ஒரு துளி விஷம்...
மாதா, பிதா, குரு, தெய்வம்... என்ற வரிசையில் மூன்றாவதாக இடம்பிடித்துள்ள ஆசிரியர்களில், சிலரின் செயல்பாடுகள் "வேலியே பயிரை மேய்ந்து வருகிறதோ' என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.
மாதா, பிதா, குரு, தெய்வம்... என்ற வரிசையில் மூன்றாவதாக இடம்பிடித்துள்ள ஆசிரியர்களில், சிலரின் செயல்பாடுகள் "வேலியே பயிரை மேய்ந்து வருகிறதோ' என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.
அம்மாவும், அப்பாவும் ரத்தம் சார்ந்த உறவுகள். தெய்வம் என்பது அனைத்துக்கும் அப்பாற்பட்ட சக்தி. இவற்றை எல்லாம் வரிசைப்படுத்தி மாதா, பிதா, தெய்வம் என மூன்றினை மட்டும் நமது முன்னோர்கள் கூறிவிட்டுச் செல்லவில்லை.
அவ்வரிசையில் ஆசிரியர்களையும் சேர்த்ததில் இருந்தே, ஆசிரியர்களின் மகத்துவத்தையும், அந்தப் பணியின் உன்னதத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், ஆசிரியர் பணி அறப்பணி, ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வதைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மேல் என்பன போன்ற வாக்கியங்களிலிருந்தே ஆசிரியர்களை இந்தச் சமூகம் எவ்வளவு உயரிய இடத்தில் வைத்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
அத்தகைய உயர்ந்த இடத்தில் ஆசிரியர்களை வைத்து சமுதாயம் போற்றி வரும் நிலையில் ஆசிரியர்கள் சிலரின் செயல்பாடுகள், ஆசிரியர் சமூகத்தையே கீழ்த்தரமாகப் பார்க்கவைக்கும் நிலையை ஏற்படுத்தி வருகிறது.
பாலியல்ரீதியான தொந்தரவுகளை மாணவிகளுக்குக் கொடுத்து வரும் சில ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்துக்கே பெரும் அவமானம் ஏற்பட்டு வருகிறது.
மதுரை அருகேயுள்ள குலமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சிலரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல் ஆசிரியர்கள் இருவரை காவல் துறையினர் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். ஆசிரியர்களின் இச்செயல் பொதுமக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தில்லி மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக உலகமே அதிர்ந்த நிலையில், பள்ளிகளில் நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதை அந்த இரண்டு ஆசிரியர்களிடமும் பொதுமக்கள் "நடந்துகொண்ட விதமே' கண்கூடாகக் காட்டியது.
மாணவிகள் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட அதிக நேரத்தை பள்ளிகளில் அல்லது சிறப்புப் பயிற்சி வகுப்புகளிலேயே செலவிடுகின்றனர்.
ஆசிரியர்கள் மீதுள்ள உயரிய மரியாதையால் இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிகளில்கூட தங்கள் மகளைப் பெற்றோர்கள் பயமின்றி அனுப்புவதுடன் மாலைநேர வகுப்புகளுக்கும், இரவுநேரப் படிப்புக்கும் அனுப்புகின்றனர். அத்தகைய நம்பிக்கைக்கு இதுபோன்ற ஆசிரியர்கள் துரோகம் இழைப்பது வேதனையான விஷயம்.
தவறு செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கடமையும் ஆசிரியருக்கு இருக்கும் நிலையில், இத்தகைய ஆசிரியர்களின் செயல்கள் ஆசிரியர் சமூகத்துக்கே பெரும் தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன.
இந்தச் சம்பவம் பெற்றோரின் மனநிலையை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்பது பெண்ணைப் பெற்றோருக்குத்தான் புரியும்.
மாணவர்களுக்கு நீதியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற பாதகச் செயலைச் செய்தால் அதன் விளைவு எதிர்கால இளைஞர்களையும் தவறான பாதைக்குக் கொண்டுசெல்லும் என்பதை அந்த ஆசிரியர்கள் மறந்தது ஏனோ?
சமூக மாற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் நல்லாசிரியர்கள் மத்தியில், இந்த வகையான ஆசிரியர்கள் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போலத்தான்.