கட்டுரைகள்

அறிவின்மையும் அறிவியலின்மையும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அளவில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன.

ஜெயபாஸ்கரன்

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அளவில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகளைப் பற்றி நமது சமூகம் எந்த அளவுக்குக் கவலைப்படாமல் இருக்கிறது என்பதற்கான அவமானகரமான சான்றாகவே இத்தகைய ஆழ்துளைக் கிணறுகள் ஆங்காங்கே வாய்திறந்து கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

செவ்வாய்க் கிரகத்தை நோக்கி "மங்கள்யான்' வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் அளவுக்கு வானவியல் விஞ்ஞானத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கும் நமக்கு, ஆழ்துளைக் கிணறுகளில் உயிர்விட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றும் பூமியியல் விஞ்ஞானம் சாத்தியப்படாமல் இருக்கிறது.

ஆழ்துளைக் கிணற்றில் ஒரு குழந்தை விழுந்தவுடன் சக்தி வாய்ந்த எந்திரங்களைக் களத்தில் இறக்கி முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த நுற்றுக்கணக்கானவர்கள் துடிதுடிப்போடு செயல்பட்டு ஒவ்வொரு முறையும் தோற்றுத் திரும்புகிறார்கள். அதற்கெல்லாம் தேவையே இல்லாமல் அது போன்ற கிணறுகளை மூடித் தொலைப்போமே என்று ஒருவருக்கும் ஏனோ தோன்றாமல் போய்விடுகிறது.

ஆழ்துளைக் குழாய் கிணறு ஒன்றில் ஒரு குழந்தை விழுந்து இறக்கும் செய்தி ஊடகங்களின் வாயிலாக நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டாலும் கூட அந்தச் செய்திகளில் இருந்து யார் பாடம் கற்றுக்கொள்கிறார்கள்? அப்படியிருந்தால் அடுத்த ஆழ்துளைக் கிணறு இன்னொரு குழந்தையை விழுங்க வாய்ப்பில்லையே!

ஆழ்துளைக் கிணறுகளை எப்படி எப்படியெல்லாம் மூடி வைக்க வேண்டும், யார் யார் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் உச்சநீதிமன்றமே தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. ஆயினும்கூட, அந்த வழிகாட்டுதல்களை யார் நிறைவேற்றுவது என்பது தெரியாமலோ அல்லது அது குறித்து ஈடுபாடு காட்டாமலோ நமது நிர்வாக அமைப்புகள் அலட்சியம் காட்டிவருகின்றன,

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் ஏரி, குட்டை, குளம், குடிநீர்த்தொட்டி, கழிவுநீர்த்தொட்டி, ஆறு மற்றும் கடல் என்று நீளுகின்ற பலவிதமான நீர்நிலைகளில் குழந்தைகள் மூழ்கி இறப்பது ஒரு தொடர்கதை என்றால், நீருக்காகத் தோண்டி கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளிலும் அவர்கள் விழுந்து இருட்டில் தவித்து இறப்பது இன்னொரு தொடர்கதையாகி விட்டது.

ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டால் அக்குழந்தையை அரசாங்க அமைப்புகள் முன்வந்து மிகப்பெரிய எந்திரங்களின் துணையோடுதான் மீட்க முடியும் என்பதால், அச்செய்தி வெளி உலகிற்குத் தெரியவந்து பரபரப்பாகிவிடுகிறது. ஆனால் திறந்திருக்கும் நீர்நிலைகளில் விழுந்து இறந்துவிடும் குழந்தைகளின் மரணங்கள், பரபரப்புக்கு உள்ளாகாமல், வெளியுலகிற்கும் தெரியாமல் அவ்வப்போது ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கிராமப்புறங்களில் அமைக்கப்படும் ஆழ்துளைக் கிணறுகள், குழந்தைகள் மற்றும் ஆடுமாடுகள் போன்ற உயிரினங்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு அமைக்கப்படுவதில்லை. கைவிடப்பட்ட அல்லது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஆழ்துளைக் கிணறுகள் பெரும்பாலும் மூடப்படுவதேயில்லை.

நமது நாட்டில் நுற்றுக்கணக்கான தரைக் கிணறுகள் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளன. அந்த தரைக் கிணறுகள் ஆழமானவை, சதுர வடிவிலும் வட்ட வடிவிலும் வெட்டிக் கட்டப்பட்டிருப்பவை. இந்தக் கிணறுகள் எதற்குமே தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படுவதில்லை. தரையோடு தரையாக இருக்கும் இத்தகையக் கிணறுகள் ஒவ்வொரு நாளும் குழந்தைகளையும், ஆடுமாடுகளையும், முதியவர்களையும் பலிவாங்கிக் கொண்டிருக்கின்றன. மேய்ச்சலின்போது மற்ற மாடுகளுடன் சண்டை போட்டுக்கொண்டோ மிரண்டு ஓடிவந்தோ அல்லது கால் இடறியோ இதுபோன்ற கிணறுகளில் விழுந்துவிடுகிற மாடுகளை, கிராம மக்கள் ஒன்றுகூடி கயிறு கட்டித் தூக்குகின்ற காட்சி பரிதாபகரமான காட்சியாக இருக்கும். அப்படி விழுகிற மாடுகள் பெரிய பெரிய காயங்களுக்கும் எலும்பு முறிவுகளுக்கும் உள்ளாகிவிடுகின்றன. சில நேரங்களில் அவை இறந்தும் விடுகின்றன.

தரைக் கிணறுகளைத் தோண்டி முடித்தவுடன் சுமார் நான்கு அடி உயரத்திற்காவது ஒரு சுற்றுச்சுவர் அமைத்துவிட்டால் இதுபோன்ற இழப்புகளும், இறப்புகளும் நிகழாது. கிணறு நிரந்தரம் என்றால் அதன் பாதுகாப்பும் நிரந்தரம்தானே? நுறு அடி இருநுறு அடி என்று பூமியை தோண்டி ஆழமாகக் கிணறு வெட்டத் தெரிந்தவர்களுக்கு பூமிக்கு மேலே நான்கு அடி தடுப்புச்சுவர் அமைப்பதுதான் பாதுகாப்பு என்ற எண்ணம் தோன்றாமலே போய்விடுகிறது.

நிரந்தரமான ஆபத்துகளாக பல லட்சக்கணக்கான தரைக் கிணறுகள் நமது தமிழ்நாட்டிலேயே உள்ளன. அத்தகையக் கிணறுகள், போக்குவரத்து மிகுந்த சாலையோரங்களில் இருக்கும்போது என்றேனும் ஒரு நாள் அவற்றில் வாகனங்கள் விழுந்து உயிர்ச்சேதங்களும் பொருள்சேதங்களும் நிகழ்ந்துவிடுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைப் பகுதியில் காட்டெருமைகளும், மிளா எனும் மான் வகைகளும், மேய்ச்சல் மாடுகளும் இப்படியான தரைக் கிணறுகளில் விழுந்து இறப்பதும் அல்லது தீயணைப்புத் துறையினரால் மீட்கப்படுவதும் இன்றளவும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளில் கால்நடைகள் விழுவதற்கு வாய்ப்பில்லாத வகையில் சாய்வான தரையுடன் கூடிய கரைகளைக் கொண்டவைகளாக இருக்கும். மேலும் அப்படிப்பட்ட நீர்நிலைகளில் விலங்குகள் விழுந்துவிட்டாலும் அவை நீந்திக் கரை ஏறுவது மிகவும் எளிது. ஆனால் ஆழமாக வெட்டப்படுகிற தரைக் கிணறுகளில் அவை நீச்சலடித்துக் கரையேறுவது சாத்தியமேயில்லை. யாராவது வந்து தூக்கிவிட்டால்தான் உண்டு. அப்படியெனில் தரைக் கிணறுகளிடமிருந்து மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான பாதுகாப்பு குறைந்த பட்சம் நான்கு அடி உயரமாவது கொண்ட வலுவான சுற்றுச் சுவர்தான்.

ஆனால் நமது நாட்டில் உள்ள தொண்ணூறு விழுக்காடு தரைக் கிணறுகளுக்கு சுற்றுச் சுவர் பாதுகாப்பு என்பது அறவே கிடையாது. பாதுகாப்பு நோக்கில் அது தேவை என்று வலியுறுத்தி நடைமுறைப்படுத்தவும் எந்த அமைப்பும் முன்வருவதில்லை. கிணறு அமைப்பவர்களும் அப்படிச் செய்வதைத் தேவையற்ற ஒரு வேலையாகவும், அனாவசியச் செலவாகவுமே கருதுகின்றனர்.

ஆழ்துளைக் குழாய் கிணறுகள், தரைக் கிணறுகள், மக்கள் கூடுமிடங்கள், பலவீனமான குடியிருப்புக் கட்டடங்கள், பட்டாசு ஆலைகள், கைவிடப்பட்ட அல்லது தூர்வார வேண்டிய கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலவுகின்ற பாதுகாப்பின்மைகள் குறித்து ஆய்வு செய்யவும் அவ்விடங்களில் உள்ள ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கை செய்யவும் நம் அரசுகளிடம் முறையான அதிகாரப்பூர்வமான அமைப்புகள் எதுவும் இல்லை.

ஒரு பேருந்து தாறுமாறாக ஓடிக் கிணற்றில் விழுந்தது என்பதுதான் செய்தியாகிறதே தவிர, ஒரு பேருந்தே விழுகிற அளவுக்குச் சுற்றுச் சுவர் எதுவும் இல்லாமல் திறந்தவெளியில் கிணறு ஏன் இருக்கிறது எனும் கேள்வி எப்போதும் யாராலும் எழுப்பப்படுவது இல்லை.

நாம் பெற்றிருக்கும் அறிவியல் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆழ்துளைக் கிணறுகளிடமிருந்து குழந்தைகளை உயிருடன் மீட்டெடுப்பது என்பது இயலாத ஒரு காரியமே அல்ல. ஆனாலும் பல்வேறு வகையான விபத்துகளை முன்கூட்டியே புலனாய்ந்து அறிந்து அறிவித்து எச்சரிக்கை செய்வதிலும், ஏதோ ஒரு விபத்து நடந்தவுடன் அறிவியல் பூர்வமாகத் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்ற பிரிவினரைக் கொண்டு விபத்துகளுக்கு ஆளானவர்களை மீட்பதிலும் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.

இதுவரை ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை உயிருடன் மீட்பதில் நாம் பெரும்பாலும் தோல்வியடைந்திருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பது என்பது தொடர ஆரம்பித்த உடனேயே அதிகாரிகள் விழித்துக்கொண்டு அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்து ஒரு தனியான மீட்புக் குழுவை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அதற்கு ஒரு ஆறுமாத காலமும், தேவையான நிதியும், அறிவியல்பூர்வமான பயிற்சியும், விரைவான ஒருங்கிணைப்பு முறைகளுமே தேவைப்படுவனவாகும். எப்போதுமே தேவைதானே கண்டுபிடிப்புகளுக்கான காரணமாக இருக்கிறது? அப்படித்தானே ஒவ்வொன்றுக்கும் தனிப்படைகளை அமைத்துச் செயல்படுகிறோம்?

வெகு எளிதாக மூடிவைக்க முடிந்த ஒரு ஆழ்துளைக் கிணற்றை திறந்து போட்டு வைக்கிறோமே என்கிற அறிவு ஆழ்துளைக் கிணற்று உரிமையாளர்களிடம் இல்லை. அவர்களின் அறிவின்மையால் கிணற்றில் விழுந்துவிட்ட குழந்தைகளை உயிருடன் மீட்கிற அறிவியலும் நமது நிர்வாக அமைப்புகளிடம் இல்லை. அறிவின்மையும் அறிவியலின்மையும் கைகோத்துக் கொண்டு நமது குழந்தைகளை காவுகொடுத்துக் கொண்டிருக்கின்றன. பாவம் நமது குழந்தைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT