முகப்பு
கட்டுரைகள்

பாதுகாப்பில்லாத உணவுச் சட்டம்?

இந்தியப் பண்பாட்டிலும் கலாசாரத்திலும் வியப்பூட்டும் விஷயம் வேற்றுமைகளில் ஒற்றுமையும் உண்டு; ஒற்றுமைகளில் முரண்பாடுகளும் உண்டு. உலகிலேயே உணவு ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ள இந்தியாவில் விவசாயம் தத்தளிக்கிறது.

கட்டுரைகள்

பாதுகாப்பில்லாத உணவுச் சட்டம்?

இந்தியப் பண்பாட்டிலும் கலாசாரத்திலும் வியப்பூட்டும் விஷயம் வேற்றுமைகளில் ஒற்றுமையும் உண்டு; ஒற்றுமைகளில் முரண்பாடுகளும் உண்டு. உலகிலேயே உணவு ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ள இந்தியாவில் விவசாயம் தத்தளிக்கிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:16 PM
பகிர்:

இந்தியப் பண்பாட்டிலும் கலாசாரத்திலும் வியப்பூட்டும் விஷயம் வேற்றுமைகளில் ஒற்றுமையும் உண்டு; ஒற்றுமைகளில் முரண்பாடுகளும் உண்டு. உலகிலேயே உணவு ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ள இந்தியாவில் விவசாயம் தத்தளிக்கிறது. மொத்த வருமான மதிப்பில் விவசாயம் வழங்கும் மதிப்பு 14 சதவிகிதமே. தனிநபர் வருமானம் உயர்வதால் உட்கொள்ளும் மாவுப்பொருளான அரிசி, கோதுமையின் தேவை அடிமட்டத்து மக்களிடம் குறைந்து புரதச்சத்துள்ள உணவின் தேவை உயர்கிறது. கையிருப்பில் 5 கோடி டன்கள் இருந்தும் உணவு விலை தாறுமாறாக ஏறுகிறது.

ஒருபக்கம் "கொள்ள இடமில்லாமல்' கொள்முதல் பெருகி, அரிசியும் கோதுமையும் புழுத்துப் போகிறது. மறுபக்கம் கடைத்தட்டு மக்களில் - குறிப்பாக ஆதிவாசிகளும் போக்குவரத்து இல்லாத மலைவாழ் மக்களும் பட்டினியால் அவதியுறுகின்றனர். ஏற்றுமதியாகும் கோதுமையை மனித உணவுக்கு அல்ல, மாட்டு உணவுக்குத்தான் பயனாகிறதாம்!

ஆஸ்திரேலிய கோதுமையைத்தான் பன்னாட்டு கோதுமை உருட்டு ஆலைகள் மனித உணவாக ஏற்கின்றன. கோதுமையைச் சுத்தப்படுத்தி வழங்கும் சாதனங்கள் இந்தியாவில் இருந்தால் ஏற்றுமதி வருமான மதிப்பு உயரலாம். இதோ அதோ என்று நாடாளுமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஒருக்கால் நிறைவேற்றப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை, ஆடிட்டர் ஜெனரல், உணவுக் கார்ப்பரேஷனின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்து வழங்கியுள்ள அறிக்கை, ஆழ்ந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

2006-07 முதல் 2011-12 வரை கொள்முதல், மாநில ஒதுக்கீடு, மாநில ஏற்பு (ஆஃப்டேக்) குறித்த புள்ளிவிவர அடிப்படையில், ஆடிட்டர் ஜெனரல் வழங்கியுள்ள கருத்து கவனிக்க வேண்டியது. 2006-07-இல் மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு அளவு 6.41 கோடி டன்கள். மாநிலம் பெற்ற அளவு 3.67 கோடி டன்கள். 2011-12-இல் 7.09 கோடி டன்கள் ஒதுக்கப்பட்டாலும் ஏற்பு 5.63 கோடி டன்களே. ஒதுக்கப்பட்ட தானியங்களை ஏற்காத நிலை 2007-08-இல் 70 லட்சம் டன்கள். 2008-09-இல் 63 லட்சம் டன்கள். 2009-10-இல் 1.20 கோடி டன்கள். 2010-11-இல் 1.55 கோடி டன்கள். முதல் தவறு, மாநிலத் தேவை பற்றிய முன்மதிப்பீடு எப்போதுமே கூடுதலாயுள்ளது. இரண்டாவது தவறு, மாநிலத் தேவை குறையும்போது கொள்முதலையும், இருப்பையும் குறைக்காதது ஏன்?

""எல்லோருக்கும் மலிவு / இலவச உணவு'' என்ற லட்சியத்துடன் அப்படியே உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுமானால் மேற்படியான அதே தவறுகள் தொடரும். கொள்முதல் இலக்கை மேலும் உயர்த்த வேண்டும். மாநில அரசுக்கு மேலும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்டதை மாநில அரசுகள் வாங்க முன்வராமல் மேலும் மேலும் உணவு தானியங்கள் புழுத்துப்போகும் என்று எச்சரிக்கும் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை ஒருபக்கம் இருக்கட்டும். இதில் நமது கேள்வி, மேலும் மேலும் கொள்முதல் செய்வதற்கு என்ன மிச்சம் உள்ளது? ஏனென்றால் விவசாய விலைக்கமிஷனின் கூற்றுப்படி உணவு விளையும் அனைத்து மாநிலங்களிலும் அங்காடி வரத்துகளில் 98 சதவீதம் அரசுக் கொள்முதலுக்கு வழங்கப்படுகிறதாம்? மீதி 2 சதவீதத்தையும் வாங்கிவிட்டால் வெளி அங்காடியே இல்லாமல் போகலாம். வெளி அங்காடியில் அரிசியும் கோதுமையும் கிலோ ரூ. 100-க்கு விற்கும். ஏனெனில் அரிசி - கோதுமை வெளி அங்காடி வியாபாரத்தை உணவு மாஃபியாக் கூட்டம் கைப்பற்றி, அரசின் கொள்முதலையே கொள்ளையடிக்கும் வாய்ப்பு உருவாகாதா?

மேலும் ஓர் அடிப்படையான பிரச்னையை ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. அது கொள்முதல் கொள்கலன் பற்றியது. ஜூன் மாதம் தொடங்கிவிட்டால் கோடைப்பருவ கோதுமைக் கொள்முதல் தீவிரமாகும்போது, கொள்கலன் இல்லாத நிலை இன்னமும் சீரமைக்கப்படவில்லை.

கடந்த ஜூன் மாதம் 2012-இல் 3.32 கோடி டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மத்தியத் தொகுப்பு இருப்பான 8.24 கோடி டன்னில் 40 சதவிகிதம். இப்படி விவசாயிகளிடம் வாங்கிய 3.32 கோடி டன் கோதுமையைக் கொட்டி வைக்கவே இடமில்லாதபோது - சுமார் 66,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோதுமையை வீணாக்கிய நிலையில் - மேலும் மேலும் கொள்முதல் செய்து வீணாக்கவா உணவுப் பாதுகாப்புச் சட்டம்?

எல்லோருக்கும் உணவு வழங்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுவதற்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையை வீணாக்காமல் பாதுகாப்பு செய்ய வழி தேடுங்கள் என்று ஆடிட்டர் ஜெனரல் எச்சரிப்பதில் ஒரு தவறும் இல்லை. அன்னலட்சுமி என்றும் தானியலட்சுமி என்றும் தானியங்களைப் புனிதமாகப் போற்றிய பாரத நாட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களைப் பாதுகாக்க வழியில்லாமல் வீதிகளில் கொட்டி வாரி இறைத்துப் புழுக்க வைப்பது நியாயந்தானா?

அந்தக் காலத்தில் சிறியவர்கள் சாப்பிடும்போது ஒரு பருக்கை சாதம் சிந்தினால்கூட பெரியவர்கள் அவர்களுடைய முட்டியில் தட்டி கோபிப்பார்கள். கோடி டன் தானியங்களை வீணடிக்கும் அமைச்சர்களுக்கு எவ்வளவு தட்ட வேண்டும்? அதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?

மூன்றாவதாக, ஆடிட்டர் ஜெனரல் கேட்டுள்ள விவரம் கொள்முதல் விலை பற்றியது. உணவை வாங்கி வீணாக்கும் கொள்முதல் திட்டத்தை ஊக்குவிப்பதுபோல் ஆண்டுக்கு ஆண்டு விலையை ஏற்றித்தருவதில் என்ன அளவுகோல்?

நான்காவதாக, வரவு - செலவுக் கணக்குக்கு வந்த ஆடிட்டர் ஜெனரலின் பார்வையில், உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறும்பட்சத்தில் உணவுக் கார்ப்பரேஷன் மேலும் மேலும் நஷ்டமடையும் என்பதுவே. பொருளியல் விலை அடிப்படையில் கொள்முதல் செலவு 2011-12-இல் 88,000 கோடி ரூபாய். விற்றுப் பெற்ற வரவு 26,000 கோடி ரூபாய். பொருளாதார விலை ரூ. 20 / - கிலோ. மாநில விற்பனை விலை ரூ. 6 / - கிலோ. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலாகும்போது கோதுமை விலை ரூ. 2 / - ஆகக் குறையும். இலவசமாகவும் வழங்கப்படலாம் - இழப்பு மேலும் அதிகமாகும்.

இப்படியெல்லாம் ஆடிட்டர் ஜெனரல் எச்சரிக்கைகள் ஒருபுறம் இருக்க, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினால் - அப்படி அறிமுகமாகும்போது உணவு மானியம் ஆண்டுக்கு 1,24,000 கோடி ரூபாயாக உயரும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எப்பாடுபட்டாவது தேர்தலில் வெற்றிபெறத் துடிப்பதால் இரண்டு முரணியல்புள்ள சட்டங்களை நிறைவேற்றத் துடிக்கிறது. ஒன்று ""உங்கள் பணம் உங்கள் கையில்'' அடிப்படையில் மானியங்களைப் பணமாக வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும், உணவு மானியமும் அடக்கம்.

இரண்டாவது, உணவுப் பாதுகாப்புச் சட்டம். ஏற்கெனவே பற்றாக்குறை பட்ஜெட் மேலே மேலே பறந்து கொண்டுள்ளபோது 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு என்ன செய்வது? விலைவாசி மேலும் உயராதா? இதெல்லாம் இந்தியப் பிரதமரின் கவலை என்று நம்மால் ஒதுக்கித்தள்ள முடியுமா? எப்படியாவது மக்களை ஏமாற்றி, உணவுப் பாதுகாப்பு என்ற சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராவிட்டாலும்கூட, இதை அமல்படுத்திப் பெறக்கூடிய தேர்தல் வெற்றியே பிரதமரின் கவலையே தவிர, நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற கவலை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே அமல்படுத்தினாலும், தேர்தல் வெற்றியை உறுதி செய்வது கடினம். பொருளியல் கற்ற இந்தியப் பிரதமருக்கு உண்மை தெரிந்தாலும் ஆட்டிவிடும் காங்கிரஸ் கட்சித் தலைமையின் உத்தரவுக்கு அடிபணிய வேண்டிய நெருக்கடி இருக்கலாம்.

மாநில நிலைமைகள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவாக இல்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா தெள்ளத் தெளிவாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர்கள் விரும்பும் வகையில் மேற்படி மசோதாவில் திருத்தம் வழங்கும்வரை இந்தச் சட்டத்தில் தமிழ்நாடு பங்கு வகிக்காது. உணவுப் பாதுகாப்புச் சட்ட உதவியில்லாமலேயே இலவச அரிசி வழங்கப்படுகிறது. சத்தீஸ்கரில் மாநில அளவில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்துள்ளது அந்த மாநில அரசு. உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களும் மேற்கு வங்கமும் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப திருத்தங்கள் கோரியுள்ளன.

இந்த நிலையில், ஓர் அவசரச் சட்டத்தின் மூலமாவது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, தன் தேர்தல் வெற்றியை உறுதி செய்யத் துடிக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிக்குள் சேர்ந்துள்ள பல உதிரிக்கட்சிகள் - சரத்பவார் போன்றோர் - எதிர்த்தாலும்கூட காங்கிரஸ் மேலிடம் அதை சட்டை செய்யாது என்று தோன்றுகிறது. எனினும் ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையைக் கூர்ந்து கவனித்தால் நல்ல நகைச்சுவையும் உள்ளது. "மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற உணவுப் பாதுகாப்புச் சட்ட விருந்து தயார்.

விருந்து சமைக்க அண்டா, குண்டா எதுவுமில்லை. சாமான்களுக்கும் குறை. அரிசி, கோதுமை போதிய அளவில் வரவில்லை. பற்றாக்குறை பட்ஜெட் வேறு. பணமும் இல்லை. இருப்பினும், சோறு, சப்பாத்தி வழங்காமல் வடை, பாயாசத்துடன் விருந்து முடியும்!'

ஐயா பிரதமரே, முதலில் கொள்முதல் செய்யும் உணவைச் சேமிக்க நல்ல கொள்கலன் வாங்குங்கள். விவசாயிகள் வேர்வை சிந்தி அறுவடை செய்த கோதுமையையும் நெல்லையும் வீதியில் கொட்டி வீணாக்காமல் பாதுகாப்பதுவே நிஜமான உணவுப் பாதுகாப்பு. பாதுகாப்பு இல்லாத உணவுக்கு சட்டம் தேவை! வாழ்க பாரதம்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

முழு கட்டுரையைப் படிக்க →