கட்டுரைகள்

முன்னோர் உரைத்த மொழி போற்றுதும்

அன்பைச் சொல்வதற்கும் கோபத்தைக் காட்டுவதற்கும் உலகில் வாழும் 700 கோடி மக்களுக்கு 7,105 மொழிகள்தான் இப்போது இருக்கின்றன.

முனைவர் ம. இராசேந்திரன்

அன்பைச் சொல்வதற்கும் கோபத்தைக் காட்டுவதற்கும் உலகில் வாழும் 700 கோடி மக்களுக்கு 7,105 மொழிகள்தான் இப்போது இருக்கின்றன. உலகத்தின் கவர்ச்சிமிக்க மொழியை (நங்ஷ்ண்ங்ள்ற் கஹய்ஞ்ன்ஹஞ்ங்) தேர்ந்தெடுக்க ட்ர்ற்ங்ப்.ஸ்ரீர்ம் உலகளவில் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. 8,000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். முதலிடத்தை பிரெஞ்சு மொழியும் இரண்டாம் இடத்தை இத்தாலி மொழியும் வென்றிருக்கின்றன.

காதலுக்கு சிறந்த மொழி எது என்பதற்கான தேர்தலை ஹக்ஷர்ன்ற்.ஸ்ரீர்ம் நடத்திக் கொண்டிருக்கிறது. வேட்பாளர்களாக பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், ருஷ்யன், அராபிக், ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பான், சீனம் ஆகிய மொழிகள் களத்தில் நிற்கின்றன.

பிப்ரவரி 21, உலகத் தாய்மொழிகள் நாள். தாய்மொழியைக் காக்கவும் வளர்க்கவும் கொண்டாடவும் யுனெஸ்கோ 17-11-1999இல் தீர்மானித்த நாள். உலகத் தாய்மொழிக் கொண்டாட்டத்திற்கு இந்த நாளைக் கொடுத்தவர்கள் வங்காள மொழியினர். 1952இல் வங்காள மொழியை பாகிஸ்தானின் இரு தேசிய மொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டி போராட்டம் நடந்தது. டாக்கா நகரில் நீதிமன்றம் அருகில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் பலர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான நாள் பிப்ரவரி 21.

மொழி என்பது கருத்தைத் தெரிவிக்கும் கருவி மட்டும் இல்லை. அது மரபு வழி அறிவின் கொள்கலன்; பண்பாட்டின் கருவூலம்; வாழ்வியல் நெறிமுறைகளை வரும் தலைமுறைக்கும் கைகாட்டும் ஒலிவரிப் பாதை; விழுமியங்களின் உளவியல் விளக்கு.

எனவே யுனெஸ்கோ, கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், மொழி உரிமைப் போராளிகள் ஆகியோரைக் கொண்டு 1987இல் கஐசஎமஅடஅல எனும் அமைப்பை உருவாக்கியது. சமூக மொழியியல் ஆய்வில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தவும் பன்மொழிச் சூழலில் ஒற்றுமை வளர ஆலோசனை வழங்கவும் பன்மொழிக் கல்வியை வளர்க்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் கற்பித்தல் நெறிமுறைகளையும் பாடத் திட்டங்களை உருவாக்கிடவும் முன்வந்தது. இப்பணிகளில் ஒப்பற்றவராகப் பணியாற்றும் ஒருவரை 2002 முதல் ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து உலகத் தாய் மொழிகள் நாளன்று அவர் பெயரை அறிவித்துப் பாராட்டுகிறது.

2011இல் குஜராத்தைச் சேர்ந்த ஜி.என். டேவி (எ.ச. ஈஉயவ) பாராட்டப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் உலகத் தாய் மொழிகள் நாளைக் கொண்டாட அறிவித்ததோடு 2008ஆம் ஆண்டினை மொழிகளின் ஆண்டாக கொண்டாடவும் யுனெஸ்கோ அறிவித்தது.

மக்கள் மொழி வேறுபாடு பாராட்டாமல் இணக்கமாக வாழவும் மொழிகளுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிக்கவோ கருதவோ கூடாது என்பதற்காகவும் ஒவ்வொரு மொழியும் உலக மரபுச் செல்வத்தின் ஒருபகுதி என்பது உணரப்படவும் யுனெஸ்கோ தீர்மானம் வழிகாட்டுகிறது. உலக நாடுகள் கொண்டாடு

கின்றன.

தனிப்பட்ட மனிதர்களை குழுவாகவும் சாதியாகவும் இனமாகவும் நாடாகவும் மதமாகவும் ஒன்றிணைக்க மொழி பயன்பட்டது. இப்படி ஒன்றிணையும்போது வேறொன்றிலிருந்து விலகி நிற்கவும் வேறொன்றை விலக்கி வைக்கவும் அரசியலும் அதிகாரமும் மொழிகளைப் பயன்படுத்துகின்றன.

ஆனால் தமிழ் மொழி, இவற்றைக் கடந்து வடவேங்கடம், தென்குமரி என்ற எல்லைகளுக்குள்ளும் எல்லைகள் கடந்தும், உலக நோக்கில் மானுட நேயத்தை ஒருங்கிணைக்கும் போக்கிலும் வரலாறு நெடுகிலும் சிந்தனைகளை விதைத்திருக்கின்றது.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்து திணைகளாக நிலப்பாகுபாட்டில் பிரிந்து கிடந்த தமிழர்களின் வாழ்க்கையை சங்க இலக்கியம் காட்டுகிறது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொழில் அடிப்படையில் மக்கள் வாழ்க்கை பிரிந்து கிடந்ததை தொல்காப்பியம் காட்டுகிறது. பாணர், பறையர், கடம்பர், துடியர் முதலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்வழி மக்களை சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று புறநானூறும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திருக்குறளும் உலகத்திற்கு தெரிவிக்கின்றன.

தாம் வாழும் காலத்தில் தமது பகுதியில் ஆட்சியில் இருப்பவரை மட்டும் பாடிய புலவர்கள் இருந்திருக்கிறார்கள். சேர அரசர்களை மட்டும் 27 புலவர்களும் சோழ அரசர்களை மட்டும் 24 புலவர்களும் பாண்டிய அரசர்களை மட்டும் 8 புலவர்களும் பாடியுள்ளனர். ஆனால் சங்கப் புலவர்கள் பன்னிரண்டு பேர் மூவேந்தர்களையும் பாடி இருக்கின்றனர். தொல்காப்பியம், "வண்புகழ் மூவர்' என்று மூவேந்தரையும் தமிழால் ஒன்றிணைக்கிறது.

தமிழ்மொழியின்பெருமையைப் பாராட்டும் இலக்கியங்களுக்கு இடையே "மொழிபல பெருகிய பழிதீர் தேயமும் புலம்பெயர் மாக்களும் மொழிபெயர் தேயத்தோரும்' இடம்பெற்று பன்மொழிச் சூழலில் பிற மொழியாளருடன் கலந்து வாழும் வாழ்க்கையும் கூறப்பட்டிருக்கின்றன.

காவிரியைப் போற்றுகிறபோது கங்கையையும் பாராட்டுகிறது தமிழ். தன்னேரில்லாதது தமிழ் என்றும் வேதத்தைவிட திருவாசகம் கருங்கல் மனதையும் கரைந்துருகச் செய்யும் என்றும் பாடியுள்ளனர். ஆதிக்கத்தை எதிர்க்கிற தமிழில் அன்பு கலந்து அரவணைக்கிற போக்கும் இருக்கிறது.

"செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவான்' என்றும் "செந்திறத்தத் தமிழோசை வடசொல்லாகி' என்றும் திவ்விய பிரபந்தங்கள் பாடுகின்றன. ஆதிசிவன் பெற்றெடுத்த குழந்தைகள்தாம் தமிழும் வடமொழியும் என்று அக்காலத்தில் இருந்த இன்னொரு மொழியையும் இணையாகப் பார்த்த, மொழி இணக்கத்திற்கும் தமிழ் இடம் தந்திருக்கிறது.

சைவ, வைணவச் சண்டைகளுக்கும் சமணர்களின் கழுவேற்றத்திற்கும் வாதங்களுக்கும் சாட்சியாக இருக்கும் தமிழில்தான் "அரியும் சிவனும் ஒன்று', "பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் போய்ச் சேரும் கடல் ஒன்று' என்ற சிந்தனைகளும் இருக்கின்றன.

வேளாளர், அந்தணர்களைவிட மேம்பட்டவர்கள் என்று "வருண சிந்தாமணி' நூல் (1901) கூறுகிறது. கிராமணிகள் அரசர் பரம்பரை என்று "க்ஷத்திரியகுல விளக்கம்' (1904) கூறுகிறது. மீனவர்கள் பாண்டியர் பரம்பரையினர் என்று "பரவர் புராணம்' (1909) கூறுகிறது. கார்காத்தார் சாதி உயர்வை "கிளைவளப்ப மாலை' கூறுகிறது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இந்திரலோகத்தில் இருந்து கரும்பையும் நெல்லையும் கொண்டு வந்த இந்திரகுல வேளாளர் என்று கூறப்படுகின்றனர். இவர்களின் விருப்பங்களுக்கு புராணங்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ளன.

புராணக் கருத்துகளை எதிர்த்து மணிமேகலையும் நீலகேசியும் வாதம் செய்கின்றன. "சாதி என்பது ஏதடா சமயம் என்பது ஏதடா' என்றும் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் சித்தர்கள் குரல் கொடுத்துள்ளனர். "ஆண்சாதி பெண்சாதி ஆக இரு சாதி வீண்சாதி மற்ற எல்லாம்' என்றும் "இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர்' என்று சாதி இரண்டொழிய வேறில்லை என்பதை சொல்லிக் கொடுத்ததும் தமிழ்தான்.

உலக மொழிகள் தாய்மொழி நாளைக் கொண்டாடுகின்றன. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகவும் செம்மொழிகளில் ஒன்றாகவும் இன்றும் வழக்கில் இருக்கும் மொழியாகவும் தொடர்ந்து கலை இலக்கியப் படைப்பு மொழியாகவும் இருப்பதால் தாய்மொழி நாளைக் கொண்டாடும் உரிமை தமிழ்மொழிக்கு இருக்கிறது.

இன்றைய உலகிற்குத் தேவைப்படும் தன்னை இழக்காமல், சுயமரியாதையைக் கைவிடாமல் நல்லிணக்கச் சூழலை, பன்மொழிப் பண்பாட்டுச் சூழலுக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் நிலவும் வேறுபாடுகளைக் களைவதற்கும் தேவைப்படும் சிந்தனைகளை உலகிற்கு அளிக்கும் திறம் கொண்டிருப்பதால் உலகத் தாய்மொழி நாளைச் சிறப்பாகக் கொண்டாடும் பெருமையும் தமிழுக்கு இருக்கிறது.

இப்போது சாதிகள் இருக்கின்றன; சமயங்கள் இருக்கின்றன; இனங்கள் இருக்கின்றன; எல்லைகளோடு நாடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றிடையே ஆதிக்கம் இல்லாமல், ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் வாழும் இணக்க வாழ்க்கை உலகத்தின் இன்றைய தேவையாக இருக்கிறது. இதனை,

முன்னோர் உரைத்த மொழி தவறாமல்

புலையும் கொலையும் களவும் தவிர்த்து

நிலைபெற அறத்தில் நிற்பதை அறிந்து

ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து

பேணி உரைப்பது பிழையெனப் படாது

சிறப்பும் சீலமும் அல்லது

பிறப்பு நலம் தருமோ பேதையீரே என்று "கபிலர் அகவல்' உலகிற்கு உரக்கச் சொல்கிறது.

சாதிகள் அற்ற சமுதாயம் வரக் கூடும். சமயங்கள் அற்ற சமுதாயமும் வரக்கூடும். எல்லைகள் அற்ற உலகம்கூட உருவாகக் கூடும். இவை எல்லாம் கற்பனையில் இருக்கலாம். ஆனால் மொழிகள் அற்ற உலகம் கற்பனையிலும் இருக்க முடியாது.

மக்களைப் பிரிக்காமல் சேர்ந்து வாழச்செய்ய மொழி பயன்படவேண்டும். கவர்ச்சிமொழி, காதல்மொழி போட்டிகளைவிட சமுதாய நல்லிணக்கச் சிந்தனைப் போட்டி மொழிகளுக்கு வேண்டும். தமிழ் மொழி அந்தச் சிந்தனைக்கு நாற்றங்காலாக இருக்கிறது. இது தொடர்ந்திட, முன்னோர் உரைத்த மொழியைப் போற்றுவோம்.

கட்டுரையாளர்: துணைவேந்தர் (ஓய்வு) தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT