கட்டுரைகள்

கண்காணிப்பது மக்களின் கடமை

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தேர்தல்கள் என இரண்டு தேர்தல் திருவிழாக்களைக் காண்கின்றோம்.

வழக்குரைஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தேர்தல்கள் என இரண்டு தேர்தல் திருவிழாக்களைக் காண்கின்றோம். மக்கள் என்கிற மகேசன்களிடம்தான் ஜனநாயகத்தின் இறையாண்மை உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சரியில்லை என்றால் திரும்ப அழைக்கும் முறை அவசியம் நடைமுறைக்கு வரவேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் இது சாத்தியமில்லை என்று சொன்னாலும் ஜெயப்பிரகாஷ் நாராயண் வலியுறுத்திய கருத்தாகும் இது.
 அரசியலில் கிரிமினல்களாக இருந்தாலும் வெற்றிபெற முடியும் என்ற தைரியத்தை அனைவரும் பெற்றுவிட்டனர். சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு சமயம் கிரிமினல்கள் அரசியலில் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுர்ஜித் மட்டும்தான் பதில் கடிதம் எழுதி உரிய நடவடிக்கைகள் அவசியம் என்பதை ஆமோதித்தார்.
 கடிதம் எழுதிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் செயல்பட முடியாமல் உடல்நிலை குன்றி படுக்கையில் உள்ளார். சுர்ஜித்தோ இறந்துவிட்டார். ஆனால், குற்றவாளிகள் மக்களின் பிரதிநிதிகளாக அவைக்குச் சென்றுகொண்டே இருக்கின்றனர். இந்த அவலம் என்று மாறப் போகிறது?
 பணமும், மனித பலமும், மதமும் ஜாதியும்தான் இன்றைக்குத் தேர்தலை நிர்ணயிக்கின்ற அடிப்படை காரணிகள். தகுதி, தியாகம், களப் பணி, அர்ப்பணிப்பு என்பதெல்லாம் அவசியமில்லை. இப்படியான நிலை நீடித்தால் ஜனநாயகம் இல்லாமல் பணநாயகம், ரெளடிநாயகமாகத்தான் நாடு சென்றுவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
 ஆதிக்கப் பேர்வழிகள், குண்டர் படை எல்லாம் இன்றைக்கு அரசியல் களத்தில் சாதாரணமாகிவிட்டன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8-இன் படி, குற்றவாளிகள் தேர்தலில் பொறுப்புக்கு வர முடியாது என்றாலும், அதையும் மீறி தைரியமாக மக்கள் விரோதிகள் நாடாளுமன்றத்தையும், சட்டப் பேரவையையும் ஆக்கிரமிக்கின்றனர்.
 நாடாளுமன்றத்தில் ஒரு காலத்தில் கிருபளானி, லோகியா, அசோக் மேத்தா, மதுலிமாயி, என்.ஜி. கோரே, எஸ்.ஏ. டாங்கே, அண்ணா, கிரண் முகர்ஜி, பிரேம்பாசின், முகேஷ் குப்தா, எச்.ஏ. காமத், ஏ. ராமசாமி முதலியார், என்.ஜி. ரங்கா, எம்.ஆர். மசானி, எச்.எம். படேல், பிலு மோடி போன்றோர்கள் பண்டித நேரு காலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து ஆட்சியின் குறைகளை விமர்சித்த காலங்கள் இந்திய நாடாளுமன்றத்தின் பொற்காலம் ஆகும். நேருவும் எதிர்க்கட்சியினுடைய வாதங்களைக் கேட்டறிந்தார். தகுதியானவர்களையும் தன் கட்சி சாராதவர்களையும் தன்னுடைய அமைச்சரவைக்கு அழைத்து அமைச்சராக்கினார்.
 அம்பேத்கர், ஆர்.கே. சண்முகம் செட்டியார், சி.டி. தேஷ்முக், ஜான் மத்தாய், பல்தேவ்சிங் போன்றவர்களையெல்லாம் அமைச்சர்களாக்கி நாட்டுக்குப் பயன்படுத்தினார். ஆனால், இப்போது தகுதியான, நேர்மையான களப் பணியாளர்கள் தேவையில்லை என்ற நிலை அரசியல் களத்தில் ஏற்பட்டுவிட்டது.
 இரண்டு நாள்களுக்கு முன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆங்கிலத்தில் பார்லிமெண்ட் என்பதை எழுத்துப் பிழையாக எழுதியதைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ள வேண்டிய எண்ணம் ஏற்பட்டது. இப்படியெல்லாம் தப்பிலிகள் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களாகச் சென்று திரும்பியுள்ளனர்.
 இப்போது என்ன நிலைமை? நாடாளுமன்றம் கூடினாலும், விவாதங்கள் கிடையாது. கூடிய அடுத்த வினாடியே ஒத்தி வைக்கப்படுகிறது. கூச்சல், குழப்பம். நாடாளுமன்ற நெறிமுறைகளும், விதிகளும் மீறப்பட்டு கேலிக் கூத்தாகிவிட்டன. மக்களின் பிரச்னைகளை பேசவேண்டிய அவைகள் கடந்த 1985-இலிருந்தே சரியாக நடப்பதில்லை.
 நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு ரூ. 2.5 லட்சம் செலவாகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருடத்திற்கு அரசு கஜானாவிலிருந்து 850 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
 இவ்வளவு சலுகைகளும், பயன்களையும் பெற்றுக்கொண்டு மக்கள் பிரதிநிதிகளின் பணிகள் அனைத்தும் பயனற்ற நிலையில் உள்ளன. இம்மாதிரியான ஆரோக்கியமற்ற போக்கு நாட்டுக்குத் தேவைதானா என்பதை அடிப்படையில் நாம் சிந்திக்க வேண்டும்.
 குற்றவாளிகளாக இருப்பவர்களை அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தும் இன்னும் சிலர் தப்பித்துக்கொண்டு பொறுப்புகளில் உலாவுகின்றனர். மத்திய அமைச்சரவையில் 27 சதவீதமும், மாநில அமைச்சரவையில் 23 சதவீதமும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்பட்டவர்கள் உள்ளனர்.
 அமெரிக்கா போன்ற நாடுகளில் கையில் காசைப் பெற்றுக்கொண்டு கேள்விகளை எழுப்பியதனால் நாடாளுமன்ற பொறுப்புகளில் இருந்து சிலர் விடுவிக்கப்பட்டனர். இப்படியான சூழல் தவறிழைப்பவர்கள் மீது நம் நாட்டில் வரவேண்டும்.
 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தன்னுடைய தொகுதியில் மக்களைச் சந்தித்து களப்பணி ஆற்ற வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகளுக்கு அவசியம் சென்று நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். அப்படி ஆர்வமில்லாதவர்களுடைய பதவியைப் பறிக்க வேண்டும்.
 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதிப் பிரச்னைகளைப் பேசினார்களா என்பதை தொகுதி மக்களிடம் தெரிவிக்க வேண்டும். எளிமையாக, கம்பீரமாக நிமிர்ந்த நேர்நடையோடு, கண்ணியமிக்க வார்த்தைகளோடு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வலம் வரவேண்டும்.
 இன்றைய நிலையில் உள்ள அவலங்களைப் போக்கவேண்டுமென்றால் தேர்தலில் நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்.
 உலகில் 20க்கும் மேலான நாடுகளில், குறிப்பாக ஆர்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேஸில், கிரீஸ் போன்ற நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டு, சட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
 இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குரிமையைக் கட்டாயமாக்குவது முதன்முதலாகக் கர்நாடகாவில் பஞ்சாயத்து தேர்தலில் சட்டமாக்கப்பட்டும், அதை நிறைவேற்ற வேண்டிய செயல்பாடுகள் சரிவர நடைபெறாமல் அந்த நோக்கம் முடங்கிப் போனது.
 குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குரிமை கட்டாயமாக்கப்பட்டு, அவ்வாறு வாக்களிக்கும் கடமையைச் செய்யவில்லை என்றால் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும் என்று கொண்டு வந்த சட்டத்துக்கு அம்மாநில நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
 2014-இல் கட்டாய வாக்களிப்பு என்ற தனிநபர் மசோதாவை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனார்த்தன சிங், சிக்ரிவால், வருண் காந்தி ஆகியோர் மக்களவையில் கொண்டுவந்தனர். 2004-லிலும் 2009-இலும் இதே மாதிரியான மசோதா நாடாளுமன்றம் வந்து நிறைவேறவில்லை.
 ஆஸ்திரியாவிலும், பெல்ஜியத்திலும் வாக்களிக்காதவர்களுக்கு அபராதமும், சிங்கப்பூரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கமும், பெரு நாட்டில் பொது அங்காடியில் இருந்து வழங்கும் அத்தியாவசியப் பொருள்களை நிறுத்துவதும், பொலிவியா நாட்டில் மூன்று மாத ஊதிய ரத்தும், பெல்ஜியத்தில் அரசு ஊழியர் என்றால் பதவி உயர்வை நிறுத்துவது என கடுமையான விதிமுறைகள் உலகளவில் நடைமுறையில் உள்ளன.
 ஓட்டுக்குப் பணம் என்ற நிலைக்கு இந்திய வாக்காளர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். இதைப் போக்கக்கூடிய வகையில் உலக நாடுகளில் அமலில் இருக்கும், அரசே வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை ஏற்கின்ற முறை வேண்டுமென்று இந்திரஜித் குப்தா அறிக்கை 1999-இல் பரிந்துரை செய்துள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது.
 விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்குரிமை இந்தியாவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்று குரல்கள் கேட்கின்றன. இதுவும் நடைமுறைக்கு வரவேண்டும்.
 நாடாளுமன்றத் தேர்தலும், சட்டப் பேரவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படவேண்டும் என்ற பரிந்துரையும் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.
 இதுகுறித்தெல்லாம் என்னுடைய பொதுநலவழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் எவையெல்லாம் பரிந்துரைகளாக உள்ளனவோ, அவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி,வாய்ப்புள்ளவைகளை உடனே நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர இருக்கின்றது.
 மனமிருந்தால் மாற்றங்களை பொதுவாழ்வில் திடமாகக் கொண்டு வரலாம். அரசியல் சதுரங்கத்தில் நேர்மையாக களமாடினால் வரலாற்றுப் பதிவில் நேர்மையான இடமிருக்கும். அரசியல் என்பது அம்சதூளிகா மஞ்சமல்ல என்பதை பொதுவாழ்வில் உள்ளவர்கள் உணரவேண்டும்.
 ஜனநாயகம், நாடாளுமன்றம், தேர்தல்கள், மக்கள் நல அரசுகள் என்பதற்கெல்லாம் அச்சாணி தேர்தல். அந்தத் தேர்தலில் தகுதியற்ற கிரிமினல்கள் களத்தில் குதிக்காமல் கண்காணிப்பதும் தடுப்பதும் மக்களின் கடமை.
 அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னரும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றுகிறார்களா என்று கண்காணிப்பதும் மக்களின் கடமையே!
 
 கட்டுரையாளர்:
 வழக்குரைஞர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT