கட்டுரைகள்

தமிழக உரிமைகளும், நடுவண் அரசின் பாராமுகமும்...!

காவிரிப் படுகையில் எண்ணெய், எரிவாயு எடுக்க சுற்றுச்சூழல் இசைவு கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சகத்துக்கு

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

காவிரிப் படுகையில் எண்ணெய், எரிவாயு எடுக்க சுற்றுச்சூழல் இசைவு கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் - வனத் துறை அமைச்சகத்துக்கு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
 ஷெல் வாயு என்பது பிரதானமாக மீத்தேன் எரிவாயுதான். மீத்தேன் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் அதே நீரியல் விரிசல் தொழில்நுட்பம்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது.
 மீத்தேன் எடுக்க 2,000 அடி வரை நிலத்தைத் தோண்டி, அதில் மணலையும், 600-க்கும் அதிகமான நச்சு வேதிப் பொருள்களையும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீரில் கரைத்து, அந்தக் கலவை அதிகமான அழுத்தத்தில் உள்ளே செலுத்தப்படும். சில நூறு அடிகளுக்குப் பிறகு, பக்கவாட்டிலும் துளைத்துக் கொண்டு இந்தக் கலவையைச் செலுத்தும்போது, நிலத்துக்கு அடியில் உள்ள நிலக்கரி படிமங்களை நொறுக்கி, இடைவெளிகளில் உள்ள மீத்தேன் வாயு வெளியே எடுக்கப்படும்.
 இந்த வேதியியல் கலவை மீண்டும் உறிஞ்சி எடுக்கப்பட்டு கழிவுகளாக நிலத்தின் மேற்பரப்பில் தேக்கிவைக்கப்படும். இதனால், காவிரி டெல்டாவில் நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு, பாசன நீர் நஞ்சாகி, ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பாலைவனம் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 இந்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தங்கள் நிலத்தையும், விவசாயத்தையும், தொழிலையும் விட்டு இலங்கை அகதிகள் போல நாதியற்று வெளியேற வேண்டி வரும். காவிரி மூலமாக குடிநீர் பெறும் தமிழகத்தின் 19 மாவட்டங்களும் தவிப்புக்குள்ளாகும்.
 காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமைகள் ஒருபக்கம் மறுக்கப்படுகின்றன. மற்றொரு பக்கம், காவிரி டெல்டாவில் மீத்தேன், ஷெல் வாயு திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கிறது மத்திய அரசு. மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது என்று ஒரு மாயையைக் கிளப்பிவிட்டு மறுபடியும் பாம்பு படமெடுத்து ஆடுகிற கதைதான்.
 காவிரிப் படுகையில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மீத்தேன் வாயுவைக் கண்டறிய ஷெல் நிறுவனத்துக்கு இந்திய பெட்ரோலிய அமைச்சகம் 2013 அக்டோபர் 14-ஆம் நாள் அனுமதி வழங்கியது. இப்பகுதியில் 35 இடங்களில் ஷெல் எண்ணெய், ஷெல் வாயுவை எடுக்க ஓ.என்.ஜி.சி. வேண்டுகோள் விடுத்தவுடன் மத்திய அரசும் அதற்கு இசைவு தெரிவித்தது.
 தமிழ்நாட்டைக் குப்பைக் கூடையாக நினைத்துக் கொண்டு, பிற மாநிலங்கள் விரட்டி அடித்த நச்சுத் தொழிற்சாலைகளை மத்திய அரசு இங்கு அனுமதிக்கிறது.
 உதாரணமாக, மராட்டியத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் குடிகொண்டுவிட்டது. கேரள மாநிலம், பிளாச்சிமடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட கோக் ஆலை திருநெல்வேலி கங்கைகொண்டானில் மையம் கொண்டுள்ளது. கூடங்குளம் அணுக் கழிவுகள் கோலார் வயலில் கொட்டப்படும் என்று சொன்னவுடன் கர்நாடகம் எதிர்த்தது. உடனே, கூடங்குளம் அணுக் கழிவுகள் தமிழகத்திலேயே கொட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
 தமிழகத்துக்கு நியாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய உரிமைகளும், திட்டங்களும் 50 ஆண்டுகளாக மறுக்கப்படுகின்றன. ஆனால், தீங்கு விளைவிக்கிற திட்டங்கள் மட்டும் தமிழகத்தில் முன்னுரிமையோடு வேகமாக நிறைவேற்றப்படுவதில் என்ன நியாயம் உள்ளது?
 தமிழகத்தின் நலன் நாடி செய்ய வேண்டிய கீழ்க் குறிப்பிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்கில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் புறந்தள்ளி வருகிறது.
• அகல ரயில் பாதைத் திட்டம்கூட ஆமை வேகத்தில்தான் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு வந்தது. இன்னும் செங்கோட்டை - புனலூர் கொல்லம் மார்க்கம், மதுரை - போடிநாயக்கனூர் போன்ற திட்டங்கள் மிகவும் தாமதப்படுத்தப்படுகின்றன.
• சேது சமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டுள்ளது.
• கிழக்குக் கடற்கரைச் சாலை முழுமை அடையவில்லை.
• சுமார் 10-க்கும் மேலான மீன்பிடித் துறைமுகத் திட்டங்கள் மத்திய அரசிடம் தூங்குகின்றன.
• என்.எல்.சி. பிரச்னை முடிவுக்கு வராமல் தொடர்கதையாக உள்ளது.
• சேலம் இரும்பாலை விரிவாக்கம், வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது.
• உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை கிட்டத்தட்ட மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது.
• சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
• நியூட்ரினோ திட்டம் அடாவடியாகத் தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
• குளச்சல், கடலூர் துறைமுகத் திட்டங்கள் பல ஆண்டுகளாக ஏட்டளவில் உள்ளன.
• நோக்கியா ஆலைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அதன் கதவுகள் மூடப்பட்டுவிட்டன.
• 1980-களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட, மரக்காணத்திலிருந்து சென்னை வழியாக ஆந்திரம், பெத்தகஞ்சம் வரை 420 கி.மீ. தொலைவுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப் போக்குவரத்தும் நடைமுறைக்கு வரவில்லை.
• உநீர்வள ஆதாரங்களான கன்னியா குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அழகர் அணைத் திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, சிறுவாணி, பாம்பாறு ஆகியவை கேரள மாநிலத்தோடு உள்ள நதிநீர்ப் பிரச்னைகள்.
 காவிரி, ஒகேனக்கல், தென் பெண்ணையாறு, பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி ஆகியவற்றில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களோடு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட படாதபாடுபட வேண்டி இருக்கிறது.
• தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்குப் பயன்படும் அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்புத் திட்டம் 1975-லிருந்து கொள்கைவடிவில்தான் இருக்கிறது. இந்த நீர்ப்படுகை இணைப்புக்கு கேரளத்தை இணங்கவைக்க மத்திய அரசுக்கு மனமில்லை.
 இத்திட்டத்தினால் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் வரை குடிநீர் வசதி கிடைக்கப் பெறும். நதிநீர் இணைப்பு குறித்து நான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோதுகூட மத்திய அரசிடமிருந்து இந்த இணைப்புக் குறித்து அழுத்தமாக எந்த பதிலும் இல்லை.
• தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு, காவிரி - குண்டாறு, பெண்ணையாறு - பாலாறு என மூன்று இணைப்புத் திட்டங்களுக்கான உரிய நிதி ஆதாரங்களையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.
• தமிழர் பூமியான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துவிட்டு, கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்கிறது மத்திய அரசு.
• வட மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தியும், குஜராத்தில் குஜராத்தியும் வழக்காடு மொழியாக இருப்பதுபோல, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரிக்கை எழுப்பியும் அதை மத்திய அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
• அந்தமானில் வாழும் தமிழர்களுடைய வழக்குகள் யாவும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய சூழ்நிலை மாற வேண்டும்.
• கொங்கு மண்டல விவசாயிகளைப் பாதிக்கும் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிடாமல் மத்திய அரசு விதண்டாவாதம் செய்கிறது.
• பழனி வழியாக, கேரளம் செல்லும் ரயில் வழித்தடமும் நடைமுறைக்கு வந்தபாடில்லை.
• தென் மாவட்டக் கடற்கரை ஓரங்களில் தாது மணல் கொள்ளையைத் தடுக்கவும், கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலையைப் புதுப்பிக்கவும் மத்திய அரசு முயலவில்லை.
• தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.
• நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரிவாயு தொழில்நுட்ப மையத்தை உடனடியாக அமைக்கவும் மத்திய அரசிடம் முயற்சிகள் இல்லை.
• திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் நடத்தியும் இதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
• கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நெசவு ஆலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. அவற்றைப் புனரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
• வளைகுடா நாடுகளில் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் சொந்த ஊருக்கு விரைவாக வரவேண்டுமென்றால், மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வளைகுடா நாடுகளிலிருந்து விமான சேவை வேண்டுமென்று நீண்ட காலமாக வற்புறுத்தியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது மத்திய அரசு.
• தூத்துக்குடி விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான முனையமாக மாற்றும் திட்டமும் நிலுவையில் உள்ளது.
• எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய வாய்ப்புகள் இருந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
• திருநெல்வேலி அருகே நாகரிகத் தொட்டிலான ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையைப் பத்தாண்டுகளாக மத்திய கலாசார அமைச்சகம் வெளியிடவே இல்லை.
 இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளும், பிரச்னைகளும் என ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. இவற்றையெல்லாம் நிறைவேற்றாமல் சுற்றுச்சூழலையும், தமிழகத்தையும் வஞ்சிக்கிற திட்டங்களைத்தான் மத்திய அரசு இங்கு நிறைவேற்றத் துடிக்கிறது.
 தமிழகத்தின் நெல் களஞ்சியமாம் தஞ்சை வளநாட்டைப் பாழாக்கும் ஷெல், மீத்தேன் எரிவாயுத் திட்டங்களை, தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT