கனவுத் திட்டம் நனவாக...
அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக "பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா' என்னும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தார்.
அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக "பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா' என்னும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தார்.
அதன்படி கடந்த 28-ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 7.5 கோடி வங்கிக் கணக்குகள் என்பதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில், குறைந்த பட்ச இருப்புத் தொகை வேண்டாம்; 5,000 ரூபாய் ஓவர் டிராப்ட் (ஆதார் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) வசதி; டெபிட் கார்டு வசதி; ஒரு லட்ச ரூபாய்க்கு விபத்து காப்பீட்டு பாலிசி உள்ளிட்ட வசதிகள் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், இந்தியாவில் 1,15,082 வங்கிக் கிளைகள் இருக்கின்றன. 1,60,05 ஏ.டி.எம். மையங்கள் இருக்கின்றன. 38.2 சதவீத (43,962) வங்கிக் கிளைகள் கிராமப் புறங்களில் இருக்கின்றன. ஏ.டி.எம்.களில் 14.58 சதவீதம் (23,334) மட்டுமே கிராமப் புறங்களில் இருக்கின்றன.
ஏற்கெனவே, வங்கிகளில் கணக்குத் தொடங்குவத்கு } சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்குக்கூட } பல நாள்கள் அலைய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வங்கி ஊழியர்களில் பெரும்பாலானோர், கிராமத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் முறையான பதில் கூறாமல் எரிந்து விழுவதும், அடுத்த கவுண்டரிடம் சென்று விசாரியுங்கள் எனவும் முறையற்ற பதிலையே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மேலும், பல கிளைகளில் பணம் செலுத்த மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.
பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள் பாஸ் புத்தகத்தை மறந்து வைத்து விட்டுச் சென்றால், மேலாளரைப் பாருங்கள் அல்லது நாளை வாருங்கள் என தட்டிக்கழிப்பதும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது.
90 விழுக்காடு அரசுடைமை வங்கிகளில் பணம் செலுத்துப் படிவம் உள்ளிட்ட படிவங்கள் ஆங்கிலத்திலும் இந்தி மொழியிலுமே இருக்கின்றன.
இதனால், மாநில மொழி தவிர மற்ற மொழி தெரியாதவர்கள் மற்றவர்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம்.
இப்போது இருக்கும் வங்கிக் கணக்குகளுக்கே தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்து பணம் எடுக்க வேண்டிய சூழலில் மென்மேலும் கணக்குகளை அதிகரித்துக்கொண்டே போனால் விளைவுதான் என்ன?
பிரதமர் மோடி அறிவித்துள்ள இந்த வங்கிக் கணக்குத் திட்டம், தொலைநோக்குப் பார்வையில் நல்ல திட்டம்தான்.
எனினும், கோடிக்கணக்கான கணக்குகள் சில ஆண்டுகளில் அதிகரிக்க இருக்கும் நிலையில், வங்கிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால்தான் இந்தத் திட்டம் வெற்றி பெறும்.
முதலாவது, கிராமங்கள் தோறும் அரசுடைமை வங்கி நிறுவ வேண்டும். இது சாத்தியமில்லையெனில், நலிவடைந்து வரும் தபால் நிலையங்களில் கூடுதல் வசதி ஏற்
படுத்தி வங்கிக் கிளைகள் அல்லது சேவை மையமாக மாற்றலாம்.
ஏனெனில், கிராமங்களில் 3 கி.மீ. தொலைவிற்கு ஒரு கிளை அஞ்சலகம் உள்ளது. இதனால், கிராமப்புறங்களில் உள்ளோர் வங்கிச் சேவைக்காக நகரங்களுக்கு அலைவது குறையும், வங்கி ஊழியர்களுக்கும் வேலைப்பளு குறைய வாய்ப்புண்டு.
வங்கி ஊழியர்களுக்கு இன்முகத்தோடு பணியாற்ற பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும் அதை கட்டாயமாக்க வேண்டும். பணம் செலுத்துப் படிவங்கள் உள்ளிட்டவைகளில் அந்தந்த மாநில மொழியும் இடம்பெற வேண்டும்.
ஏ.டி.எம். பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே வேளையில், அதை பயன்படுத்தும் வங்கி வாடிக்கை
யாளர்களுக்கு தகுந்த உயிர் மற்றும் பண பாதுகாப்பை அளிக்கவேண்டியது வங்கிகளின் கடமையாகும்.
இந்த இயந்திரங்கள், வங்கிகளின் மினி கிளைகளாக செயல்படுவதால், வங்கிக் கிளைகளின் நேரடி வேலை பளு குறைந்து, நிர்வாகச் செலவும் மிச்சமாகிறது.
ஆகையால், வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், ஏ.டி.எம். மையங்களுக்கு, அவை இயங்கும் எல்லா நேரத்திலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டியது வங்கிகளின் தலையாயக் கடமையாகும்.
மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் போன்றவற்றிற்கு பெறப்படும் சேவைக் கட்டணத்தைக் குறைத்து அவற்றை நெறிப்படுத்த வேண்டும்.
இது போன்ற சிற்சில மாற்றங்களைச் செய்தால், பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.