கட்டுரைகள்

தொகுதி நிதியை பயன்படுத்தாதது ஏன்?

நடப்பு மக்களவை காலம் முடிவுற ஒரு ஆண்டுக்கும் குறைவாக உள்ள நிலையில், மக்களவை உறுப்பினர்கள் 163 பேர்

எம். அருண்குமார்

நடப்பு மக்களவை காலம் முடிவுற ஒரு ஆண்டுக்கும் குறைவாக உள்ள நிலையில், மக்களவை உறுப்பினர்கள் 163 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை குறைந்த அளவே பயன்படுத்தி இருப்பதாக அண்மையில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், மிகவும் குறைவான அளவில் 23.78 சதவீதம் பயன்படுத்தியிருந்தது கர்நாடக மாநில பெல்லாரி (தனி) தொகுதியின் பாஜக உறுப்பினர் ஜெ.ஷாந்தா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் (50.77 சதவீதம்), சையத் ஷானவாஸ் உசேன் (38.25 சதவீதம்), மேனகா காந்தி (36.15 சதவீதம்), ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் (50.27 சதவீதம்), ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் (56.70 சதவீதம்), மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி (38 சதவீதம்)... என்று பட்டியல் தொடர்கிறது.

 சட்டப் பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தத்தம் தொகுதி மக்களின் குறைகளை அரசுக்கு தெரியப்படுத்தி, தொகுதியை மேம்படுத்த தேவையான நிதியை பெற்றுத் தரவும், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.  அதே போல தங்களுடைய ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை அரசு விதிகளுக்கு உட்பட்டு தங்களுடைய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணி மேற்கொள்வதற்காக ஒதுக்கி அந்த பணியை செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்வது மக்கள் பிரதிநிதிகளின் கடமையும் பொறுப்புமாகும்.

 ஆனால், இவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியையே மிகவும் குறைவாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது, அவர்களை தொகுதி மக்கள் அணுகவே முடியாத நிலையில் உள்ளார்கள் என்பதைதான் காட்டுகிறது.

தொகுதி மக்களோ, அவர்களுடைய பிரதிநிதிகளோ பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தித்து தங்களுடைய பகுதிக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கும் பொழுது அவர்கள் அந்த பணிகளுக்கு தங்களுடைய நிதியை ஒதுக்கி பரிந்துரை செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.  ஆனால் மிகவும் குறைவாக ஒதுக்கீடு செய்திருப்பதிலிருந்து அவர்கள் தொகுதி மக்களை சந்திக்கவில்லையென்பது நன்றாக தெரிகிறது.

 பொதுவாக வெற்றி பெற்ற பிறகு தொகுதி மக்களை சென்று சந்திப்பது என்பது நடக்காத காரியமாகதான் இருக்கிறது.  தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர்கள் பங்கேற்றுவிட்டு சென்று விடுகின்றனர்.

  பொதுமக்களை நேரடியாகச் சென்று சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்பதில்லை.  அவர்களுடைய குறைகளை கேட்காவிட்டாலும் பரவாயில்லை, அந்த தொகுதி மேம்பாட்டுக்கு செய்ய வேண்டிய பணிகளுக்காவது தங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்து பரிந்துரை செய்திருக்கலாம்.  அதிலும் கஞ்சத்தனத்தை காட்டியுள்ளது வருத்தத்துக்குரியது.

 குறைவான நிதியைப் பயன்படுத்தியிருப்பது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு, ஒதுக்கீடு செய்து பரிந்துரைத்த நிதியை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்தி பணியை விரைந்து முடிக்காமல் விட்டுள்ளனர்.  மாவட்ட நிர்வாகம்தான் அதற்கு பொறுப்பு. பணி முடிவுறாமல் இருந்ததால் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களில் அந்த பணி குறித்து சேர்க்கப்படாமல் விடுபட்டு இருக்கலாம். அதனால் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் குறைவான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது போன்று விவரம் வெளியாகியிருக்கும். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லையென அவர்கள் தெரிவித்திருந்ததாக செய்தி வெளியாகியிருந்தது.

குறைவாக நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு மாவட்ட நிர்வாகங்களே காரணமென கூறிவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டுள்ளனர்.  பணிகளை விரைந்து முடிக்காதது குறித்தும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயன்படுத்தாதது குறித்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்தை ஏன் கேட்காமல் விட்டார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.  இது அவர்களுக்கு தொகுதியின் மீது அக்கறையில்லை என்பதை தான் காட்டுகிறது. மாவட்ட நிர்வாகங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து எந்தவித கருத்தும் கூற முடியாத நிலையில் இருப்பதால் இதில் எது உண்மையென்பது அவரவர்களுக்கே வெளிச்சம்.  

  ஆனால் நஷ்டம் என்னவோ தொகுதி மக்களுக்குத்தான்.  பாராளுமன்ற உறுப்பினர்தான் தொகுதிக்கு வரவில்லை.  அவருடைய நிதியாவது தொகுதிக்கு வந்து அதனால் பணிகள் நடந்து தொகுதியாவது ஓரளவுக்கு மேம்பாடு அடைகிறதே என்று நிம்மதியடையும் மனநிலை பொதுமக்களிடையே இருந்தது.  ஆனால் பாராளுமன்ற உறுப்பினரின் நிதியும் தொகுதிக்கு வராமல் போனால் பொதுமக்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பது நம் அனைவராலும் உணர முடிகிறது. இதை யாரிடம் போய் சொல்வது, யாரிடம் போய் கேட்பது. 

  மக்களுக்கும், தொகுதிக்கும் பயன்படாத அந்த நிதி இருந்தென்ன லாபம் என்று தங்களுக்குள்ளேயே பொதுமக்கள் கேள்வியை எழுப்பி ஆதங்கப்பட்டுக் கொள்வதை தவிர வேறு எதையும் செய்துவிட முடியாது.  இதற்கெல்லாம் எப்பொழுது விடிவு காலம் பிறக்குமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT