இந்திய வரலாற்றில் மூன்று போர்களைச் சந்தித்த மண் ஹரியாணாவிலுள்ள பானிபட். அந்த மண், நான்காவது பானிபட் யுத்தத்தையும் சந்திக்க வேண்டி வந்தது. குவாஜா அஹமது அப்பாஸ் என்ற பத்திரிகையாளன் அந்த மண்ணில் பிறந்ததால் நான்காவது போர் கத்தியின்றி, ரத்தமின்றி, எழுதுகோல் ஏந்தியதால் நிகழ்ந்த போராகும். சுதந்திரம், நேர்மை, அச்சமின்மை ஆகிய முப்படைகளைக் கொண்டு போராடி வென்ற வீரன் அப்பாஸ்.
கே.ஏ. அப்பாஸின் மூதாதையரான அயூப் அன்சாரி, தீர்க்கதரிசி நபிகள் நாயகத்தின் நண்பராவார். இவரது முப்பாட்டன் அல்டாப் ஹசேன் ஹாலி புகழ்பெற்ற கவிஞர். அப்பாஸின் தாத்தா குவாஜா குலாப் 1857 சிப்பாய்க் கலகத்தின்போது முதல் வரிசையில் நின்ற போராளி. ஆங்கிலேயர்கள் அவரைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுத் தள்ளினர்.
நீண்ட நெடும் தேசியப் பாரம்பரியத்தில் வந்த அப்பாஸ், நாட்டுப் பிரிவினையின்போது, தம்முடைய உறவினர்கள் - பெற்றோர்கள் பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்தபோது, தாம் மட்டும் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். தம்முடைய சவப் பெட்டியை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்பொது, மும்பை ஜுஹுவிலுள்ள காந்தி நினைவிடத்துக்கு முன்னர் சற்று நிறுத்தி, தாம் அவருக்கு வீர வணக்கம் செலுத்திய பிறகே எடுத்துச் செல்ல வேண்டும் என்று உயில் எழுதி வைத்தவர் கே.ஏ. அப்பாஸ்.
அலிகர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே, அலிகர் ஒப்பீனியன் எனும் பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். இந்தியப் பல்கலைக்கழகங்களிலேயே முதன் முதலில் ஒரு செய்தித் திரட்டை வெளிக் கொணர்ந்த பல்கலைக்கழகம் அலிகர். அதற்கு அடிநாதமாக விளங்கியவர் அப்பாஸ். இளமைக் காலத்திலேயே எழுத்தை வாசிக்கவும், சுவாசிக்கவும் கற்றவர்.
அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் இரவில் போர்வைக்குள் ஒரு விளக்கை வைத்துக்கொண்டு, ரதன்நாத் சர்ஷார் - பிரேம்சந்த் ஆகியோரின் உருது நாவல்களைப் படித்தவர். இதழியல் துறையில் அவருடைய முன்மாதிரியாக விளங்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த அப்டான் - சிங்க். இதழியலில் இருந்து உத்வேகம் பெற்று, படைப்புலகத்துக்கு வந்த லட்சிய எழுத்தாளர். 1938இல் அவரைச் சந்திப்பதற்காகவே அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்குச் சென்றார்.
பட்டப் படிப்பையும், சட்டப் படிப்பையும் அலிகர் பல்கலைக்கழகத்தில் முடித்த அப்பாûஸ தில்லி பத்திரிகையான "நேஷனல் கால்' இருகரம் ஏந்தி அழைத்தது. அப்பாஸினுடைய எழுத்தாற்றலைக் கண்ட "பாம்பே கிரானிகல்' என்னும் நாளேடு திரைப்பட விமர்சனம் எழுதுவதற்கு அப்பாûஸ அழைத்து வந்தது. முற்போக்குக் கொள்கைகளைச் சொல்வதற்குப் பதிலாக, மலிவான ஆபாசக் காட்சிகளை வெளியிட்ட திரைப்படங்களைக் கடுமையாக விமர்சித்தார். அதனால், திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்பட்டது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் "பாம்பே கிரானிகல்' பத்திரிகைக்குத் தந்த விளம்பரங்களை நிறுத்தினர். விளம்பரங்கள் செய்திப் பத்திரிகைகளின் ரத்த நாளங்கள் என்பதால், உரிமையாளராகிய ஸர் பெரோஸ் ஷா மேத்தா இருதலைக்கொள்ளி எறும்பானார். என்றாலும், விவேகத்தோடு செயல்பட்ட மேத்தா, அப்பாûஸ பத்திரிகையின் ஆசிரியராக்கிவிட்டு, வேறொருவரைத் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுமாறு செய்துவிட்டார்.
பாம்பே கிரானிகல் பத்திரிகையிலும், பிளிட்ஸ் பத்திரிகையிலும் அப்பாஸ் எழுதிய கடைசிப் பக்கம் மும்பை மட்டுமன்றி, இந்தியா முழுமையும் அதிர்வலைகளை எழுப்பியது. பிளிட்ஸ் ஆங்கிலம், உருது என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
பத்திரிகையில் கடைசிப் பக்கம் எழுதுகின்ற கலையை முதன் முதலில் தொடங்கியவர் கே.ஏ. அப்பாஸ். 1937-இல் இருந்து 1987 வரை (மரிக்கும் வரை) மிக நீண்ட காலம் அப்பகுதியை எழுதிவந்த அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கெளரவித்தது. இதழியலுக்காக முதன் முதலில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் கே.ஏ. அப்பாஸ்.
நாட்டுப் பிரிவினையின்போது ஏற்பட்ட மதக் கலவரங்களைக் கருப்பொருளாக வைத்து அப்பாஸ் எழுதிய இன்குலாப் என்னும் நாவல் மூன்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. ரஷிய மொழியில் இந்தியாவின் மைந்தன் எனும் தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்ட அந்நாவல், அந்நாட்டில் 90,000 பிரதிகள் விற்பனை ஆயிற்று. சோவியத் யூனியனில் நேருவுக்கும், ராஜ் கபூருக்கும் அடுத்த வரவேற்பைப் பெற்றவர் அப்பாஸ்.÷
73 படைப்புகளை ஆங்கிலம், ஹிந்தி, உருது என்ற மும்மொழிகளில் எழுதி இன்றைக்கும் எழுத்துலக ஜாம்பவானாகத் திகழ்பவர் அப்பாஸ். இளமைக் காலத்திலேயே (1958) அவரது வாழ்க்கைத் துணைவி முஜி அபா புற்றுநோயில் காலமானதால் எழுத்தே அவருடைய வாழ்க்கைத் துணைவியாயிற்று.
பாம்பே கிரானிகலில் விமர்சனப் பகுதியிலிருந்து அப்பாஸ் மாற்றப்பட்டவுடன் பணத் திமிர் பிடித்த ஒரு படத் தயாரிப்பாளர், எடுக்கப்பட்ட திரைப்படத்தில் உன்னால் குற்றம் குறை சொல்ல முடியுமே தவிர, ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு உனக்குத் திராணி உண்டா என்று நேரடியாகவே சவால் விட்டார்.
அந்தச் சவாலை ஏற்றுக் கொண்ட அப்பாஸ் நயா சன்சார் (புதிய உலகம்) எனும் தலைப்பில் ஒரு திரைக் கதையை எழுதித் தயாரிக்கத் தொடங்கினார். அந்தப் படத்தின் கதாநாயகன் ஒரு பத்திரிகையாளர். அதன் இயக்குநரும் ஒரு பத்திரிகை நிருபர். பெயர் என்.ஆர். ஆசார்யா. இதழியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம்.
வலதுகாலைப் பத்திரிகைத் துறையில் பதித்த அப்பாஸ், இடதுகாலைத் திரைத் துறையில் ஊன்றினார். "சாத் ஹிந்துஸ்தானி' மூலம் அமிதாப் பச்சனை திரைத் துறையில் அறிமுகப்படுத்தியவர். பிளிட்ஸ் பத்திரிகையின் வாசலுக்குப் போய் வாய்ப்பைப் பெற்று, அதற்கு நன்றிக் கடனாக அப்பாஸின் சுயசரிதையான "ஐயம் நாட் அன் ஐலண்ட்' எனும் நூலுக்கு அற்புதமான அணிந்துரை தந்திருக்கிறார் பச்சன்.
அப்பாஸ் பொருளாதாரச் சிக்கலில் இருந்த காலத்தில் (சொந்த பங்களாவையும், காரையும்கூட விற்றுவிட்டார்), பச்சன் உள்ளிட்ட நடிக, நடிகையர் மும்பையிலிருந்து கோவாவுக்கு மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்து ஒத்துழைத்தனர்.
பத்திரிகைத் துறையில் தாம் மேற்கொண்டிருந்த மதச்சார்பின்மை, உழைக்கும் வர்க்கத்தின் உயர்வு, தேச நலன் ஆகிய மூன்றையும் முன்னைக்காட்டிலும் அதிகமாகத் திரைப்படத் துறையில் பதிவு செய்தார். தர்த்தி கே லால் (மண்ணின் மைந்தர்கள்) எனும் திரைப்படத்தின் வாயிலாக வங்காளத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தையும், விவசாயிகள் குடும்பம் குடும்பமாக வதைபடுவதையும் நெஞ்சை உருக்கும்படியாகப் படம்பிடித்திருக்கிறார்.
தேவ் ஆனந்தை ராஹி எனும் படத்தில் அறிமுகப்படுத்தியவரும் அப்பாஸ்தான். இந்தப் படம் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் படும் துயரங்களை எடுத்துச் சொல்வதாகும்.
மும்பை போன்ற நெருக்கடியான நகரங்களில் பாட்டாளிகள் நடைபாதைகளிலும், சாலையோரங்களிலும், கழிவுநீரைத் தாங்கிச் செல்லும் குழாய்களின் மேலும் குடும்பம் நடத்துகிறார்கள். அந்த மக்களின் கனவுகளை எடுத்துச் சொல்வதற்கு "ஷெஹர் அவுர் சப்னா' எனும் திரைப்படத்தைப் பயன்படுத்தினார்.
ராஜஸ்தானில் நிலவிய கடும் தண்ணீர்ப் பஞ்சத்தை ஆட்சியாளருக்கு எடுத்துச் சொல்ல "தோ பூண்ட் பானி' (இரண்டு சொட்டு தண்ணீர்) எனும் திரைச் சித்திரத்தைத் தீட்டினார்.
அடித்தளத்து மக்களுக்காக எடுக்கப்பட்ட மற்றொரு திரைப்படம் முன்னா. பண்டித ஜவாஹர்லால் நேரு அந்தப் படத்தினுடைய சிறப்புகளைக் கேள்விப்பட்டு, அப்பாஸிடமிருந்து ஒரு பிரதியை வரவழைத்து தில்லியில் போட்டுப் பார்த்தாராம்.
புகழ்பெற்ற இயக்குநராகிய சேட்டன் ஆனந்துக்கு நீச்சா நகர் எனும் திரைக்கதையையும், மற்றோர் இயக்குநர் திலகமாகிய வி. சாந்தாராமுக்கு டாக்டர் கோட்நிஸ் கி அமர் கஹானி எனும் திரைக்கதையையும் தீட்டித் தந்தார்.
ராஜ் கபூருக்காக அப்பாஸ் தீட்டித் தந்த ஆவாரா, ஸ்ரீ420, ஜாகதே ரஹோ ஆகிய மூன்று திரைப்படங்களும் சக்கை போடு போட்டன. ராஜ் கபூருக்கு அப்பாஸ் வடித்துக் கொடுத்த மேரே நாம் ஜோக்கர், பாபி ஆகிய இரண்டு படங்களும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மைல்கற்கள். அவர் தயாரித்த நக்சலைட் எனும் படம் இந்தியத் திரையுலக வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்ற திரைப்படம்.
திரைத் துறையில் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவர் தனக்குப் பெருமை தரத்தக்க துறையும் தான் விரும்பும் துறையும் பத்திரிகைத் துறைதான் என்று பதிவிரதாதன்மையோடு பதிவு செய்திருக்கிறார்.
இதழியல் துறையில் இருந்ததால்தான், குருஷ்சேவ், ரூஸ்வெல்ட், சார்லி சாப்ளின், யூரி ககாரின் போன்ற பெருமக்களைப் பேட்டி காண முடிந்தது. என்றாலும், இதழியல் துறையும் அவரது முகத்தைக் குத்தாவிட்டாலும், அவரது நகத்தைக் குத்தியிருக்கிறது.
பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட மதக் கலவரங்களைக் கண்டு கலங்கியவர் அப்பாஸ். மக்களிடையே நிதானத்தைக் கொண்டு வருவதற்காக இரண்டு சிறுகதைகளை எழுதினார். மெயின் கவுன் ஹன் எனும் கதையும், சர்தார்ஜி எனும் கதையும் எதிர்பார்த்த பலனைத் தந்தன. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அப்பாஸ் சொன்ன செய்திகள் சீக்கியர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. கொல்லப்படத்தக்கவர்களின் பட்டியலில் அப்பாûஸயும் சீக்கியர்கள் சேர்த்துவிட்டனர்.
கவிக்குயில் சரோஜினி நாயுடு கூட, அப்பாஸ் நீங்கள் நுட்பமான செய்தியை அறியாத்தனமாக எழுதிவிட்டீர்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார்.
ஜான்சியிலிருந்து ஒரு சர்தார்ஜி, அப்பாûஸ நீதிமன்றத்துக்கும் வரவைத்துவிட்டார். அந்த சர்தார்ஜியை வீட்டுக்கு அழைத்து, அந்தக் கதையை அப்பாஸ் படித்துக் காட்டுகிறார். ஒரு சீக்கியர், கலவரத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு மகம்மதியக் குடும்பங்களைக் காப்பாற்றுவதாகக் கதையைப் பின்னியிருந்தார். அதனைச் செவிமடுத்த சர்தார்ஜி, இந்தக் கதைக்குத் தங்கப் பதக்கம் அல்லவா வழங்கியிருக்க வேண்டும். இப்பொழுதே ஜான்சிக்குப் போய் வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்று புறப்பட்டு விட்டார்.
கே.ஏ. அப்பாஸ் எழுதி வைத்திருந்த உயில், அவரது தேசிய குணத்துக்கும், படைப்பாற்றலுக்கும் கங்கணம் கட்டும். அவருடைய மறைவுக்குப் பிறகு தம்மை எங்கே சந்திக்கலாம் என்று உயிலில் குறிப்பிட்டிருக்கிறார்.
எனது மரணத்துக்குப் பின் என்னைச் சந்திக்க விரும்பினால், நான் எழுதியிருக்கும் 70-க்கும் மேற்பட்ட நூல்களில் ஒன்றை எடுத்துப் படியுங்கள்.
அன்றெனில், நான் திரைக்கதை எழுதித் தயாரித்த படங்களில் ஒன்றைப் பாருங்கள். பழுப்பேறிய செய்தித் தாள்கள் உங்களுக்கு அலர்ஜியை தராதெனில், நான் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எடுத்துப் படியுங்கள். அங்கே நான் உங்களுடன் இருப்பேன் எனச் சவப் பெட்டியிலிருந்தே நம் நெஞ்சைத் தொடுகிறார்.
102-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அப்பாஸின் நினைவலைகள், எழுதுகோலும், மையும், காகிதங்களும் இருக்கும்வரை இருக்கும்.
நாளை கே.ஏ. அப்பாஸின்
101- ஆவது பிறந்த நாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.