முகப்பு
கட்டுரைகள்

அபூர்வ மனிதர்கள்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட காட்சி இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. எங்கள் சிற்றூரின் ஏரி எங்கள் வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஏரி. அக்கம்பக்கமிருந்த பத்துப் பதினைந்து பாளையங்களில் உள்ள நிலங்களுக்குத் தேவையான நீரை அந்த ஏரியிலிருந்து பிரியும் கால்வாய்கள் வழங்கி வந்தன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்ட காட்சி இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. எங்கள் சிற்றூரின் ஏரி எங்கள் வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஏரி. அக்கம்பக்கமிருந்த பத்துப் பதினைந்து பாளையங்களில் உள்ள நிலங்களுக்குத் தேவையான நீரை அந்த ஏரியிலிருந்து பிரியும் கால்வாய்கள் வழங்கி வந்தன.

அந்த ஏரிக்கும், ஏழெட்டு மைல்கள் தள்ளிப் பாய்ந்து கொண்டிருந்த தென்பெண்ணை ஆற்றுக்கும் ஆழங்கால் இணைப்பு இருந்தது. தென்பெண்ணை அப்போது வளமான ஆறு. ஆறு மாதம் ஓடிக்கொண்டே இருக்கும். நீரற்று வறண்டுபோன சமயத்திலும் ஒரே ஒரு அடி அளவுக்கு ஆழமாகத் தோண்டினாலேயே நீர் சுரந்து பள்ளத்தில் நிரம்பிவிடும்.

இன்று எல்லாமே பழங்கனவுகள். மணல் கொள்ளைக்குப் பேர்போன இடமாக மாறிவிட்டது தென்பெண்ணை. இப்போது அழிந்து கொண்டிருக்கும் ஆறு அது. ஆண்டு முழுக்க மணலைச் சுரண்டிக் கொண்டே இருப்பதால் ஆற்றில் நீரோட்டமே இல்லை.

மழைக்காலத்தில் பள்ளங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை மட்டுமே பார்க்க முடியும். ஆறே நீரற்றுப் போனதால் ஆழங்கால் தூர்ந்துபோனது. ஆற்றைச் சுரண்டிய மக்கள் வறண்டு போன ஏரியை வளைத்தெடுத்துக் கொண்டார்கள்.

யாரோ ஓர் அரசன் ஏதோ ஒரு காலத்தில் எதிர்காலச் சந்ததியினரின் தேவைக்காக வெட்டி உருவாக்கிய ஏரி அது. மூதாதையரின் சொத்தை வைத்து வாழத் தெரியாத ஊதாரித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். நமக்கு உருவாக்கவும் தெரியாது. அழிக்காமல் இருக்கவும் தெரியாது.

கடந்த மாதம் கர்நாடகத்தின் இலட்சுமேஸ்வர் செல்லும் வழியில் நான் கண்ட காட்சி, என் ஆற்றாமையை அதிக அளவில் தூண்டிவிட்டது. அங்கும் ஓர் ஏரி உண்டு. அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் அதைப் பார்ப்பேன். மழைக்காலத்தில் மட்டும் நீர் குட்டையாகத் தேங்கியிருக்கும். ஒரு பெரிய தேக்கு இலையில் ஒரே ஒரு சொட்டு மழைநீர் தேங்கி நிற்பதுபோல. மற்ற நேரங்களில் வறண்டுபோய் காணப்படும்.

ஏரியைச் சுற்றிலும் கரிசல் மண்ணாலான பூமி. அங்கங்கே மரங்களில் சுற்றிப் படர்ந்தபடி தொங்கும் கொடிகளை இழுத்துத் தின்னும் ஆடுகள் மாடுகள். வழக்கத்துக்கு மாறாக இந்த முறை பால் வெள்ளமாக ஏரி நிரம்பித் தளும்பியதைப் பார்த்தேன். ஒரு மூலையில் இரண்டடி விட்டமுள்ள ஒரு குழாய் வழியாக அருவிபோலப் பொழியும் நீர் ஏரியை நிரப்பிக்கொண்டே இருந்தது. கரையோரத்து மரங்களில் ஏராளமான கொக்குகள், கிளைகளில் சின்னச் சின்ன வெள்ளைத் துணிகளைக் கட்டி வைத்தது போல கண்கொள்ளாக் காட்சி.

வறண்ட ஏரியை நிரம்பிய ஏரியாக மாற்றியது அந்த ஊர்த் தலைவரின் சேவை என்று நன்றியோடு சொன்னார்கள் ஊர்க்காரர்கள். ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் பாய்கிற ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்தது மிகப்பெரிய சாதனை. ஒவ்வொரு கட்டத்திலும் ஏராளமான அரசியல் தடைகள்; நிர்வாகத் தடைகள். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து வந்தார் அவர்.

கால்வாய் வெட்டி தண்ணீரைக் கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் தோன்றின. சூழலியல் துறையிலிருந்தும் வனத் துறையிலிருந்தும் சான்றிதழ்கள் பெறுவது அவ்வளவு எளிதாக இல்லை. அதனால் பள்ளம் வெட்டி குழாய்கள் பதிக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். திட்டமிட்டதைவிட குறுகிய கால அளவிலேயே வேலை முடிந்தது.

ஏரியில் நீர் நிரம்பியதும், அதுவரைக்கும் மானாவாரிப் பயிராக சோளத்தை மட்டும் பயிரிட்டு வந்தவர்கள், வேர்க்கடலையையும் பருத்தியையும் பயிரிட்டார்கள். அந்த ஏரியைச் சுற்றி எந்த இடத்திலும் அவர் பெயரைச் சொல்லும் பதாகையோ, வளைவுகளோ, கல்வெட்டோ, சுவரொட்டிகளோ எதுவுமே இல்லை. ஒரு புராணப் பாத்திரத்தைப் பற்றிச் சொல்வதுபோல மக்களாகவே அவரைப் பற்றிப் பேசுகிறார்கள்.

பல சேவையாளர்களின் தங்கள் செயல்பாடுகளின் வெற்றிக்காக பாடுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தோல்விகளை அனுபவங்களாக்கிக்கொண்டு மென்மேலும் உத்வேகத்தோடு செயல்படுகிறார்கள். தம் வாழ்வே, இந்தச் செயலைச் செய்வதற்காக என்பதுபோல அயராது உழைக்கிறார்கள்.

இந்தச் சேவையாளர்களின் பயணம் மக்கள் நலனை நோக்கிய ஒன்றே தவிர, அரசியல் அதிகாரத்தை நோக்கிய ஒன்றல்ல. அரசியலோ, பதவியோ, அதிகாரமோ எதுவுமே சேவைக்குத் தேவையானவை அல்ல. உண்மையான ஈடுபாடும் உத்வேகமும் மட்டுமே போதும்.

ஒன்றைப் பெறுவதற்காகவே ஒன்று செய்யப்படுகிறது என்கிற எளிய வாய்ப்பாட்டை இத்தகு சேவையாளர்களின் வாழ்க்கை உடைத்து நொறுக்கிவிடுகிறது. தன்னை எருவாக்கிக் கொண்டே தன் செயலைச் செய்கிற அபூர்வ மனிதர்கள் அவர்கள். அபூர்வ மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அர்ப்பணிப்புணர்வோடு ஆற்றப்படுகிற சேவைகளின் சக்தியை சமூகத்துக்கு உணர்த்துகின்றன. மானுடச் சமூகம் அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.