வங்கிகள் கற்க வேண்டிய பாடம்!
பாரத ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஏப்ரல் 7-ஆம் தேதி அறிவித்த நிதி மற்றும் கடன் கொள்கையில் வட்டி விகிதங்களை மாற்றவில்லை.
பாரத ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஏப்ரல் 7-ஆம் தேதி அறிவித்த நிதி மற்றும் கடன் கொள்கையில் வட்டி விகிதங்களை மாற்றவில்லை.
இது தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனங்களுக்கு ஏமாற்றம் அளித்த போதிலும், பொருளாதார நோக்கர்களுக்கு வியப்பளிக்கவில்லை.
கடந்த மூன்று மாதங்களில், ரிசர்வ் வங்கி தனது "ரெப்போ ரேட்டை' (ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம்) இருமுறை குறைத்தது.
ஜனவரி 15-இல் ரெப்போ வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாகவும், மார்ச் 4-இல் வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
வழக்கமாக, நிதி மற்றும் கடன் கொள்கை ஆய்வுக் கூட்டத்தின்போதுதான் இது மாதிரியான வட்டி மாற்றம் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடுவது மரபு.
ஆனால், மேற்கூறிய இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஆய்வுத் தேதிகளுக்கு முன்னரே வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வட்டிக் குறைப்புக்கான காரணங்கள் இருந்தால், ஆய்வுத் தேதிக்காக காத்திராமல், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.
இதுதவிர, பிப்ரவரி 3-ஆம் தேதி, யாருமே எதிர்பாராத வகையில், எஸ்.எல்.ஆர். (Statutory Liquidity Ratio - வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைக்க வேண்டிய அரசுப் பத்திரங்கள் உள்ளிட்ட வைப்புத் தொகை) 22 சதவீதத்திலிருந்து 21.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மூலம் வங்கிகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு நிதி ஆதாரம் அதிகரிக்கும்.
இதனால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதில் விரைவுத் தன்மை இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.
ஆக, கடந்த மூன்று மாதங்களில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக வணிக வங்கிகள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், சிறு, குறுந் தொழில் கடன், பெருந் தொழில் கடன் என அனைத்து வகைக் கடன்களுக்கும் வட்டி குறைக்கப்படும்.
அதன் பயனாக தொழிற்சாலை உற்பத்தி விகிதம் அதிகரிக்கும்; மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் நோக்கமாகவும் மத்திய அரசின் எதிர்பார்ப்பும் ஆக இருந்தது.
மக்களும் அதைத்தான் எதிர்பார்த்தார்கள். இதே எதிர்பார்ப்பில்தான் CII மற்றும் FICCI உள்ளிட்ட தொழில் மற்றும் வணிகச் சம்மேளனங்கள் வட்டிக் குறைப்புக்காக வாதாடி வந்தன.
ஆனால் நடந்தது வேறு. 7.4.2015 வரை வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.
அதாவது, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்ததனால் கிடைக்கக் கூடிய பலனை, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
வங்கிகளின் இந்தப் போக்கைக் கண்டு 7.4.15-இல் தனது அதிருப்தியை ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளிப்படுத்தினார்.
அது மட்டும் அல்லாமல், ரெப்போ ரேட் குறைப்பின் பயனாக, வங்கிகளின் வட்டிச் சுமை (வங்கிகள் நிதி திரட்டுவதற்கு ஆகும் செலவு - 'Cost of Fund') குறையவில்லை என்று சில வங்கிகள் கருத்துத் தெரிவித்திருப்பது "அபத்தம்' என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, வங்கிகளில் பணப் புழக்கம் மேலும் அதிகரிப்பதற்கான பல்வேறு காரணங்களையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
உதாரணமாக, ரூபாயின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருப்பதற்காக சந்தையிலிருந்து பெரும் தொகைக்கான அமெரிக்க டாலர்களை ரிசர்வ் வங்கி கொள்முதல் செய்து வருகிறது.
இதனால், சந்தையில் பணப் புழக்கம் அதிகரிக்கிறது.
இரண்டாவதாக, வளர்ச்சிப் பணிக்காக, மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை பொருளாதார நடவடிக்கைகளில் பாய்ச்சி வருகிறது.
இந்தக் காரணங்களாலும், வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியைக் குறைப்பதற்கு போதிய முகாந்திரம் இருக்கிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்திடத் தவறியதன் காரணமாக, பெருநிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்குப் பதில், பணச் சந்தையிலிருந்து நேரடியாகக் கடன் பெறத் தொடங்கி உள்ளன. இதனால், வங்கிகளுக்குத் தானே இழப்பு? அவர்களுக்கு வர வேண்டிய வட்டி வருவாய் வேறு யாருக்கோ போகிறது.
7.4.2015 கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காது போனாலும், பணச் சந்தையில் நிலவும் யதார்த்த நிலையை ஆளுநர் விளக்கிய பிறகு, சில வங்கிகள் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன.
இதனால், வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் பெற்றவர்களுக்கு வட்டிச் சுமை குறையும். குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கியவர்களது மாதத் தவணை குறையும்.
புதிய நிதி மற்றும் கடன் கொள்கையில் வேறு சில சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
விரைவில் இந்திய நிறுவனங்கள் ரூபாய் பத்திரங்களை வழங்கி வெளிநாடுகளிலிருந்து கடன் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
இதனால், இந்தியாவில் செயல்படும் பெரு நிறுவனங்கள் தங்கள் கடன் தேவைகளுக்காக வங்கிகளை மட்டும் நம்பி இருந்த காலம் மலை ஏறிவிடும்.
எனவே, வங்கிகள் கடன் விண்ணப்பங்களைத் திறம்பட விரைந்து பரிசீலித்து வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லக் கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வட்டி விகிதமும் போட்டியை எதிர்கொள்ளும் விதமாக இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கும் நன்மை உண்டு.
ரூபாய் நாணயம் வெளிநாட்டுப் பணச் சந்தைகளில் பிரபலம் அடைய வாய்ப்பு உள்ளது.
குறுந்தொழில் செய்பவர்களுக்கு குறு நிதி நிறுவனங்கள் (மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகள்) மூலம் தற்போது தனி நபருக்கு சராசரியாக ரூ.50 ஆயிரம் அளவில் மட்டுமே கடன் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையை மேம்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தனி நபர்கள் குறு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறக்கூடிய கடன் உச்சவரம்பு இரண்டு மடங்காக, அதாவது ரூ.ஒரு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை.
கூட்டுறவு வங்கிகள் இனி ஏ.டி.எம். வசதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்.
ஏற்கெனவே அஞ்சல் அலுவலகங்கள் ஏ.டி.எம். வசதி வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
வலுவான கூட்டுறவு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டைகளை வழங்கலாம். ஏற்கெனவே, கிராமங்களில் கிஸான் கடன் அட்டை புழக்கத்தில் உள்ள நிலையில், இந்தப் புதிய முயற்சி வரவேற்கத்தக்கதே.
இவை ஒரு புறம் இருக்க, புதிய கடன் கொள்கை மூலம் வங்கிகள் கற்க வேண்டிய பாடம் என்னவெனில், எப்பொழுதெல்லாம் ரெப்போ ரேட் குறைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் வங்கிகள்
அந்தப் பலனை தங்கள் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே.
இதுதான் ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கை மூலம் வங்கிகளுக்கு உணர்த்தும் சமிக்ஞை (Signal).
இது பல காலமாக இருந்து வரும் எழுதப்படாத நியதி. மாறாக, வட்டிக் குறைப்பின் பலனை தங்களது வங்கியின் லாபமாகப் பார்ப்பது முறை ஆகாது.
வங்கிகள் கடன் வழங்குவதிலும், அதனை வசூலிப்பதிலும் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டால், லாபம் தானாகப் பெருகும்.
அதேநேரம், வங்கிகளின் சமூகப் பார்வையும் மேம்பட வேண்டியது அவசியத்திலும் அவசியம்!
கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).