வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், பெட் பாட்டில்கள், மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சிக்காக இந்தியாவுக்கு அதிக அளவில் அனுப்பப்பட்டு வந்தன.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம் இவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
உலக நாடுகளில் வளர்ந்த நாடுகள் பலவும் தங்களது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டுள்ளன. தங்கள் நாட்டின் முக்கிய நகரங்களை பசுமை நகரங்களாக அறிவித்துக் கொள்கின்றன.
வளரும் நாடுகள், ஏழை நாடுகளின் விழிப்புணர்வின்மையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வளர்ந்த நாடுகள், அவற்றை தங்களது குப்பைக் கிடங்குகளாகவே கருதுகின்றன.
சுற்றுச்சூழல் மேலாண்மை சவாலானது என்பதால் அவற்றை நிர்வகிப்பதற்குப் பதிலாக மக்களையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் தன்மை கொண்ட மின்னணுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை தாங்களே மறுசுழற்சி செய்யவோ, அழிக்கவோ வளர்ந்த நாடுகள் முயற்சிப்பதில்லை.
மாறாக, பிற நாடுகளுக்கு கன்டெய்னர்களில் ஏற்றி அனுப்பி விடுகின்றன. கழிவுகள் இறக்குமதியை சில ஏழை நாடுகள் வெளிப்படையாகவே அனுமதிக்கின்றன.
தடை விதிக்கப்பட்ட நாடுகளில் கள்ளத்தனமாக கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவதும் அவ்வப்போது நடைபெறுகின்றது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நச்சுக் கழிவுகளை இறக்குமதி செய்ய இந்தியாவில் அனுமதியில்லை.
ஆனால், மறுசுழற்சி செய்வதற்காக இறக்குமதி செய்ய எந்தவிதத் தடையும் இல்லாமல் இருந்தது. இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, பல்வேறு கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டன.
பிளாஸ்டிக் பொருள்களானது பெட்ரோலியப் பொருள்களை அடிப்படையாக வைத்து உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை உற்பத்தி செய்யும்போதே சூழல் மாசடைகிறது.
இந்த நிலையில், மறுசுழற்சி செய்யும்போது சூழல் மேலும் மாசடைகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் ஏழு சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்ய ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்புவதாகக் கூறி, இந்தியா போன்ற நாடுகளுக்கு செயல்திறன் குறைந்த பழைய கணினிப் பொருள்களையும், பிற பொருள்களையும் வளர்ந்த நாடுகள் அனுப்பிவிடுகின்றன. இவை சில காலங்களில் முற்றிலும் பயனற்றுக் கழிவுகளாகி விடுகின்றன.
இவ்வாறு இறக்குமதியாகும் கழிவுகளையும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சேரும் மின்னணுக் கழிவுகளையும் சேகரித்து மறுசுழற்சி செய்வோர், கழிவுகளில் உள்ள பொருள்களை உடைத்தெடுத்து விற்கின்றனர்.
பயனற்ற பகுதிகளையும், காலாவதியான மின்கலங்களையும் (பேட்டரி) எரிக்கின்றபோது வெளியாகும் நச்சு வாயுக்களால் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி துறைமுகத்துக்கு மாலத்தீவிலிருந்து வந்த சரக்குப் பெட்டகத்தில் இரும்புக் கழிவுகள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகத்தின்பேரில், சோதனையிட்டதில் இரும்புக் கழிவுகளுக்குள் கார், லாரி, வேன் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்பட்ட காலாவதியான மின்கலங்கள் இருந்தது தெரியவந்தது. இவை இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டவை என்பதும் தெரியவந்தது.
இதேபோல், இரும்புக் கழிவுகள் பெயரில் வந்த மற்றொரு சரக்குப் பெட்டகத்தில் யு.பி.எஸ்., இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நிக்கல் கேட்மியத்தாலான பழைய பேட்டரிகள் இருந்ததும் சோதனையில் தெரிய வந்தது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து காகிதக் கழிவுகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த சரக்குப் பெட்டகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 217 டன் எடையுள்ள ஆபத்தான நச்சுக் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றில் நோய்களைப் பரப்பும் மருத்துவக் கழிவுகள், ஆணுறைகள், பயன்படுத்திய நாப்கின்கள், ரப்பர் கழிவுகள், உடைந்த குறுந்தகடுகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
இதுபோல், கணினி இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கழிவுகள் அனுப்பப்பட்டு சோதனைகளில் சிக்கியுள்ளன. இதைவைத்துப் பார்க்கும்போது, சோதனையில் சிக்காமல் இதுநாள் வரை ஏராளமான சரக்குப் பெட்டகங்களில் நச்சுக் கழிவுகள் இறக்குமதியாகியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
தற்போது பிளாஸ்டிக், மின்னணுக் கழிவுப் பொருள்களை மறுசுழற்சிக்காக இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவுக்கு கழிவுப் பொருள்களை இறக்குமதி செய்ய பிற வழிகளில் ஈடுபட வெளிநாட்டு நிறுவனங்களும், கழிவு இறக்குமதியாளர்களும் முயற்சி மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
அதாவது, இந்தியாவில் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படாத வேறு பொருள்களின் பெயரில் கழிவுகளை இறக்குமதி செய்யும் வாய்ப்புள்ளது. அதேபோல், பிற பொருள்களுடன் மறைத்து ஆபத்து வாய்ந்த கழிவுப் பொருள்களை இறக்குமதி செய்யவும், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்புவதாகக் கூறியும் இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் குறித்து துறைமுகங்களிலேயே சோதனையிட்டு, அவற்றை நாட்டுக்குள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டியது அவசியமாகும்.
கழிவுகள் இறக்குமதிக்குத் தடை விதித்நதாலும் தொடர் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே அவற்றைத் தடுக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.