முகப்பு
கட்டுரைகள்

விஸ்வரூப உணவு வியாபாரம்!

உலக மக்களில் சுமார் 12 சதவீதம் பேர் உணவு வாங்கக்கூட போதிய வருமானம் இல்லாமல் வாழ்வதாக உலகப் புள்ளிவிவரம் கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன் பொருள், வறுமையால் வயிறு வெறுமையாகிவிட்டது. கால் பட்டினி, அரைப் பட்டினி என்று கடைநிலை மக்கள் வாழ்கின்றனர்.

கட்டுரைகள்

விஸ்வரூப உணவு வியாபாரம்!

உலக மக்களில் சுமார் 12 சதவீதம் பேர் உணவு வாங்கக்கூட போதிய வருமானம் இல்லாமல் வாழ்வதாக உலகப் புள்ளிவிவரம் கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன் பொருள், வறுமையால் வயிறு வெறுமையாகிவிட்டது. கால் பட்டினி, அரைப் பட்டினி என்று கடைநிலை மக்கள் வாழ்கின்றனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

உலக மக்களில் சுமார் 12 சதவீதம் பேர் உணவு வாங்கக்கூட போதிய வருமானம் இல்லாமல் வாழ்வதாக உலகப் புள்ளிவிவரம் கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன் பொருள், வறுமையால் வயிறு வெறுமையாகிவிட்டது. கால் பட்டினி, அரைப் பட்டினி என்று கடைநிலை மக்கள் வாழ்கின்றனர்.

சொல்லப்போனால், பணம் இல்லாததுவே குறை. உணவு இல்லாமல் போகவில்லை. காசு கொடுத்தால் உணவு கிடைக்கும். உணவுப் பஞ்சமோ, உணவுப் பற்றாக்குறையோ இல்லை. தேவைக்கு மேலாகவே உணவு உற்பத்தியாகி கிடங்குகளில் பத்திரமாகவே சேமிக்கப்பட்டு, பொதுவிநியோகமும் நிகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி இலவசமாகவே வழங்கப்படுகிறது. ஆகவே, பணமில்லை என்ற பேச்சும் இல்லை.

தமிழ்நாட்டைப் போல் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில் பொதுவிநியோக முறை ஒழுங்குடன் செயல்படுவதாகத் தோன்றவில்லை. ஆதிவாசிக் கூட்டம், பழங்குடியினர், பணம் பற்றாக்குறை காரணமாக மலிவு விலை ரேஷன் கோதுமையைக்கூட வாங்க வழியற்று வாடலாம். குறைந்த வருமானமுள்ள சில ஆப்பிரிக்க நாடுகளிலும் பட்டினிப் பிரச்னைகள் இருக்கலாம். இது ஒரு பக்கம்.

மீதி 88 சதவீத மக்கள் நிலை என்ன? இவர்கள் மூன்று வேளையும் வயிறு புடைக்க உண்பதாகக் கொள்வோம். ஆனால், இவர்கள் எதை உண்கிறார்கள்? இவர்கள் உண்பதில் ஊட்டச் சத்துகள் உள்ளனவா? நோயில்லாமல் வாழ்கிறார்களா? உண்பதில் மறந்தது எவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலாய் நிற்பவன் உணவு உலக விசுவரூபன்.

பசுமைப் புரட்சியால் பசி வெல்லப்பட்டது என்பார்கள். பசி மட்டுமா வெல்லப்பட்டது? கூடவே உணவும் வெல்லப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தோன்றிய பசுமைப் புரட்சி "உணவுப் புரட்சி' என்ற அசுரக் குழந்தையைப் பிரசவித்தது.

கடந்த 50 ஆண்டுகளில் அது படிப்படியாக வளர்ந்து இன்று மாபெரும் விஸ்வரூபனாக அல்லவா காட்சி தருகிறது! இந்த உணவு அசுரனுக்குப் பல்லாயிரம் முகங்கள், பல்லாயிரம் தோள்கள், பல்லாயிரம் கைகள், பல்லாயிரம் வயிறுகள், முப்பத்தி முக்கோடி தெற்றுப் பற்கள். இந்த கோர சொருபனை உருவாக்கிய பிரம்மா, இவன் வழங்கிய "பாஸ்தா' பிரசாதத்தை உண்ட காரணத்தினால் வயிறு வீங்கி மல்லாந்துவிட்டார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகை மீது இவன் பாதம் பதிந்து நிற்கிறது. ஒரு கரத்தை நீட்டினால் அந்தக் கை அமேசான் நதியை அள்ளிக் குடிக்கும். மற்றொரு கரம், நைல் நதியில் கை வைக்கும். மற்றொரு கரம் கங்கையைத் தொடும்.

உணவுப் புரட்சியுடன் "மினரல் வாட்டர் புரட்சி'யும் இணைந்துவிட்டது. சற்று கவனமாகப் பார்த்தால் இவன் யாரென்று விளங்கிவிடும். ஒரு பக்கம் பார்த்தால் மேகி நூடுல்ஸ் விற்கும் நெஸ்லேயாகத் தெரிவான். ஒரு பக்கம் பார்த்தால் பெப்சியாகவும், கோக்காகவும் காட்சி தருகிறான்.

இன்னும் எவ்வளவோ உண்டு! கார்கில் மான்சென்டோ, டூபாண்ட், பிராக்டர் அண்ட் கேம்பில், வால்மார்ட், மாக்மில்லன் எல்லோருமே உணவு உலக விஸ்வரூபனின் கரங்களே.

பசுமைப் புரட்சி விளைவித்ததை எல்லாம் உணவு விசுவரூபன் அள்ளிக்கொண்டு "அன்னதாதா'வாக வேஷம் போடுகிறான். குறைந்த வருமானமுள்ள ஏழை நாடுகளுக்கு "நானே அன்னதாதா' என்கிறான்; உயர்ந்த வருமானமுள்ள நாடுகளுக்கு நட்சத்திர உணவு தயாரிப்பவன்.

பசுமைப் புரட்சி விளைவித்த கோதுமை, அரிசி, மக்காச்சோள மலைகளில் முக்கி எழுந்த இந்த குண்டோதரன் கரும்புச் சர்க்கரை, சோயா, பாமாயில் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. வெண்ணைப் புரட்சி வழங்கிய பால், சீஸ், கிரீம் எல்லாம் இவனுக்கே. இந்த உணவு விஸ்வரூபன் இவ்வாறு கைப்பற்றிய உணவைச் சமைத்து, "கலோரி ஃபுட்' தயாரித்து பார்சல் கட்டி உலகம் முழுவதும் வினியோகிக்கிறான்.

யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத அளவில் உணவு உலக விஸ்வரூபனின் வியாபாரம் கொழிக்கிறது! தங்கள் வியாபார உத்திகளுக்கு சூப்பர் ஸ்டார் நடிகர்கள், நடிகைகள், மாடல் அழகிகள், மாடல் அழகர்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் வழியே புதிய, புதிய பொட்டல உணவுகளுக்கு சான்றிதழ்களைப் பெற்று வருகிறான். அவர்களையெல்லாம் ரோபோட் பொம்மைகளாக்கிவிட்டான்.

நூடுல்ஸ் சாப்பிடுங்கள், நோயே வராது என்று அந்த ரோபோட் பேசும். பெப்சி குடியுங்கள், மலையைப் புரட்டும் பலம் வரும், இளமை பொங்கும், முதுமை வராது என்று பேசும். உணவு உலக விஸ்வரூபர்கள் வழங்கும் பொட்டலங்களை "ரெடி டு உஹற்', "ரெடி டு ஏங்ஹற்' என்று புகழ்வார்கள். வேலை மிச்சம். சமையலறையே வேண்டாம். தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்த்தபடி உணவுக் கடை முடிந்துவிடும்.

பல வகையான பொட்டல உணவுகள், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பூட்டிய குளிர்பானங்கள், சாக்லேட்டுகள், சூடான பானங்கள், பாஸ்தா, பிஸ்ஸா, பர்கர், ஹாட்டாக் என்று நம்மைச் சுற்றியுள்ள "ஜங்க்' உணவுகள் யாவும் தவிர்க்க முடியாத வாழ்வாகிவிட்டது. எத்தனை உணவு நிறுவனங்கள்? எத்தனை சில்லறை அங்காடிகள்? எத்தனை விவசாய வியா

பாரிகள்?

அரிசியாகவும்,கோதுமையாகவும் மக்காச் சோளமாகவும் வயல்களில் விளைந்ததை என்னென்னவோ செய்து எதை,எதையோ கலந்து சாப்பாடாகவே மாற்றி உணவு மேசையில் உட்காரவைத்து சிறு கரண்டியில் எடுத்து ஊட்டிவிடுகிறார்கள். உணவு கெடாமல் இருக்க என்னென்ன ரசாயனங்கள் பயனாகின்றன? அவற்றால் ஏற்படும் தீமைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த உணவுகளில் என்ன சத்து

உள்ளது?

இப்படிப்பட்ட தயார் (ரெடிமேட்) உணவுகள் உடலுக்கு நன்மை தராது என்றும், இவற்றில் அளவுக்கு மீறிய மாவுச்சத்து, சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ளனவென்றும், இவற்றை உண்பவர்கள் அதிகம் சதைபோட்டுப் பருமனாவார்கள் என்றும், உடல் பருமன் காரணமாக இதய நோய், நீரிழிவு ஏற்படுகிறது என்று எடுத்துக்கூறிய தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், நல்லபடியாகப் பிறந்த குழந்தைகள் மாணவர்களாகும்போது குண்டாகிவிடுவதால் இவற்றை "ஜங்க் ஃபுட்' என்று உறுதிப்படுத்திக் குறைந்தபட்சம் பள்ளிக்கூடங்களில் குளிர்பான உணவுக் கடைபோட அனுமதிக்கக் கூடாது என்ற யோசனையை வழங்கியது.

சும்மா இருப்பானா, உணவு விஸ்வரூபன்? ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் மீது பாய்ந்தான். மோடி என்ன? ஒபாமா என்ன? உலகத் தலைவர்கள் எல்லோருமே என் கையில் அடக்கம். "ஏய், என்னய்யா ஜங்க் ஃபுட், பங்க் ஃபுட்.......' நல்லாப் புரிஞ்சுக்கோ நான் தருவதுதான் "கிங் ஃபுட்'. உணவு உலகச் சக்கரவர்த்திடா நான்! என்று சூளுரைத்து, "இதைத் தின்று பார்' என்று ஒரு பிஸ்ஸாவைப் பிய்த்து தே.ஊ. நிறுவனத் தலைவர் மீது விஸ்வரூபன் விட்டெறிந்தான்.

அதில் வெந்து நொந்து போயிருந்த ஒரு பச்சைப் பட்டாணியைப் பொறுக்கி எடுத்த தலைவர், "எதுவோ தப்பு நிகழ்ந்துவிட்டது. உங்கள் உணவு ஜங்க் அல்ல, இங்கே தான்...' என்று கூறி மன்னிப்புக் கேட்கவே, விஸ்வரூபன் விண்ணில் மறைந்தான். இவ்வாறு உலகம் முழுவதும் உடல் நலச் சீரழிவுக்குரிய உணவு வியாபாரம் ஏகபோகத்திலிருக்கிறது. இதிலிருந்து மீள்வது எப்போது? இப்போது தேர்தல் நேரம். கூடவே கோடையின் தாக்கம்.

வண்டி வண்டியாக தினமும் லட்சக்கணக்கில் கோக், பெப்சி, ஃபாண்டா, செவன்அப், மிராண்டா, தம்ஸ் அப் போன்ற "எனர்ஜி' பானங்களை உணவு விஸ்வரூபர்கள் ஊருக்கு ஊர் அனுப்பியவண்ணம் உள்ளனர். இவற்றை இளநீர், பனை நுங்கு, பழச்சாறு, நீர் மோர்,

பானகம், பதனீர் கொண்டு முறியடிக்க வேண்டும்.

என்ன செய்வது? இந்தியாவைப் பொருத்தவரை இந்த உணவு விஸ்வரூபர்கள் "மேக்அப் இந்தியாவின்' அங்கமாகிவிட்டார்கள். எதிர்ப்புக் குரலுக்கு பயந்து மேற்படி ஜங்க், ரெடிமேட் உணவு - பானங்களுக்கு அதிகபட்ச வரி போட்டு அரசு வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம். டாஸ்மாக்கின் கதைதான் தொடரும்.

எனினும் "ஜங்க்' உணவு வியாபாரம் செய்யும் விஸ்வரூபர்களை இயற்கை விவசாயிகளாலும், நஞ்சில்லா அங்காடிக் கூட்டமைப்பினாலும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். மேகி நூடுல்ஸின் மாற்று, இயற்கை அங்காடிகள் வழங்கும் அவல். அவல் ஒரு பாரம்பரிய "ரெடிமேட்' உணவு.

உப்புமாவிலிருந்து பலவகை சித்திரான்னங்களையும் செய்யலாம். எள்ளையும் உளுந்தையும் மையமிட்டுத் தயாரிக்கப்படும் பல பாரம்பரிய உணவுகளை பூப்பெய்தியப் பெண்களுக்கு வழங்கிவந்துள்ளனர். இப்படிப்பட்ட பாரம்பரிய உணவுகள் மீட்கப்பட்டால் ஆரோக்கியமான தாய்மார்களை உருவாக்கலாம்.

குளிர்நாடுகளில் விளையும் ஓட்ஸ் உண்மையில் ஒரு புஞ்சை தானியமே. வெள்ளைக்காரர்கள் அறிமுகப்படுத்தியதால் ஏற்றுக்கொண்ட நாம், "ரெடிமேட்' ஓட்ஸ் கஞ்சிக்கு அதிக விலை கொடுத்து உணவு விஸ்வரூபர்களை வாழவைக்கிறோம். அதேசமயம், இலக்கியச் சிறப்புள்ள தினை, சாமை, வரகு, குதிரைவாலி, கம்பு போன்ற சிறு தானியங்களை மறந்துவிட்டோம்.

தமிழர்கள் மறந்துவிட்ட சிறுதானியங்கள், இயற்கை அங்காடிகளில் கிடைக்கும். இவற்றைக் கொண்டே தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களும் கிடைக்கும்.

உலக உணவு விஸ்வரூபன் பலமுள்ளவன். உலக வங்கியையே விலைக்கு வாங்கும் சக்தியுள்ளவன். வாலையே மார்ட்டாக்கிவிட்ட இவன் வாலை நறுக்க முடியாவிட்டாலும், முகத்தில் ஒரு குத்துவிட்டு ஆறுதல் கொள்ளும் தகுதி, இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமே உண்டு.

கட்டுரையாளர்:இயற்கை விஞ்ஞானி.

ஆர்.எஸ். நாராயணன்

முழு கட்டுரையைப் படிக்க →