ஜெகே என்னும் மந்திரச் சொல்லுக்கு ஜெயகாந்தன் என்று பலர் பொருள் கொண்டாலும், நான் எனது கல்லூரி நாள்களில் அந்தச் சொல்லுக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் என்று இரு பொருள் கொள்வது வழக்கம்.
காரணம், எனக்குத் தெரிந்த இலக்கிய உலகம் ஜெயகாந்தன், கண்ணதாசன் என்னும் இரு சாளரங்களின் வழியாக நான் அறிந்து கொண்டதுதான்.
இவ்விருவரின் தாக்கத்துக்கும், ஆளுமைக்கும் உள்படாத இளைஞனை எனது கல்லூரி நாள்களில் நான் கண்டதில்லை.
1980-களில் ஒரு நாள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் அப்போதைய தமிழ்த் துறைத் தலைவர் ந. சஞ்சீவி, ஜெயகாந்தனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்பதற்காக அங்கு பெரும் கூட்டம் கூடியிருந்தது. வரவேற்புரை நிகழ்த்திய பேராசிரியர் ந. சஞ்சீவி, சற்று அச்சத்துடன் ஒரு செய்தியைக் குறிப்பிட்டார்.
அதாவது, தனக்குத் தெரிந்த சித்தர் ஒருவர், 30 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தனின் முதல் கதையைப் படித்துவிட்டு, அவருக்குத் தமிழ் எழுத்துலகில் மிகப் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று தன்னிடம் சொன்னதாகவும், அந்தச் சொல் பலித்திடுவதைத் தம் வாழ்நாளிலேயே தாம் கண்டதாகவும் ந.சஞ்சீவி குறிப்பிட்டார்.
ஆனால், சஞ்சீவி எதற்கு அச்சப்பட்டாரோ, அது மேடையிலே நடந்தது.
ஏற்புரை வழங்க வந்த ஜெயகாந்தன் சொன்னார்:
"எனக்கொரு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று முப்பதாண்டுகளுக்கு முன்னாலேயே எவரேனும் சொல்லியிருப்பாரேயானால், அவர் உண்மையில் ஒரு சித்தராகத்தான் இருந்திருக்க வேண்டும்.
காரணம், நான் எழுதத் தொடங்கியே 25 ஆண்டுகள்தான் ஆகின்றன' என்றார் ஜெயகாந்தன்.
நாகரிகம் என்ற போர்வையில்கூட, பொய்யையும், புரட்டையும், போலிப் பாராட்டையும் சகித்துக்கொள்ள விரும்பாத ஓர் உன்னதப் படைப்பாளி ஜெயகாந்தன் என்பதை அன்று நான் கண்டுகொண்டேன்.
மற்றவர்கள் தங்களைத் தவறாக நினைக்கக் கூடாது என்றும், மற்றவர்களின் மதிப்பீட்டில் தாம் வீழ்ச்சி அடைந்துவிடக் கூடாது என்றும், மற்றவர்களை எண்ணியே எந்நாளும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இடையில், தனக்கு உண்மையாக வாழ்வதே முறையான வாழ்க்கையாகும் என்று வாழ்ந்து காட்டியவர் ஜெயகாந்தன்.
கடந்த பல நாள்களாக ஜெயகாந்தனைப் பற்றி நாளேடுகளிலும், வார ஏடுகளிலும் பல்வேறு கலைஞர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும், வாசகர்களும் எத்தனையோ எழுதிவிட்டார்கள்.
ஆனால், ஏனோ தெரியவில்லை, ஒருவர் கூட ஜெயகாந்தன் என்னும் கவிஞனைப் பற்றி எழுதவில்லை. கதைகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவித்த அளவுக்கு கவிதைகளை ஜெயகாந்தன் எழுதவில்லை. ஆனால், சினிமாவுக்காக அவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஜெயகாந்தனுக்கு உள்ளிருந்த கவித்துவத்தை அடையாளம் காட்டின.
"சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தில் வரும் எழுத்தாளர் கதாபாத்திரம் ஜெயகாந்தனின் பிரதிபலிப்பாகும். அதனால்தான் தன்னிலை விளக்கமாக அந்தக் கதாபாத்திரம் பாடும் பாடலில் ஜெயகாந்தன் இப்படி எழுதினார்:
"கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள்
கதையைச் சொல்லுகிறேன் -இதைக்
காணவும் கண்டு நாணவும் உமக்குக்
காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...
நல்லதைச் சொல்லுகிறேன் - இங்கு
நடந்ததைச் சொல்லுகிறேன் -
இதற்கெனைக்
கொல்வதும் கொன்று கோவிலில்
வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடியிருப்பதுண்டோ'
"சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திலேயே "வேறு இடம் தேடிப் போவாளோ' என்ற ஒரு பாடல்.
காமக் கிளர்ச்சியூட்டும் வரிகளைக் கவிதைகள் என்று கொண்டாடும் சிலருக்கு மத்தியில் ஜெயகாந்தனின் மிக உன்னதமான வரிகளைப் பாருங்கள்.
"பருவமழை பொழியப் பொழிய
பயிரெல்லாம் செழிக்காதோ- இவள்
பருவமழையாலே வாழ்க்கை
பாலைவனமாகியதே'
-இப்படி ஆபாசத்தை முற்றிலும் தவிர்த்து ஓர் அந்தரங்கத்தைச் சொல்ல முடிந்தவனல்லவா உன்னதக் கவிஞனாக முடியும்.
"சிறு வயதில் செய்த பிழை
சிலுவையெனச் சுமக்கின்றாள்-இவள்
மறுபடியும் உயிர்ப்பாளோ
மலர் எனவே முடிப்பாளோ'
-என்று நான்கு வரிகளில் மொத்தக் கதையின் வீச்சையும் கொண்டுவந்தது ஜெயகாந்தனின் தனித் திறமை.
"ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்துக்கு ஜெயகாந்தன் எழுதிய பாடல் வரிகள் அமரத்துவம் வாய்ந்தவை என்பது என் கருத்து.
"நல்லதென்பதும் தீயதென்பதும்
நாம் அணிந்திடும் வேடமே... இதில்
வெல்வதென்னடி தோல்வியென்னடி
மேடையில் ஓர் விளையாடலில்...
குறைகள் என்பன இயல்பெனும்
குணமடைவதே அனுபவம்...
இறைவன் அமைத்த மேடையில்
திரைவிழாத நாடகம்...'
-இப்படி வாழ்க்கைத் தத்துவத்தை மிக எளிதாகச் சொல்ல வேறு எந்தக் கவிஞனால் முடியும்,
மிகப் பெரிய தத்துவங்களை மிக எளிமையாகவும் ஒரு மின்னலைப் போலப் பளிச்சென்றும் சொல்லும்போதுதான் கவிதை பிறக்கிறது.
சிலப்பதிகாரத்தின் ஒட்டுமொத்தக் கதையையும் ஜெயகாந்தன் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' திரைப்படப் பாடலில் சர்வ சாதாரணமாக ஒரே வரியில் சொன்னார்:
"வீணை மீட்டிடும் போதிலே
விதி சிரித்ததோர் காதலில்...
நாடகம் வாழ்க்கையாவதோ-ஒரு
நடிகை என்ன செய்வதோ...'
சிலப்பதிகார மாதவியின் பாத்திரத்தைத் தான் வடித்த மேடை நாடகக் கலைஞர் கல்யாணியின் பாத்திரத்தில் ஏற்றிக் காட்டிய ஜெயகாந்தனின் கவிரசம் தனி ரகம்.
"மிக நெருங்கிய நண்பர்கள் இறந்துவிட்டால்கூட அங்குப் போகமாட்டார்
ஜெயகாந்தன்' என்று சிலர் சொல்வதுண்டு. தம்மோடு சிரித்துப் பேசிப் பழகிக் களித்தவர்களின் உயிரற்ற உடலைப் பார்த்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தப் படிவம்தான் மனதில் நின்றுவிடும் என்ற காரணத்தால், தாம் இறந்தவர்கள்
வீட்டுக்குப் போவதில்லை என்பார்
ஜெயகாந்தன்.
இந்தக் கருத்தை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் ஏற்றுக்கொண்டேன்.
அதனால்தான், புகைப்படங்களில்கூட அடக்கிவிட முடியாத அவரது கம்பீரத்தை, ஆளுமையை, ஒரு சாதாரண குளிர்சாதனப் பெட்டிக்காரன் அடக்கி விடுவதைக் காணப் பொறுக்காமல், நான் சும்மா இருந்துவிட்டேன்.
"எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள்...
எத்தனை மணங்கள் திருமணங்கள்...
அத்தனை மலரும் உதிர்வதில்லை -
அந்த அன்பெனும் ஈரம்
உலர்வதில்லை'
-என்னும் ஜெயகாந்தனின் வாக்கு அவருக்கே பொருந்தும்!
(இன்று ஜெயகாந்தன் பிறந்த தினம்)
கட்டுரையாளர்: நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.