இமயத்தைப் பழிவாங்கிய இயற்கை
தடுமாறும் தட்பவெப்பம் இமாலய இயற்கை உயிர்ச்சூழலை இரு வாளால் வெட்டி வீழ்த்தி வருகிறது. முதல் வாள், வெள்ளிப்பனியை உருக்கும் கூடுதல் வெப்பம். இரண்டாவது வாள், அளவை மீறிய மழைப்பொழிவு.
கட்டுரைகள்இமயத்தைப் பழிவாங்கிய இயற்கை
தடுமாறும் தட்பவெப்பம் இமாலய இயற்கை உயிர்ச்சூழலை இரு வாளால் வெட்டி வீழ்த்தி வருகிறது. முதல் வாள், வெள்ளிப்பனியை உருக்கும் கூடுதல் வெப்பம். இரண்டாவது வாள், அளவை மீறிய மழைப்பொழிவு.
தடுமாறும் தட்பவெப்பம் இமாலய இயற்கை உயிர்ச்சூழலை இரு வாளால் வெட்டி வீழ்த்தி வருகிறது. முதல் வாள், வெள்ளிப்பனியை உருக்கும் கூடுதல் வெப்பம். இரண்டாவது வாள், அளவை மீறிய மழைப்பொழிவு. இயற்கையின் சீற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் மனிதச் செயல்பாடுகளே தவிர, இயற்கை அல்ல. வளர்ச்சிக்காக வனங்கள் அழிந்ததால் இன்று இயற்கை இமயத்தைப் பழிவாங்கிவிட்டது.
ஜூன் மாதம் 15-ஆம் தேதி தொடங்கிய மழை, உத்தரகண்ட் மற்றும் இமாசலப் பிரதேசத்தில், ஒட்டுமொத்தமாக ஒன்பது மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய அளவு ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்துவிட்டது. 400 மில்லி மீட்டர் முதல் 500 மில்லி மீட்டர் வரை பெய்துள்ளது. மிகவும் பாதிப்புற்ற இடங்கள், கேதார்நாத், கெளரிகுண்டம், ராம்பாத், ருத்ர பிரயாக் ஆகியவை. உத்தர காசியில் கங்கோத்ரி, யமுனோத்ரி தடங்களே அழிந்துவிட்டன.
யாத்ரிகர்களின் கூட்டம் மிகுந்த வழிபாட்டுப் பருவம் வேறு. ஆற்று வெள்ளம் மணல்வெளியில் ஓடுவதை நாம் பார்த்திருப்போம். அதன் சீற்றம் வேறு. அதே வெள்ளம் மலைப்பகுதிகளில் நதிகளின் உற்பத்தி ஸ்தலங்களில் ஏற்பட்டால் உருட்டி வரப்படுவது பாறைக்கற்களாகும். அப்படிப்பட்ட இடங்களில் வெள்ளத்தால் நிலச்சரிவு என்பதைவிட, கற்களின் சரிவு ஏற்பட்டு அப்படிப்பட்ட வெள்ளத்திலிருந்து தப்ப முயற்சிக்கும்போது மனிதர்கள் இடிபாடுகளில் சிக்கி கை, கால் ஒடிந்து வெளியேற முடியாமல் மரணமுறுவர். கேதார்நாத் கோயிலில் தஞ்சமடைந்த யாத்ரிகர்கள் அனைவரும் பிழைத்தனர், மற்றவர்கள் மடிந்தனர்.
இமயத்தில் மரணமுற்றோர் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணி நீடித்துக்கொண்டே போகிறது. திக்குத் தெரியாத காட்டில் தவிப்போர் எவ்வளவு பேர்களோ? கைப்பேசி இருந்தும் கோபுரம் இல்லை. வனத்தை அழித்துக் கட்டப்பட்டவை எல்லாம் தீப்பெட்டிகள் மிதப்பதுபோல் அழிந்துவிட்டன. மனிதன் இயற்கையை அழித்தான். இயற்கை மனிதனை அழித்துவிட்டது. பாகீரதி வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட காட்சியை டி.வி.யில் பார்த்திருக்கலாம்.
மனிதன் எப்படியெல்லாம் இமய வனப்பை அழித்தான் என்ற விவரத்தைக் கவனிப்போம். உத்தரகண்டத்தில் கங்கையுடன் கலக்கும் ஏராளமான நதிகளின் உற்பத்தி ஸ்தலங்களிலும், மழைநீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு வரம்பே இல்லை. வனமாயிருந்த இடமெல்லாம் புற்கள் இல்லாத மொட்டைக் கரட்டு நிலமாக மாறியுள்ளன. மரம் வெட்டும் பணி நூறாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்கிறது. வனங்கள் அழிக்கப்பட்டுப் புதிய குடியிருப்புகளாகவும் விவசாய நிலமாகவும் மாற்றப்பட்டது ஒரு பாதி. கங்கை செல்லும் வழித்தடப் படுகைகளில் 30 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒன்று என்று புனல் மின்சாரத்திற்காகப் பல அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. நதி ஓரத்தில் புதிய புதிய அணைக்கட்டுகளுக்குரிய சாலை வழிக் கட்டடங்கள் ஏற்பட்டன. இவையெல்லாம் மறுபாதி.
1970-லிருந்து 2000-ஆவது ஆண்டுக்கு வரும்போது 15 சதவிகித வனங்கள் அழிந்தன. 2000-ஆவது ஆண்டிலிருந்து 2011-க்கு வரும்போது 47 சதவிகிதம் அழிந்துள்ளது. 1970-க்கு முன் அழிந்ததுபோக எஞ்சியிருந்த வனங்களில் சுமார் 50 சதவிகிதம் அழிக்கப்பட்டால், கங்கை பொங்கி எழாமல் என்ன செய்யும்? அடர்த்தியான வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட வனங்களை எடுத்துக்கொண்டால் 1970-க்குப்பின் அழிவு 23.6 சதவிகிதம்.
மலைப்பகுதிகளில் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களின் பசுமைக்குப் பொருள் மழைப்பொழிவை மண்ணுக்குள் நிலைநிறுத்திக் கொள்வதாகும். எவ்வளவு மழை பெய்தாலும் மரங்கள் மண்ணுக்குள் மழை நீரை உள்வாங்கி மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
மரங்கள் அழிந்ததால் மண்வளம்கெட்டு மண் அரிப்பும் ஏற்பட்டு பூமிக்குள் செல்ல வேண்டிய மழை நீர் மேல் மண் பரப்பையும் கற்களையும் பெயர்த்துக்கொண்டு கங்கையைப் பெருக்கிச் சீற்றமுறச் செய்து, 5,000 மனித உயிர்களைப் பலிகொண்டு விட்டது. அழிவின் மதிப்பு பல "பில்லியன் டிரில்லியன்' ரூபாய்கள்.
உத்தரகண்ட் - இமாசலப் பிரதேசப் பேரிடரில் மனித இழப்பு பற்றிய புள்ளிவிவரங்கள் தெளிவாக இல்லை என்றாலும் அலக்நந்தா, மந்தாகினி நதிகளில் மிதந்த பிணங்களை எப்படி அளவிடுவது? வளர்ச்சி என்ற பெயரில் மலைக்காடுகளை அழிக்காமல் பசுமை நிலப்பரப்பை மீட்டிருந்தால் இவ்வளவு மனித உயிர்களும், கட்டடங்களும் சேதமாயிருக்காது. மழை நீரை பூமி உறிஞ்சியிருக்கும். கங்கை இந்த அளவுக்குப் பொங்கி எழுந்திருக்காது.
வெள்ளிப்பனி உருகுவதைப் பற்றிய புள்ளிவிவரம் மற்றொரு அபாய எச்சரிக்கை. புவி வெப்பமாதல் நிகழ்ச்சியில் கடந்த 100 ஆண்டுகளில் "கிளேசியர்ஸ்' என்று சொல்லப்படும் வெள்ளிப்பனி அழிவால் நீர்ப்பெருக்கு அளவு ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலைத்தொடரைவிட இமாலய மலைத்தொடரில் மிக அதிகம் என்பதால், கங்கையின் வேகம் அதிகமாயுள்ளது என்றும் ஐ.நா. புள்ளிவிவரம் கூறுகிறது.
உத்தரகாசி பகுதியில் புதிய பக்தி இயக்கம் காரணமாக, கங்கோத்ரி தரிசனத்திற்காக யாத்ரிகர்கள் கூட்டம் மிகுந்துவிட்டதால் உள்ளூர் வியாபாரிகள் வருமானத்தை எதிர்பார்த்து அசிசி - பாகிரதி நதிகளின் கரைப்பகுதிகளை ஆக்கிரமித்துப் பெரிய கட்டடங்களும் சிறிய கட்டடங்களும் கட்டி மலிவான தங்குமிடங்களை அமைத்துள்ளனர். நதிகளின் போக்குக்குத் தடை செய்யும் கட்டடங்களுக்கு மாநில அரசு தடை கொண்டு வருவது நல்லது. இதனால் இறப்பது இதர மாநில யாத்ரிகர்கள் என்பதை உத்தரகண்ட் அரசு உணர வேண்டும். இதுதவிர ஜம்மு - காஷ்மீரில் அமர்நாத்திலும், உத்தரகண்ட், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, ஹேமகுண்ட் கோயில்களில் அளவுக்கு அதிகமான நெரிசல், குறுகிய சாலைகளில் வரம்புமீறிய வாகனப் போக்குவரத்தில் "ஓவர்-லோட்' ஆகியவற்றையும் கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பது நன்று.
மற்றொரு கொடுமை, நீர் மின்சார அணைக்கட்டுகளைக் கட்டிய இடங்கள் எல்லாம் வெள்ளத் தடுப்புக்குரிய - வெள்ள ஆபத்து இல்லாத பசுமை இடங்களாகும். அங்கெல்லாம் தேவை இல்லாத அணைக்கட்டுகளைக் கட்டி கங்கைப்பெருக்குடன் நீர்த்தேக்க நீரும் சேர்ந்து கங்கையைப் பொங்கச் செய்ததுடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுங்கவும் இடமில்லாமல் போய்விட்டது.
இமாலய உயிர்ச்சூழலிலும் இயல்பான நீரோட்டத்திலும் மனிதர்கள் இயற்கை நெறியை மீறிக் கைவைத்து மாற்றியமைத்த விளைவுதான் இன்றைய நிலை. மிகவும் முக்கியமாக இமாலய நதிக்கரைகளின் இருபுறமும் 200 மீட்டர் இடைவெளிவிட்டுத்தான் கட்டடம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கோட்பாடு மிகவும் தேவை.
இன்றைய இயற்கைப் பேரிடரை எண்ணும்போது "இமயத்தைக் காப்போம்' என்று போராடிய "சிப்கோ' இயக்கப் பெண்களின் நினைவும் வருகிறது. 1973-இல் தேரிப்பகுதியில் மரங்களை மீட்க தாஷோ கிராம் சுயராஜ்ஜிய மண்டல் உறுப்பினர்கள் நிகழ்த்தியது "சிப்கோ'. ""சிப்கோ என்றால், மரங்களைத் தழுவி அணைத்துக் கொள்வது'' என்று பொருள்.
வனத்திலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தி இயற்கையை அவமானப்படுத்தும் இழிசெயலுக்கு முடிவு கட்டியது "சிப்கோ'. இதில் சாந்திபிரசாத் பட், சுந்தர்லால் பகுகுணா ஆதரவு தந்து ஊக்கப்படுத்தினர். அந்த பகுகுணா வேறு, இன்று உத்தரகண்ட் மாநில முதல்வராயுள்ள பகுகுணா வேறு. இவர் விஜய் பகுகுணா.
மைய அரசின் சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், கோமுகியிலிருந்து உத்தரகாசி வரையில் உள்ள பகுதியை "உயிர்ச்சூழல் காப்பிடமாக' அறிவிக்க வேண்டுமென்று கோரியுள்ளதை அதே கட்சி முதல்வர் விஜய் பகுகுணா மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் போக்ரியாலும் எதிர்க்கின்றனர். விஜய் பகுகுணா ""இமாலய சுனாமி'' என்று கங்கை வெள்ளத்தை வர்ணித்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் முடங்கிப்போன சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது புதுப்பிக்க எண்ணுகின்றனர். இமயத்தில் ஏற்பட்ட சுனாமி, சேது பந்தனத்தை ஒட்டிய வங்கக் கடலிலும் ஏற்பட்டு கேதார்நாத்தின் கதி ராமேஸ்வரம் கோயிலிலும் நிகழலாம் என்று அஞ்சுவது நன்று. இமாலய சுனாமி, சேது சமுத்திரத்திற்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையாகும். வாழ்க பாரதம்.
கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.