கட்டுரைகள்

அலட்சியம் வேண்டாம்

தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவாக உள்ளது. இதனைச் சாதகமாக்குவதற்கு, வங்கிகள் வழங்கும் எளிமையான கடன் வசதிகள் பணி புரியும் தம்பதிகளை ஈர்க்கின்றன.

ஆ. சமுத்திரராஜன்

தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்பது ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவாக உள்ளது. இதனைச் சாதகமாக்குவதற்கு, வங்கிகள் வழங்கும் எளிமையான கடன் வசதிகள் பணி புரியும் தம்பதிகளை ஈர்க்கின்றன.

இதனைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனங்கள், சரியான, தரமான பொருள்களை வீடு கட்டுவதற்குப் பயன்படுத்தாமல், மக்களிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால்தான் அக்கட்டடங்களின் ஆயுள் இன்று கேள்விக்குறியாகி உள்ளது.

பொதுவாக எந்தவொரு பொருள் வாங்குவதற்கும் முன்பாக அதன் தரம், அதனைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் பெரும்பாலானவர்கள், குறிப்பாக, படித்தவர்கள், கவலைப்படாமல் விளம்பரங்களில் மயங்கி பொருள்களை வாங்கி ஏமாறுவதென்பது கடந்த பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் 1990களில் தேக்கு மரம் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும் என பல்வேறு தனியார் நிறுவனங்கள் விரித்த வலையில் சிக்கி பல ஆயிரம் குடும்பங்கள், மாதா மாதம் சேமித்த பணத்தை மொத்தமாக இழந்துத் தவித்தன.

அதேபோல, 2000க்குப் பின்னர் காந்தப் படுக்கை, மல்டி லெவல் மார்க்கெட்டிங், அகர் மரம், கொப்பரைத் தேங்காய் போன்றவற்றில் முதலீடு செய்தால் கணிசமாக லாபம் கிடைக்கும் என பல நிறுவனங்கள் மீண்டும் மக்களிடம் மயக்க வலை விரித்தன. அகர் மரம் என்றால் என்னவென்றெ தெரியாத பலரும் இந்தத் திட்டத்தில் பணத்தைக் கட்டி ஏமாந்தனர்.

அந்த வகையில், ஈமு கோழி என்ற ஒரு பறவையின் சிறகு, முட்டை, எச்சில், கழிவுகளை விற்றால் சீக்கிரத்தில் கோடீஸ்வரராகி விடலாம் என விரிக்கப்பட்ட வலையிலும் பல ஆயிரம் குடும்பத்தினர் முதலீடு செய்து ஏமாந்து போயினர்.

இதிலிருந்து மக்கள் மீள்வதற்குள் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு விளைநிலங்களை பிளாட்டுகளாக்கி குறைந்த முதலீட்டிலும் மாதத் தவணை முறையிலும் விற்கப்படுவதாக ஆசை காட்டினர்.

எங்களது நிறுவன நிலத்தை விலைக்கு வாங்கினால் தங்க நாணயம், பத்திரப் பதிவு இலவசம் என விளம்பரம் செய்து, நிலம் வாங்க வேண்டும் என்ற ஆவலில் இருப்பவர்களை ஏமாற்றுகின்றனர்.

இதற்கிடையில், எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் குழந்தைகளைக்கூட சரிவர கவனிக்காமல் இரவு பகலாகப் பணியாற்றும் கணவன்-மனைவியைக் குறிவைத்து விளம்பரப்படுத்திய தனியார் கட்டுமான நிறுவனங்கள் விரித்த வலையில் பலர் விழுந்தனர்.

இதை நம்பி அடுக்குமாடிக் குடியிருப்பு அமையுமிடம், கட்டடத்துக்கு பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம், அவை கட்டி முடிக்கப்படும் கால அளவு உள்பட எதுவும் தெரியாத நிலையில், சொந்த வீடு கனவில் உள்ளவர்களை ஈர்த்து கோடிகளைக் குவித்து விடுகின்றனர்.

பொதுவாக ஒரு கட்டுமான நிறுவனம், இடத்தை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, கட்டுமானத்துக்குத் தேவையான மணல், சிமென்ட், செங்கல், இரும்புக் கம்பி உள்ளிட்டவைகளுக்கு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணம் தந்து விடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு பொருள்களை வாங்கிக் கட்டுகின்றன.

இதில் இருக்கும் உண்மை என்னவென்றால் எந்தவொரு குடியிருப்பும் குறிப்பிட்ட கால அளவில் விற்கப்படுவதில்லை. அதனால், அந்தக் கட்டுமான நிறுவனம் கடனுக்கு வாங்கிய கட்டுமானப் பொருள்களுக்கு கால அளவைத் தாண்டி பணத்தைக் கொடுப்பதால் வட்டி செலுத்த வேண்டியுள்ளது.

இதனால், கட்டப்படும் வீடுகளின் தரம், ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதுபோல இருக்குமா என்பது கேள்விக்குறியே.

பொதுமக்களைப் பொருத்தவரையில் அவர்கள் முக்கியமாக நினைப்பது வீட்டின் வாஸ்து, வர்ணப்பூச்சு, மேஜை, நாற்காலி வேலைப்பாடுகளைத்தான். குடியிருப்பில் உள்ள அஸ்திவாரம், தூண்கள், கான்கிரீட் செய்ய பயன்படுத்திய சிமென்ட் மற்றும் கம்பியின் தரம் குறித்து அவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால்தான் கும்பகோணம் பள்ளி தீ விபத்து, ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்து, சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு தீ விபத்து அண்மையில் நேரிட்ட மௌலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு தரைமட்டமான விபத்து போன்ற சோகங்கள் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கின்றன.

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவர்கள் அரசு அதிகாரிகள்தான். காரணம், எந்தவொரு கட்டமும் அரசு, காவல்துறை, உள்ளாட்சித் துறை அல்லது பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கவனத்திற்கு வராமல் கட்டப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களின் அலட்சியப் போக்கு மாறினால் மட்டுமே மனித உயிர்கள் காவு கொடுக்கப்படுவது தடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT