கட்டுரைகள்

களங்களில் உருவாகும் தலைவர்கள்

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான மக்களின் அறவழிப் போராட்டம் புதிய பரிமாணத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை வீச்சு, தடியடி ஆகிய கொடிய அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்

பழ. நெடுமாறன்

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான மக்களின் அறவழிப் போராட்டம் புதிய பரிமாணத்தில் தொடர்ந்து நடைபெறுகிறது. துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை வீச்சு,

தடியடி ஆகிய கொடிய அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்த போதிலும் அந்த மக்கள் கொஞ்சமும் அஞ்சாமல் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் உயிர்களைப் பணயமாக வைத்து அலைகடலுக்குள் இறங்கி நின்று நடத்தியப் போராட்டம் இதுவரை நாம் கேள்விப்படாதது. இந்தப் போராட்டம் அனைவரையும் நெக்குருகச் செய்திருக்கிறது.

÷கடந்த 400 நாள்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் ஜனநாயக நெறிமுறைகளின்படியும், காந்திய வழியிலும் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து உணர்வுப்பூர்வமாக ஈடுபட்ட போதிலும் இதுவரை ஒரு சிறு வன்முறைக்குக்கூட இடம் தராமல் கட்டுப்பாட்டுடன் போராடி வந்திருக்கின்றனர்.

÷அந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்று காவல்துறையினர் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை. போராட்டத்தை எப்படியேனும் ஒடுக்கியே தீர வேண்டுமெனத் திட்டமிட்டு வீண்பழியினைச் சுமத்தி மிகக் கொடுமையான வகையில் அடக்குமுறைகளை காவல்துறை கையாண்டுள்ளது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

÷கடந்த 400 நாள்களுக்கு மேலாக போராடி வரும் அந்த மக்களின் நியாயமான  சந்தேகங்களுக்கு இதுவரை விளக்கம் தரப்படவில்லை. அணுமின் நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் யாரும் மக்களைச் சந்தித்துப் பேசவில்லை.

÷இதற்கு மாறாக, கூடங்குளம் பகுதியில் உள்ள மக்கள் தொகையைவிட அதிகமான எண்ணிக்கையில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

÷தங்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் அணு உலையால் நேரிடக்கூடிய அபாயத்தை எண்ணிப்பார்த்தே அந்த மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இந்த உண்மையை மத்திய - மாநில அரசுகள் உணர்ந்து தங்களின் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும்.

÷அணு உலையில் மின் உற்பத்தித் தொடங்க உள்ள நிலையில் எப்படி நிறுத்துவது என மத்திய அரசு வாதம் செய்கிறது. ஆஸ்திரியாவில் மின் உற்பத்திக்கு முந்தைய நாள் அணு உலை மூடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் மின் உற்பத்தித் தொடங்கிய பிறகும் அணு உலைகள் மூடப்பட்டுள்ளன.

÷காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி போன்ற - அபாயம் இல்லாத இயற்கையான வழிமுறைகளுக்கு தமிழ்நாட்டில் தாராளமாக இடம் இருக்கும்போது அபாயகரமான அணுமின் உலைகள் தேவையா? குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அணுஉலைகள் இயங்காது. ஆனால் அவற்றிலிருந்து வெளியாகும் அணுக்கதிர் வீச்சைத் தடுப்பதற்கு மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனாலும் முழுமையாகத் தடுத்துவிட முடியாது.

÷பிறகு ஏன் மத்திய அரசு இதில் பிடிவாதமாக இருக்கிறது? அணுமின் உலைகளில் கிடைக்கும் புளுட்டோனியம், அணு ஆயுதங்கள் செய்வதற்குப் பயன்படும்.

 காந்தியடிகளைத் தேசத்தந்தையாகக் கொண்ட நாடு அணு ஆயுத உற்பத்திக்காக அப்பாவி மக்களைப் பலியிடத் துணிந்திருப்பது வேதனை மிக்க செய்தியாகும்.

÷கூடங்குளம் பகுதியில் - குறிப்பாக இடிந்தகரை சிற்றூரில் - குடிநீர் அறவே கிடையாது.

   வெளியிலிருந்து லாரிகள் மூலம் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.

  6,000 பேர் வாழும் அந்த கிராமத்தில் ஆரம்பச் சுகாதார நிலையம் கூட கிடையாது. அவசர மருத்துவ உதவிகளுக்கு நாகர்கோவில் அல்லது திருநெல்வேலிக்குதான் செல்ல வேண்டியுள்ளது. சாலை வசதி மிக மோசமாக உள்ளது.

÷இத்தகைய அடிப்படை வசதிகள் அப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் அறவே இல்லை. இப்பகுதியில் சாலை வசதி, மருத்துவமனை, குடிநீர்த் திட்டம் போன்ற குறைந்தபட்ச வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ.200 கோடியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அளித்த திட்டத்தின் கதி என்ன ஆயிற்று என்பதே தெரியவில்லை. இந்தக் குறைகளைப் போக்க மாநில அரசோ மத்திய அரசோ இதுவரை அக்கறை காட்டவில்லை.

÷போராடும் மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அந்த மக்கள் ஒன்றுபட்டு நின்றனர். அன்னிய நாடுகளிலிருந்து பணம் பெற்றுப் போராட்டத்தை நடத்தும் தேசத் துரோகிகள், அன்னிய கைக்கூலிகள் எனப் போராட்டக் குழுவினர் மீது அடாத பழி சுமத்தப்பட்டது.

÷உறுதியாகப் போராடிவரும் மக்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் புனையப்பட்டன.

÷சுதந்திரப் போராட்ட  காலத்தில் ஆங்கிலேய ஆட்சி கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் அவதூறுப் பிரசாரங்களையும் காங்கிரஸôர் இப்போது கையாளுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையானதாகும்.

÷அடக்குமுறைகள், அவதூறுகளை அள்ளிப் பொழிதல், சுயநல சூழ்ச்சிகள் இவற்றைக் கையாளுவதன் மூலம் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது. போராட்டக் களங்களில்தான் உண்மையான மக்கள் தலைவர்கள் உருவாகிறார்கள்.

÷தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பூத்த புரட்சி மலர்தான் அண்ணல் காந்தியடிகள் ஆவார்.

   வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் இராஜாஜியின் தலைமை உருவாயிற்று.

 வைக்கம் போராட்டம் பெரியார் இராமசாமி அவர்களைப் பெற்றெடுத்தது. நீலன் சிலை அகற்றும் போராட்டம், நாகபுரி வாள் போராட்டம் போன்ற போராட்டங்களைத் திட்டமிட்டு நடத்திய போதுதான் காமராஜரது செயல்திறனை மற்றவர்கள் உணர்ந்தார்கள்.

÷மேற்கண்டப் போராட்டங்களையும் தலைவர்களையும் அடியொற்றி நடைபெற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் உதயகுமாரின் தலைமைத்துவம் உருவாயிற்று.

    போராட்டகளங்கள் ஈன்றெடுத்தத் தலைவர்களை யாராலும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதை ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

÷அறப்போராளியான உதயகுமாருக்கு எதிராக இராணுவம், கடற்படை, மாநிலக் காவல் படை ஆகியவை கூட்டாக நடத்திவரும் மனித வேட்டையை உடனடியாகக் கைவிட வேண்டும்.

÷உதயகுமார் தனி மனிதரல்ல, அந்தப் போராடும் மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்; அதனால்தான் அவரால் இந்தப் போராட்டத்தை இன்னமும் உறுதியுடன் தொடர்ந்து நடத்த முடிகிறது. யதார்த்தப் பூர்வமான இந்த உண்மையை உணர்ந்து அவரை அழைத்துப் பேச மத்திய-மாநில அரசுகள் முன் வரவேண்டும்.

÷மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை அறவே கைவிடும்படி வேண்டுகோள் விடுத்து உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

÷அதைப் போல ஒரு வேண்டுகோளை மத்திய அரசுக்கு முன்னாள் கடற்படை தலைமைத் தளபதி இராமதாஸ்,  மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியன், அணு சக்தி கட்டுப்பாட்டுக் குழு முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், டெல்லி உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா,  விஞ்ஞானிகளான பி.எம். பார்கவா,  எம்.வி. ரமணா, டி. பாலசுப்ரமணியம், எழுத்தாளர்களான அருந்ததிராய், ரொமிலா தாப்பர், பிரபுல் பித்வாய் மற்றும் பலர் கையெழுத்திட்டு  விடுத்திருக்கிறார்கள்.

÷அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்கள் நலனை மனதில் கொண்டு இந்த அறிஞர்கள் விடுத்திருக்கும் வேண்டுகோளுக்காவது செவி சாய்க்க மத்திய- மாநில அரசுகள் முன் வரவேண்டும்.

÷இடிந்தகரை மக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடுமையான அடக்குமுறைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உதயகுமார் மீதும் மற்றும் போராட்டக் குழுவினர் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்.

÷அடக்குமுறைகளினால் அம் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கச் செய்ய முடியாது. அவ்வாறு செய்வது எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை எவ்வளவு விரைவில் மத்திய, மாநில அரசுகள் உணர்கின்றனவோ அவ்வளவு விரைவில் அப்பகுதியில் அமைதி திரும்பும்.

÷இடிந்தகரை எனும் சிற்றூரில் மட்டுமே நடைபெற்ற இப்போராட்டம் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இப்போராட்டம் பரவுவதற்குள் சரியான முடிவுகள் எடுத்து மத்திய-மாநில அரசுகள் செயல்பட வேண்டும். இல்லையென்றால் விபரீதம் விளையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT