முகப்பு
கட்டுரைகள்

நாயக் குழு பரிந்துரையும் கவர்னர் கருத்தும்

சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட காலங்களில்கூட, இந்தியப் பொருளாதாரத்தையும், குறிப்பாக, இந்திய வங்கிகளையும் காப்பாற்றிய பெருமை ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட காலங்களில்கூட, இந்தியப் பொருளாதாரத்தையும், குறிப்பாக, இந்திய வங்கிகளையும் காப்பாற்றிய பெருமை ரிசர்வ் வங்கிக்கு உண்டு. இந்தியாவில் அரசுடைமை வங்கிகளில் கடைபிடிக்கப்படுகின்ற நெறிமுறைகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பும்தான் 2008ஆம் ஆண்டில் இந்திய வங்கிகளை பாதிப்புக்கு உள்ளாகாமல் காப்பாற்றின என்று "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை அப்போது குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அண்மைக்கால நிகழ்வுகள் கவலை அளிப்பவையாக உள்ளன. முன்னாள் அரசு அதிகாரியாகவும், பின்னர் "ஆக்ஸிஸ்' வங்கியின் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்ற பி.ஜே. நாயக் தலைமையில் ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் முக்கிய நோக்கம், அரசுடைமை வங்கிகளின் இயக்குநர் குழுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாகும். நாயக் குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் - அதாவது தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு சில நாள்களுக்கு முன்பு - சமர்ப்பித்தது.

இந்த நாயக் குழுவின் பரிந்துரைகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதற்குக் காரணம், அந்தப் பரிந்துரைகள், பொதுத்துறை வங்கிகளின் இயக்குநர் குழுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு வழி சொல்லாமல், அரசுடைமை வங்கிகளை ஏறக்குறைய தனியார் மயமாக்குவதற்கு வழி சொல்லியுள்ளது.

அதனை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் போர் கொடி உயர்த்தியுள்ளது. அது மட்டுமல்ல விவசாயிகள், சிறு குறு தொழில் சங்கங்கள், ஏற்றுமதியாளர்கள், தொழிற்துறையினர், சமூக ஆர்வலர்கள் என சமுதாயத்தின் பல தரப்பினரும் இக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பி.ஜே. நாயக் குழுவின் பரிந்துரைகளின் மீதான பொதுமக்கள் கருத்துகளை 12.6.2014க்குள் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "வங்கிகளை தேசிய மயமாக்கி பிரகடனப்படுத்திய சட்டம், இன்றைய சூழலில், ஒரு பத்தாம்பசலித்தனமான சட்டம்; அதனை ரத்து செய்திட வேண்டும்; வங்கிகளில் மத்திய அரசின் மூலதனம் 51 சதவீதத்துக்கும் குறைவாகவே இருத்தல் வேண்டும்' போன்றவைதான் குழுவின் முக்கியமான பரிந்துரைகள்.

மற்ற பரிந்துரைகளாவன: பங்குதாரர்களின் ஓட்டுரிமையை 10 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்துதல்; அரசின் மூலதனத் தொகையை "வங்கிகள் முதலீட்டு நிறுவனம்' என்கிற புதிய நிறுவனத்தின் கணக்குகளுக்கு மாற்றுதல்; வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட 1969ஆம் ஆண்டு சட்டத்திலிருந்து வங்கிகளை விடுவித்து, 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கம்பெனிகள் சட்டத்தின் ஆளுகையின்கீழ் கொண்டுவருதல்; மத்திய "விஜிலன்ஸ்' ஆணையத்தின் அதிகார வரம்பிலிருந்து அரசு வங்கிகளை விடுவித்தல்; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்தும் அரசுடைமை வங்கிகளை நீக்குதல்; தற்போதுள்ள 27 பொதுத்துறை வங்கிகளை "மெர்ஜர்' முறையில், குறைந்த எண்ணிக்கையிலான மிகப்பெரிய வங்கிகளாக உருவாக்குதல் - ஆகியவை.

மிகப் பெரும் மாற்றங்களுக்கு மட்டும் அல்லாமல், கொள்கை அளவிலும் தலைகீழ் மாற்றங்களுக்கும் வழி வகுக்கக் கூடிய மேற்கூறிய பரிந்துரைகளை, புதிய அரசு நிதானமாக அலசி ஆராய்ந்து, நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இதில் அவசர கதியில் முடிவு மேற்கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் நம்பலாம்.

இந்நிலையில், "நாயக் குழுவின் சில முக்கியப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டால், தற்போது அரசுடைமை வங்கிகளைப் பீடித்துள்ள பல்வேறு பிணிகளிலிருந்து வங்கிகளைக் காப்பாற்ற முடியும்' என ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து தெரிவித்துள்ளதாக வந்துள்ள செய்திகள் கவலை அளிப்பவையாக உள்ளன.

ஏற்கெனவே வங்கிகளில் வாராக்கடன் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2013ஆம் ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி, வாராக் கடன் அளவு ரூ.2.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதைத் தவிர நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கடன் தொகையான ரூ.3.25 லட்சம் கோடியை "ரீஸ்டிரக்சர்' முறையில் திரும்பச் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் வாராக் கடன் தொகையான ரூ.70,300 கோடியை திரும்பச் செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியல் மே மாதம் முதல் வாரத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுடைமை வங்கிகளில், அரசின் மூலதனத்தை குறைத்துக் கொண்டு, தனியார் கை ஓங்குவதற்கு வழிவகுப்பது நியாயமாகுமா என்ற கேள்வி எழுகிறது.

வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. முதலாவது, விவசாயிகள், சிறு குறுந்தொழில் செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மொத்தக் கடனில் 40 சதவீதத்தை கடனாக வழங்க வேண்டும் என்பது. இரண்டாவது, நகரவாசிகளுக்கு மட்டும் அல்லாமல், கிராமப் பகுதிகளிலும் வங்கிகளின் சேவை கிடைக்கும் வகையில், லாப நோக்கம் பாராமல் கிளைகளை தொடங்க வேண்டும் என்பது.

இந்தியாவின் பசுமை புரட்சி ஏற்பட்டதற்கு வங்கிகளின் விவசாயக் கடனும் ஒரு காரணம் என்பதை மறக்க முடியாது. அதேநேரம், நாயக் குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள பல குறைபாடுகளை, வங்கிகளில் அரசின் மூலதனத்தைக் குறைக்காமலேயே சீர் செய்திட முடியும்.

உதாரணமாக, தற்போது வங்கிகளின் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்கள், சுயேச்சையான இயக்குனர்களை நியமிப்பதில் அரசு முழு பங்கு வகிக்கிறது என்பதும், இதனால் பல முறை கேடுகள் நிகழ்கின்றன என்பதும் பலரும் அறிந்த உண்மை.

இந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, அரசு சாராத சுயேச்சையான பொருளாதார நிதி நிபுணர்கள் அடங்கிய குழு, வங்கித் தலைவர்களையும் நிர்வாக இயக்குனர்களையும் உரிய முறையில் தேர்வு செய்வதற்கு வசதியாக மாற்றங்களைக் கொண்டு வரலாம். விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி மேம்பாட்டு சபை, நுண்கலை, பண்பாடு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் உண்மையான பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுக்கள் மூலம் சுயேச்சையான இயக்குனர்களைத் தேர்வு செய்யலாம்.

அடுத்து, மத்திய "விஜிலன்ஸ்' ஆணையத்திற்கும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் அஞ்சி செயல்பட வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டை எடுத்துக் கொள்வோம். அரசுடைமை வங்கிகளில் கிட்டத்தட்ட லட்சம் பேருக்கு அதிகமானவர்கள், கிளை மேலாளர்களாகவும் கோட்ட அலுவலகம், மண்டல அலுவலகம், தலைமை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாகவும் செயல்படுகிறார்கள்.

இவர்கள் கடன் வழங்குவதில் நேரடியாக தொடர்புடையவர்கள். இவர்களில் எத்தனை பேர், மத்திய "விஜிலன்ஸ்' மற்றும் மத்திய புலனாய்வு துறையினரால் தேவையற்ற வகையில் இன்னல்படுத்தப்பட்டிருக்கிறார்கள்? இதனை ஆய்வு செய்தால், நிலைமையை சீர்திருத்திட முடியும்.

அரசுடைமை வங்கிகளில் பொதுமக்களின் வைப்புத் தொகையை கடனாக வழங்கும்போது, சில நெறிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டியது அவசியம் அல்லவா? எந்த ஒரு தொழிலிலும் சில இன்னல்கள் ஏற்படுவது இயல்புதானே?

அதேநேரம், கடன் வழங்குவதில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் தொழில்முறை மற்றும் விஞ்ஞான ரீதியில் அமைய வேண்டும். அவை அவ்வப்போது மேம்படுத்தப்படவும் வேண்டும். அரசுடைமை வங்கிகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்பதும் ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையாகத் தோன்றவில்லை.

வங்கித் தலைவர்களின் சம்பளம், தனியார் வங்கித் துறையினருடன் ஒப்பிட்டால் குறைவு என்பது உண்மையே. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பராவ் இதைப் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

அரசுடைமை வங்கிகளில் திறன் மேம்பாட்டுக்கும், வேறு பல முன்னேற்றங்களுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் ஆகும்.

ஆனால் அதேநேரம், அரசின் மூலதனத்தைக் குறைப்பதுதான், "சர்வ ரோக நிவாரணி'யாகும் என்று பி.ஜே. நாயக் குழு கூறும் பரிந்துரை சற்றும் ஏற்புடையது அல்ல!

முழு கட்டுரையைப் படிக்க →