வெள்ளைப் புரட்சியும் சிவப்புப் புரட்சியும்
சிவப்புப் புரட்சி என்றால் வரலாற்றில் பிரெஞ்சுப் புரட்சியும் ரஷியப் புரட்சியும் நினைவுக்கு வரும். 1789இல் பாஸ்டில் சிறை
கட்டுரைகள்வெள்ளைப் புரட்சியும் சிவப்புப் புரட்சியும்
சிவப்புப் புரட்சி என்றால் வரலாற்றில் பிரெஞ்சுப் புரட்சியும் ரஷியப் புரட்சியும் நினைவுக்கு வரும். 1789இல் பாஸ்டில் சிறை
சிவப்புப் புரட்சி என்றால் வரலாற்றில் பிரெஞ்சுப் புரட்சியும் ரஷியப் புரட்சியும் நினைவுக்கு வரும். 1789இல் பாஸ்டில் சிறை உடைந்தது. 1738இல் கில்லட்டின் என்ற தலைவெட்டி இயந்திரம் புழக்கத்திற்கு வந்து 1814இல் மறைந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் பூர்ஷ்வாக்களின் தலைகளை பிரெஞ்சு மன்னர்கள் வெட்டினர். பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் பிரெஞ்சு ராணியுடன் மன்னர் வாரிசுகளின் தலைகளை பூர்ஷ்வாக்கள் வெட்டினர்.
1917இல் போல்ஷ்விக் புரட்சி ரஷியாவில், அதுவும் ஒரு சிவப்புப் புரட்சி. புரட்சிக்கு முன் ஜார் மன்னன் போல்ஷ்விக்குகளின் ரத்தத்தை ருசித்தான். புரட்சிக்குப் பின் போல்ஷ்விக்குகள் ஜார் மன்னருடன் அவர் வாரிசுகளையும் ஒட்டுமொத்தப் பணக்காரர்களையும் தொழில் முதலைகளையும் விட்டுவைக்கவில்லை. இதுபோன்ற சிவப்புப் புரட்சிகளில் வழிந்தோடிய மனித ரத்தம் எவ்வளவு டேங்கர்கள் என்று யாரும் அளந்து பார்க்கவில்லை.
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் வழக்கொழிந்த கில்லட்டின் இன்றைய இந்தியாவில் ஆட்டுத்தலை வெட்டவும் மாட்டுத்தலை வெட்டவும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனித ரத்தம் நின்றாலும் மாட்டு ரத்தம் நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் லட்சக்கணக்கில் மாடுகளின் தலைகள் வெட்டப்பட்டு மாட்டு ரத்தம் சேதமுறாமல் அளக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
பச்சைப் புரட்சி தேவைதான். உணவு உற்பத்தி உயரும். வெள்ளைப் புரட்சி வேண்டியதுதான். பால் உற்பத்தி உயரும். வெள்ளைப் புரட்சிக்குள் ஒரு சிவப்புப் புரட்சி வேண்டியதுதான் என்றால் பசுக்களின் தொகையைக் குறைத்து இறைச்சியாக ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை உயர்த்தலாம். பிரச்னை டாலர் வேண்டுமா பசுக்கள் வேண்டுமா என்பதுவே.
1992இல் 20.5 கோடி கால்நடைகள். 2007இல் 19.9 கோடி கால்நடைகள். ஆண்டுக்கு 2 சதவீத வளர்ச்சி என்று கணக்கிட்டால் 2007இல் 26 கோடி கால்நடைகள் வளர்ந்திருக்க வேண்டும். சுமார் 6 கோடி கால்நடைகளில் இயல்பான மரணம் எவ்வளவு? கில்லட்டின் கொன்றது எவ்வளவு? கொல்லப்பட்டவை பசுக்களா? எருமைகளா? இயல்பான மரணம் அரிது. உயிரோடு விற்றால்தான் விவசாயிகளுக்கு லாபம்.
பால் வற்றிய கிழட்டுப் பசு ரூ.5,000க்குக் குறையாமலும் பால்வற்றிய எருமை ரூ.6,000 வரையிலும் விலை போகிறது. எருமை இறைச்சியில் கொழுப்பு அதிகம். சட்டப்பூர்வமாக எருமை இறைச்சி ஏற்றுமதி அனுமதிக்கப்படுகிறது. 2012-13இல் 14 லட்சம் டன் மாட்டிறைச்சி எருமை இறைச்சி என்ற லேபிளில் ஏற்றுமதியாகி 45,000 மில்லியன் டாலர் அந்நியச் செலாவணியைப் பெற்றுள்ளோம்.
பால் உற்பத்தியில் சாதனை உண்டு. குஜராத்தில் கைரா மாவட்டத்தில் ஆனந்த் என்ற இடத்தில், கைரா மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் சங்கத்தை 1940இல் திரிபுவன் படேல் தொடங்கிய நாளிலிருந்து அமுல் வரலாறு தொடங்குகிறது. திரிபுவன் படேலின் அயராத உழைப்பால் 1946இல் ஆனந்த் பால் கூட்டுறவு இணையம் (அமுல்) உருவாகி இதர மாவட்ட பால் உற்பத்தியாளர்களும் அமுல் கூட்டுறவில் இணைந்து வளர்ந்தபோது "பால் மனிதர்' என்ற புகழ்மிக்க வர்கிஸ் குரியன் அரசுப் பொறியாளர் பதவியைத் துறந்து அமுல் நிறுவனத்தில் சேர்ந்து வெள்ளைப் புரட்சியை உருவாக்கினார்.
வெள்ளைப் புரட்சியின் வெற்றிக்குக் காரணமானவர்களில் மேலும் இருவர் உள்ளனர். ஒருவர் லால்பகதூர் சாஸ்திரி. மற்றொருவர் அமிர்தா படேல். 1965இல் முன்னாள் பிரதமர் சாஸ்திரி ஆனந்துக்கு விஜயம் செய்து, பசுக்காவலர் குரியனின் வளர்ச்சி திட்டங்களில் மனத்தைப் பறிகொடுத்து அனைத்து இந்திய அளவில் வெள்ளைப் புரட்சிக்கு திட்டமிட்டு "தேசியப் பால் வளர்ச்சி நிறுவனத்தின்' தலைவராக்கினார். அதே ஆண்டில் அமிர்தா படேல் அமுல் நிறுவனத்தில் கால்நடை சத்துணவு அலுவலராகச் சேர்ந்தார்.
1999இல் டாக்டர் குரியனுக்குப்பின் அமிர்தா படேல் தே.பா.வ. நிறுவனத் தலைவராக உயர்ந்தார். சுமார் 30 ஆண்டுகள் வர்கீஸ் குரியனும் அமிர்தா படேலும் ஆற்றிய சாதனையால் இந்தியாவில் கூட்டுறவு இயக்கம் கொடிகட்டிப் பறந்து பால் பஞ்சம் தீர்ந்தது. இப்போது, குறிப்பாக 2000க்குப்பின் வரலாறாகிவிட்டது. தனியார் பால் நிறுவனங்களுக்கு உலகமயமாதல் கொள்கையை மையப்படுத்தி உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து கூட்டுறவுபால் உற்பத்தியில் தொய்வு தொடங்கியது.
பால் விலையை இப்போது கூட்டுறவு சங்கம் நிர்ணயிப்பது இல்லை. பால் என்பது அத்தியாவசியப் பொருள் என்று அறிவித்து பால் கூட்டுறவு இணையத்தில் மாநில அரசுகள் 50 சதவீதப் பங்குதாரராக மாறி, நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டு தீவன விலை உயர்வுக்கு ஏற்பக் கொள்முதல் விலையை உயர்த்த மறுக்கின்றனர். செயலற்ற அரசு நிர்வாகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, இன்று சுமார் 50 சதவீத விற்பனையில் தனியார் பால் பண்ணைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்று பால் விவசாயிகளுக்குக் கூடுதல் கொள்முதல் விலையையும் வழங்குகின்றன. ஹெரிட்டேஜ், ஹேட்சன் போன்ற கார்ப்பரேட் பால் நிறுவன வளர்ச்சிக்கு மாநில அரசுகள் துணை நிற்பதை கவனிக்கலாம்.
இன்று நாளொன்றுக்குப் பால் உற்பத்தியில் சுமார் 190 மில்லியன் லிட்டர் விற்பனைக்கு வருகிறது. மீதி 160 மில்லியன்லிட்டர் பால் கறக்கும் இடத்திலேயே செலவாகிறது. விற்பனைக்கு வரும் 190 மில்லியன் லிட்டரில் பால் கூட்டுறவு இணையங்களின் விற்பனை / கொள்முதல் 50 மில்லியன் லிட்டர். கார்ப்பரேட் பால் நிறுவனங்களின் கொள்முதல் 10 மில்லியன் லிட்டர். சுமார் 130 மில்லியன் லிட்டர் அமைப்பு ரீதியற்ற சிறு சிறு பால் பண்ணைகளில் விநியோகம்.
கூட்டுறவு இணையங்களில் அமுல் நிறுவனக் கொள்முதல் மட்டும் 40 மில்லியன் லிட்டர். கர்நாடக மாநில கே.எம்.எஃப். 3 மில்லியன் லிட்டர். மகாராஷ்டிர கூட்டுறவு மகாசங்கம் 2 மில்லியன் லிட்டர். ஆந்திரக் கூட்டுறவுப் பால் விஜயாவின் பங்கு 1.7 மில்லியன் லிட்டர். ராஜஸ்தான் சரஸ் 1.6 மில்லியன் லிட்டர். தமிழ்நாட்டில் ஆவின் பங்கு குறைவுதான். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகம். வணிகரீதியான பால் தேவை உயர்ந்து வருகிறது. உற்பத்தி போதுமானதாக இல்லை. பால் மாடுகளின் எண்ணிக்கை உயர வேண்டும். இது நிகழாமல் அடிமாடுகளின் எண்ணிக்கை உயர்ந்து செல்கிறது.
வெள்ளைப் புரட்சிக்குள் ஒரு சிவப்புப் புரட்சிக்கு யார் பொறுப்பு என்றால், பால் விவசாயிகளின் தேர்வைத்தான் சொல்ல வேண்டும். சட்டப்படி பசுவதை தடுக்கப்படுவதால் இறைச்சி விலையையும் அனுசரித்துப் பசு வளர்ப்பைவிட எருமை வளர்ப்பை விவசாயிகள் விரும்புகின்றனர் என்பதைக் கால்நடைக் கணக்கு எடுத்துக்காட்டுகிறது.
உண்மையில் ஒரு விவசாயி இறைச்சிக்காக மாடு வளர்ப்பதில்லை. பசுவின் மடியைப் பார்த்துப் பசுவை ஒரு பால் இயந்திரமாகத்தான் பார்க்கிறார். ஜெர்சி, ஹோல்ஸ்டைன் பிரீசியன், ஸ்விஸ் பிரவுன் போன்ற சீமைப் பசுக்களின் கலப்பினமே தினம் 10 முதல் 15 லிட்டர் பால்தரும். இரண்டு அல்லது மூன்றாவது ஈற்றில் இந்த அளவுக்கு வரவேண்டும்.
எருமையில் சீமை இனமே இல்லை. முர்ரா, ஜாஃபர்பாடி, மேஷனா, ரவி, நீலி நாக்புரி, பந்தர்புரி ஆகிய எல்லாமே "டெல்லி எருமை' என்று தமிழ்நாட்டில் உச்சரிக்கப்படுகிறது. கலப்பினப் பசுக்களைவிட சராசரியாக எருமை நிறைய பால் தரும். கொழுப்பு வீதமும் அதிகம். இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் எருமையின் பங்கு 54 சதவீதம். பசுவின் பங்கு 46 சதவீதமே. கால்நடை எண்ணிக்கையில் 78 சதவீதம் பசுக்களைக் கொண்டிருந்த நாட்டில் இன்று அது 65 சதவீதமாகக் குறைந்து விட்டது.
மாநில வாரியாக எருமை மாடுகளின் புள்ளிவிவரங்களை கவனித்தால் ஹரியானா 80 சதம், பஞ்சாப் 74 சதம், உ.பி. 56 சதம், ஆந்திரப் பிரதேசம் 54 சதம். பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் பசுக்கள் எண்ணிக்கை அதிகம் உண்டு. அங்கு இறைச்சிக்காகப் பசுக்கள் கொல்லப்படுவதும் அதிகமே.
வெள்ளைப் புரட்சிக்குள் தோன்றியுள்ள சிவப்புப் புரட்சியை கவனித்தால் ஏற்றுமதிக்கு எருமை இறைச்சி என்ற கண்ணோட்டத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் எருமை வளர்ப்பு மிகமிக வேகமாக உயர்ந்து செல்கிறது. பசுவுக்கும் எருமைக்கும் ஆண் கன்று பிறந்தால் ஊட்டும் காலம் முடிந்த ஓராண்டுக்குள் கசாப்புக்குச் சென்றுவிடும்.
பொலிகாளைக்காக விவசாயிகள் கன்றைக் காப்பாற்றுவதில்லை. சினை ஊசிகளின் மூலமே கன்றுகள் பிறக்கின்றன. விந்து எடுத்துக் குளிர்சாதனப் பெட்டிகளில் காப்பாற்றத் தேர்வு செய்யப்பட்ட கலப்பினக் காளைகளும், எருதுகளும் (ஆண் எருமை) அரசுப் பண்ணைகளில் உள்ளன. தனிப்பட்ட சிலரிடமும் உண்டு. இந்த ரத்தப் புரட்சிக்காகக் கறவை மாடுகள் ஆண் கன்றுகளை வழங்குவதுடன், 5-6 ஈற்றுகளுக்குப்பின் பால் உற்பத்தி குறையும்போது தன்னையும் அர்ப்பணித்துக் கொள்கிறது.
கசாப்பில் உள்ள கில்லட்டின்கள் நாள்தோறும் லட்சக்கணக்கான மாடுகளை வரவேற்கின்றன. பால் கொடுத்து விவசாயிகளுக்குப் பணம் வாங்கித் தந்த மாடுகள் வயது முதிர்ந்ததும் ரத்தம் சிந்தி மனிதனுக்குப் பணம் வாங்கித்தருகிறது.
வயிற்றுக்கு இறைச்சியும் காலுக்குச் செருப்புமாகி உழைக்கும் மாடுகளுக்கு மனிதன் இரண்டு சொட்டுக் கண்ணீர் வடித்து அஞ்சலி செய்வதற்குமேல் வேறு என்ன செய்யமுடியும்?