முகப்பு
கட்டுரைகள்

வாராக்கடன் எனும் புற்றுநோய்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 40 வங்கிகளின் வாராக் கடன் அளவு இந்த  நிதியாண்டின் முதல் 6 மாதத்தில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:54 PM
பகிர்:

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 40 வங்கிகளின் வாராக் கடன் அளவு இந்த  நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் (ஏப்ரல்-செப்டம்பர்) 38 சதவீதம் உயர்ந்து ரூ.1,28,533 கோடியாக (ரூ.1,285.33 பில்லியன்) உள்ளது என்ற தகவல் மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். அதாவது 6 மாதத்தில் வாராக் கடன் அளவு ரூ.35,424 கோடி (ரூ.354.24 பில்லியன்) உயர்ந்துள்ளதாக நிதி சார் தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.93,109 கோடியாக (ரூ.931.09 பில்லியன்) இருந்த வாராக் கடன் செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி பார்த்தால் ரூ.1,28,533 கோடியாக உயர்ந்துள்ளது.

 இந்தியாவின் பாரம்பரியமிக்கதும், பெரிய வங்கியுமான பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ட்ரல் பேங்க், ஐடிபிஐ பேங்க், யூனியன் பேங்க் உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு இந்த 6 மாதத்தில் சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 வங்கிகளின் வாராக் கடன் அளவு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக பங்குகளின் விலையும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், முதலீட்டாளர்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

 இன்னும் இரண்டு காலாண்டுகள் மீதமுள்ள நிலையில், இந்த நிதியாண்டின் முடிவில் (மார்ச் 2014) வாராக் கடன் அளவு மேலும் உயர்ந்து ரூ.1,50,000 கோடியாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்படாமல் உள்ள கடன் தொகைகள் இந்த நிதியாண்டில் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயமும் உள்ளது.

 வாராக் கடன் பொதுத் துறை வங்கிகளின் முதலுக்கே மோசம் விளைவிக்கும் என்பதால் கவலை கொள்ளாமல் எப்படி இருக்க முடியும். இவ்வாறு கரையும் வங்கிகளின் மூலதனம் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்துதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதை சரி செய்ய "கேபிடல் இன்ஃபியூஷன்' என்ற பெயரில் மத்திய அரசு நிதி ஒதுக்குவது  மக்களை மறைமுகமாக ஏமாற்றுவதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

 பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பதுடன், மக்களின் வரிச் சுமையையும் அதிகரிக்கிறது. இது ஒரு புற்று நோய்க்குச் சமமாகவே கருதலாம். வாராக் கடன் அளவில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தொகை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடையது என்பது வேதனையிலும் வேதனை....! 

 கடன் வழங்குவதோடு வங்கிகளின் பணி முடிந்து விடுவதில்லை... கடன் வாங்கியவர்கள் கடன் தொகை முழுவதையும் தொழிலில் முதலீடு செய்து லாபம் ஈட்டினால்தான் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த முடியும். எனவே, கடன் வாங்கியவர்களின் வியாபாரத்தையும், தொழிலையும் வங்கிகள் கண்காணித்து வரவேண்டியது கட்டாயமாகிறது.  இதற்குக் கடன் வழங்கப்படும் தொழில் சார்ந்த அறிவு, வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அவசியம் தேவை.  சமீப காலங்களாக வழங்கிய கடனை வசூலிக்கப் போதுமான பணியாளர்கள் இல்லாததே  பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுவது மிகுந்த வருத்தத்தற்குரிய விஷயம்.

  பெரும் நிறுவனங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகள் கூட்டாக வழங்கும் "கன்சார்டியம்' என்று அழைக்கப்படும் பெரும் கடன் தொகைகளும் சில சமயங்களில் வாராக் கடன்களாகின்றன. ஒரு வங்கியின் பார்வையில் மற்ற வங்கிகளும் கண்மூடித்தனமாகச் செயல்படுவதே இதற்குக் காரணமாகக் கூறலாம். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் அதை வாராக் கடன் பட்டியலில் சேர்த்துவிட்டு, அந்த நிறுவனத்தின் டைரக்டர்கள் வேறு பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி மக்கள் மத்தியில் வெற்றி நடை போட்டு வரும் அவலத்தையும் இந்தியாவில் நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

  தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் கடனாகப் பெறும் சிறு சிறு தொகை செலுத்தப்படாமல் இருந்தால் அதை வசூலிப்பதற்கு மேற்கொள்ளும் அதீத நடவடிக்கைகளை, வங்கிகள் ஏன் பெரும் தொழில் நிறுவனங்களிடம் காட்ட மறுக்கிறது என்பது மக்களுக்கு சந்தேகத்தை வரவழைக்கிறதல்லவா. 

 வங்கிக் கடன் வசூல் தொடர்பாக இயற்றப்பட்ட "சர்ஃபேஸி' சட்டத்தில் உள்ள குறைகளை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்யவும், கடன் வசூலில் அரசியல் தலையீடுகளை அறவே ஒழிக்கவும் முழு முயற்சி எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்பதை மறுக்க முடியாது.

 வாராக் கடன் குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கவலை தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இந் நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு தூணாக இருப்பதாகக் கூறப்படும் வங்கிகளின் வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் "வாராக் கடன்' என்ற புற்றுநோயை முளையிலேயே கிள்ளியெறிய வங்கிகளில் நிலவும் குறைபாடுகளை ஆராய்ந்து, அதை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தாக வேண்டும். இல்லையென்றால் வங்கிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.

 நமது வரிப்பணம் மறைமுகமாக "கார்பரேட்' நிறுவனங்களால் உறிஞ்சப்படுவதன் வெளிப்பாடுதான் அரசுடமை வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் "வாராக் கடன்' சுமை. தனியார் பன்னாட்டு வங்கிகளில் இதுபோல "வாராக்கடன்' அளவுக்கதிகமாக அதிகரிப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பதுதான் அதற்குக் காரணமாக இருக்குமோ என்னவோ, யாருக்குத் தெரியும்.

முழு கட்டுரையைப் படிக்க →