நூறு நாள் வேலையும் ஐந்து அம்ச திட்டமும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கட்டுரைகள்நூறு நாள் வேலையும் ஐந்து அம்ச திட்டமும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மாபெரும் சாதனையாகச் சித்தரிக்கப்படும் இந்த நூறு நாள் வேலைத் திட்டம், கிராமப் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அடிமட்ட சிறு-குறு விவசாயிகள், நிலமே இல்லாத விவசாயத் தொழிலாளர்களின் வருமானம் உயர்வதற்கான இந்தத் திட்டத்தை, கொள்கையளவில் குறை சொல்ல முடியாது என்பது மெய்யே. இருப்பினும் ஒரு கேள்வி.
நிஜமாகவே கிராமத்து ஏழைகளுக்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டதா என்றால் இல்லை. 2006லிருந்து 2013 வரை கணக்கெடுத்தால் சராசரியாக 44 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 75 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டது.
வறட்சிப் பகுதிகளில் பல்லாயிரம் ஏரி குளங்கள், நீர்வரத்துக் கால்வாய்களில் தூர் அள்ளப்பட்டதாக பேசப்பட்டாலும் சரியானபடி மழைநீர் சேகரிக்கப்படாததால், 800 அடி வரை ஆழ்துளையிட்டும் நிலத்தடி நீர் கிட்டவில்லை. அதேசமயம் முழுமையாக பணம் செலவழிக்காத உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் சொல்லுமளவில் சில சாதனைகள் உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேப்பூர் மாவட்டத்தில் உள்ளது பல்லாண்டுகளாகத் தூர்ந்துவிட்ட சசூர்கதேரி சிற்றாறு. 38 கி.மீ. நீளம். 1 மாதம் 1000 பணியாட்கள் இணைந்து பணிபுரிந்து தூர்வாரி நீரேற்றியுள்ளனர். இதனால் 42 கிராமங்கள் பயனுற்றன.
அண்ணா ஹசாரேயின் ராலிகான் சித்திக், ஹிவரே பாஜார் போன்ற கிராமங்களின் பணிகள் அற்புதமே. வட இந்தியாவில் நூறு நாள் வேலைகளில் ஆண்களின் பங்கேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்பதால் அவர்களின் பணித்திறன் மிகவும் குறைவாயுள்ளது.
இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தின் வரலாறு என்ன? பல சுவையான விஷயங்கள் உண்டு. திடீரென்று இதைத் தங்கள் உருவாக்கம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி பேசுவதில் பொருள் இல்லை.
இந்தியாவை ஒரு சோஷலிச நாடாக உருவாக்க திட்டமிட்டவர், பண்டிதர் ஜவஹர்லால் நேரு. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் (1951-56) சமுதாய வளர்ச்சித் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி பொது நீர்ப்பாசன வேலையுடன், தீவிர விவசாயம், ஆரம்பக் கல்வி, சுகாதாரம், குடிநீர், கிராமச் சாலைகள் எல்லாம் வட்டார வளர்ச்சிக்குள் உள்ளடக்கப்பட்டதை நினைவில் கூறலாம். கிராம சேவக்குகள் நியமனமாகி ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றனர். சமுதாய வளர்ச்சித் திட்டமே இன்று ஊரக வளர்ச்சித் திட்டமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1961-66) கிராமிய வளர்ச்சியில் கிராமம், வட்டாரம், மாவட்டம் என்று மைய அதிகாரப் பரவலுக்கான மூன்றடுக்குத் திட்டம் உருவானது. மாநில அரசின் அதிகார மையம், மாவட்ட வளர்ச்சிப் பேரவை, மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் நீர்ப்பாசனம், வீரிய ரக விதைகள், ரசாயன உர வினியோகம் என்று விவசாய வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1969-74) ரிசர்வ் வங்கியின் இந்திய கிராமியக் கடன் மதிப்பீட்டுக் கமிட்டியின் பரிந்துரைப்படி, சிறு விவசாயிகள் முன்னேற்றப் பணி, குறு விவசாயிகளின் முன்னேற்றப் பணி ஆகியை ஏற்கப்பட்டு, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மேற்படி கிராமப் பெருமக்கள் நன்மையைக் கருதி "கரீபி ஹட்டாவோ' (வறுமையை விரட்டு) திட்டத்தை இந்திரா காந்தி அம்மையார் கொணர்ந்து மேற்படி மக்களுக்கு கடன் வழங்க வர்த்தக வங்கிகளை தேசிய உடமையாக்கினார். அரசு வங்கிகள் ஏழைகளின் நலனை கவனிக்க அன்றே இந்திரா காந்தி பிள்ளையார் சுழி போட்டதை மறக்க முடியுமா?
மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி ஆட்சி காலத்தில் ஆறாவது ஐந்தாண்டு திட்டம் (1978-83) லக்டாவாலாவால் தீட்டப்பட்டது. ஒருங்கிணைந்த கிராமிய வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் சிறு விவசாயி - குறு விவசாயி மேம்பாட்டுத் திட்டம் ஒருங்கிணைந்து ஷெட்யூல்டு சாதி மக்களின் பங்கு 20 சதவீதமாக உள்ள கிராமங்கள் முன்னுரிமை பெற்று 3,000 வட்டாரங்கள் அவ்வாறு வளர்ச்சியுற்றன.
இந்தக் காலகட்டத்தில்தான் வேலைக்கு உணவுத் திட்டம் அறிமுகமானது. குளத்து வேலை, சாலை வேலை போன்ற பொதுப் பணிக்கு ஏழைகள் திரட்டப்பட்டு வேலை முடிந்தவுடன் அவர்களுக்கு கோதுமை, அரிசி வழங்கப்பட்டது.
இந்தத் திட்டம் 1979-80இல் சிறப்புடன் செயல்பட்டாலும் இப்பணியில் ஈடுபட்டவர்கள் தானியங்களுக்கு பதிலாக பணம் வேண்டும் என்று விரும்பியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. எனினும் 1980இல் பிரதமராயிருந்த வி.பி. சிங், வேலைக்கு உணவு திட்டத்தை தேசிய கிராம வேலை வாய்ப்புத் திட்டமாக மாற்றியமைத்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் தொடக்கத்திலிருந்தே குளத்து வேலைக்கு அரிசிக்கு பதில் ரொக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. "வேலை உரிமை' என்ற கோஷத்துடன் குளத்து வேலை திட்டத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற பாடுபட்டு திட்டம் தீட்டியவர் வி.பி. சிங்.
2006இல் மன்மோகன் சிங் வேலை உரிமையை மெஜாரிட்டி பலம் கொண்டு நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றி, வி.பி. சிங் பெயரைச் சூட்டாமல் மகாத்மா காந்தி பெயரைச் சூட்டி நூறு நாள் வேலைத் திட்டத்தை அமலாக்கினர்.
நூறு நாள் வேலைத் திட்டத்தை வரலாற்று பூர்வமாக ஆராய்ந்தால், கொள்கை அடிப்படையில் நல்ல திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. கிராமத்து ஏழைகளின் வாங்கு சக்தியை உயர்த்தும் அதேசமயம், உருப்படியான திட்டமின்றி ஒதுக்கப்பட்ட பணத்தைச் செலவழிக்க வேண்டுமென்று மண்ணை நோண்டி மழைநீர் சேமிக்க முடியுமா?
உருப்படியாகாத இந்த செலவினத்தால் பணவீக்கம் பலமுற்று உயரும் விலைவாசியினால் ஏழைகள் அவதியுறுவதால் இப்படிப்பட்ட உன்னதமான கொள்கையை நிறைவேற்ற உற்பத்தி பூர்வமான செயல்திட்டத்தை ஒவ்வொரு பஞ்சாயத்து, வட்டார வளர்ச்சி அமைப்பு நிறைவேற்றும் அளவில் மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கும் மாவட்ட திட்டக் குழு உருவாக்குவது நன்று.
மனித உழைப்பை உற்பத்தி உறவுடன் சரியான மார்க்சிய நெறியில் சிந்திக்கும் சீனாவை எடுத்துக் கொண்டால், அந்நாடு மனித உழைப்பு சக்தியைப் பணமாக மாற்றி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உயர்ந்து நிற்கிறது. அங்குள்ள வட்டார, மாவட்டத் தலைமைக்கு சுயமாக முடிவெடுத்து ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபடும் அளவில் அதிகாரம் உண்டு.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் உழைப்பில்லாமல் ஊதியம் பெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். உழைப்பின் மதிப்பு பற்றிய அக்கறையில்லாமல் ஊதியம் பெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி உழைப்பின் மதிப்பைப் பற்றிய அக்கறையில்லாமல், நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் விநியோகமாகும் பணம் தங்களை மீண்டும் ஆட்சி செலுத்த உதவும் வாக்குகளாக மட்டுமே எண்ணுகிறது. இதனால் பணவீக்கமும் விலைவாசி உயர்வும் ஏற்படும்.
இவற்றைத் தவிர்க்க நூறு நாள் வேலைத் திட்டம் மேன்மையுறவும், பணவீக்கத்தை மட்டுப்படுத்தும் வழியிலும் ஊராட்சி, வட்டார வளர்ச்சித் துறை சுயமாகத் தங்கள் வருமானத்தை உயர்த்தும் அளவில் பின்வரும் தொழில்களில் ஈடுபடலாம்.
1. பொதுப்பணித் துறை, வனத் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள புஞ்சைத் தரிசு நிலங்களை நீண்டகால குத்தகைக்கு ஊராட்சி கைப்பற்றி அந்த நிலங்களில் பால்பண்ணை மர வளர்ப்பு, பழத்தோட்டம், மூலிகைத் தோட்டம், மண் புழு வளர்ப்பு, உயிர் உரத் தயாரிப்பு, கம்போஸ்ட் உரத் தயாரிப்பு ஆகிய தொழில்களில் நூறு நாள் வேலைத்திட்டத்தை அமல் செய்தால், வருடத்தின் 365 நாள்களுக்கும் ஒரு ஊராட்சி வேலை தரமுடியும்.
2. ஏற்றுமதிக்குரிய பழங்கள், காய்கறி உற்பத்தியில் ஈடுபடும்போது ஏற்றுமதிக்
குரிய மூலிகைகளான சர்ப்பகந்தி (சிவப்புக் கற்றாழை), நித்திய கல்யாணி, கண்வலிக் கிழங்கு (கார்த்திகைக் கிழங்கு) போன்ற சாகுபடியில் ஈடுபடலாம்.
3. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியிலிருந்து நல்ல கறவைப் பசுக்களை பெற்று, ஊராட்சிப் பொறுப்பில் பால்பண்ணை நிறுவலாம். ஒரு பக்கம் பால் விற்பனை, மறுபக்கம் பசுக்கள் வழங்கும் சாணம், கோமியம், பால், தயிர் இவற்றை உகந்த விகிதாச்சாரத்தில் கலந்து உயர்ந்த உயிரி உர திரவமான பஞ்ச கவ்யம் தயார் செய்து விற்கலாம். விவசாயிகள் பயனடைவர்.
4. புளி, ஆல், அரசு, வாகை, வேம்பு, புங்கன், இலவு, தேக்கு, தோதகத்தி, விளா, வில்வம், நாவல் போன்ற மரங்களின் விதைகளை வனத்துறை மூலம் பெற்று மரக்கன்று நர்சரி நடத்தி சாலையோரங்களிலும், வனங்களிலும் நட்டு இயற்கை சூழலை மேம்படுத்தலாம்.
5. ஊராட்சி, பேரூராட்சிக் குப்பைகளில் உள்ள மக்கும் பொருள்களை சேகரித்து எரியூட்டப்படும் இலைச் சருகுகளையும் காப்பாற்றி சாணத்துடன் கலந்து அருமையான கம்போஸ்ட், மண்புழு உரம் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.
இப்படிப்பட்ட 5 அம்சத் திட்டத்தை நூறு நாள் வேலையுடன் இணைத்தால் நாடு காக்கும் நல்ல திட்டமாக அமைந்து இந்தியாவை விவசாய வல்லரசாக மாற்றும் என்பதில் மாற்றமில்லை.