எல்லை மீறுகிறதா தேர்தல் ஆணையம்?
தேர்தல் ஆணையம் என்பது உச்சநீதிமன்றம், பணியாளர் தேர்வாணையம், பொதுத்தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டாளர் துறை போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்திய
கட்டுரைகள்எல்லை மீறுகிறதா தேர்தல் ஆணையம்?
தேர்தல் ஆணையம் என்பது உச்சநீதிமன்றம், பணியாளர் தேர்வாணையம், பொதுத்தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டாளர் துறை போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்திய
தேர்தல் ஆணையம் என்பது உச்சநீதிமன்றம், பணியாளர் தேர்வாணையம், பொதுத்தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டாளர் துறை போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்திய தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும்.
இந்த அமைப்பிற்கு அரசின் மேலாதிக்கமின்றி சுதந்திரமாகச் செயல்படும் வல்லமை வழங்கப்பட்டிருக்கிறது. நேர்மையான தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியானவுடன் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் வந்துவிடுகிறது. இந்த நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு வானளாவிய அதிகாரம் உண்டென்று காட்டியவர் டி.என்.சேஷன்.
இவர் தேர்தல் ஆணையராக இருந்தபோது, வாக்குச்சாவடியில் வெளி மாநிலத்தவரை தேர்தல் அலுவலர்களாகவும், பாதுகாப்புக்கு துணை ராணுவப் படையினரையும் நியமித்து தேர்தல் ஆணையத்தின் மேலாண்மையை நிலைநாட்டினார்.
எனினும், தேர்தல் ஆணையத்தின் ஒரு நபர் சர்வாதிகாரத்தைக் குறைக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் ஒரு தலைமை ஆணையர், இரண்டு ஆணையர்கள் என்ற மூன்று நபர் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது.
டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது தேர்தல் நேரத்தில் தங்கள் அலுவலகத்தை துஷ்பிரயோகம் செய்ததாக மத்திய அமைச்சர்கள் சந்தோஷ் மோகன் தேவ், மார்கரெட் ஆல்வா ஆகியோர் மீதும் அஸாம் முதல்வர் ஹிதேஷ்வர் சைக்கியா மீதும் நடவடிக்கை எடுத்தார். தங்கள் இருப்பிடம் குறித்து தவறான தகவல் தந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்திலும் சில நல உதவிகளை தேர்தல் நேரத்தில் மாநில அரசு அறிவித்ததால் பழநி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
அதேபோன்று, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பால் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தேர்தல் ஆணையத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வந்தது. தேர்தலில் நிற்பவர்கள் தவறான தகவல் தந்தால் அவர்களின் தேர்தல் விண்ணப்பத்தை நிராகரிக்கும் அளவிற்கு ஆணையத்தின் அதிகாரம் உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேர்தல் நேரத்தில் யார் வீட்டுச் சுவரிலும் யார் வேண்டுமானாலும் விளம்பரம் செய்யலாமென்ற எதேச்சாதிகாரம் தடை செய்யப்பட்டது. ÷இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி மூலம் தேர்தல் பரப்புரை கூடாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாக்குகளை விலைக்கு வாங்குவதும் வாக்களிக்க வாகன வசதி ஏற்படுத்துவதும் பெருமளவு தடை செய்யப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்புதல், இணையதளம், ஊடகம் அனைத்திலும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் நம் ஜனநாயகத்தின் நேர்மையான தேர்தலுக்கும், வாக்காளரின் மனநிறைவுக்கும் வழிகோலியிருக்கிறது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் மாநிலத் தலைமை தேர்தல் அலுவலர்கள் கீழ்மட்ட யதார்த்த நிலையை உணராமல் தினசரி போடும் உத்தரவுகள் அதிகாரிகளையும், பொது மக்களையும் முகஞ்சுளிக்க வைக்கின்றன.
பொதுமக்கள் தங்கள் குறைகளை திங்கள்கிழமை தோறும் மனுநீதி நாள் மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகத் தருவது வழக்கம். தேர்தல் அறிவிக்கையால் இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதனைக் காரணம் காட்டி புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், அவற்றில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட எந்த வேலையும் செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள். நல உதவிகள் வழங்குவதை வேண்டுமானால் நிறுத்திக்கொள்ளலாம். ஆனால், புகார் பெறுவதையும் நிறுத்த வேண்டுமா?
அதைப்போன்று, அரசியல் தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும் போது தங்கள் கட்சியின் வேட்பாளர் பெயரைக் கூறிவிட்டால் அவர்களின் போக்குவரத்து செலவு முழுவதும் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
உச்சகட்டமாக தலைவர்களின் சிலைகள் மூடப்பட வேண்டுமென்று கூறியதும், பின்பு உயிரிழந்த தலைவர்கள் சிலைகள் மூடப்பட வேண்டியதில்லை என்று கூறியதும், தேர்தல் ஆணையம் எதையும் சரிவர ஆராயாமல் உத்தரவுகள் பிறப்பிப்பதற்கு உதாரணங்கள் ஆகும்.
தேர்தல் ஆணையத்தின் தற்போதைய அதிரடிகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி வியாபாரிகள் தான். பூ வியாபாரி, புளி வியாபாரி, செங்கல் வியாபாரி, மிட்டாய் வியாபாரி, ஆடு, மாடு வியாபாரி, நகை வியாபாரி என பாதிக்கப்பட்ட வியாபாரிகள் பட்டியல் நீளுகிறது. இப்படி பலரிடமும் சென்ற தேர்தலின்போது கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக எவ்வளவு பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பதும் எவ்வளவு பணம் நிரபராதிகளிடம் கொடுக்கப்பட்டது என்பதும் இதுவரை கூறப்படவில்லை.
தமிழகத்தில் ஓர் அரசியல் கட்சி மீதுகூட, தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தமைக்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த முறையும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெருவாரியாக வியாபாரிகள், பொதுமக்களின் பணம் என்பது அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.
இதனை உற்றுநோக்கும்போது தேர்தல் ஆணையம் தனது புள்ளி விவரத்திற்காக அப்பாவிகளை வருத்துகின்றது என எண்ணத் தோன்றுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதுபற்றி எந்த அரசியல் கட்சியும் கேள்வி கேட்கவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
ஆவணமின்றி ரூ.50,000 வரை கொண்டு செல்லலாமென தேர்தல் ஆணையம் எதனை வைத்து முடிவு செய்தது என்பது தெரியவில்லை. ரூ.50,000-க்கு அதிகப்படியாக பணம் கொண்டு செல்ல, என்னென்ன ஆவணம் தேவைப்படும் என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியதாகவும் தெரியவில்லை. எனவே, வெளிப்படையாக அறிவித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை.
தேர்தல் ஆணையம் என்பது தேர்தலை ஒழுங்காக, பாரபட்சமின்றி நடத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தனக்கு தேர்தல் நேரத்தில் வானளாவிய அதிகாரம் உள்ளதென்று நினைத்து பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கும் விதத்தில் நடந்து கொண்டால் அது வரம்பு மீறிய செயலாகிவிடும்.
கட்டுரையாளர்:
வழக்குரைஞர்.