கட்டுரைகள்

"முடி' வளர்த்தோம், "மூளையை' வளர்த்தோமா!

நம் மூதாதையர் உடம்பு மிருகம் மாதிரி, உரோமம் மூடி இருந்தது என்று சொன்னால் சில

நெல்லை சு. முத்து

நம் மூதாதையர் உடம்பு மிருகம் மாதிரி, உரோமம் மூடி இருந்தது என்று சொன்னால் சில "புத்திசாலிகள்' பரிகாசம் செய்கின்றனர். இன்றைக்கும் பர்மாவில் அழிந்துவரும் மாண்டலே பழங்குடி இனத்தவர்க்குத் தாடையில் மட்டுமா, நெற்றியிலும் மேல் மூக்கிலும் கன்னத்திலும் செம்மறியாட்டு உரோமக் காடு.

÷ஏதாயினும், பாலூட்டி இனம் இரண்டு காலில் நிற்கத் தொடங்கியதும் அன்னை மார்பில் குழந்தைகள் புரள ஆரம்பித்தன. போக்குவரத்து நெரிசலான மண் சாலையில் புல் முளைக்குமா? அதே கதைதான் உடம்பின் அடிக்கடி செயல்படும் உறுப்புகளில் முடி முளைவிடாது. வீம்புக்காக, அனைவரும் உடை இன்றி மார்பினால் ஊர்ந்து சென்றால் பல லட்சம் ஆண்டுகளின் பின் மனித உடம்பு மண்புழு போல் வழுவழு என்று ஆகிவிடும்.

÷இதற்கு மத்தியில், "தகப்பனார் தினமும் முகச்சவரம் செய்தால் வாலிப வயதில் பேரனுக்குத் தாடியே முளைக்காதா?' என்று சிலருக்கு "அறிவார்ந்த' சந்தேகங்கள் எழக் கூடும். இத்தகைய படிமங்கள் பல தலைமுறைகளின் பின் அவற்றின் மரபணுக்களிலும் பதிவாகின்றன என்பதே உண்மை.

÷அழகுப் பெண்களும் தம் அக்குளில் முடி இல்லை என்பதற்கு என்ன மாய விளம்பரம்? பளபளப்பாக இருக்கிறதாம்; ஏதோ குறியீடாக அதையும் வெட்கம் இல்லாமல் கை உயர்த்திக் காட்டுகிறார்கள்.

÷சிரத்தையுடன் அறிவியல் ரீதியில் "சிந்திக்காமலும்' வெட்டியாய் இருந்துவிடாதீர்கள்; மூளையே தேவை இல்லை என்று மனித மரபணு முடிவு செய்துவிடும்! அது முட்டாள்களின் முகவரி. போதைகளால் மழுங்கப்பட்ட இனமும் அதே வகைதானே?

÷எப்படியோ, மயிர் நீப்பின் உயிர் வாழாதது "கவரி மான்' என்று தப்பாகவே அர்த்தம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். மானம் இழந்தால் நல்லோர் உயிர் வாழமாட்டார்கள்; அதேபோல முடி இழந்தால் "கவரி மா' உயிர் வாழாது. காரணம், அதனால் புறத் தட்பவெப்பத்தைச் சகித்துக்கொள்ள இயலாது. அதற்காக விலங்குகளும் மயிர் இழக்க நேர்வதையே அவமானமாகக் கருதி உயிர்விடும் என்று ஒப்பிடுவாரும் இருக்கிறார்கள்.

÷உண்மையில் திருக்குறளில் வரும் "கவரி மா' முடி அடர்ந்த விலங்கு. அந்நாளைய முடி யானைகள் ("மம்மோத்'), காட்டு எருதுகள் (ஜி.யு. போப் ஆங்கில உரை இது?), மிளா இன, வன மான்கள் போன்றவை.

  கவரி என்பது கூந்தல் உடையாளைக் குறிப்பதானால் கெüரி - செüரி என்பதும் மொழியியல் பிறழ்ச்சி ஆக அமையலாம். கேரட், சர்க்கஸ் ஆகிய சொற்களில் ஆங்கில முதல் எழுத்து ("சி') "க்' ஆக உச்சரிக்கப்படுவதைப் போல.

  இன்றும் உதிர்ந்த முடி அல்லது தேங்காய் நார்க் கொத்துகளை "சவறு' என்று மலையாளத்தில் குறிக்கிறார்கள்.

÷""வென்வேல் கவுரியர்'' (அகநானூறு 70:13) பாண்டியர்களாமே! அவர்கள் சடாமுடி வளர்த்து இருந்தார்களோ என்னவோ? சமணர்கள் என்று அறியப்பட்ட அருக்கியர், கிரேக்க விளையாட்டு வீரர்களைக் "கெüரவோஸ்' என்றே வழங்கினராம். இதுவே "கெüரவர்' என்றே ஒலிக்கிறது.

 தலைமுடி வளர்த்தவர்களுக்கு இந்தப் பெயரோ? புல் மாதிரி என்பதால் "கோரை' என்ற சொல் பிறப்பும் ஆராய்ச்சிக்கு உரியது.

÷ஏதாயினும், முடியோ நிறமற்ற நார்ப்பொருள், கெரோட்டின். இது "கவுரி'த்தீன் மாதிரி காதில் விழுகிறதா? போகட்டும், பட்டு நூல், சிலந்தி நூல், துருவப் பிரதேசங்களின் வெள்ளைப் பாண்டாக் கரடிகளின் உரோமம்கூட தூய கெராட்டின் வகைதான். தோலின் மேல் படலத்தில் கெராட்டின் திசுக்கள் கெராட்டின்களை உற்பத்தி செய்கின்றன. இதில் பல ரகம் உண்டு. உண்மையில் இந்த கெராட்டின்களின் முழுப்பெயர் சைட்டோ கெராட்டின் என்பது ஆகும்.

÷"அர்த்ரப்போடு' ஆகிய கணுக்கால் (அர்த்ரோ-இணைப்பு, போட்-பாதம்) நண்டு, தேள், பூரான் (பழுதை) இனத்தில் "சிட்டின்' என்ற வேதிமம் அடங்கி உள்ளது. "கெராட்டின்' தடித்துக் கடினம் ஆகி, கருப்பாய்த் தோன்றும். இது நைட்ரஜன் கலந்த பன்கூறுச் சர்க்கரை மூலக்கூறு. கொஞ்சம் கால்சியம் கார்பனேட்டுச் சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்த கடினத் தோல் ஆமை ஓடு, நண்டு உடல். பிரெஞ்சு மொழியில் "சிட்டினி' (சட்னி அல்ல!) என்றால் சிற்றாடை அல்லது பாவாடை.

÷இன்னும் சொல்வதானால், ஆமை ஓடுகள், பறவை இறகுகள், அலகுகள், நகங்கள் யாவும் கடின "பீட்டா-கெராட்டின்' வகை. திமிங்கலம் போன்ற இனங்களின் வாய்க்குள் கெராட்டின் சல்லடைகள் உள்ளன. அவை உறிஞ்சிய தண்ணீரில் இரையை மட்டும் வடிகட்டித் தண்ணீரை வெளியே உமிழ்ந்துவிடும்.

   பாலூட்டி இனத்தின் தலைமுடி, கொம்புகள், கூர் நகங்கள், கால் குளம்புகள் எல்லாமே ஆல்ஃபா-கெராட்டின்கள். அதனால் முடி வளருவதற்கு எந்த முட்டாளாவது நகங்களை அரைத்துச் சாப்பிடத் துணிவாரோ?

÷இதற்கு மத்தியில் "புறா' களிம்புவேறு சந்தைக்கு வந்துவிட்டது. முடி வளர்ப்பது என்னவோ உரம் போட்டு வளர்ப்பது போலப் பிரபலம் ஆகி வருகிறது. முடி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிபுணர்களின் அமர்க்களப் பேட்டிகள் வேறு. செடி மாதிரி அவ்வப்போது முடியை வெட்டிவிட்டால் நன்கு வளரும், அல்லது கெட்டி ஆகும் என்பது எல்லாமே காதில் பூ. வெட்டா விட்டாலும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். உண்மையில் முடி என்பது மனித உடலின் இறந்த செல்கள். உடலால் பிதுக்கி வெளியேற்றப்படும் கழிவு நார்கள். அந்த முடி வளர்க்க அமேசான் காட்டுத் தைலமாம். செல்களைக் கொல்வதற்குத் தானோ?

÷உள்ளபடியே, முடி உதிர்ந்த பிராணிகளின் தோல் கெராட்டினால் தடித்து புறச்சூழலைத் தாங்கும்படி அமைந்தது. காண்டாமிருகத் தோல்வாதிகள் நம்மிடையேயும் இருக்கிறார்கள். "மாட்டுத் தீவனம்' வரை தின்றவர்கள். "கடலில் தூர் வாரி' உண்டவர்கள். இன்று "உடல் குறை' உடையவர்களையும் விட்டு வைக்கவில்லை.

  "71 லட்சம் ஊழல் எல்லாம் ஒரு மத்திய மந்திரிக்குப் பல் குத்த உதவுமா?' என்று பேசுகிறார்கள். 71 கோடி என்றால்தானே கட்சி நடவடிக்கை எடுக்குமாம்! கோடிகளில் பங்கு கிடைத்தால் அல்லவா "தலைமை'க்குப் பெருமை?

÷ஏதாயினும், முடி முன்னேற்ற மருத்துவர்களிடம் என்னவோ சிறந்த கெராட்டின் சிகிச்சை வேறு உண்டாம். இது முடியை, வழுக்கையில் நடுவது அல்ல.

 உண்மையில் மண்டையில் முடி நாற்று நடுவதற்கு மேனாடுகளில் 25,000 ரூபாய் வரை செலவு ஆகும். கெராட்டின் சிகிச்சை என்பது வெறுமனே வளைந்த முடியை நிமிர்த்துவது, அல்லது சுருட்டை ஆக்குவது. அவ்வளவுதான். கெராட்டினைக் குழைத்துத் தலைமுடியில் தடவி சீவி, சூடேற்றி விடுவார்கள். இதன் பிறகு 48 மணி நேரம் தலையில் துளித் தண்ணீர் படக்கூடாது.

÷சில நேரங்களில் ஃபார்மால்ஃடிஹைடு கலந்த சிகிச்சையும் உண்டாம். வேறு வினையே வேண்டாம். அதன் ஆவி, உங்களை "ஆவி' ஆக்கி விடும். புற்றுநோய்க் காரணியை சுவாசித்தால் என்னவாகும்? ஜாக்கிரதை.

  இந்த ஃபார்மால்டிஹைடு 40 சதவீத நீர்க்கரைசல்தான் ஃபார்மாலின். மருத்துவக் கல்லூரிகளில் செத்த தவளை, பாம்பு, குழந்தை போன்றவற்றின் உடல்களைப் போட்டுப் பதப்படுத்தி வைப்பது இதில்தான்.

÷முடி வளரும் வயல்வெளி நம் தோல். அதன் கொழுப்புச் சுரப்புகள் தோலையும் உரோமத்தையும் மினுமினுப்புடன் வைப்பது மட்டுமா? நுண் கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்கின்றன. அவற்றை சவர்க்காரம் போட்டு தேய்த்து அகற்றி உங்கள் உடம்பைக் கெடுப்பதற்குத்தான் எத்தனை அட்டகாசமான விளம்பரங்கள்? அந்தக் கொழுப்பில் 40 சதவீதம் சமையல் எண்ணெய்களில் காணப்படும் "ட்ரைகிளிசரைடு' வஸ்துகள்.

÷காதுக்குள் பூனை மயிர் மாதிரி சிறு இழைகள் இருக்குமே? அங்கு காதுக் குறும்பி என்கிற எண்ணெய்ப் பிசுக்கு வெளிப்படும். அது காதுக்குள் சிறு பூச்சிகள், தூசி தும்புகள் புகாமல் தடுக்க உடலின் இயற்கைப் பாதுகாப்பு.

÷உண்மையாகவே, இந்தப் பசைக் கொழுப்பு அபரிமிதமாகச் சுரந்தாலே பொடுகு உண்டாகும். கெராட்டினால் தடுக்கப்பட்டு, தோலின் மேல் சருகாகப் படியும். வியர்வைத் துவாரங்கள் அடைபட்டு, சுரப்புகளில் தொற்று பரவும்போதுதான் பருக்கள் வெடிக்கின்றன. தெரியுமோ சங்கதி? முகப்பருக்களும் இதே சாதிதானே.

÷எண்ணெய் வழியும் பஜ்ஜி சாப்பிட்டால் உடல் கொழுப்பு கூடும். தோலுக்கு அடியில் எண்ணைய்ச் சுரப்பிகள் சுறுசுறுப்பு அடையும். மிருகக் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட வாசனை சோப்பு போட்டால் முகப்பரு அழியுமா? நம் வீட்டில் முகப்பரு பற்றி எந்தக் கவலையும் இல்லை என்கிற அம்மா பேச்சைக் கேட்டால் உருப்பட்டால் போலத்தான்.

÷உடலின் வளர்சிதை மாற்றத்தின்போது மாலசீஸ்ஸியா ஈஸ்ட் வகை நுண் உயிரிகளும் தோல் வழி வெளியேற்றப்படும். ஒரு நகக் கண் அளவில் ஏறத்தாழ 4,87,000 செல்கள் பொடுகு ஆக உதிரும். குளிர் காலத்தில் பொடுகு அரிப்பு அதிகரிக்கும். இதனை ஒழிக்க ஆயுர்வேதத்தின் குறு மிளகு உதவுகிறதாம். இதில் துத்தநாகம், செலீனியம் போன்ற பொடுகு ஒழிப்புத் தனிமங்கள் உள்ளன. வேப்பிலை அரைத்துத் தேய்த்தாலும் நல்லது என்கிறார்கள். இவற்றைத்தான் துத்தநாக பைரித்தையோன் அல்லது செலீனியம் சல்ஃபைடு அடங்கிய குழம்புகளாகக் கொடுத்து உங்களைக் குழப்புகிறார்கள்.

÷முட்டை மஞ்சள் கரு எண்ணெய் கூட சிறந்த பொடுகு மருந்துதான். இதில் லெசித்தின், கொலஸ்ட்ரோல், க்சேந்தோஃபில் ஆகிய மருந்துப் பொருள்கள் அடக்கம். அவற்றில் பெருமளவு ட்ரைகிளிசரைடு இன வேதிமங்களே. இந்த ட்ரைகிளிசரைடு என்பது கிளசரால்-கொழுப்பு அமிலங்கள் கூடிப் பிறந்த "எஸ்டர்' இனம்.

÷இந்த முட்டை ஒமேகா-3, ஒமேகா-6 ஆகிய கொழுப்பு அமிலங்களின் தாய்வீடும் கூட. சொல்லப்போனால், தாய்ப்பாலிலும் இதே வேதிமங்கள் தாம். இங்கே நாம் குறிப்பிட்டது கோழி முட்டை. எந்தக் கூ(ழ்)முட்டையாவது, ஈமு முட்டையை எடுத்துத் தேய்த்தால் நாம் உத்தரவாதம் தர முடியாது. முட்டை எண்ணெயின் மற்றொரு பயன் - முகப் பருக்களுக்கும் இது சிறந்த நிவாரணி.

÷எப்படியோ, பழைய தோலை உரித்துப் போடத்தான் குளிக்கிறோம். அதிலும் சாதாரண சோப்பு அல்லது ஏதேனும் ஷாம்பு போட்டு முடியைக் கழுவுங்கள், போதும்.

÷முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த எளிய சில உபாயங்கள். இப்படி முடி நினைந்து நெக்கு உருகி, நொந்து அலுத்துக் கொள்ளாதீர்கள். மன இறுக்கத்தால் இருக்கிற ஒன்றிரண்டு தலைமுடியும் உதிர்ந்துவிழும். எந்த விளம்பரத்தை நம்பலாம் என்று நீங்களாக முடியைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். முழுச் சொட்டை என்ற பட்டம் நிச்சயம்.

÷பொதுவாக ஈரத் தலையை வாரக் கூடாது. தலை நனையாமல், "உடலுக்கு மட்டும்' குளிப்பது இன்னொரு வேடிக்கை! வறண்ட பிரதேசத் தலைமுடிக்கோ நல்ல தண்ணீரே சிறந்த சத்துணவு என்பதுதான் அறிவியல் உண்மை. அத்துடன் தினம் இரண்டு நேரம் தலைக்குக் குளிக்க வேண்டும்.

÷அட போங்க சார், இங்கே பயிர் விவசாயத்துக்கே தண்ணீரைக் காணோம். அண்டை மாநிலங்களை அண்ட வேண்டி இருக்கிறது. அதிலும் விவசாயமே குலைந்த பிறகு, அன்னிய நேரடி முதலீட்டாளர் வந்து எந்த விவசாயி பலன் பெறுவாரோ? ஏற்கெனவே மதசார்பற்ற "கொள்'கையோடு கூட்டு வைத்த நம் மத்தியத் தூதர்கள் நமக்கு இங்கே "இலவச மொட்டை' அடித்து விட்டார்களே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT