் வரலாற்றில் ஒரு நிரபராதியைக் கொன்ற குற்றத்துக்காக பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் அளித்த கடைசி வாக்கு மூலம் என்ன தெரியுமா? "யானோ அரசன்? யானே கள்வன்!' இது சரித்திரத்தில் இனி நடக்கவே நடக்காது. வழக்கும், விசாரணையும் முடிந்து, ஒரே நிமிஷத்தில் மன்னர் தனக்குத்தானே நிறைவேற்றிக் கொண்ட மரண தண்டனையை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடத்தான் முடிகிறது; கண்ணகி மட்டும் இன்று அரசவைக்கு வந்து வாதாடி இருந்தால் என்னவாகும்?
பாவம், ஏழை விதவை நீட்டிய ஒற்றைச் சிலம்பையும் பறித்துக்கொள்வார்கள் அல்லது கொன்று விடுவார்கள். இல்லை, வரும் வழியில் காவலர்களே தடுத்துச் சிறையில் தள்ளி இருப்பார்கள். அவளே, பாண்டிமாதேவியின் இரண்டாம் சிலம்பையும் திருடியதாக முதல் குற்றப் பத்திரிகை பதிவாகியிருக்கும். மதுரையை எரித்த பொதுநல வழக்கு வேறு இருக்கவே இருக்கிறது.
சேர இளவரசர் இளங்கோ அடிகளும் ஓர் உண்மையை மறைத்துவிட்டார். கஜானாவில் இருந்து அரசியின் சிலம்பைத் திருடி, பொய் சொல்லி, சதிசெய்து கோவலனை மாட்டிவிட்டு, கொலைக்கும் உடந்தையாக இருந்த நிஜக் குற்றவாளி தப்பித்ததுதான் அந்த உண்மை!
பண்டைய ஆட்சி முறையில் மன்னரே நீதி அரசராகவும் விளங்கினார். இன்றைய ஜனநாயகத்திலும் ஏறத்தாழ அதே நிலைமை. இல்லையென்றால், ஆதாயம் இன்றி யாரேனும் நீதிமன்றத் தீர்ப்புக்காக ஆட்சிமன்றத் தலைமையை அணுகுவார்களா?
உங்களுக்குத் தெரியுமே, மேடை நாடகங்களில் அடுத்த காட்சி அரங்கேறும்வரை திரைக்கு முன்னே கட்டியங்காரன் வந்து நிற்பான். அந்தக் கோமாளி உங்கள் கவனத்தைத் திசை திருப்பிக் காமெடி பண்ணுவான். திரைக்குப் பின்னால் அடுத்த காட்சிக்கான "உள்வேலைகள்' ஜரூராக நடந்துகொண்டு இருக்கும். பார்வையாளர்களுக்கு அது தெரியாது - தெரியக்கூடாது; அதுதான் "அரசியல் கலைத்தனம்'.
தொலைக்காட்சிகளும் கட்சி விசுவாசத்துடன் அதே கட்டியங்காரர் வேலையைத்தான் செய்கின்றன. ஆட்டம், பாட்டம், கலாட்டா, காசு மழைப் போட்டி என்று அசட்டுத்தனங்களையே காட்டி வருகின்றன. மக்களிடையே ஏற்றப்படும் கவன ஈர்ப்புத் தீர்மானம் இது. திரைமறைவில் - கல்லைத்தான் மண்ணைத்தான் கரியைத்தான் பணமாகக் காய்ச்சிக் குடித்துத்தான் - குத்துக் கல்லாக இன்னும் கொறிக்கிறார்கள்.
இங்கே இரண்டாவது "அண்ணா' வந்துதான் நம் "மடமை, மண்ணியம், மட்டுப்பாடு' பற்றி மறுபோதனை செய்ய வேண்டும்.
அக்டோபர் 15 அன்று நம் முன்னாள் குடியரசுத் தலைவரும் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியுமான "பாரத ரத்னா' டாக்டர் அப்துல் கலாம் தமது 82-ஆம் ஆண்டுப் பயணத்தைத் தொடங்கினார். நாட்டின் எந்த சின்னத் திரைக்காவது கரிசனம் வந்ததா?
நடிகர் "அம்மிப் பச்சடி' 70-ஆம் பிறந்த நாளை ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள். பெயர் மாற்றிக்கொண்டு - வெட்கம் இல்லாமல் - 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் கல்யாணம் செய்கிறார் இந்தி நடிகர் ஒருவர். அவரது திருக்கல்யாணத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். அது என்ன அறிவியல் பாடமா, மனதில் பதிவதற்கு?
ஏதாயினும் அரசியலார் ஒவ்வொரு மாநில மண்ணையும் கற்பழிக்கிறார்கள். ஒரு பக்கம் செம்மண், கருங்கல், வெள்ளைப் பளிங்குக் கல், மஞ்சள் ஆற்றுமணல், பச்சை வயல்கள், நீல வான் அலைக்கற்றைகள் என்று கலர் கலராகத் திருடுகிறார்கள். ஊழல் வினை உருத்து வந்து யாரையும் ஊட்டுவதாகத் தெரியவில்லை.
இதற்கு மத்தியில் கண்மாய்களில் கிரானைட்டுகள் அடுக்கி மூடிவிட்டு "தண்ணீருக்கான உலகப் போர்' பற்றிய "புதுக் கவலை' சிலருக்கு. எப்படியோ கவிதையும், கருங்கல் வியாபாரமும் ஒரே கணக்கில் நடத்தால் சரி! அந்நாள் இலக்கிய அரசியலுக்குப் பலியாகி, சாகித்ய விருதைப் பறிகொடுத்த மூத்த எழுத்தாளர் ஆ. மாதவன். அவரது "அரேபியக்குதிரை' என்கிற சிறுகதை ஒன்று உண்டு. சுடுகாட்டில் எரிப்பதற்குக் கிடத்திய பிணத்தின் மேல் போர்த்திய சேலையைத் திருடும் அவலம் பற்றிய கதை. அதைவிடக் கேவலம் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு உதவித் தொகையைச் சுருட்டும் அமைச்சரின் குண்டுத் துணைவியார்.
"திருதராஷ்டிரர்' மாதிரி கண் பார்வை அற்றோரின் யாசகத் தட்டில் இருந்து காசைத் திருடினால், கயமையை என்ன சொல்ல?
மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவரின் பெயரால் உடல் குறை உடையவரையும் புண்படுத்துகிறாரே ஒரு சட்ட அமைச்சர்.
பெருவாரி அமைச்சர்களே வழக்குரைஞர்கள் என்பதால் சட்டத்தின் ஓட்டை அவர்களுக்கு மட்டுமே தெரியும். சட்டத்தை வளைக்கலாம். இன்றோ சர்வ சாதாரணமாக ஒடிக்கிறார்கள்.
எதிர்த்துக் கேட்டால், ""தொகுதிப் பக்கம் வந்துபார், திரும்பிப் போனால்தானே? இனி சும்மா இருப்பேனா, பேனா பேசாது. ரத்தம்தான் பேசும். கேள்வியா கேட்கிறாய் கேள்வி?'' என்று பொதுமேடையில் சமூக ஊடகத்தில் அதிகப் பிரசங்கம்வேறு. வாழ்க நீதித்துறை.
அண்ணல் காந்தி பிறந்த அகிம்சை ஊரில் மத்திய ஆட்சிமன்ற உறுப்பினர் ஒருவரின் பெருந்தன்மையைப் பாருங்களேன். சுங்கச் சாவடி ஊழியர், அவரிடம் அடையாள அட்டையைக் கேட்கிறார். உறுப்பினரோ வண்டியில் இருந்து துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார். அதுதானே அவரது அடையாளம்?
வடக்கே தில்லி நிதி நிறுவனத்துடன் இணைந்து அண்டை மாநிலங்கள் தோறும் நில மோசடிகள். விவரம் கேட்ட இந்திய ஜனங்களை "வாழைப் பழ ராச்சியத்தில் மாங்காய் மடையர்கள்' என்று வர்ணிக்கிறார் அரச குடும்பத்தின் மருமகப் பிள்ளை. பிரிக்கப்படாத பாகிஸ்தானில் வாழ்ந்து பிற்காலத்தில் இங்கு குடியேறிய குடும்பமாம். தாயாருக்கு ஸ்காட்லாந்து பூர்வீகம்.
மருமகனார் பள்ளிப் பருவத்திலேயே இளவரசியின் அன்புக்குப் "பாத்திர'மானார். பையனின் தகப்பனாருக்கு அந்தச் சம்பந்தத்தில் உடன்பாடு இல்லை. மகனே தகப்பனார் மீது புகார் கொடுக்கிறார். பிறகென்ன, அடுத்த சில ஆண்டுகளில் மருமகனின் ஒரே தங்கை - கார் "விபத்தில்' மரணம். தொடர்ந்து, ஒரே சகோதரர் - வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இறுதியில், தகப்பனாரும் விருந்தினர் விடுதி ஒன்றில் மர்மச் சாவு. தூக்குப் போட்டுக் கொண்டாரா, மாரடைப்பா என்ற விவாதத்தில் தீர்ப்பு வழங்க நடுவர்களுக்கே பயம். பெரிய இடத்து விவகாரம் ஆயிற்றே?
மருமகனார் ஆரம்பத்தில் கைவினைப் பொருள் விற்பனையாளர். இன்று அவர் மீது நில மோசடிப் புகார் வந்து மோதியதுதான் தாமதம். மத்திய அமைச்சர்களில் பலரும் அழைப்பு இல்லாமலே வரிசையில் வந்து நின்று அட்சதை போட்டு, மொய் எழுதிச் செல்கிறார்கள். அவர் தனிப்பட்ட வணிகராமே!
ஜனநாயகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவரோ, அமைச்சரோ, ஆணையரோ, நீதிபதியோ போன்ற எந்த அந்தஸ்தும் இல்லைதான். இருந்தாலும் இந்திய விமான நிலையத்தில் உடல், உடைமைகள் சோதனைக்கு உட்படாதவர். அவருக்கான "சிறப்பு தரிசனம்' குறித்து மத்திய அமைச்சரே சலுகைச் சான்றிதழ் வழங்கி இருக்கிறாராம். தகவல் அறியும் சட்ட ஆர்வலர்கள் சுட்டுகின்றனர்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமாவுக்கு இந்த விசேடத் தகுதி வழங்கப்பட்டுள்ளது. போகட்டும். அதே பட்டியலில் அவருக்கு அடுத்த பெயர் "எஸ்.பி.ஜி. பாதுகாவலர்கள்'. அதையடுத்து, "எஸ்.பி.ஜி. பாதுகாவலர்களுடன் பயணம் செய்யும்போது மட்டும்' என்ற குறிப்புடன் ராஜ மருமகன் பெயரும் இறுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
சரி, எஸ்.பி.ஜி. பாதுகாவல் என்பது என்ன என்றுதானே? விமானத்தில் ஏதோ எல்.பி.ஜி. திரவப் பெட்ரோலிய வாயு போன்ற ஆபத்தான வெடிபொருள் என்று எண்ணிவிடாதீர்கள். எஸ்.பி.ஜி. என்றால் தமிழில் "தி(ருமதி).பி.கா.' இளவரசியின் முழுப் பெயரையும் எழுத்துப் பிசகாமல் விரித்து உரைக்கிறது இணைய தளம்.
அன்றைய காந்தி அன்னியப் பொருள்களைப் பகிஷ்கரிப்போம் என்று போராடினார். இன்று 51 சதவீத இந்தியாவை அன்னிய முதலீட்டாளர்களுக்கே விற்று விட்டோம். மிச்சத்தையும் சிலர் உள்நாட்டு நிலமாகவும், வெளிநாட்டுப் பணமாகவும் பத்திரமாக மாற்றி வைத்து இருக்கிறார்கள்.
இங்கும் தலைநகர் இன்று தலைவர்களின் (உறவோர்) நகர் ஆகி இருக்கிறதே. ஏக்கர் விளைநிலங்கள் வீட்டு மனைகள் ஆகின்றன. பட்டணத்தின் பூதங்கள் மீது பிடியாணை பிறப்பித்தால் திடும் என்று காணாமல் போய்விடுவார்கள். ஜீ பூம்பா.
எதிர்காலத்தில் மாடு அல்ல, எந்த மகாத்மா வந்து மனு கொடுத்தாலும், "ஆராய்ச்சி மணி' அடித்தாலும் "மனு நீதிச் சோழர்கள்' கண்டுகொள்ள மாட்டார்கள். தன் பெண்டு, தம் மக்கள், மருமக்கள், பேரப் பிள்ளைகளுக்குப் பிறகுதான் பொது மக்கள்.
அரசியலார் மீது குற்றச்சாட்டுகளா? மூன்றே பதில்களைத் தயாராக மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்கள். "அடிப்படை ஆதாரம் அற்றவை, துரதிர்ஷ்ட வசம் ஆனவை, நீங்கள் மட்டும் இப்படிச் செய்யவே இல்லையா?' இன்னும் அழுத்திக் கேட்டால், ""அட போங்கய்யா, முடிந்தால் கோர்ட்டில் சந்திப்போம்' என்பார்கள். அத்துடன் கதைக்கு மங்களம் பாடி விடலாம்.
ஏதாயினும், "21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் கற்காலம்' பற்றி எதிர்காலத்தில் நம் பிள்ளைகள் சரித்திரப் பாடம் படிக்கத்தான் போகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.