ஜப்பானின் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய சட்டத் திருத்தங்களுக்கு ஒரு பக்கம் வரவேற்பும், மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்காவால் வரைவு செய்யப்பட்ட, போருக்குப் பிந்தைய அரசியல் சாசன சட்டத்தின்படி, "எந்த ஒரு போரிலும் ஜப்பான் ஈடுபடக் கூடாது, தரைப் படை, கடற் படை, விமானப் படை உள்ளிட்ட எந்த ஒரு படைப் பிரிவையும் சுய பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.'
அதன்படிதான் ஜப்பான் இதுவரை செயல்பட்டு வந்துள்ளது என்றாலும், தற்போது காலத்தின் கட்டாயப்படி, அந்தச் சட்டத்தில் பிரதமர் ஷின்சோ அபே முடிவின்படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கும் ஜப்பான் தனது படையை அனுப்ப முடியும். ஜப்பானோ, அதன் கூட்டணி நாடுகளோ தாக்கப்பட்டால், நாடு தாண்டிச் சென்று போரில் ஈடுபடலாம்.
உதாரணமாக, இப்போதுவரை ஜப்பானை குறிவைத்து வீசப்படும் ஏவுகணையை மட்டுமே அந்த நாடு சுட்டு வீழ்த்த முடியும். புதிய திருத்தத்தின்படி, ஜப்பானை கடந்து செல்லும் ஏவுகணையைக்கூட சுட்டுத் தள்ள முடியும்.
குறிப்பாக, ஜப்பானின் நெருங்கிய பாதுகாப்புக் கூட்டாளியான அமெரிக்காவின் படைகள் எந்த ஒரு நாட்டில் தாக்கப்பட்டாலும், அமெரிக்காவுடன் இணைந்து ஜப்பான் சண்டையில் ஈடுபடலாம்.
"பசிபிக் பிராந்தியத்தில் சீனா, வட கொரியா போன்ற நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, ஜப்பான் ராணுவம் சுயமாகச் செயல்பட வேண்டியது அவசியம்' என பிரதமர் ஷின்சோ அபே இந்தச் சட்டத் திருத்தத்தை நியாயப்படுத்துகிறார். ஆனால், சீனா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே தென் சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாகவும், அப்பகுதியில் உள்ள ஒரு தீவுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாகவும் சீனா, ஜப்பான் இடையே மறைமுக மோதல் இருந்து வருகிறது.
இனிமேல், தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஜப்பானால் விமானத்தை அனுப்ப முடியும் என்பதால் அதை நினைத்து சீனா கவலைப்படுகிறது. ஜப்பானின் இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் சீனா எச்சரித்துள்ளது.
ஜப்பானின் இந்த நடவடிக்கை திடீர் முடிவன்று. சர்வதேசப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஜப்பான் ராணுவத்தை ஈடுபடச் செய்வதற்கு வழிவகுக்கும் வகையில் கடந்த ஆண்டு ஏப்ரலிலேயே, அரசியல் சாசன சட்டத்தில் புதிய ஷரத்துகளைச் சேர்ப்பதற்கு பிரதமர் ஷின்சோ அபே அனுமதி அளித்தார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே தனது சர்வதேச ராணுவ நடவடிக்கைகளை சிறிது சிறிதாக ஜப்பான் அதிகப்படுத்தியே வந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து 2014 ஜூலையில் கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஜப்பான் ஈடுபட்டது.
ஆப்பிரிக்கக் கடல் பகுதியில் நடந்த கடல் கொள்ளையர் தடுப்பு நடவடிக்கைப் பணிகளில் ஜப்பானின் போர்க் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. இப்போதும்கூட ஒரு சிறிய படைப் பிரிவானது அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது இந்தச் சட்டத் திருத்தம். நாடாளுமன்றத்தின் ஓர் அவையில் இது நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மேலவையில் தாக்கல் செய்யப்படும்.
மேலவையில், பிரதமர் ஷின்சோ அபேயின் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், அங்கும் தடையின்றி நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
என்றாலும், இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஜப்பான் நாட்டு மக்களிலேயே 80 சதவீதம் பேர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது சுமார் 10 ஆயிரம் பேரும், அதற்கு முந்தைய நாள் சுமார் ஒரு லட்சம் பேரும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததே இதற்கு சாட்சி.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், அமெரிக்காவுடனான ஜப்பானின் ராணுவ உறவு மேலும் வலுப்பட்டு, சர்வதேச போர் வலையில் ஜப்பானும் விழுந்துவிடக் கூடும்; அமெரிக்காவுக்குப் பிடிக்காத பொது எதிரிகளால் தங்களது நாட்டுக்கும் ஆபத்து நேரலாம் என்பதே மக்களின் கவலை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதியுதவி வழங்க ஜப்பான் முன்வந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஜப்பான் நாட்டு குடிமக்கள் இருவர், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டதை எளிதில் மறக்க ஜப்பான் மக்கள் தயாரில்லை.
ஆனால், மக்களின் பாதுகாப்பு நலன் கருதியே இந்த ராணுவ நடவடிக்கை விரிவாக்கம் என பிரதமர் விளக்கம் அளித்திருக்கிறார்.
போரின் உச்சகட்டக் கொடுமையை உலகத்தின் எல்லா நாடுகளையும்விட நன்றாகவே உணர்ந்த நாடு ஜப்பான். எந்த அமெரிக்காவால் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு வீச்சுத் தாக்குதல் கொடூரத்தை அனுபவித்ததோ, அதே அமெரிக்காதான் இப்போது ஜப்பானின் நெருங்கிய பாதுகாப்புக் கூட்டாளி.
எந்த அமெரிக்கா, ஜப்பான் இனி போரில் ஈடுபடக் கூடாது என வரைவுச் சட்டத்தை தயாரித்து அளித்ததோ, அதே அமெரிக்காதான் இப்போது ஜப்பானின் புதிய போர் முகத்தையும் வரவேற்கிறது.
இதைத்தான் காலத்தின் கோலம் என்பதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.