கட்டுரைகள்

மனித உயிர்கள் மதிப்பு மிக்கவை

அண்மைக் காலமாக நடந்து கொண்டிருக்கிற விபத்துகளைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது; அவர்களின் ஓலம் நம் செவிகளில் விழுகிறபோது என்ன செய்வது என்று தெரியாமல் மனம் தடுமாறுகிறது.

உதயை மு. வீரையன்

அண்மைக் காலமாக நடந்து கொண்டிருக்கிற விபத்துகளைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது; அவர்களின் ஓலம் நம் செவிகளில் விழுகிறபோது என்ன செய்வது என்று தெரியாமல் மனம் தடுமாறுகிறது. நமது கண் எதிரிலேயே சக மனிதனின் உயிர் ஊசலாடும்போது அதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

உலகத்திலேயே மதிப்பு மிக்கதான மனித உயிர் இப்படி வீணாகப் போவது யாருக்குச் சம்மதம்? மரம், செடி, கொடிகளைக் கூட நேசிக்கக் கற்றுக் கொண்ட மனிதன் தம் இனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியுமா?

மொழி, இன, மாநில உணர்வுகளுக்கு அப்பால் நின்று நிலவக் கூடிய ஆற்றல் மனிதநேயத்துக்கு உண்டு. அது நாட்டின் எல்லைகளைக் கடந்தது; ஆளும் அரசுகளையும் கடந்தது. "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?' என்று வள்ளுவன் கேட்டது இதனைத்தான்.

"தென்னிந்தியாவிலேயே இதுபோன்றதொரு விபத்து இதுவரை நிகழ்ந்ததில்லை' என்று தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படிப்பட்ட அடுக்குமாடி கட்டட விபத்து சென்னை மௌலிவாக்கத்தில் நடைபெற்றுள்ளது.

11 தளங்களைக் கொண்ட 2 குடியிருப்புகள் நொறுங்கித் தரைமட்டமாகிவிட்டன. கட்டட இடிபாடுகளுக்குள் 72க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதுவரை இந்த விபத்தில் 49 பேர் இறந்துள்ளனர்; ஏராளமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களை மீட்கும் பணி விரைவாகவே நடைபெற்று வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பணியில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை மெட்ரோ ரயில், இத்தனைக்கும் மேலாக தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, இவ்விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

விபத்துக்குள்ளான அடுக்குமாடி கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அனுமதி வழங்கியதில் எந்தக் குறைபாடும் இல்லையென்றும், கட்டுமான நிறுவனம்தான் விதிமுறைகளை பின்பற்றவில்லையென்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆறுகள் இல்லாததால் பக்கத்து மாநிலங்களை எதிர்பார்த்து வாழும் நெருக்கடியான நிலையில் தமிழகம் உள்ளது.

காவிரி நீருக்காக கர்நாடக மாநிலத்தையும், முல்லைப் பெரியாறு நீருக்காக கேரளத்தையும், சென்னை மாநகரக் குடிநீருக்காக ஆந்திராவையும் இன்னும் எத்தனை காலம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

தமிழகத்தில் ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள்தாம் நீராதாரங்களாக உள்ளன. இவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா? கடந்த சில ஆண்டுகளாக இவை ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவே இல்லை. தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இதுவே காரணம்.

இப்போது இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளான இந்தக் கட்டடமும் நீர்ப்பிடிப்புப் பகுதியில்தான் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் இருந்த விதிமீறல்களை சட்டப்பூர்வமாக்கி, இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?

இன்று தமிழ்நாடெங்கும் நீர்நிலைகளும், விவசாய நிலங்களும் வீட்டுமனைகளாக விற்கப்படுகின்றன. சட்டங்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி "ரியல் எஸ்டேட்' வணிகம் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த அநியாய ஆக்கிரமிப்புகளை யார் தட்டிக் கேட்பது?

மணல் கொள்ளை என்ற பெயரால் ஆறுகளும், ஏரிகளும் அழிக்கப்படுகின்றன. மலைகளையே விழுங்கும் மனிதர்களால் கனிம வளங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இயற்கை தந்த இனிய வளமான காடுகள் அழிக்கப்படுகின்றன. இவையெல்லாம் யாருக்கும் தெரியாமல் எப்படி நடக்கும்?

"அடுத்த உலகப் போர் தண்ணீருக்காகத்தான்' என அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கை செய்து கொண்டேயிருக்கின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் அன்றாடம் தண்ணீருக்காகப் போராட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

நாம்தான் நாளைக்கு பாதிக்கப்படப் போகிறோம் என்று தெரிந்தும் தெரியாததுபோல கூட்டாகச் செயல்படுவது கொடுமையல்லவா?

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவது போல நாம் நம் வாழ்வாதாரங்களை விற்று ஆபத்தை விலைக்கு வாங்குகிறோம். மக்களாட்சியில் மக்களைக் கேட்காமல், மக்களைக் கேட்டதுபோல நாடகமாடிக் கொண்டு, மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். அதனால்தான் மக்களின் உயிர்கள் காணிக்கையாக்கப்படுகின்றன.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் என்ற கிராமத்தில் கடந்த ஜூன் 27 அன்று எரிவாயு குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியான சோகமும் தொடர்கிறது. நெருப்பில் சிக்கிய பலரும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய எரிவாயு நிறுவனம் (கெய்ல்) சார்பில் நிலத்தில் புதைக்கப்பட்ட குழாய்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் திட்டம் தொடங்கிய நாளிலிருந்தே தமிழகம் உள்பட பல மாநிலங்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

குறிப்பாக விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நெடுந்தொலைவுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதால் விவசாய நிலங்களின் பரப்பு குறையும்.

அத்துடன் எரிவாயுக் கசிவால் விவசாய நிலங்கள் பாழாவதுடன் சுற்றுச்சூழலும் கெடும். மக்களின் வாழ்வாதாரமும், பிற உயிர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு தமிழ்நாட்டு விளைநிலங்கள் வழியாக எரிவாயுவைக் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது. நெடுஞ்சாலை வழியாகக் குழாய்களைப் பதிக்குமாறும் கேட்டுக் கொண்டது.

இதனை ஏற்க மறுத்த "கெய்ல்' நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. மக்களின் விருப்பத்தைக் கேட்டு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரிதான் என்றாலும், பெரும்பான்மை மக்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இவ்வாறு மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களுக்கு எதிரானதாகவும், ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. கேரள மாநிலத்தில் எரிவாயுக் குழாய்கள் நெடுஞ்சாலை ஓரங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கேயும் அதனைப் பின்பற்ற வேண்டியதுதானே! ஆந்திராவில் நடந்த விபத்துக்குப் பிறகாவது இதுபோன்ற விபத்து நாட்டின் பிறபகுதிகளில் நடைபெறாமல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.

"கெயில்' நிறுவன எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக விசாரணை நடத்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு (சுத்திகரிப்பு) அமைச்சக இணைச் செயலர் ஆர்.கே. சிங் தலைமையிலான விசாரணைக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

விரைந்து செயல்பட்டு அதன் அறிக்கை தரும் உண்மைகள் இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருக்க உதவும் என நம்புவோம்.

இவ்வாறு எப்போதாவது நடக்கும் பேரிடர்களைத் தவிர்த்து, அன்றாடம் நடக்கும் ஆபத்துகளே அதிகம். இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி, சாலைப் போக்குவரத்தில் நடக்கும் வாகன விபத்துகள் சாதனை அளவை எட்டியுள்ளன.

சுற்றுலா, ஆலய வழிபாடு, குடும்ப விழா என்று உல்லாசமாக இருக்க வேண்டிய பயணங்களில் சோகத்தைச் சுமந்து வரும் விபத்துகளை என்னென்பது? பாதுகாப்பான பயணங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான வாழ்க்கையும் உறுதி செய்யப்படும்.

இதுபோன்ற விபத்துகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? மனித உயிர்கள் மலிவானவை அல்ல; மதிப்பு மிக்கவை. அந்த உயிர்களோடு விளையாட வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT