மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் விழுந்து குழந்தைகள் பரிதாபமாக இறந்த பிறகு, பாழடைந்த, மூடப்படாத கிணறுகள் உள்ள இடங்கள் சல்லடையாக தேடப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. அதன்பிறகு, 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து பரிதாபமாக 61 பேர் உயிர் விட்டப் பிறகு, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்ததாக, சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலி. இப்படி சோகங்கள் தொடர்கதையாகவே உள்ளன. சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோமே தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் யோசிப்பதில்லை.
வந்தபின் நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பது நல்லது. வடகிழக்குப் பருவமழை காலம் சில மாதங்களில் தொடங்கவிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் அதிக மழையை தருவதும் அதிக பாதிப்பைத் தரக்கூடியதும் வடகிழக்குப் பருவ மழையே.
ஏனெனில், குறுவை பொய்த்துப் போனாலும், தங்களுடைய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சம்பா பயிரிட்டே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் தள்ளப்படுவர்.
விவசாயிகள் தங்களின் ஆபத்பாந்தவனாக நினைக்கும் வடகிழக்குப் பருவ மழை, சில நேரங்களில் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். பல நேரங்களில் பாதகமாக ஆகிவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் தாக்கத்தினால் சம்பா பயிர்கள் மூழ்கி விளைச்சலும் பாழான பிறகு, அதிகாரிகள் நிவாரணங்களுக்காகக் கணக்கெடுக்கத் துவங்குவர். மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான அறிவுரைகளையும் வழங்குவர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சங்கந்தி என்ற ஊரில் ஒரு வாரம் மழை பெய்தாலே, மழை நீர் குளம் போல தேங்கி விடும். சுற்று வட்டாரக் கிராமங்கள் சுமார் 10 கி.மீ. அளவுக்கு ஏரி போல மாறி இருக்கும்.
வாகனங்கள் செல்லும் பிரதான சாலை ஓரங்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கும். அந்தப் பாதையிலிருந்து கிளை பாதைகள் வழியாக செல்லக்கூடிய கிராமங்கள் துண்டிக்கப்படும்.
சங்கந்தியிலிருந்து குமரபுரம் இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது. குமரபுரம் செல்ல 5 நிமிடத்துக்கும் குறைவான நேரமே ஆகும் என்றாலும், மழைக் காலங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் செல்ல வேண்டியிருக்கும்.
ஏனெனில், விளைநிலங்கள், வாய்க்கால், பாதை அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி, முழங்கால் அளவுத் தண்ணீர் இருப்பதால் தட்டுத்தடுமாறிச் செல்ல வேண்டியிருக்கும். சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் பிரதான சாலையிலே நிறுத்தப்பட வேண்டும்.
அந்தக் கிராமத்தில் கோயில், தொடக்கப்பள்ளி ஆகியவை உண்டு. மழைக்காலங்களில் பள்ளிக் கட்டடம் மூழ்கிக் கிடப்பதால் மழைக்காலம் முடியும்வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிரச்னை இருந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். சுமார் 50 குடும்பங்கள் வசித்த கிராமத்தில், தற்போது 15 குடும்பங்களே காணப்படுகின்றன.
சிலர் மழைக் காலங்களில் மட்டும் வெளியில் வசித்துவிட்டு, மீண்டும் தங்களது சொந்த வீட்டுக்கு வருகின்றனர். நாடாறு மாதம், காடாறு மாதம் என அவர்களுக்கு பழகிப் போய்விட்டது. சொந்தமாக நிலம் உள்ளவர்கள் மாற முடியாமல் தவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் உடல்நிலை சரியில்லாமல் போனால், கண்டிப்பாக மரணம் எனக் கூறுகின்றனர். அந்தப் பகுதி சுடுகாடும் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
மக்கள் இது பற்றி ஆண்டு தோறும் மேல் மட்ட அதிகாரிகள் வரை புகார் கூறி வருகின்றனர். ஆனாலும், கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பது போல மழை விட்டப் பிறகு, பாதித்த நிலங்கள் குறித்து கணக்கெடுக்க மட்டுமே அதிகாரிகள் வருவதாக கூறுகின்றனர்.
அதனால் என்ன பயன்? நிலத்துக்கு உரிமையுள்ள பெரும்பான்மையானோர் நகரங்களில் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் குத்தகைக்கு விவசாயம் செய்வதால் நிவாரணத் தொகை கூட அவர்களுக்குக் கிடைக்காது.
இந்தக் கிராமம் ஒரு உதாரணம் மட்டுமே. டெல்டா மாவட்டங்களில் இது போன்ற கிராமங்கள் நிறைய உள்ளன.
மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மத்தியில் உயிர் பிழைத்து மீண்டு வருவது, இவர்களைப் பொருத்தவரை மறு ஜென்மமே. நிவாரணம் என்ற பெயரில் கிடைக்கும் தாற்காலிகத் தீர்வை விட, நிரந்தரத் தீர்வையே இவர்கள் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.