கட்டுரைகள்

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்போம்!

மேற்குத் தொடர்ச்சி மலைகள் இமயத்தைவிட காலத்தினால் மூத்தது. இந்த மலைத் தொடர் 126 ஆறுகள்,

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் இமயத்தைவிட காலத்தினால் மூத்தது. இந்த மலைத் தொடர் 126 ஆறுகள், பல சிற்றாறுகள், 29 பெரிய நீர்வீழ்ச்சிகள், சுணைகள், 50-க்கும் அதிகமான அணைக்கட்டுகள் மற்றும் கொடைக்கானல், உதகை, மூணாறு, நீலகிரி போன்ற பல மலை வாசஸ்தலங்கள், பசுமை நிறைந்த காடுகளைக் கொண்டது.
 தமிழ் பிறந்த தொட்டிலாக தென்கோடியில் அகஸ்தியர் வாழ்ந்த பொதிகை மலையிலிருந்து வரும் தென்றலுக்கு இணையாக எதுவுமில்லை. மாமதுரைப் பாண்டியன் அவையில் நீதி கேட்டு இறுதியில் கற்புக்கரசி கண்ணகி சென்றது மேற்குத் தொடர்ச்சி மலைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கம்பம் பகுதிக்கே.
 யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகின் பாரம்பரியம் மிக்கச் சின்னமாக மேற்குத் தொடர்ச்சி மலை 2011-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
 எத்தனையோ அற்புதங்கள், மனத்துக்கேற்ற ரம்மியமான அமைதி, புதிய உலகம், அரிய காட்சிகள், கானுயிரிகள் நிறைந்து மனத் துயரத்தைப் போக்கும் மாமருந்துதான் இந்த மலைத் தொடர்.
 குஜராத் மாநிலம் தொடங்கி மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகத்தின் குமரி முனை வரை 1,200 கி.மீ. மேலாகத் தொடர் சங்கிலி போல நீண்டு தென் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது மேற்குத் தொடர்ச்சி மலை. அரபிக் கடலிலிருந்து வரும் காற்றைத் தடுத்து தீபகற்ப இந்தியாவுக்கு மழைப் பொழிவைத் தருகிறது.
 இந்த மலைத் தொடரில் 7,402 பூக்கும் தாவரங்களும், 1,814 பூக்காத தாவரங்களும், அருமருந்தாக அமைந்த பல மூலிகைச் செடிகளும் - மரங்கொடிகளும், 6,000 வகையான பூச்சிகளும், 10 வகையான காட்டுத் தேனீக்களும், 508 வகை பறவை இனங்களும், 179 இருவாழ் உயிரினங்களும், 290 வகையான அரிய மீன்களும், அதிக அளவில் யானைகளும் வாழும் பகுதியாக இருக்கிறது.
 14 தேசியப் பூங்காக்கள், 44 வன உயிரின சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகங்கள் மட்டுமல்லாமல், புலி, சிறுத்தை, வரையாடு போன்ற 139 வகை பாலூட்டி உயிரினங்கள் இங்கு உள்ளன.
 பலவகையான நீர் வளம், வன வளம், கனிம வளம் ஆகியவற்றோடு 35 சிகரங்களைக் கொண்ட இந்த மலைத் தொடர், 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்க - மடகாஸ்கர் நிலப்பரப்போடு இணைந்த மலைத் தொடராக இருந்து பிரிந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன.
 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால், இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்தது என்று மற்றொரு பிரிவு ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற பல ஆறுகளின் நதிமூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகள்தான்.
 மணிமுத்தாறு, தென் பெண்ணை, வைகை, பெரியாறு போன்ற ஆறுகளின் நீர்வரத்தும் இங்கிருந்துதான். எண்ணற்ற பழங்குடி மக்கள் இந்த மலைத் தொடர்களில் வாழ்கின்றனர். அவர்களின் கலாசாரமும், வாழ்க்கை முறையும், தனித்துவம் மிகுந்த தாய்மொழியும் அலாதியானது.
 குற்றாலம், அகஸ்தியர், சுருளி, வெள்ளி நீர்வீழ்ச்சி, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி என இங்கு நீர்வீழ்ச்சிகள் ஏராளம். உதகை ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, லிட்சினி யானை ஏரி உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் செயற்கை ஏரிகளும் இங்கு அமைந்துள்ளன.
 அத்தனை இயற்கை வளங்களும் அமைந்த மலைகளின் வளத்தைப் படிப்படியாக, சில சுயநலவாதிகள் அழிக்க ஆரம்பித்தனர். பேராசை சக்திகளால் இந்தப் பசுமை நிறைந்த மலைகள் மொட்டையடிக்கப்பட்டு வருகின்றன.
 மரங்களை வெட்டி வனத்தின் பசுமையை அழித்தார்கள். குவாரிகள் என்ற பெயரில் மலையைத் துண்டாடினார்கள். ராட்சத குழாய்களைக் கொண்டு சுவை நீரையும் திருடத் தொடங்கினார்கள். பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகள் என வணிகரீதியில் மேற்குத் தொடர்ச்சி மலையையே கபளீகரம் செய்து வருகின்றனர்.
 மனிதர்கள் காடுகளை நோக்கிப் புறப்பட்டதும், காடுகளிலுள்ள விலங்குகள் நாட்டை நோக்கிப் புறப்படத் துவங்கின. இவர்கள் செய்த சுயநல கூத்துக்களால், புவி வெப்பமயமாகி பருவ மழை பொய்த்து, ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தது என இயற்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன.
 கேளிக்கைக்கும், மது அருந்துவதற்கும் காட்டுக்குள் சென்று காட்டை நாசப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. புல்காடுகளை அழித்து மனைகளாக மாற்றியதன் விளைவு உதகை மலைப் பகுதியே நிலச்சரிவுக்கு உள்ளாகியதை மறக்க முடியுமா என்ன?
 உதகை, நீலகிரி, மூணாறு, மேகமலை, கொடைக்கானல் போன்ற மலை நகரங்களில் பெருந்திட்டம் மற்றும் வனச் சட்டங்களை மீறி பண்ணை வீடுகளும், தேயிலைத் தோட்டங்களும் பெருகிவிட்டதால், மலையின் அமைப்பே ஆட்டம் காணுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்பட்டுள்ளது.
 வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள வருசநாடு பகுதியில் சில பேராசைக்காரர்களால் கஞ்சா பயிரிடப்படுவதும், வன விலங்குகள் வேட்டையாடப்படுவதும் நடக்கிறது. இங்குதான் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக தற்போது கண்காணிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
 இந்த மலைத் தொடரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக ஆனைக்கல் காடுகள், அன்சி தேசியப் பூங்கா, ஆரளம் காடுகள், அகத்தியமலை உயிர்க் கோள காப்பகம், அகத்திய வனம் உயிரியல் பூங்கா, பந்திப்பூர் தேசியப் பூங்கா, பன்னர்கட்டா தேசியப் பூங்கா, பத்திரா காட்டுயிர் உய்விடம், பிம்காட் காட்டுயிர் உய்விடம், பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம், சன்டோலி தேசியப் பூங்கா, சின்னாறு காட்டுயிர் உய்விடம், தான்டலி தேசியப் பூங்கா, இரவிகுளம் தேசியப் பூங்கா, கிராஸ்ஹில்ஸ் தேசியப் பூங்கா, இந்திரா காந்தி தேசியப் பூங்கா, இந்திரா காந்தி காட்டுயிர் உய்விடம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கரியான் சோலை தேசியப் பூங்கா, கர்நாலா பறவைகள் உய்விடம், கோய்னா காட்டுயிர் உய்விடம், குதிரைமுக் தேசியப் பூங்கா, முதுமலை தேசியப் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், முக்கூர்த்தி தேசியப் பூங்கா, நாகரகொளை தேசியப் பூங்கா, புது அமரம்பலம் காடுகள், நெய்யார் காட்டுயிர் உய்விடம், நீலகிரி உயிர்க் கோள காப்பகம், பழனிமலைகள் தேசியப் பூங்கா, பரம்பிக்குளம் காட்டுயிர் உய்விடம், பெப்பாரா காட்டுயிர் உய்விடம், பெரியார் தேசியப் பூங்கா, புசுபகிரி காட்டுயிர் உய்விடம், ரத்தினகிரி காட்டுயிர் உய்விடம், செந்துரிணி காட்டுயிர் உய்விடம், அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, சோமேசுவரா காட்டுயிர் உய்விடம், திருவில்லிப்புத்தூர் காட்டுயிர் உய்விடம், தலைகாவிரி காட்டுயிர் உய்விடம், வயநாடு காட்டுயிர் உய்விடம் ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
 மேற்குத் தொடர்ச்சி மலைகள் போலல்லாமல், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தனித்தனியாகத் துண்டிக்கப்பட்ட அமைப்பை உடையது. அதிலும் பசுமையைச் சூரையாடியே விட்டார்கள். திண்டுக்கல் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையின் அங்கமாக இருக்கும் சிறுமலைக்காட்டின் ஒரு பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. கொல்லிமலைக்கும், ஜவ்வாது மலைக்கும் அதே நிலைமை.
 மேற்குத் தொடர்ச்சி மலையைக் கண்காணிக்க உரிய கருவிகளும், போதுமான அளவு அலுவலர்களும் இல்லை என்பது பெரிய குறை. பல்வேறு வெளிநாட்டுக் கும்பல்களோடு நம்மவர்களும் சேர்ந்து இந்தப் பகுதியில் வேட்டையாடி விலங்கினங்களுடைய தோல் மற்றும் உடல்கூறுகளை அயல்நாடுகளுக்குக் கடத்துகிற நிலையும் உள்ளது.
 இந்த அவலங்களை எல்லாம் தீர்க்க வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தாலும், வணிக நோக்க ஆதிக்கச் சக்திகள் அரசின் உதவிகளைப் பெற்று காட்டுக்குள் புகுந்து தங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டுகிறார்கள். இதற்காகவே, மாதவ காட்கில் தலைமையிலும், கஸ்தூரிரங்கன் தலைமையிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டன.
 இந்தக் குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றக் கூடாது என்று கேரளத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. ஏனெனில், அவர்களால் மரங்களை வெட்ட முடியாது, குவாரி நடத்த முடியாது, உல்லாச விடுதிகள் கட்ட முடியாது, தங்களுக்குப் பணம் கொழிக்காது என்ற சுயநலத்தில் இந்த அறிக்கைகளை நிறைவேற்ற விடாமல் நெருக்கடி கொடுத்தனர்.
 அதற்கேற்றார்போல், தில்லியில் ஆட்சியிலுள்ள பாதுஷாக்களும் மாதவ காட்கில், கஸ்தூரிரங்கன் அறிக்கைகளைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். பத்து பேர் கொண்ட கஸ்தூரிரங்கன் குழுவின் அறிக்கை 2013 ஏப்ரல் 15-இல் மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டது.
 மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 சதவீத வனப் பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், கட்டடங்கள் கட்டுவது, குவாரிகள், அணைகள், மின் உற்பத்தித் திட்டங்கள், தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட வேண்டும்.
 இந்த மலைப் பகுதியில் கட்டுமானங்கள் கூடாது. புதிதாக எந்த நிலத்துக்கும் பட்டா வழங்கக் கூடாது. வன நிலங்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. அமைதிப் பள்ளத்தாக்கு, வருசநாடு போன்ற பல வனப் பகுதிகள் மிகவும் எச்சரிக்கையாகவும், கடுமையாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
 கஸ்தூரிரங்கன் அறிக்கையை விட, மாதவ காட்கில் அறிக்கையின் பரிந்துரைகள் இன்னும் கடுமையானவை.
 வளர்ச்சி, பேராசை, சுயநலம் என்ற நோக்கத்துக்காக இயற்கையின் அருட்கொடையான வளங்களை ஒருபோதும் அழிக்கக் கூடாது என்று மாதவ காட்கில் தன்னுடைய அறிக்கையில் தெளிவாக்கியுள்ளார்.
 கர்நாடகமும், கேரளமும் அரசுப் பணியில் விலக்குக் கோரும் பகுதிகளைத் தயார்படுத்தி வருகிறது. மகாராஷ்டிர மாநிலமும் இதே நிலைப்பாட்டைக் கொண்டு வருகிறது. கேரள மாநிலம் மூவர் குழுவை அமைத்து அந்த மாநில கிராமம்தோறும் கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கு எதிராக கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தியது. ஆனால், தமிழ்நாடு இது குறித்து எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
 தமிழக நீராதாரங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையிலே உள்ளன. அந்த நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற கஸ்தூரிரங்கன் அறிக்கையை ஆதரிக்கத் தமிழ்நாடு தவறிவிட்டது. இதுவரை மத்திய அரசு கேட்டு எந்தக் கருத்தையும் தமிழகம் தெரிவிக்காமல் உள்ளது கவலையைத் தருகிறது.
 மேற்குத் தொடர்ச்சி மலையில் மொத்தம் 1,60,000 ச.கி. மீட்டர் பரப்பளவில், தமிழகம் 28,200 ச.கி.மீட்டர் பரப்பளவைப் பெற்றுள்ளது. கேரளமோ 28,100 ச.கி. மீட்டரும், கோவா 1,075 ச.கி. மீட்டரும், மகாராஷ்டிரம் 58,400 ச.கி. மீட்டரும், கர்நாடகம் 43,300 ச.கி. மீட்டரும் பெற்றுள்ளன. மற்ற மாநிலங்கள் கருத்து சொல்லும்போது தமிழகம் மட்டும் மெüனியாகவே இருக்கிறது.
 இந்த இரண்டு அறிக்கைகளையும் பெற்ற பின்பும் மத்திய அரசு இவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த இரண்டு குழுக்களையும் மத்திய அரசுதானே அமைத்து அறிக்கை தரச் சொன்னது. அறிக்கைகளின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றுவதுதானே நியாயம்? அதைக் கிடப்பில் போட அவசியம் என்ன? இந்தக் கேள்விகளுக்கான முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
 கலாசாரத்திலும் ஒன்றோடு ஒன்று இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அழிவு நேர்கிறது என்பதை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்த சமுதாயத்தின் அங்கமாகத்தான் மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது. இயற்கையை காப்போம் வாரீர்.
 
 கட்டுரையாளர்:
 வழக்குரைஞர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT