என்று வரும் நனி நாகரிகம்?
தெருவில் போகும் பிற பெண்டிரைப் பார்க்காமல் இருப்பது நாகரிகம். தப்பித் தவறி அப்பெண்கள் எதிரிட்டு விட்டாலும், அவர்களை
தெருவில் போகும் பிற பெண்டிரைப் பார்க்காமல் இருப்பது நாகரிகம். தப்பித் தவறி அப்பெண்கள் எதிரிட்டு விட்டாலும், அவர்களை உற்று நோக்காதிருத்தல் நனி நாகரிகம். அடுத்தவருடைய அந்தரங்க வாழ்க்கையில் ஒரு விரிசல் ஏற்படும்போது, அதனை உற்றுப் பார்த்தல் அநாகரிகம். மேலும் அவ்விரிசலை நாலு பேர் கேட்கும்படியாக முரசறைதல் அசிங்கம்.
இன்றைக்கு நாட்டிலே அப்படியொரு அநாகரிகமும் அசிங்கமும் மேடைகளில் கூடக் கட்டியம் கூறிப் பறைசாற்றப்படுகின்றன. ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வதும் பிரிந்து செல்வதும் ஒரு சமுகம் சார்ந்த பிரச்னை அன்று; தனிப்பட்டவர்களுடைய அந்தரங்கம் அதுவாகும்.
அதுவும் ஞானிகளுடைய வாழ்க்கையில், இலட்சிய மனிதர்களுடைய வாழ்க்கையில் சேர்ந்தவர்கள் பிரிகின்றார்கள் என்றால், வேறொரு நோக்கம் அதற்கு முதன்மையானதாக இருக்க வேண்டும். விறகை நிறுக்கின்ற தராசை வைத்துக் கொண்டு, குங்குமப்பூவை நிறுப்பதற்கு முயலக்கூடாது.
Advertisement
சுத்தோதனருடைய மகன் சித்தார்தன், மனைவி யசோதரையையும் மகன் ராகுலனையும் பிரிந்ததற்காக இவ்வுலகம் வசை பாடிக் கொண்டிருக்கவில்லை; மாறாக மானுடத்திற்கு ஒரு புத்தர் கிடைத்தாரே என்று ஆராதித்து வணங்கவே செய்கிறது. "நொந்த புண்ணைக் குத்துவதில் ஓர் மகிமையில்லை' என்பதை அன்றைய ஆன்றோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.
கிரேக்கத்தில், இத்தாக்கா என்றொரு குறுநிலம். அந்நாட்டு மன்னர் யுலிசியஸ் ஓர் அறிவுஜீவி. அந்நாட்டு மக்களோ மன்னனுடைய திட்பநுட்பமான சட்டதிட்டங்களை மதிக்கத் தெரியாத தற்குறி மக்கள். "அரைவேக்காடான இந்நாட்டு மக்களை ஆள்வதைக் காட்டிலும், அறிவையும் அனுபவத்தையும் தேடுவதற்குக் கடற்பயணத்தை மேற்கொள்வதே மேலென்று' தன்னுடைய அருமை மனைவி - அழகான மனைவி பெனலோப்பை விட்டுப் பிரிகின்றான். திறனாய்வாளர்கள் யூலிசியசினுடைய ஞானத்தேடலை இன்றும் மெச்சிப் பாராட்டுகின்றார்களே தவிர, மனைவியை விட்டுப் பிரிந்தமைக்காக அவனை வறுத்து எடுப்பார் யாருமில்லை.
புராதன இந்தியாவில் மகதநாடு என்றொரு நாடு இருந்தது. அந்நாட்டில் குந்தகிராமம் என்றொரு சிற்றரசு இருந்தது. அந்நாட்டை ஆண்ட சித்தார்தனுக்கு மகனாகப் பிறந்தவர் மகாவீரர். மகாவீரரின் உள்ளம் இளமைக் காலத்திலேயே துறவறத்தில் ஈடுபட்டிருந்தது.
ஆனால், நாட்டுக்கு அரசன் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, மகாவீரரின் தந்தை சித்தார்த்தன், யசோதை என்ற பெண்ணைக் கொண்டு வந்து கட்டாயக் கல்யாணத்தை நடத்தி வைத்தார். பெற்றோரின் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்ட மகாவீரருக்குப் "பிரியதர்ஷன்' என்ற மகனும் பிறந்தான்.
திடீரென்று மகாவீரரின் பெற்றோர் காலமாகிவிடவே, தமது 28ஆவது வயதிலே துறவறத்தை மேற்கொண்டார். மனைவியையும் மகனையும் துறந்த அவர், சிறு துணியைக் கட்டிக் கொண்டு, காடுமேடாகச் சுற்றித் திரிந்தார். அப்படிப்பட்ட மகாவீரரை "வர்த்தமானர்' என்ற நாடு கொண்டாடுகிறதே தவிர, அவருடைய பூர்வாசிரமத்தை யாரும் குத்திக் கிளறுவதில்லை.
எம்பெருமானார் இராமானுஜருக்கு வாய்த்த மனைவி தஞ்சம்மாள், வைணவத்தின் தாத்பரியங்களை அறியாதவள். இராமானுஜர் தம் ஆசாரியர்களாக மதித்த திருக்கச்சி நம்பிகளையும், பெரிய நம்பியின் குடும்பத்தையும் அவமதித்தவள். அதனால், "கூறாமல் சந்நியாசம் கொள்' எனும் பழமொழிக்கேற்ப, தஞ்சம்மாளையும் குடும்பத்தையும் துறந்து, சந்நியாசம் மேற்கொண்டார். அதனால், எந்தப் பத்திரிகை நிருபரும் தஞ்சம்மாளைத் தேடிப் போய் பேட்டி எடுக்கவில்லை.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குப் பஞ்சாபில் ஒரு செல்வாக்கான குடும்பத்தில் குருநானக் பிறந்தார். இளமையிலேயே ஞானமார்க்கத்தில் அவர் ஈடுபட்டதால், சராசரி வாழ்க்கை வாழமுடியவில்லை. "கால்கட்டு போட்டால் வழிக்கு வந்துவிடுவார்' என்றெண்ணிய அவருடைய பெற்றோர் "மட்டா சலாகனி' எனும் பெண்ணை, 17ஆவது வயதிலேயே மணம் முடித்து வைத்தனர்.
குரு நானக்கிற்கு ஸ்ரீசந்த் என்ற ஆண் குழந்தையும் லட்சுமி சந்த் என்ற பெண் குழந்தையும் மூன்று ஆண்டுகளுக்குள் பிறந்தன. என்றாலும், நானக் தமது 20 வயதிலேயே துறவறத்தை மேற்கொண்டார். சுடுகாட்டில் உட்கார்ந்த காலத்தில் ஞானம் பெற்றதால், அவர் "குரு நானக்' என்று அழைக்கப்பட்டார்.
சீக்கிய மதத்தை நிறுவிய நானக், பாதயாத்திரையின்போது ஓரிடத்தில் உட்கார்ந்து தியானித்தார். அந்த இடத்தில்தான் பொற்கோயில் கட்டப்பெற்றது. குரு நானக்கைத் தெய்வாம்சம் பொருந்திய ஆசாரியனாக அம்மதம் பார்க்கின்றதே தவிர, மனைவி மக்களைத் துறந்தவர் எனப் பரிகசிப்பார் இல்லை.
15ஆம் நூற்றாண்டில் திம் மண்ண பட்டருக்கும் கோபம்மாவுக்கும் திருப்பதி வேங்கடவன் அருளால் பிறந்த குழந்தைக்கு வேங்கடவன் எனப் பெயரிட்டனர்.
அக்குழந்தைதான் பிற்காலத்தில் ஸ்ரீ குரு இராகவேந்திரா எனும் மகானாயிற்று. அவருக்கு பெற்றோர்கள் 18ஆவது வயதிலேயே "சரசுவதி' என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தனர். ராகவேந்திரர் தமது 47ஆவது வயதில் கும்பகோணம் "மத்வ மடாதிபதி'யாகப் பதவி ஏற்றுவிட்டார்.
பகவான் இராமகிருஷ்ணரின் இயற்பெயர் கதாதரர். பெற்றோர் வற்புறுத்தி 23 வயது கதாதரருக்கும் - 5 வயது சாரதா தேவிக்கும் திருமணம் செய்து வைத்தனர். ஐந்து வயதில் திருமணம் நடந்த சாரதா தேவி, 18 வயது ஆனவுடன்தான், இராமகிருஷ்ணரை நாடி வந்தார். வந்த நாளிலிருந்து சாரதாதேவியை, "காளிதேவியாக' நினைத்துப் பரமஹம்சர் பூஜிக்கத் தொடங்கிவிட்டார். பரமஹம்சர் என்ற சொல்லுக்கே "தெய்வாம்சம் பொருந்தியவர்' எனப் பொருள்.
ஞான மார்க்கத்தில் நாட்டம் கொண்டவருக்கு லெüகீக வாழ்வு ஒரு தடைக்கல் என்பதைப் பரமஹம்சர், "ஈசுவரனை அடைய விரும்புவோரும், சாதன மார்க்கத்தில் அபிவிருத்தியைக் கோருவோரும் பெண்ணாசை, பொன்னாசை ஆகிய வலையில் விழாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்; அன்றெனில் அவர்கள் ஒருபோதும் பரிபூரணர்கள் ஆகமாட்டார்கள்' என மொழிந்ததையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
பரமஹம்சரைப் போலவே மகான் அரவிந்தருக்கும் திருமண வாழ்வில் விருப்பமே இல்லை. பிரம்மச்சாரியாகவே வாழ்ந்துவிட வேண்டும் என்று விரும்பினார். எனினும், 1901ஆம் ஆண்டு, மிருணாளினி எனும் சீமான் வீட்டுப் பெண்ணோடு அவருக்குத் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகு அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் அரவிந்தருக்குச் சிறைவாசம். பிறகு அவர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அரவிந்தர் மிருணாளினியோடு வாழ்ந்ததைக் காட்டிலும், நிவேதிதா தேவியோடும், சாரதாமணி தேவியோடும் வாழ்ந்ததே அதிகம். மிருணாளினி வாழ்க்கைக்காக, மகான் அரவிந்தரை யாரும் சுட்டுவிரல் நீட்டிப் பேசியதில்லை.
பிரான்சில் பிறந்து புதுச்சேரியில் தவ வாழ்க்கை வாழ்ந்த அன்னை மிர்ரா அவர்கள் இளமையில் ஓர் ஓவியரை மணந்து வாழ்ந்தார். அப்பொழுது அவர்கட்கு "ஆந்த்ரேயர்' என்றொரு குழந்தையும் பிறந்தது. பின்னர் மிர்ரா அம்மையாரின் அடிமனத்தில் மகான் அரவிந்தர் திருவுருவம் ஆழமாகப் பதிய ஆரம்பித்தது. என்றாலும், அம்மையார் பால் ரிச்சர்டு என்பவரை மணந்து, அவருடனே புதுச்சேரி வந்து அரவிந்தரைத் தரிசிக்கின்றார்.
அரவிந்தர் தரிசனத்திற்குப் பிறகு லௌகீக வாழ்க்கையில் இருந்து விட்டு விடுதலையாகி, புதுச்சேரியில் தவ வாழக்கை வாழத் தொடங்கினார். அதனால் அன்னை அவர்களின் பூர்வாசிரம வாழ்க்கை குறித்து எவருமே குறைபட்டுப் பேசியதில்லை. இன்றும் அன்னை அவர்களைப் பூந்தோட்டமாகவே மதித்து மலர்களைத் தூவி வழிபடுபவர்கள் உண்டே தவிர, மலரம்புகளைத் தொடுப்பவர்கள் கிடையாது.
அருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகள், தமக்குப் பாலுண்ணும் காலத்திலேயே மணவாழ்க்கையில் ஓர் அருவருப்பு ஏற்பட்டதாக எழுதுகிறார். என்றாலும், அவருடைய அண்ணனும் அண்ணியும் வற்புறுத்தி, அவருடன் பிறந்த அக்காள் உண்ணாமுலையம்மையின் மகள் தனக்கோட்டியைத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
ஆனால், வள்ளற்பெருமான் முதலிரவு அன்றே திருவாசகத்தோடு உள்ளே சென்று விளக்கவுரை நிகழ்த்தினார். மறுநாளே மனைவியையும் மணவாழ்க்கையையும் துறந்தார். பிற்காலத்தில் அவருக்கு மணவிழா நடந்த ஆண்டு 1850 என்று நினைவிருந்ததே தவிர, நாள் கூட நினைவில் நில்லாது போயிற்றாம்.
அடுத்து "சிவநேச வெண்பா'வில், சுந்தரர் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சிவபெருமானைத் தம் திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை எனக் கேட்கின்றார் ("முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல் என் மனத்தில் நீ வந்திடாவிடினும்').
அருட்பாவை மருட்பா என வழக்குத் தொடுத்த தமிழறிஞர்கள் கூட (பத்தாண்டுக் காலப் போராட்டத்தில்) அவருடைய அகவாழ்க்கையைத் தொட்டுப் பேசியதில்லை. அன்று காத்த நாகரிகம் இன்று எங்கே? அன்று போற்றிய நனி நாகரிகம் என்று வரும்?
கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).