கட்டுரைகள்

மக்கள் விரும்பும் போலீஸ்

இந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் 'சத்யமேவ ஜயதே' (சத்தியம் வெல்லட்டும்) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பரவலாக பேசப்படுகிறது.

ஆர். நட​ராஜ்

இந்தி நடிகர் அமீர்கான் நடத்தும் "சத்யமேவ ஜயதே' (சத்தியம் வெல்லட்டும்) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பரவலாக பேசப்படுகிறது. அந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்து இடைவேளைக்குப்பிறகு இரண்டாவது கட்டம் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காவல்துறையில் உள்ள குறை, நிறை, எத்தகைய கடினமான சூழலில் பணி புரிகிறார்கள், சந்தித்த சவால்கள், மக்கள் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு, சில இடங்களில் காவல்துறையின் மெத்தனப் போக்கு, ஊழலின் ஊடுருவல் போன்ற பல முக்கியமான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. காவல்துறையில் வேலை பளு, அவர்களது பணியில் உதவும் வகையில் உள்ள வசதிகள், நேர்மையான வாழ்க்கை அமைவதற்கான காவலர் நலத்திட்டங்கள் போன்றவையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

1995ஆம் வருடம் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பிரகாஷ் சிங், காவல்துறை சீர்திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் 1977ஆம் வருடம் தர்மவீரா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய போலீஸ் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றம் இந்த பொது நல வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மத்திய அரசையும் மாநிலங்களையும் தங்களது கருத்துக்களை கூறுமாறு பணித்தது. இந்த வழக்கு 10 வருடங்களுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு செப்டம்பர் 22, 2006இல் உச்சநீதிமன்றம் விரிவான ஆணைகள் பிறப்பித்தது.

அதில் முக்கியமானவை மாநில அளவில் பாதுகாப்பு கமிஷன் அமைத்தல், காவல்துறை தலைவரை வெளிப்படையான முறையில் தகுதி அடிப்படையில் தெரிவு செய்தல், களப்பணியில் உள்ள அதிகாரிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி, காவல் நிலையங்களில் வழக்கு புலன் விசாரணைக்கு தனி அமைப்பு, துணை காண்காணிப்பாளர்கள் அவர்களுக்கு கிழே உள்ள அதிகாரிகளின் மாற்றம், பணி நிமித்தமான பிரச்னைகளை ஆராய்ந்து பரிந்துரை செய்ய தனி பணியாளர் குழாம் அமைத்தல் ஆகியவை.

"சத்யமேவ ஜயதே' நிகழ்ச்சியில் இந்த பரிந்துரைகளின் முக்கியத்துவத்தை முன்நிறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கு கொண்டனர். காவல்துறை நடைமுறை சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1861ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, இப்போதும் நடைமுறையில் உள்ளது. காலத்திற்கு ஏற்றவாறு இந்த நடைமுறை சட்டம் மாற்றப்படவேண்டும்.

முன்னாள் காவல்துறை தலைவர் ஜீலியஸ் ரிபைரோ, மூத்த வழக்குரைஞர் சோலி சோரப்ஜி ஆகியோர் தலைமையில் கமிட்டிகள் போடப்பட்டு மாதிரி நடைமுறை சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநிலங்கள் தனியாக காவல்துறை நடைமுறை சட்டத்தை விவாதித்து நிறைவேற்ற வேண்டும். அது தற்போது பல மாநிலங்களில் நிறைவேற்றப்படும் நிலையில் உள்ளது.

காவல்துறையைப்பற்றி விமர்சனங்கள் பலவகையாக இருக்கலாம். மக்களோடு தொடர்புடைய அரசுத் துறைகளில் காவல்துறையின் பங்கு சராசரி நான்கு சதவீதம்தான். கல்வி, சுகாதாரம், அரசு மருத்துவமனைகள், வருவாய்துறை, போக்குவரத்து ஆகியவை மக்களோடு அதிகமாக தொடர்புடைய துறைகள்.

காவல்துறைதான் அதிக விமர்சனத்திற்கும் கடுமையான வசவுகளுக்கும் உள்ளாகிறது. புகழ்பவர் குறைவு. நல்ல பணி செய்தாலும் ஏதோ கடமையை செய்தார்கள் என்பதோடு அவர்களை மறந்து விடுவார்கள் - அடுத்த பிரச்னை கிளம்பும் வரையில்.

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் ஆசாம் கான் என்ற அமைச்சரின் பண்ணையிலிருந்து ஏழு எருமை மாடுகள் காணாமல் போயின. உள்ளூர் காவல் நிலைத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய் புடை சூழ காவல்துறையினர் துரித புலனாய்வு மேற்கொண்டு இரண்டே தினங்களில் மாடுகளை கண்டுபிடித்து அமைச்சரிடம் ஒப்படைத்தனர். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

முக்கிய நபர் என்றால் உடனே களத்தில் இறங்கி பணி செய்யும் காவல்துறை, சாதாரண மக்களின் மனுக்கள், வழக்குகளில் மெத்தனம் காட்டுவதும் கிடப்பில் போடுவதும் கடும் விமர்சனத்திற்கு வந்துள்ளது. "குற்றத்தை கண்டு பிடித்தது மெச்சத்தக்கதுதான். அதே போல் எங்களுடைய வழக்குளையும் கண்டு பிடியுங்கள்' என்று பலர் மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

சாதாரணமாக மக்களிடம் காவல்துறை பணி பற்றி கேட்டால், அவர்களுக்கு கசப்பான நேர்வுகள்தான் முதலில் நினைவிற்கு வரும். அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காவல் பணி அவ்வாறு உள்ளது.

முட்டல், மோதல், குத்து, வெட்டு, வழிப்பறி, களவு போன்ற நிகழ்வுகளில் நேரடியாக போராடுவது காவல்துறை. கசப்பான சம்பவங்களில் எவ்வளவுதான் நல்லது செய்தாலும் கசப்பு லேசில் மறையாது; கசண்டாக நினைவில் தேங்கி நிற்கும்.

"சத்யமேவ ஜயதே' நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்கள் தங்களது கசப்பான அனுபவங்களைத்தான் பட்டியலிட்டார்கள். நேர்முக உரையாடலில் பதிலளித்த உயர் காவல்துறை அதிகாரிகளும் காவல்துறை நடத்தையை குறை கூறியதுதான் நெருடலாக இருந்தது.

காவலரில் இருந்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை நன்கு படித்தவர்கள் பணிக்கு வருகிறார்கள். பட்டப்படிப்பு மட்டுமல்ல, மருத்துவ - பொறியியல் வல்லுனர்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.மில் வெற்றி பெற்றவர்கள் உள்ளார்கள். சிந்தனைகள், கருத்துகள், சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் மாற வேண்டும். ஒரு பதவியில் இருக்கிறோம் என்பதால் எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.

ஒரு காவல்துறை அதிகாரி தம்மிடம் வேலை பார்க்கும் களப்பணியாளர்களையும் கலந்தாலோசித்து, முடிவுகள் எடுக்கும் நேர்வுகளில் இளைஞர்கள் பங்குபெற வாய்ப்பு கொடுத்தால் பணி சிறக்கும். எல்லாருடைய ஈடுபாடும் பெருகும். இத்தகைய பகிர்ந்துணர்வு ஆளுமை நிர்வாகத்தில் அவசியம். அதுவும் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் போன்ற களப்பணியாளர்கள் தொண்ணுறு சதவீதம் கொண்ட காவல்துறையில் இத்தகைய பகிர்ந்துணர்வு மேலோங்க வேண்டும்.

மன அழுத்தம் நிறைந்த துறை என்ற வகையில் காவல் பணி சிரமம் மிக்கது என்பது உண்மையே. ஆனால் தேவையில்லாத பணிகளில் நேரம் விரயமாகிறது. தேவை இருக்கிறதோ இல்லையோ எதற்கும் இருக்கட்டும் என்று தீர ஆராயாது காவலர்களை பணியில் குவிப்பது தவிர்க்கப்பட்டாலே கணிசமாக வேலைப் பளு குறையும். மற்ற முக்கிய பணிகளுக்கு காவலர்கள் கிடைப்பார்கள்.

புத்திசாலித்தனத்தோடு கூடிய சமயோஜித வழிகள் பல உள்ளன. அவற்றை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதிர் கொண்டாலே சூடு தணியும். பிரச்னை வளராது. வளரவிட்டு வேடிக்கை பார்த்து ஆடி பாடி சம்பவ இடத்திற்கு காலம் தாழ்த்திச் சென்றால் எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

"ஒரு பேட்டையில் ரெüடி என்றால், அது அந்த காவல் சரக அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார் மும்பாய் காவல் ஆணையர்.

"ஷோலே' படத்தில் வில்லன் கப்பர் சிங் கூறுவானே "நம் ஊரில் உள்ள தாய்மார்கள் அழும் குழந்தையை தூங்க வைக்க கப்பர்சிங் வருவான் என்று சொல்லி பயமுறுத்துவார்கள்' என்று. அது போல காவல்துறையும் குற்றம் புரியும் ரெüடிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும் என்பது ஒருபுறம். மற்றொரு வகையில் பாதுகாப்பிற்காக வரும் சாதாரண மக்களிடம் அன்பும் பரிவும் காட்ட வேண்டும்.

காவல்துறை சீர்திருத்தம் என்பது உச்சநீதிமன்றம் பணித்துள்ள ஆணைகளால் மட்டும் சாத்தியமாகாது. காவல் பணியில் உள்ள ஒவ்வொருவரும் அவரது நிலையில் நேர்மையாக பணிபுரிவதே முதல் சீர்திருத்தம்.

சாதாரண நாள்களில், சமத்துவ உணர்வோடு களத்தில் உள்ளவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டிய முக்கியப் பொறுப்பு மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகளிடம் உள்ளது.

மத்திய பிரதேசத்தில் குற்றங்களைத் தடுக்கவும், நடந்த குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கையை சம்பவ இடத்திலேயே தயார் செய்து பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ரோந்து வாகனங்கள் எல்லா மாவட்டங்களிலும் போதிய காவலர்களுடன்கூடிய பாதுகாப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகைய உயர் தொழில் நுட்பத்துடன் அடங்கிய பாதுகாப்பு முறை சமீபத்தில் சென்னையில் காவல்துறை ஆணையகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நகரத்தின் மூலை முடுக்களில் எல்லாம் செல்லும் வகையில் இரண்டு சங்கர வாகனங்கள் பாதுகாப்பில் அமர்த்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு பாரபட்சமற்ற பாதுகாப்பு அளிப்பதுதான் காவல்துறை சீர்திருத்ததின் முதல் அம்சம். மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். நேர்மையான காவல் பணிகள் மக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும். நல்லொழுக்கமும் நன்னடத்தையும் நற்பண்பும் காவல் சீருடையோடு இணைந்திருக்க வேண்டும். பிரச்னை என்று பொருமுபவர்களிடம் காட்ட வேண்டியது பொறுமை.

கடுஞ்சொல் தவிர்த்து, மனுக்களை கிடப்பில் போடாமல் களப்பணி செய்தலே உண்மையான சீர்திருத்தம். இதற்கு எந்த ஒரு ஆணையும் தேவையில்லை. மிக சுலபமான வகையில் மக்களின் நன்மதிப்பை பெற்று விடலாம்.

ஆளவந்தார் போலீஸ் என்ற அவப் பெயர் நீங்கி ஆளப்பிறந்த இந்தியரின் போலீஸ் என்ற நற்பெயர் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT