முகப்பு
கட்டுரைகள்

மாற வேண்டும் கண்ணோட்டம்

பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் பாதுகாப்பானது, வசதியானது என்ற பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், அவ்வப்போது ரயில்களும் விபத்துக்குள்ளாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் அருகே பெங்களூரு - நான்டெட் விரைவு ரயிலின் மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

பேருந்துப் பயணத்தைவிட ரயில் பயணம் பாதுகாப்பானது, வசதியானது என்ற பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், அவ்வப்போது ரயில்களும் விபத்துக்குள்ளாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் அருகே பெங்களூரு - நான்டெட் விரைவு ரயிலின் மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர்.

மின் கசிவு காரணமாகவே இந்தப் பெட்டியில் தீப்பிடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த ரயில் பெட்டியின் ஓர் இருக்கைக்கு கீழேதான் சேதம் அதிகம் உள்ளதாகவும், எனவே, குண்டு வெடித்துத் தீப்பிடித்திருக்கலாம் எனவும் அதைப் பரிசோதித்த தடயவியல் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தடயவியல் பரிசோதனை முடிவுகள் முழுமையாக வெளியான பிறகே இந்த ரயில் பெட்டி தீப்பிடித்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

இந்தியாவில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது, ஆளில்லா ரயில்வே லெவல் கிராஸிங்குகளில் பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் மீது மோதுவது, ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிவது, இரு ரயில்கள் மோதிக் கொள்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் ரயில்வே நிர்வாகம் மெத்தனமாகவே உள்ளது.

ரயில் விபத்து நிகழ்ந்தவுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவது, விபத்துக்கான காரணம் குறித்து ஆராய உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைப்பது உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகளை எடுப்பதுடன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது ரயில்வே நிர்வாகம்.

விபத்து குறித்து ஆராய்ந்து குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ரூ. ஒரு லட்சம் கோடியிலான திட்டங்கûளை 5 ஆண்டுகளில் செயல்படுத்த ககோட்கர் தலைமையிலான குழு கடந்த 2012 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. இந்தத் திட்டங்களை ஆண்டுக்கு ரூ. 20,000 கோடி வீதம் செலவிட்டு படிப்படியாகச் செயல்படுத்தலாம் என்றும், இதற்காக ரயில் பயணிகள் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகையை பாதுகாப்பு தீர்வை என்ற பெயரில் வசூலிக்கலாம் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்தது. ஆனால், இது விஷயத்தில் ரயில்வே நிர்வாகம் இன்னும் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

தீப்பிடிக்காத ரயில் பெட்டிகளைத் தயாரிப்பது, நவீன சிக்னல்களை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கணக்கில் பேசிக் கொண்டுதான் இருக்கிறதே தவிர, இன்னமும் அத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்தபாடில்லை.

ஏற்கெனவே உள்ள பழைய ரயில் பெட்டிகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, நவீன ரயில் பெட்டிகளை உடனடியாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாததுதான்.

எனினும், படிப்படியாக நவீன ரயில் பெட்டிகளைப் புகுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளைக்கூட ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருப்பது அதன் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

மேலும், உலகிலேயே மிக அதிக அளவு ரயில் பாதைகளையும் (1,15,000 கி.மீ. தொலைவுக்கு), வழித்தடங்களையும் (65,000 கி.மீ. தொலைவுக்கு) கொண்டுள்ள இந்திய ரயில்வேயை நிர்வகிக்கக் கூடிய பொறுப்புக்கு வரும் அமைச்சர்களும் தொலைநோக்குச் சிந்தனை இன்றி, தாங்கள் சார்ந்துள்ள மாநிலத்தின் நலனை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவதாலும் நமது ரயில்வே திறம்படச் செயல்பட முடியாமல் போகிறது.

புதிய ரயில் பாதைகளை அமைப்பது, நவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பதை விரைவுபடுத்துவது, தேவையான பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமலேயே ரயில்வே பட்ஜெட்டில் புதிதாக ரயில்களை இயக்குவதற்கான அறிவிப்புகளை வெளியிடுவதுடன் தங்களது கடமை முடிந்துவிட்டதாக ரயில்வே அமைச்சரும், அவருக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் கருதுவதால்தான் நமது ரயில்வே இந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

அவர்களுடைய இந்தக் கண்ணோட்டம் மாறாதவரை இந்தியாவில் பாதுகாப்பான ரயில் பயணம் என்பது சாத்தியமில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →