கட்டுரைகள்

முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்!

ஆட்சிக்கலை ஆங்கிலேயருக்கு வசப்பட்டதுபோல் மற்றவர்களுக்கு வசப்படவில்லை எனலாம். அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஆங்கிலேயர்கள், ஒருவனை அழிக்க வேண்டும் என்றால், அவன் மலையுச்சியில் நின்றாலும் ஈவு இரக்கம் இன்றி, மடுவிலே உருட்டி விடுவார்கள்.

தி. இராசகோபாலன்

ஆட்சிக்கலை ஆங்கிலேயருக்கு வசப்பட்டதுபோல் மற்றவர்களுக்கு வசப்படவில்லை எனலாம். அதிகார வர்க்கத்தில் இருக்கும் ஆங்கிலேயர்கள், ஒருவனை அழிக்க வேண்டும் என்றால், அவன் மலையுச்சியில் நின்றாலும் ஈவு இரக்கம் இன்றி, மடுவிலே உருட்டி விடுவார்கள்.

வீழ்த்தப்பட்டவன் விடாமுயற்சியால் மறுபடியும் மலையுச்சிக்கு வந்துவிடுவானானால், அவனை மறுபடியும் சிகரத்திற்கே உயர்த்தக்கூடியவர்களும் அதே ஆங்கிலேயர்கள்தாம்.

ஒரு காலத்தில் வட்டமேசை மாநாட்டிற்காகச் சென்ற காந்தியடிகளை, "அரை நிர்வாண பக்கிரி' என்றும், "பக்கிங்ஹாம் அரண்மனையின் படிக்கட்டுகளை அவர் மிதிப்பது அவமானம்' என்றும் வர்ணித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

அதே சர்ச்சில்தான், மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன், "ஐம்பது ஆண்டுகள் நாங்கள் அரும்பாடு பட்டுக் காத்த அருமையான உயிரைச் சுதந்திரம் கொடுத்த ஓராண்டிற்குள் சுட்டுக் கொன்றுவிட்டீர்களே' என்று கூறி வேதனைப்பட்டார்.

ஓர் அப்பாவியை ஆத்திரத்தில் ஓங்கி அறைந்தவனுடைய கரத்தை, அறை வாங்கியவன் எடுத்து முத்தமிட்டு, "வேகமாக அடித்துவிட்டாயே. உன் கை வலிக்குமே' என்று தடவிக் கொடுத்தால், அடி வாங்கியவனைக் காட்டிலும், அடித்தவனுக்கு அப்போது அதிகமாக வலிக்கும்.

அப்படி அதிகமாக வலித்த காரணத்தால்தான், நாடாளுமன்றங்களின் தாயாகிய இங்கிலாந்து நாடாளுமன்றம், தன்னுடைய வளாகத்திற்கு எதிராகவே இன்று (மார்ச் 14) மகாத்மா காந்தியடிகளுக்குச் சிலை எடுத்து கெüரவிக்க இருக்கின்றது.

கோடிக்கணக்கில் விலை போகின்ற "கிம்பர்லி' வைரங்களை, வைர வியாபாரிகள் எப்படி மதிப்பிடுவார்கள் தெரியுமா? ஆட்டு உரோமத்தால் நெய்யப்பட்ட கம்பளியில் கொட்டி, உருட்டிப் பார்த்து மதிப்பிடுவார்கள். அதுபோன்று, மகாத்மா காந்தியடிகள் என்ற வைரத்தை ஆங்கிலேயன் கம்பளியில் இட்டு இன்று மதிப்பிட்டிருக்கிறான்.

ஆனால், அந்தக் கம்பளி எது எதனால் நெய்யப்பட்டது தெரியுமா? எட்டி உதைத்துப் பல்லைக் கழற்றல், ரயில் பெட்டியிலிருந்து தூக்கி வீசப்படல், முடி திருத்தகத்திலிருந்து கருப்பன் என்று கூறி வெளியே விரட்டப்படல், குடிநீர்ப் பாத்திரத்தையே சிறுநீர்க் கழிக்கும் பாத்திரமாக ஆக்குதல் எனும் உரோமங்களால் நெய்யப்பட்ட கம்பளியில் உருட்டித்தான். இன்று அதன் விலையாக நாடாளுமன்றத்தின் முன்னர் சிலை எடுக்க நிர்ணயித்திருக்கிறான்.

காந்தியடிகளின் அருமையையும் பெருமையையும் உணர்ந்தவர்கள் நம்மவர்களைக் காட்டிலும், அயல்நாட்டவர்தாம். தனது இங்கிலாந்து பயணத்தின்போது காந்தியடிகள் ஆக்ஸ்போர்டு சென்றார்.

அங்கு அவருடைய நண்பர் டாக்டர் லிண்ட்úஸயின் இல்லத்தில் தங்கினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்திருந்த நேரம் அது. இரவு உணவு நேரத்தின்போது காந்தியடிகளுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டியது. லிண்ட்úஸயின் மனைவி திகைத்து நின்றார்.

மகாத்மா காந்தியடிகள், ஜெனரல் டயர் செய்த அட்டூழியங்களை அடுக்கடுக்காக வருணித்தார். எல்லாரையும் சுட்டுக் கொன்றதோடு, இந்தியர்கள் எவரும் தரையில் நடந்து செல்லக்கூடாது ஊர்ந்துதான் செல்ல வேண்டும் எனும் செய்தியை உருக்கமாக எடுத்துரைத்தார்.

அதனைக் கேட்டு உருகிய அந்தப் பெண்மணி, "தாங்கள் இதைச் சரியான பிராயச்சித்தம் என்று கருதினால், நாங்கள் இருவரும் ஐம்பது முறை தரையில் ஊர்ந்து செல்லத் தயாராய் இருக்கிறோம்' என்றார் உணர்ச்சிவயப்பட்டு.

அதற்கு காந்தியடிகள், "வேண்டாம். எவரும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தானே விரும்பி, நானோ வேறு எவருமோ ஐம்பது முறை என்ன, அதற்கு மேலும் தரையில் ஊர்ந்து செல்ல முடியும்.

ஆனால், ஓர் ஆங்கிலப் பெண்ணை அவ்வாறு செய்யுமாறு நான் கட்டாயப்படுத்தினால், அவள் என்னைக் காலால் உதைப்பாள். அவள் அவ்வாறு செய்வதும் சரியே. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆள்பவர்களாக அல்ல. தொண்டர்களாக இருந்து வரட்டும்' என்றார். இதனைப் படிக்கும் எந்த ஆங்கிலேயனுடைய மனதாவது கல்லாக இருக்குமா?

அண்ணல் காந்தியடிகளுக்குச் சிலை எடுப்பதற்குக் காரணமாக, மற்றுமோர் நிகழ்ச்சியும் அவர்களுடைய மனத்தைக் கரைத்திருக்க வேண்டும். அன்னை கஸ்தூரிபா ஆகாகான் அரண்மனையில் சிறைக் கைதியாக இருந்தபோது, 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் அதிகாலை இயற்கை எய்தினார்.

அவருடைய தகனக்கிரியையை பொதுமக்களுக்கு முன்பாகச் செய்வதற்கு அரசு அனுமதிக்கவில்லை. மகாத்மா காந்தி அதற்கும் உடன்பட்டு, "சிறைச்சாலை வளாகத்திலுள்ள மகாதேவ தேசாயின் சமாதிக்கருகிலேயே தகனம் செய்யலாம்' என்றார்.

கஸ்தூரிபாவின் பூதவுடலின் மீது போர்த்துவதற்காக ஒரு புதிய கதராடையைக் கொண்டு வந்தார் ஜெய்லர் கடேலி. ஆனால், காந்தியடிகள் அதனை மறுதலித்து, "கதர்த்துணியை வீணாக எரிக்க நான் விரும்பவில்லை. அது ஏதாவதொரு ஏழைக்குப் பயன்படும்' என்று கூறிவிட்டார்.

டாகர்ஸி சந்தனக்கட்டை ஒன்றைக் கொண்டு வருவதாகக் கூறியபொழுது, அடிகள் அதனையும் மறுதலித்தார். "ஏழைகள் இறந்தால் சந்தனக்கட்டை வைத்து எரிக்க முடியுமா? அவ்வாறிருக்கையில், "பரம ஏழை' என்று கருதும் ஒருவனுடைய மனைவியை, சந்தனக் கட்டையால் எரிப்பது எங்ஙனம் சாத்தியம்' எனக் கேட்டார்.

உடனே ஜெய்லர் கடேலி, "ஏற்கனவே வெட்டப்பட்ட இரு சந்தன மரங்கள் உள்ளேயே இருக்கின்றன' என்றார். ஆனால், "அரசாங்கம் எதைக் கொடுக்கின்றதோ, அதை வைத்துத்தான் தகனம் நடக்க வேண்டும்' என்று காந்தியடிகள் உறுதியாகக் கூறிவிட்டார்.

இதை இன்றைக்குப் படிக்கின்ற எந்த ஆங்கிலேயனுடைய மனசும் சந்தனக் கட்டையாக எரியாதா? "பொதுநலம் பேசுவோரின் தர்மம், அவர்களுடைய வீட்டிலிருந்து புறப்பட வேண்டும்' என்பார்கள் ஆங்கிலேயர்கள். ஆனால், அண்ணல் காந்தியடிகளின் தர்மம் சுடுகாட்டிலிருந்துகூடப் புறப்படுகின்றது.

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கையில் நடந்த மற்றுமோர் நிகழ்ச்சி, ஆங்கிலேயர்களை மட்டுமல்லாது, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற பெருமக்களையும் உலுக்கி எடுத்தது.

செüரி செüரா, பஞ்சாப் படுகொலை போன்ற கோர விபத்துக்கள் பற்றி மனம் கொதித்த காந்தியடிகள், தம்முடைய "யங் இந்தியா' பத்திரிகையில் அனல் கொப்பளிக்கும் வார்த்தைகளால் ஆங்கில அரசை வறுத்தெடுத்துவிட்டார். இதனை ஒரு கிரிமினல் வழக்காக ஜோடித்து, ஆங்கில அரசு மாவட்ட நீதிபதி சி.என். புரும்பீல்டு தலைமையில், காந்தியடிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது.

காந்தியடிகள் தந்த வாக்குமூலம் உலக வரலாற்றில், உலக இலக்கியங்களில் பொறிக்கத்தக்கதாகும். "என்னைப் பற்றித் தலைமை வழக்குரைஞர் சொன்னவை முற்றிலும் சரி. இந்த அரசின் மீது வெறுப்பு உண்டாகும்படி நான் போதித்தது உண்மை.

செüரி செüரா, பம்பாய் போன்ற இடங்களில் ஏற்பட்ட பயங்கர விளைவுகளுக்கு நானே பொறுப்பாளி. படித்தவன், உலகம் தெரிந்தவன் என்ற முறையில் நான் நெருப்போடு விளையாடுகின்றேன் என்பது எனக்கும் தெரியும்.

என்னை வெளியே விட்டாலும் இதே பணியைத்தான் தொடர்ந்து செய்வேன். எனவே, எனக்கு எளிதான தண்டனை தராமல், கடுந்தண்டனை தாருங்கள். இக்குற்றம் நான் வேண்டுமென்றே ஏற்றுக் கொண்டதுதான். நீங்கள் தரும் தண்டனையை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்' என்ற காந்தியடிகளின் வீரச் சொற்கள்தாம், இன்று சிலை வடிப்பதற்குக் கற்களாக ஆகியிருக்க வேண்டும்.

காந்தியடிகளின் வாக்குமூலம் போலவே நீதிபதி புரும்பீல்டினுடைய தீர்ப்புரையும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

நீதிபதி புரும்பீல்டு, "நீங்களே குற்றத்தை ஒப்புக் கொண்டது என் பணியை எளிதாக்கிவிட்டது. இருந்தாலும், நியாயமான தண்டனை என்பது, எந்த நீதிபதிக்கும் பெரும்பாடாகவே உள்ளது. சட்டம் தனி மனிதனை மதிப்பதில்லை. என்றாலும், இதுவரையிலும் என் முன் வந்த குற்றவாளிகளைப் போல் அல்லாமல், நீங்கள் ஒரு தனி ரகம் என்பதை மறைக்க இயலாது.

கோடிக்கணக்கான மக்களுக்கு நீங்கள் ஒரு பெரும் தேச பக்தர், பெரிய தலைவர். அரசியலில் உங்களிடமிருந்து மாறுபட்டவர்களும், உங்களை உயர்ந்த கொள்கையுடையவர் என மதிக்கின்றனர். உமக்கு ஆறு ஆண்டுகள் வெற்றுச் சிறைத்தண்டனை விதிக்கின்றேன்.

அரசு உங்களுடைய தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யுமானால், என்னைப் போல் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது' என்று நெகிழ்ந்து போய் வழங்கிய தீர்ப்புரைதான், இன்று அண்ணலுக்கு எடுக்கப்போகும் சிலைக்கு மூலக்கல்லாக அமைந்திருக்குமோ

மற்றைய மனிதர்களை எல்லாம் சத்தியம் சோதனை செய்திருக்கலாம். ஆனால், அண்ணல் காந்தியடிகளோ சத்தியத்தையே சோதனை செய்தவர்.

நம்முடைய மகாகவி பாரதி, காந்தியடிகளைப் பற்றிப் பாடும்போது, "முடிவிலாக் கீர்த்தி பெற்றாய், புவிக்குள்ளே முதன்மையுற்றாய்' என எழுதிய அன்று எழுதிய வாக்குமூலம், இன்று இங்கிலாந்திலே தீர்ப்புரை ஆகின்றது. வாழ் நீ எம்மான்!

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT