விவசாயத்தில் வீண் ஆராய்ச்சிகள்
இந்தியாவின் விவசாய ஆராய்ச்சிகளுக்குத் தலைமைப் பீடம், ஐ.சி.ஏ.ஆர். எனப்படும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்.
கட்டுரைகள்விவசாயத்தில் வீண் ஆராய்ச்சிகள்
இந்தியாவின் விவசாய ஆராய்ச்சிகளுக்குத் தலைமைப் பீடம், ஐ.சி.ஏ.ஆர். எனப்படும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்.
இந்தியாவின் விவசாய ஆராய்ச்சிகளுக்குத் தலைமைப் பீடம், ஐ.சி.ஏ.ஆர். எனப்படும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனம் விவசாயம் மட்டுமல்ல, பசு, எருமை, ஆடு, கோழி, ஒட்டகம், பன்றி போன்ற கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் ஆகிய ஆய்வுகளையும் உள்ளடக்கியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இதன் தலைமைப் பொறுப்பு வகிக்கும் சுப்பண்ணா அய்யப்பன், மீன்வளத் துறை விஞ்ஞானி. தலைமை அலுவலகம் தில்லி க்ருஷி பவன். ஆராய்ச்சிப் பண்ணை புசாவில் பரந்து விரிந்துள்ளது. இதற்குக் கட்டுப்பட்ட என்.ஆர்.சி.பி. என்று சொல்லப்படும் தேசிய வேளாண் பயோ தொழில்நுட்ப மையமும் புசாவில் அமைந்துள்ளது.
இவற்றுக்கு கட்டுப்பட்ட 95 விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், 56 வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், விரிவாக்கப் பணி செய்யும் 634 கேந்திரிய விவசாய மையங்கள் (கே.வி.கே.) ஆகியவை பல மாநிலங்களில் பரந்து விரிந்துள்ளன.
தில்லி தலைமையகத்தில் அமைந்துள்ள இந்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ஆராய்ச்சிக்காகச் செலவிடும் தொகை 7,500 கோடி ரூபாய். வேளாண்மை மூலம் பெறும் வருமானம் (விவசாய ஜி.டி.பி.) 13,00,000 கோடி ரூபாய்.
ஏறத்தாழ விவசாய ஆராய்ச்சியில் அகில இந்தியாவிலும் (மாநிலங்களைச் சேர்த்து) 25,000 விஞ்ஞானிகளுக்கு ஆண்டுதோறும் சராசரியாக 40 லட்ச ரூபாய் சம்பளம் என்ற கணக்குப்படி 10,000 கோடி ரூபாய். ஆராய்ச்சி, சம்பளம், படி ஆகியவை மட்டும் விவசாய ஜி.டி.பி. வருமானத்தில் 15 சதவீதம். இது தவிர ஊழல் மூலம் பெறப்படும் தொகை பல மில்லியன் டாலர்.
ஒரு பிரபலமான பத்திரிகைக்குப் பேட்டி அளித்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவன தலைமை இயக்குநர் எஸ். அய்யப்பன் கூறுகையில், 1956இல் நமது உணவு உற்பத்தி 5 கோடி டன் என்ற நிலை. அதை 2013-14இல் 26 கோடி டன்னாக உயர்த்தியுள்ளோம் என்று கூறி, இவை வீரிய ரக விதைகள் மூலம் சாதிக்கப்பட்டது என்றார்.
உணவு ஏற்றுமதியில் இந்தியா முதல் நிலையில் உள்ளது என்றும் கோதுமை ஏற்றுமதியில் அமெரிக்காவையும் அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்தையும் இந்தியா பின்னுக்குத் தள்ளி விட்டதை அவர் குறிப்பிடத் தவறவில்லை. இறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டோம் என்றும், பால் உற்பத்தி 12.7 கோடி டன் என்றெல்லாம் அய்யப்பன் புள்ளிவிவரங்களை வீசினாலும்கூட ஒன்றை உருப்படியாகக் குறிப்பிடலாம்.
புசா அரிசி ஆராய்ச்சியில் உருவான புசா-1, புசா-1101, பின்னர் அண்மைக் கண்டுபிடிப்பான புசா-1509 ரகம் - அதாவது பாசுமதி விளைச்சலில் சாதனை. புசா-1101க்கு வயது 140 நாள்கள். புசா 1509க்கு 120 நாள்கள் - விளைச்சல் ஏக்கருக்கு 2 டன்.
வாசனை மிகுந்த பாசுமதி பிரியாணி அரிசி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 55,000 கோடி ரூபாய் வருமானம். பாசுமதி மட்டுமல்ல வேறு ரக அரிசி ஏற்றுமதியிலும் சாதனை. இதுநாள் வரை அரிசி உற்பத்தி என்றால் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு என்ற நிலை மாறி பஞ்சாப், அரியாணா, உ.பி., பிகார், சத்தீஸ்கர், ஒடிஸா, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் விளையும் அரிசி தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
முதல் நிலை வகித்த ஆந்திரப் பிரதேசம் இப்போது நான்காவது இடம். அரிசி என்றாலும் கோதுமை என்றாலும் வட இந்தியாவுக்குத் தென்னகம் கீழ்ப்படிந்துள்ளதுடன், இந்த சாதனைகள் பி.டி. ஆராய்ச்சியால் இல்லை. வீரிய ரக விதைகள் கொண்டே சாதனை.
கோதுமையிலும் அரிசியிலும் காட்டிய சாதனைகளை ஒப்புக் கொள்வோம். ஆனால், அதே வேகம் மானாவாரி சாகுபடியில் குறிப்பாக பருப்பிலும் எண்ணெய் வித்துக்களிலும் காட்டப்படாதது ஏன்? அய்யப்பனிடம் விடை இல்லை.
உலகிலேயே பருப்பு உற்பத்தியில் முதலிடம் வகித்த இந்தியா இன்று உலகிலேயே பருப்பு இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் நாடாக மாறிவிட்டது. எண்ணெய் வித்து உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டதால் சமையல் எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முதலிடம்.
ஆண்டுதோறும் பருப்பு இறக்குமதிக்கு 2.50 பில்லியன் டாலர் + சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு 10 பில்லியன் டாலர் கொட்டி அழ வேண்டியுள்ளதே! அரிசி ஏற்றுமதியிலும் கோதுமை ஏற்றுமதியிலும் 12 பில்லியன் டாலர் கிட்டினாலும் உணவு ஏற்றுமதி வர்த்தகப் பற்றாக்குறை 2.5 பில்லியன் டாலர் என்பதால், உணவு ஏற்றுமதிப் பெருமையெல்லாம் பேசிப் பயனில்லை.
ஹைபிரீட் என்று கூறப்படும் வீரிய ஒட்டு விதைகள் லாபமுள்ள இந்திய வர்த்தகம், இந்த வர்த்தகத்தில் பன்னாட்டு விதைக் கம்பெனியில் கொள்ளை லாபம் பெறுகின்றன. பொதுத் துறையில் வேகமே இல்லை.
பருத்தி, மக்காச் சோளம், கம்பு, சோளம் ஆகியவற்றில் வீரிய ஒட்டு விதைகளில் பன்னாட்டு விதை நிறுவனங்கள் நிறைய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளன. வீரிய ஒட்டு விதைகளை மறு சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாவிட்டாலும் அதிக விளைச்சல் பெறலாம். வீரிய ஒட்டு பற்றிய ஆராய்ச்சியில் வேகம் இல்லாவிட்டாலும் பி.டி. ஆராய்ச்சியில் பொதுத் துறையில் வேகம் உண்டு. ஆனால் விளைந்ததோ ஊழல்!
பி.டி. விதை வேறு, வீரிய ஒட்டு விதை வேறு. பி.டி. என்பது 90 நச்சுயிர். இதை மரபணு மாற்றம் செய்து விதையில் செலுத்துவதால் பயிர்களுக்கு நோய் வராது என்று நம்பப்படுகிறது. அது நிஜமே இல்லை.
மரபணு மாற்றம் பி.டி. அரிசி தொடர்பாகப் பெரியளவில் ஆய்வு செய்த டாக்டர் எஸ்.கே. ரெய்னா பயோ தொழில்நுட்பப் பேராசிரியர் புசா ஆய்வு நிலையத்திலிருந்து சுய ஓய்வு பெற்று அதிகச் சம்பளத்தில் 2004இல் பி.டி. பருத்தியில் புதிய விதை கண்டறியும் விஞ்ஞானியாகப் பன்னாட்டு விதை நிறுவனத்தில் சேர்ந்தபோது கூடவே தான் அரசுப் பணத்தில் ஆய்வு செய்த விஷயங்களையும் பொருள்களையும் தனக்கே சொந்தமென்று திருடிக் கொண்டு போனார். இந்த துரோகம் தெரிந்தாலும் தண்டனை எதுவும் இல்லை.
டாக்டர் பன்சால் இவ்வாறே பி.டி. கடுகு ஆராய்ச்சி விஷயங்களையும் பொருள்களையும் திருடிக் கொண்டார். இவற்றையெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டி விஞ்ஞானி பி.ஏ. குமார் மேலிடத்தில் புகார் செய்தாலும், பன்சால் தண்டனை பெறவில்லை.
என்.ஆர்.சி.பி. எனப்படும் பயோ தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்திற்கு பி.டி. பருத்தி விதைகள் கண்டுபிடிக்க உலக வங்கிப் பணம் 200 மில்லியன் டாலர் + இந்திய அரசு நிதி 50 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டதில் விஞ்ஞானிகள் சுருட்டிய பணம் அரசியல்வாதிகளை மிஞ்சிவிடலாம். கணக்கு சரியில்லை என்று தணிக்கை கூறுகிறது.
அய்யப்பன் ஒப்புக்கொண்டு உள் விசாரணைக்கு பலியானவர் இதர விஞ்ஞானிகளின் ஊழல்களை அம்பலப்படுத்திய அதே பி.ஏ. குமார். இவர் பி.டி. பிக்கனீர் பருத்தி விதையில் வசமாகச் சிக்கிவிட்டார். 2009-இல் புதிய கண்டுபிடிப்பு - பி.டி. பிக்கனீர் பருத்தி ஆகா ஓகோ என்று விளைந்து புடவையாகக் காய்க்கும் என்று சரத்பவார் சான்றிதழ் வழங்கி, பி.ஏ. குமாருக்கு சர்தார் படேல் விருது வழங்கினார்.
ஆனால் டூப்ளிகேட் பி.டி. பிக்கனீர் பருத்தி விதை எதிர்பார்த்த விளைச்சலைத் தரவில்லை. காய்ப் புழுவுக்குப் பயிர்கள் இரையாகி, விவசாயிகளின் எதிர்ப்பால் பி.டி. பிக்கனீர் வாபசாகியது. எனினும், பி.ஏ. குமாருக்கும் தண்டனை எதுவுமில்லை.
இந்த சமயத்தில்தான் மிஷா.எக்ஸ். பிலட் என்ற ஹாலிவுட் சினிமா இயக்குனரின், "பிட்டர் சீட்ஸ்' (கசப்பு விதைகள்) ஆவணப் படம் வெளிவந்தது. விதர்பா விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களை அந்த ஆவணப்படம் விளக்குகிறது. வில்லன் பி.டி. பருத்தியே.
இந்த நச்சுயிர் விதையின் மூலக்கரு மான்சென்டோ. இந்தியாவில் மான்சென்டோ என்ற அமெரிக்க விதை நிறுவனம் பி.டி. பருத்தி விதையை அறிமுகப்படுத்திய காலகட்டத்திலிருந்து விவசாயிகளின் தற்கொலைகளும் ஆரம்பமாயின. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 75 சதவீதம் அதாவது 2.25 லட்சம் விவசாயிகள் பி.டி. பருத்தி சாகுபடியாளர்கள்.
நச்சுயிரி விதை மனிதனையே பலி வாங்கும்போது இந்த பி.டி. என்பது வீண் ஆராய்ச்சி என்பதில் என்ன சந்தேகம்?
பி.டி. என்பது மரபணு மாற்ற விதை. பி.டி. விஷம் பற்றி லண்டன் கிங்ஸ் கல்லூரி மாலிக்யுலர் ஜெனிட்டிக்ஸ் துறைப் பேராசிரியர் மைக்கேல் ஆண்டோனியோ,ஆய்வு செய்திருக்கிறார்.
அவர் "மரபணு மாற்றம் என்பது மாலிக்யுலர் ஜெனிட்டிக்ஸ் மூலமே இயலும். பி.டி. உணவுப் பொருள்களை உண்பவர்களுக்கு உடல்நலம் சரியாக இருக்காது. பி.டி. கத்தரிக்காயைப் பரிசோதித்தால் விஷம் தெரியாது. ஆனால் பொரியலாகவோ, கூட்டாகவோ செய்தால் விஷம் வெளிப்படும். பி.டி. விளைபொருளைப் பணியாரமாக மாற்றும்போது விஷம் ஏற்படுகிறது. அமெரிக்க மக்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுபோன்ற தவறான உணவு காரணம்' என்கிறார்.
இந்திய மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படாமல் நல்வாழ்வு வாழ நல்ல விதை வேண்டும். நச்சு விதை வேண்டாமே.