கட்டுரைகள்

சிந்தனை ஒன்றுடையாள்

நடந்து முடிந்த பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் எல்லோரையும் கவர்ந்து விட்டது. சிலருக்கு களிப்பூட்டியது.

ஆர். நட​ராஜ்

நடந்து முடிந்த பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் எல்லோரையும் கவர்ந்து விட்டது. சிலருக்கு களிப்பூட்டியது. பலருக்கு களைப்புதான் மிச்சம். தேர்தலில் பிரதானமாக வெற்றி பெற்றவர்கள் மக்கள்தான். தெளிவாக ஒருமித்த கருத்து தேர்தல் களத்தில் விளைந்திருக்கிறது. "சிந்தனை ஒன்றுடையாள்' என்று பாரத அன்னையைப் போற்றினாரே பாரதி, அவர் சாதாரண இந்திய மக்களை மனதில் வைத்துதான் பாடியிருப்பார்.

எல்லாத் தேர்தல்களையும்விட இந்தத் தேர்தல் பிரசாரத்தில் சூடும் தனிப்பட்ட தாக்குதலும் அதிகமாகவே இருந்தன. வன்முறையின்றி அமைதியாகத் தேர்தல் நடந்து முடிந்ததில் எல்லோருக்கும் நிம்மதி. தேர்தல் நிர்வாகத்தோடு ஒன்றுபட்டு வன்முறையாளர்களோடு ஒன்றுபடாத மக்களைப் பாராட்ட வேண்டும்.

தேர்தல் களத்தில் பல்முனைப் போட்டியில் வாக்குகள் கடைந்தெடுக்கப்படும். இத்தகைய பல்முனைப் போட்டியில் வெற்றி வாய்ப்பை கணிப்பது கடினம். நாடே வியக்கும் வகையில் மக்களுடன் கூட்டணி ஒன்றே போதும் என்று தனித்துப் போட்டியிட்ட துணிவு நமது முதல்வர் ஒருவருக்குத்தான் வரும்.

இதர கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தைகள் துவங்காத நிலையில், நாற்பது தொகுதியிலும் தமது கட்சி வேட்பாளர்களை அறிவித்தது மட்டுமின்றி, கடலலையென திரண்ட மக்கள் வெள்ளத்தில் காஞ்சியில் முதல்வர் முதல் பிரசாரத்தை துவங்கி வெற்றிப் பாதையை நிர்ணயித்தார்.

முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 1952இல் 23.7 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இப்போது 2014இல் பதினாறாவது நாடாளுமன்ற தேர்தலில் 81.45 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் தேர்தலில் சராசரியாக 61.2 சதவீதம் வாக்குகள் பதிவானது, இந்தத் தேர்தலில் 66.4 சதவீதம். இதுதான் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே அதிகம்.

பாரத ரத்ன அம்பேத்காரைப் பற்றி இவ்வளவு பேசுகிறார்கள்; அரசியல் பிழைக்கிறார்கள். ஆனால் 1952 பொதுத் தேர்தலில் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தக் கூடாது என்ற பெருந்தன்மையில்லை. தேர்தலில் அவர் வெற்றி பெறாதது ஜனநயகத்தின் தோல்வி என்றே கொள்ள வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவந்துள்ளன.

அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி தென் சென்னை. மொத்தம் 42 வேட்பாளர்கள். அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஆந்திர மாநிலத்தில் உள்ள மால்காஜ்கிரி. அதில் மொத்தம் 29,53,915 வாக்காளர்கள். அதிகமான வாக்குகளைப் பெற்றவர் நரேந்திர மோடி. அவர் பெற்ற வாக்குகள் வதோதரா தொகுதியில் 8,45,464.

மொத்த தனித்தொகுதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டவை 131. அதில் தமிழ்நாட்டில் 7 தொகுதி. எல்லாத் தனித் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வென்றுள்ளது மட்டுமல்ல, 37 தொகுதகளில் வென்றது எல்லாத் தரப்பு மக்களிடமும் செல்வாக்கு பெருகியுள்ளதை உணர்த்துகிறது. சிறுபான்மையினரையும் தாழ்த்தப்பட்டோரையும் வைத்து ஆதாயம் தேடிய அரசியல் கட்சிகள் நிராகரிக்கப்பட்டன.

மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய கட்சி ஆம் ஆத்மி கட்சி. எளிய அணுகுமுறை, படித்த இளைஞர்கள் மாற்றம் கொண்டு வரவும் ஊழலை அழிக்கவும் அர்ப்பணிப்போடு செயல்படுவோம் என்ற உயரிய கொள்கையோடு துவங்கப்பட்ட கட்சி. தில்லி மாநிலத் தேர்தலில் பெற்ற வாய்ப்பை கோட்டைவிட்டு பேராசையால் அகலக் கால் வைத்து சொதப்பிவிட்டது. போட்டியிட்ட 366 இடங்களில் 351இல் "டெபாசிட்' தொகையை இழந்தது.

மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம் பல ஆண்டுகள் கட்டுமானப் பணி முடிந்து துவங்கும் நிலையில் சில மறைமுக சக்திகளின் துணையோடு முடக்குவதற்கு முற்பட்டு, அதை வைத்து அரசியல் செய்து தேர்தலில் போட்டியிட்டவர் 15,000 வாக்குகளே பெற முடிந்தது (பதிவானவை 9 லட்சம் வாக்குகள்).

இந்தத் தேர்தலில் கவனிக்க வேண்டியது தேசிய அளவில் ஒரு கட்சிக்கு மக்கள் பெரும்பான்மை அளித்திருக்கிறார்கள். 1984க்குப் பிறகு முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்கிறது.

மக்களின் அளவிலா எதிர்பார்ப்பு, ஆட்சி அமைத்த மத்திய அரசிற்கு மிகப்பெரிய சவால். தேர்தல் கசப்புக்களை மறந்து எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்து வழி நடத்த வேண்டிய காலகட்டம் இது. பாதுகாப்பு, வளர்ச்சி இவை இரண்டையும் முன்னிலைப்படுத்தி மக்களின் ஆதரவை பெற்றதால், பாதுகாப்போடு இணைந்த பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்பு நல்லமுறையில் அமைந்தால்தான் வளர்ச்சிப்பாதை சீராக இருக்கும். பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எல்லைதாண்டிய ஆதரவு இருப்பதால், அண்டை நாடுகளோடு ஒருங்கிணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

1998ஆம் வருடம் மத்திய என்.டி.ஏ. அரசு "தேசிய பாதுகாப்பு கவுன்சில்' என்ற அமைப்பை ஏற்படுத்தியது. உள்நாட்டுப் பாதுகாப்பு பிரச்னைகளை ஆராய்ந்து, உள்நாடு வெளிநாடு உளவுத்தகவல்களை கணக்கில் கொண்டு நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய பொறுப்பு இந்த கவுன்சிலுக்கு உண்டு.

ஆனால் கார்கில் பிரச்னை 1999இல் தலைதூக்கியபோது பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடு கேள்விக்குறியானது. பெயரளவில் மட்டும் இருந்தது, முனைப்பாக செயல்படவில்லை. மீண்டும் 2008ஆம் வருடம் மும்பை தொடர் பயங்கரவாத தாக்குதலின் போதும் பாதுகாப்பு அமைப்பின் பக்கவாத நிலை எல்லோருடைய குற்றச்சாட்டிற்கும் ஆளானது.

தேசிய பாதுகாப்பு சீரமைப்பு முக்கியமானது. அதே வகையில் தேசிய புலனாய்வுப் பிரிவும் வலுவாக்கப்பட வேண்டும். அமெரிக்க அமைப்பில் சில குற்றங்கள் பெடரல் க்ரைம், தேசிய குற்றங்கள் என்று வகுக்கப்பட்டு அக்குற்றங்களை எஃ.பி.ஐ. என்ற மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

அப்போதுதான் வெளிநாட்டு ஊடுருவல், தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கை, அவர்களுக்கு கிடைக்கக் கூடிய ஆதரவு, அவற்றின் பின்னணி போன்றவற்றை புலனாய்வு செய்ய முடியும். அரசியல் சாசனம் ஏழாவது ஷெட்யூலில் மாநில அரசின் ஆளுகையில் சட்டம் - ஒழுங்கு உள்ளதால், மாநில அரசுகளோடு ஒருங்கிணைந்து செயல்பட வலுவான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

காவல்துறை சீரமைப்பு, 1977 தர்ம வீரா போலீஸ் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. 2006ஆம் வருடம் உச்சநீதிமன்றம் கொடுத்த ஏழு கட்டளைகளை எந்த அளவிற்கு மாநில அரசுகள் நிறைவேற்றியிருக்கின்றன என்பது பற்றி உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்பு அமைப்பைச் சீரமைத்து, வருமுன் காக்கும் வகையில் செயல்படச் செய்வது மத்திய அரசின் முக்கிய பொறுப்பு. குஜராத்தில் உள்ள அக்ஷர்தாம் வழிபாட்டுதலம் 2002இல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதில் பலர் உயிரிழந்தனர். வழக்கு புலனாய்வு செய்யப்பட்டு சம்மந்தபட்ட பயங்கரவாதிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றம் மேல் முறையீட்டில் எதிரிகளை விடுவித்தது மட்டுமின்றி, வழக்குப் புலன் விசாரணை சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று குறை கூறியுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு பாதிக்கும் வழக்குகளில் உயர்தர புலன் விசாரணையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் விதிகள், தேர்தல் குறித்த சட்டங்கள் திருத்தி அமைக்க தேர்தல் ஆணையம் கொடுத்த பரிந்துரைகள் ஆராயப்பட வேண்டும். மத்திய விழிப்புணர்வு ஆணையம் (சி.வி.சி.), மத்திய கணக்காயர் ஆணையம் (சி.ஏ.ஜி.) குறித்த செயல்பாடுகள் விவாதிக்கப்பட வேண்டும்.

அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதே சமயம் தன்னிச்சை சுதந்திர மையங்களாக உருவெடுக்கக் கூடாது. நிர்வாகம் முடங்கி விட்டால், அதனால் மக்களுக்குதான் பாதிப்பு. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முக்கியமானது. அதே நேரத்தில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளும் தேவை. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் தொழில் முடங்கக் கூடாது.

கூட்டணி தர்மம் என்ற மேல்பூச்சு கொள்கையை வைத்து, பல புதிய நிர்வாக அமைப்புகளையும் அமைச்சர் பதவிகளையும் முந்தைய மத்திய அரசு உருவாக்கியது. ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனித் தீவுகளாக இவை இயங்கின. தேக்க நிலைதான் வலுவடைந்தது. இவற்றை களைய புதிய அரசு பல துறைகளை ஒருங்கிணைத்தது வரவேற்கத்தக்கது. விரைவான முடிவுகளுக்கும் துரித செயலாக்கத்திற்கும் இத்தகைய மாற்றம் வழிவகுக்கும்.

வலுவான மாநில அரசுதான் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைபாட்டிற்கும் அடித்தளம். வளர்ச்சியிலும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என்பதை மேலும் உறுதி செய்யும் வகையில், தமிழ் மக்கள் முதலமைச்சருக்கு வரலாறு காணாத ஆதரவை அளித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் 37 பிரதிநிதிகளோடு தமிழ்நாடு பெருமைக்குரிய நிலையை வகிக்கப் போகிறது. வலிமையான பாரதம் உருவாக வழிவகுக்கப் போகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT