"பாரத தேசம் பழம்பெரும் தேசம், நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்' என்றார் பாரதியார். நமது தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஈவிரக்கமற்ற வகையில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடுமையான பனி, மழை, வெயில் என்று மோசமான வானிலையிலும் பாலைவனம், குளிர் மலைப் பிரதேசம், முள்ளுக்காடு, சதுப்புநிலம், உப்பங்காற்று வீசும் முடிவிலாக் கடல் பிரதேசம் என்று எத்தகைய மோசமான இடங்களிலும் தாய்நாட்டைக் காக்கும் பணியைச் செய்கின்றவர்கள்தான் நம்முடைய ராணுவத்தினர், துணை நிலை ராணுவப்படை வீரர்கள்.
நாம் ஒவ்வொருவரும் எதிரிகளின் தாக்குதல் பற்றிய அச்சமின்றித் தூங்குவதற்கு நாட்டின் எல்லையில் தூக்கம் மறந்து, துன்பம் மறந்து நாட்டைக் காக்கும் பணியில் அல்லவா அவர்கள் ஈடுபட்டுள்ளனர்?
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹேமராஜ், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதாகர் சிங் ஆகிய ராணுவ வீரர்கள் கொடூரமான முறையில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் அல்லது ராணுவத்தினரிடையே உள்ள தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதை நாம் எந்த அளவுக்கு உணர்ந்து கண்டித்தோம் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தில்லியில் நடந்த பாலியல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தீர்மானித்து, நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு போராடும் நமது இளைஞர்களும், இளைஞிகளும் இரு ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், நாடு முழுக்க அதற்காக மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். அதிலும், கொல்லப்பட்ட ராணுவ வீரர் ஹேமராஜின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றிருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராகவும், நமது ராணுவத்தினருக்கு ஆதரவாகவும் நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்துக்காட்டக் கூட பெரும்பாலானவர்கள் முன்வராதது ஏனோ?
"கார்கில் போருக்காக பொங்கி எழுந்த இந்திய தேசத்து மக்களா இவர்கள்?' என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது.
தேசிய உணர்வு என்பது, கிரிக்கெட் விளையாட்டின்போதும், மக்களவைத் தேர்தலின்போதும் வெளிப்படுவது என்ற அளவிற்கே உள்ளது.
தேர்தல் நேரத்திலும், விளையாட்டிலும் இருக்கும் நாட்டுப் பற்றானது மற்ற விஷயங்களிலும் இருக்கிறதா என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
இந்தியன் என்ற நினைப்பைவிட தமிழர், கன்னடர், மலையாளி, பிகாரி, மகாராஷ்டிரர் என்ற பிராந்திய உணர்வே மேலோங்கிவிட்டன. இப் பிராந்திய உணர்வைப் போக்கும் தலைவர்கள் இப்போது இல்லை என்பதே நமது நாட்டின் துரதிருஷ்டம்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆந்திரச் சகோதரர்களே, தெலங்கானா என்றும் விஷால் ஆந்திரா என்றும் பிரிந்து போராடுவதை என்னவென்று சொல்வது?
இலங்கை ராணுவத்தால் தமிழ் மீனவர் தாக்கப்படும்போது அது தமிழர் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அசாம் ஊடுருவல் அந்த மாநிலத்துக்குரியதாகவே ஒதுக்கப்படுகிறது.
உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டால், அதற்கு மட்டும்தானே பாதிப்பு என்று கவனிக்காமல் இருப்பதில்லை; ஆனால் மாநிலங்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு மெத்தனமும் கட்சிக் கண்ணோட்டமும் பார்ப்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.
இந் நிலை மாற வேண்டும். இந்தியத் திருநாட்டில் எங்கு எந்த இனத்தவர் பாதிக்கப்பட்டாலும், அது நாட்டின் பாதிப்பாகவே கருதப்பட வேண்டும். அப்படிப் பார்க்கும் செயல்பாடுடைய தேசிய அரசே மத்தியில் அமைய வேண்டும். அப்படி அமைந்தால்தான் எதிர்கால இந்தியா வலிமையுடன் அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.