முகப்பு
கட்டுரைகள்

பங்குகளை வங்கிகளாக்கலாமா?

நம் நிதியமைச்சர் நிதியரசராகிவிட்டார். பங்குகளையெல்லாம் வங்கிகளாக்கி வட்டிகளைப் பெருக்கினால் குட்டிபோடுவது பணமா? வளர்ச்சியா? தொழிலை வளர்க்க முதல் வேண்டும். முதலை வளர்ப்பதே முக்கியத் தொழிலாகிவிட்டால், தொழில் வளர்ந்து விடும் என்பது நிதியமைச்சரின் நம்பிக்கை.

கட்டுரைகள்

பங்குகளை வங்கிகளாக்கலாமா?

நம் நிதியமைச்சர் நிதியரசராகிவிட்டார். பங்குகளையெல்லாம் வங்கிகளாக்கி வட்டிகளைப் பெருக்கினால் குட்டிபோடுவது பணமா? வளர்ச்சியா? தொழிலை வளர்க்க முதல் வேண்டும். முதலை வளர்ப்பதே முக்கியத் தொழிலாகிவிட்டால், தொழில் வளர்ந்து விடும் என்பது நிதியமைச்சரின் நம்பிக்கை.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:55 PM
பகிர்:

நம் நிதியமைச்சர் நிதியரசராகிவிட்டார். பங்குகளையெல்லாம் வங்கிகளாக்கி வட்டிகளைப் பெருக்கினால் குட்டிபோடுவது பணமா? வளர்ச்சியா? தொழிலை வளர்க்க முதல் வேண்டும். முதலை வளர்ப்பதே முக்கியத் தொழிலாகிவிட்டால், தொழில் வளர்ந்து விடும் என்பது நிதியமைச்சரின் நம்பிக்கை. அவருடைய வங்கி வளர்ப்புத் திட்டத்திற்குத் தடையாக இருந்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் வெளியேறியது நிதியமைச்சருக்கு நல்வாய்ப்பு. நிதியரசரும் நிதியமைச்சருமான சிதம்பரத்திற்கு சி. ரங்கராஜன் கைகொடுக்கிறார். இவர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்; தற்போது, பிரதமரின் முதல்நிலைப் பொருளாதார ஆலோசகர். நிதியமைச்சரின் தூண்டுதலின் பேரில் வர்த்தக நிறுவனங்கள் கருத்தரங்கம், விழா நடத்தி வங்கிகளின் எண்ணிக்கை பலத்தை நியாயப்படுத்துவதும் நிதியமைச்சர் உரையாற்றி விளம்பரம் தேடிக்கொள்வதுமே தினம் நாம் காணும் காட்சிகள். வியாபார நிறுவனங்களும் பங்குதாரர்களும் வங்கியாளர்களாக மாறுவதை வைத்து வங்கித் தொழிலை எளிதானது என்று எண்ணிவிட முடியாது. வங்கித் தொழில் நசிந்து வருவதை உலக நாடுகளின் அனுபவங்கள் நமக்குப் பாடம் புகட்டுகின்றன. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் கார்ப்பரேட்டுகளில் ஒரு சாரார் அடையும் தொழில் நஷ்டம் நிதி பற்றாமையினால் அல்ல.

ஒரு வங்கியின் செயல் என்ன? குறைந்த வட்டிக்கு சேமிப்புகளைப் பெற்று அவற்றை அதிக வட்டிக்கு விடுவதுதான் என்றால், போதிய சேமிப்புகளைப் பெறுவது எப்படி? அதையும் விரும்பிய வழியில் பெற இயலுமா? முதற்கண், சேமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி சொற்பமே. ஆகவே மக்கள் ரொக்கத்தை வங்கியில் சேமிப்பாகப் போடுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. புத்திசாலி சேமிப்பாளர் கூடுதல் வட்டி தரும் நம்பிக்கையான சீட்டு நிறுவனங்களில் ரொக்கத்தை சேமிக்கலாம். அல்லது தங்கமாக வாங்கி சேமிக்கலாம். போதிய சேமிப்பு இல்லாமல் வங்கி எப்படிச் செயல்படும்? சரி, அப்படியே லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் சேமிப்பு வருவதாக வைத்துக் கொண்டாலும் தொழில் முனைவோர் சேமிப்புகளைக் கடனாகப் பெற்று தொழில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனரா? மிஞ்சி மிஞ்சிப் போனால் ரிசர்வ் வங்கியின் ரொக்கப் பணப்புழக்கத்திற்குரிய "ஸ்டாச்யூரிட்டி லிக்விட் ரேஷியோ' கணக்கில் கட்டி 8 சதவீத வட்டி பெறலாம். அதில் லாபம் இல்லை.

இன்று உலகில் மிகவும் மாறுபட்ட நிதிச் சூழ்நிலை நிலவுகிறது. உள்ளூர் வங்கிகள் வட்டியைக் கூட்டினால், வட்டி குறைந்த அன்னியக் கடன் எளிதில் கிட்டும் நிலை உள்ளது. ஆனால் அன்னியக் கடன் பெறும் கார்ப்பரேட்டுகளின் நடத்தை ஏமாற்று வித்தையாக உள்ளது. தொழில் நஷ்டம் நிறைய உள்ளது. உற்பத்தியில் தேக்கம். வாங்கிய கடனுக்கு வட்டியையும் கட்ட முடியாமல் வாராக்கடன் எத்தனையோ கோடிகள். வாராக்கடன் இருந்தும்கூடத் தொழில் செய்யும் கார்ப்பரேட்டுகள் மேலும் மேலும் கடன் வாங்குவதில் தயக்கம் காட்டுவது இல்லை. இப்படிப்பட்ட கார்ப்பரேட்டுகளிடம் முதல் வழங்கியபின் விழி பிதுங்கும் வங்கிகள் நிறைய உள்ளன. வாராக்கடன்களைக் கட்டும்படி வற்புறுத்தியோ நெருக்கடி கொடுத்தோ முயற்சிக்கும்போது, தன் பெயரைக் கெடுப்பதாகக் கூறி, வங்கிக்கு எதிராக மானநஷ்ட வழக்கு போடுவார்கள். வாங்கிய கடனை திருப்பி வழங்க முடியாத சூழ்நிலை வரும்போது கார்ப்பரேட்டுகள் "புதிய தொழில் சீர்திருத்தம்' (ரி ஸ்டரக்சரிங்)செய்வதாக விண்ணப்பித்துவிட்டுக் கவலையில்லாமல் வாழ்வார்கள். ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்று அதிக விலையில் பேரம்பேசி கிரிக்கெட் வீரர்களை வாங்குவார்கள். அன்னிய கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்து கொள்வார்கள். "புதிய தொழில் சீர்திருத்தம்' என்பதன் பொருள் தொழில் வளர்ச்சி இல்லை. கிரிக்கெட் சூதாட்டம், பங்குச்சந்தை சூதாட்டம் என்று பொருள் கொள்க. இப்படிப்பட்ட ரி ஸ்டரக்சரிங் கடன் திட்டத்தை வங்கி ஏற்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம். அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் சிவில் கேஸ் என்பதால் மேல் முறையீடு மேல் முறையீடு என்று போய், தீர்ப்பு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஏன் இந்த வம்பு என்று வங்கிகள் புதிய தொழில் மாற்றத் திட்டத்தை ஏற்று மேலும் கடன் வழங்கும். இதுதான் இந்திய வங்கிகளின் நிலைமை. ஏற்கெனவே வாராக்கடன்கள் 1.6 லட்சம் கோடியுடன் இந்த ரி ஸ்டரக்சரிங் - தொழில் மாற்றுக்கடன், பட்டை நாமம் போடுவோருக்கே வழங்கப்பட்ட 2.5 லட்சம் கோடியையும் கூட்டினால், 4.1 லட்சம் கோடியாக உயரும். ஆனால் வளர்ச்சி பூஜ்ஜியமே. ஒட்டுமொத்த வங்கிக்கடன் வழங்கலில் சுமார் 10 சதவீதம் பட்டை நாமமாகும். பங்குச் சந்தைகளில் வங்கிகளின் பங்குகளே விலைபோகாத சூழ்நிலையில் பங்குதாரர்களை வங்கியாளர்களாக மாற்றுவதென்பது புதியதோர் வங்கிக் கொள்ளைக்கு வழிவகுக்குமே தவிர, வளர்ச்சிக்கு அது வித்திடுமா என்பது கேள்விக்குறியே.

அரசு வங்கிகள் சரியாக செயல்படவில்லை என்று கருதுவதில் உண்மை இருக்கலாம். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின் தொழில் வளர்ச்சியில் வேகம் இல்லை என்பதும், சரியான தருணத்தில் நிதி கிட்டுவதில்லை என்பதும், குறிப்பாக சிறுதொழில் வளர்ச்சியில் காட்டப்பட்ட பரிவு மிகவும் சொற்பம் என்பதும், அரசியல் பலம் கொண்ட கார்ப்பரேட்டுகளின் நலன் மட்டுமே காப்பாற்றப்படுவதாகவும் கூறப்படுபவையெல்லாம் சரியாக இருக்கலாம். இப்படிப்பட்ட சூழல்களை உருவாக்கியதும் மைய அரசின் மோசமான நிதிக் கொள்கைக்கு உள்பட்டதுதானே? இதற்கெல்லாம் மாற்றாக திருத்தம் பெற்ற நிதிக்கொள்கையில் அரசு கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து விடுதலை பெற்று தன்னிச்சையாக தனியார் வங்கிகளைப் பெருக்க, விதிமுறைகளுக்கு எதிராக, ""இந்தா இந்தா'' என்று ரிசர்வ் வங்கி கூவியழைத்து கார்ப்பரேட்டுகளின் கையில் வங்கி உரிமத்தை வழங்குவது நியாயமா?

2008-இல் மாபெரும் தனியார் வங்கி நிறுவனமான "லீமன் சகோதரர்கள்' அமெரிக்காவில் திவாலாகி மஞ்சள் காகிதம் கொடுக்காமலிருந்திருந்தால் நியாயம் இருந்திருக்கும். ஐரோப்பிய - அமெரிக்க வங்கி மாதிரிகளைப் பின்பற்றி தேசிய வங்கிகளுக்கு எதிராக வங்கிகளைத் தனியார்மயமாக்குவதில் இப்போது நியாயம் பொய்த்துவிட்டது. லீமனைத் தொடர்ந்து ஜே.பி. மார்கனுக்குப் பிரச்னை வந்துள்ளது. ஐரோப்பிய - அமெரிக்க முதலாளித்துவப் பொருளியல் அமைப்புக்கு தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய தனியார் வங்கிகளின் உருவாக்கம் சரியாக இருக்கலாம். அதை கண்மூடித்தனமாக இந்தியாவிலும் பின்பற்ற வேண்டுமென்று நிதியமைச்சர் நினைத்தால் நாளை அது பேராபத்தாக முடியலாம்.

புதிய உரிமம் பெற்ற கார்ப்பரேட் வங்கிகளில், பொதுப்பணம் சேமிக்கப்பட்டு, தகுதியற்ற தொழில் முனைவோருக்கு அந்தச் சேமிப்புகளை முதலீடுகளாக வழங்கி மோசம் போனால், டெபாசிட் செய்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்க இயலுமா? இந்தக் கோணத்தில் சிந்தித்தவர் டி. சுப்பாராவ் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் ஆங்கிலத்தில் "ஃபைடூசியரிக்' கொள்கை என்பார்கள்.

அடித்தட்டு மக்களின் நலனுக்கென்றே புதிய வங்கிகள் திறக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். அந்த அடித்தட்டு மக்கள் எப்படிப் பணம் சேமிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவது நன்று. ஒரு அவசரத்திற்கு பணத்தை வங்கியிலிருந்து எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் பெற முடியாது. ஆகவே அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சீட்டுக்கட்டுவது மரபாகிவிட்டது. 50,000 ரூபாய் சீட்டு, 1 லட்சம் ரூபாய் சீட்டு என்று மாதம் ரூ. 3,000, ரூ. 4,000 என்று கட்டுகிறார்கள். ஏலத்தில் தள்ளி எடுக்கிறார்கள். அது முதலாக மாறி வண்டி வாங்கவோ, வீடு கட்டவோ, திருமணத்திற்கோ செலவாகிறது. மற்றபடி அவர்களிடம் வங்கிக் கணக்கு இருப்பினும் சீட்டுப்பணம் கட்டுவது தொடர்கிறது. பெரும்பாலான சீட்டு நிறுவனங்கள் உரிமமோ - அரசுக் கட்டுப்பாடோ இல்லாதவை. உரிமம் பெற்றுள்ள சீட்டு நிறுவனங்களில் புழங்கும் பணம் ஆண்டுக்கு 1,50,000 கோடி என்றும், ஏழைகளின் கடன் தேவை இருபது லட்சம் கோடி என்றும், இத்தகைய சீட்டு நிறுவனங்கள் 20,000 கோடி மட்டுமே கடன் வழங்குவதாகச் சொல்லப்படுவதால் புதிய வங்கிகள் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் என்பது நிதியமைச்சரின் கணிப்பாக இருக்கலாம். ஆனால் புதிய வங்கிகளைத் திறக்க கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி வழங்குவதால், உரிமம் பெறாத சீட்டு நிறுவனங்களையோ, கந்துவட்டிக்காரர்களையோ ஒழித்துவிட முடியாது. ஏனெனில் கந்துவட்டிக்காரனுக்குத்தான் கார்ப்பரேட்டுகள் கடன் தருவார்கள். இன்றைய இந்தியாவில் சுமார் 2,000 கூட்டுறவு வங்கிகள் செயலற்று இருக்கின்றன. நிதி பலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதைவிட புத்துருவாக்கம் செய்யப்பட்ட நகர - கிராமியக் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கி சேமிப்பாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதுதான் இந்திய நாட்டுக்கு ஏற்ற வங்கிக் கொள்கையாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →