கட்டுரைகள்

டிமிக்கி நம்மைக் கவுக்கும்

படிப்புல டிமிக்கி, வேலைல டிமிக்கி, பேச்சுல டிமிக்கி, கொத்தனார் டிமிக்கி, பிளம்பர் டிமிக்கி, நெசவுல டிமிக்கி, காவலில் டிமிக்கி, நேர்மைக்கு டிமிக்கி, வாக்குல டிமிக்கி, டீச்சருக்கு டிமிக்கி, கல்வில டிமிக்கி உண்மைக்கு டிமிக்கி என்று டிமிக்கி அடிப்பதே வாழ்க்கையாகி விட்டது.

ஆர். நட​ராஜ்

படிப்புல டிமிக்கி, வேலைல டிமிக்கி, பேச்சுல டிமிக்கி, கொத்தனார் டிமிக்கி, பிளம்பர் டிமிக்கி, நெசவுல டிமிக்கி, காவலில் டிமிக்கி, நேர்மைக்கு டிமிக்கி, வாக்குல டிமிக்கி, டீச்சருக்கு டிமிக்கி, கல்வில டிமிக்கி உண்மைக்கு டிமிக்கி என்று டிமிக்கி அடிப்பதே வாழ்க்கையாகி விட்டது. இந்த டிமிக்கி பாட்டை சென்னை நடுநிலை பள்ளி மாணவ மாணவியர், சமீபத்தில் மார்கழி சங்கீத ரசிகர்கள் மத்தியில் அழகாக பாடிக் காண்பித்தார்கள். டிமிக்கி என்பது வட்டாரச் சொல், கொடுத்த வேலையை சரியாக செய்யாமல் ஏமாற்றினால் டிமிக்கி கொடுப்பது. தெற்கு மாவட்டங்களில் மொங்கான் போடுவது என்பார்கள்.

டிமிக்கியடிப்பது, மொங்கான் போடுவது வாடிக்கையாகி விட்டது. சொல்லபோனால் பொய் பித்தலாட்டத்திற்கும் ஊழலுக்கும்தான் டிமிக்கி கொடுக்க வேண்டும்.

காலச்சக்கரத்தில் இன்னொரு வருடம் கரைந்து விட்டது. இன்னும் பிரச்னைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர தீர்வு இல்லை. "நிர்பயா' கொடூரக் குற்றம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. எவ்வளவோ பேசியாகிவிட்டது. ஆனால் குற்றம்புரிபவர் பயமின்றி குற்றம் புரிந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக் கூடாது. அவர்களது பணிகளை கவனிக்க நல்ல சூழல் தேவை. அதற்கேற்ற பாதுகாப்பு அவசியம். வேலை வாய்ப்பு நம்மைத் தேடி வராது. இன்றைய நிலையில் எத்தகைய வாய்ப்புகள் வருகிறதோ அதை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எதற்கெடுத்தாலும் அரசை சார்ந்திருக்கும் மனோபாவம் நம்மிடம் இருக்கிறது. எவ்வளவு வருடம் பெற்றோர்கள் நம்மை சுமப்பார்கள்? ஓரளவுக்கு அவர்கள் வழி காட்டுவார்கள். அதற்குப் பிறகு சொந்தக் காலில் நிற்க வேண்டும். எவ்வளவு நாள்தான் இலவசங்களில் வாழ முடியும்? கஷ்ட நிலையில் இருப்பவர்களுக்கு கைகொடுக்கத்தான் நலத்திட்டங்கள். அதன் பயன்பாட்டை வைத்து தனது உழைப்பை சேர்த்து தன் உயர்வுக்கும் நாட்டின் உயர்வுக்கும் பாடுபட வேண்டும் என்ற உணர்வு வளர வேண்டும்.

காவல், கல்வி, களப்பணி இம்மூன்றிலும் டிமிக்கி அல்லது பின்னடைவு இருந்தால் சரிகட்ட முடியாத விளைவுகள் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.

காவலில் சிறிது அசட்டையாக இருந்தாலும் குற்றங்கள் பரவும், சட்டம் ஒழுங்கு மழுங்கும். அதனால்தான் காவல் இருபத்தினான்கு மணிநேர பணி என்று உணர்ந்து எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. காவலில் உஷாராக இருப்பதோடு காவல் துறையினர் முன் உதாரணமாக சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிய வேண்டும், கார் ஒட்டுனர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று விதிகளை அமல்படுத்தும் போது காவல் துறையினருக்கும் அந்த சட்டம் பொருந்தும் என்பதை மறக்கலாகாது. அவசரப்பணி இருக்கையில் தீயணைப்பு, ஆம்புலன்ஸ், காவல்துறை போக்குவரத்து சமிக்ஞைகளை மீறிப் போகலாம். ஆனால் சாதாரண பணியில் போக்குவரத்து விதிகளை மீறுவதை காவலில் டிமிக்கி என்றே கொள்ள வேண்டும்.

மேலும் சமுதாய காவல்பணி என்பது பெயரளவில் இருந்தால் போதாது. எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் அதை மக்களுக்கு விளக்கி புது கட்டுப்பாடுகள் விதிக்கும்முன் விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்களோடு இணைந்து செயல்படுதல் முக்கியம். உத்தரவைப் போட்டுவிட்டு தீவிர அமலாக்கத்தில் ஈடுபட்டால் சட்டத்தை மதிப்பவர்களுக்கு இம்சையாக இருக்குமே தவிர, அமலாக்கத்தின் நோக்கம் நிறைவேறாது.

வேலையில் சுணக்கம் என்பதும் ஒரு வித நேர்மையற்ற செயல், ஊழல் என்றே கொள்ள வேண்டும். கால தாமதத்தினால் ஒரு திட்டத்தின் மதிப்பீடு விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும். கூடுதல் செலவு ஒரு புறம், நேரம் விரயமாவது, பயன்பாடு உடனடியாக வராததால் அதைச் சார்ந்த மற்ற முன்னேற்றங்களுக்கு பின்னடைவு என்று அதல பாதாளத்திற்கு தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது.

அதே வகையில் தரமான கல்வி புகட்ட வேண்டும். புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்யப்படும் கல்வியால் என்ன பயன்? பாடம் புரியாமல் செய்வதறியாது சங்கடப்படும் மாணவர்களுக்காக சல்மான் கான் என்ற இஸ்லாமிய இளைஞர் இணையதளம் மூலமாக எல்லாருக்கும் புரியும் வகையில் பாடங்களுக்கான விளக்கங்களை யூ டியூப் மூலமாக பதிவு செய்துள்ளார். இது இலவசம். யார் வேண்டுமானாலும் இளையதளம் மூலம் அணுகி விஞ்ஞானம், கணிதம் என்ற எல்லா பாடங்களிலும் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். கற்றுக் கொடுப்பதில் டிமிக்கி கொடுப்பவர்கள் தலை குனியும் வகையில் இளைஞர் கான் செய்யும் சேவை புனிதமானதொன்று. டிமிக்கி கொடுக்கும் ஆசிரியர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள் என்பது பல நாட்டு இளைஞர்கள் கானின் காணொலி அகாடமியை அணுகுவதிலிருந்து தெரிகிறது. ஒவ்வொரு மாதமும் பத்து கோடி இளைஞர்கள் கான் அகாடமி மூலம் பயனடைகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் 30 கோடி பாடங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தண்ணீர், மின்சாரம், சாலைவசதி இவை மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியாமையாதவை. ஆனால் தலைநகரம் தில்லியில் பல இடங்களில் குடிநீர் வசதி இல்லை என்பது சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிகிறது. நாள் ஒன்றுக்கு 700 லிட்டர் தண்ணீர் மக்களுக்கு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தே ஒரு புதிய கட்சி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. சுதந்திரம் அடைந்து 66 வருடங்கள் ஆன பிறகும் தலைநகரில் குடி தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால் எந்த அளவுக்கு டிமிக்கி தாக்கியிருக்கிறது என்பதை நாம் யூகிக்கலாம்.

சுகாதாரம் மற்றும் மருத்துவம் மக்கள் நலனுக்கு இன்றியமையாதது. பல நகரங்களில் இன்னும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்கும் நிலை வரவில்லை. திறந்த ஓடை பொது சுகாதாரத்திற்கு உகந்தது அல்ல. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து கழிவுப் பொருட்கள் மூலம் எரிபொருள் உரம் தயாரித்தல் போன்ற உபரி பயன்பாட்டுத் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. பஞ்சாயத்து அளவில் இது சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் குப்பை அகற்றப்பட்ட சூழலும், பயன்தரும் குப்பைக்கழிவு முறையும் மக்களுக்குக் கிடைக்கும்.

சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பேசிய "நோபல்' விஞ்ஞானி வெங்கட்ராமன், "இந்தியாவில் மருத்துவத்திற்கும் சுகாதாரத்திற்கும் மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் மிகக்குறைந்த நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம். மற்ற இரண்டு நாடுகள் சியார்ரா லியோன் மற்றும் ஹயிடி. மனிதவள குறியீட்டில் நமது இடம் 134. ஒவ்வொரு வருடமும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.

மனிதவளக் குறியீட்டில் முக்கிய பகுதி மருத்துவம், சுகாதாரம். மற்ற அங்கங்கள் கல்வி, உழைப்பு மூலம் பொருள் ஈட்டும் திறன். இவற்றை அதிகரிக்கச் செய்ய வேண்டியது எல்லோருடைய பொறுப்பு. அதிலும் முக்கியமாக தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். இதன் அடிப்படையில் திறன் வளர்க்கும் பயிற்சி மிகப்பெரிய அளவில் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10-வது, 12-வது வகுப்பு படிப்பவர்கள், கல்லூரியில் படிப்பவர்கள், சுய உதவிக் குழுவினர் இவர்களுக்கென்று மத்திய, மாநில அரசு திட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றது.

நமது முதலமைச்சரின் தொலை நோக்குத் திட்டத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் ஒன்றறை கோடி வேலை வாய்புகள் உருவாக்கப்படும். அதற்கு இளைய சமுதாயத்தினருக்கும் உழைக்கும் கைகளுக்கும் உரம் ஊட்டும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். இதை உணர்ந்துதான் அரசு உற்பத்தி மேம்பாட்டுக் கழகம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 8000 பேருக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள். பயிற்சி இலவசம். வேறு எந்த நிபந்தனையும் கிடையாது. பயிற்சி பெறுபவர்கள் சான்றிதழ் மற்றும் கையளவு கணினி பயிற்சியோடு பெறுவர் என்பது ஊக்கமளிக்கும் திட்டம். இதன் மூலம் ஆரோக்கியமாக உழைக்கும் சூழல்,கலாசாரம் உருவாக்கப்படும்.

உண்மையான சுயமரியாதை என்பது, சுயமுயற்சியோடு அரசு நல்கும் நலத்திட்டங்களில் பயன் பெற்று உழைப்பை சமுதாயத்திற்கு அளிப்பதுதான் என்பது புரிய வேண்டும்.

கிடைத்த பொருட்களை பதுக்கும் மனோபாவம் ஒழிந்து எல்லாரோடும் வளர்ச்சியின் பயன்பாட்டை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் மேலோங்க வேண்டும். முன்னேற்றம் எல்லா சமுதாயத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் கட்டுப்பாட்டுடனும் அமைய வேண்டும். உலக அளவில் இந்தக் கட்டுப்பாடு இல்லாததால்தான் வெப்பம் அதிகரிப்பு, சுற்றுப்புற சூழல் பாதிப்பு, நீர் நிலைகள் வறட்சி போன்ற பிரச்னைகள் தோன்றியுள்ளன. உலகின் பரப்பளவில் 70.9 சதவிகிதம் நீர்; 29.1 சதவிகிதம் நிலம். மொத்த பரப்பரவு 510.072 மில்லியன் சதுர கிலோமீட்டர். அதில் நிலம் 148.94 மில்லியன் ச.கி.மீ.; நீர் 361.132 மில்லியன் ச.கி.மீ. இப்போது ஜனத் தொகை 7.02 பில்லியன். 2050-இல் 10.5 பில்லியனை எட்டிவிடும். இந்த வளர்ச்சிக்கு ஏற்றவாறு கட்டமைப்புகள் அமைய வேண்டும்.

வளர்ச்சி, முன்னேற்றம் இவ்விரண்டும் கட்டுப்பாட்டுடன் இணைந்து வளர்ச்சியடைந்தால்தான் உலகுக்கு நல்லது. நாம் இயற்கைக்கு டிமிக்கி கொடுத்தால் சுனாமி அளவில் பிரச்னைகள் பெருகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT