முகப்பு
கட்டுரைகள்

சேமிக்க வேண்டுமய்யா...

இந்தியர்களின் ஓய்வுகால வாழ்க்கைக்கான சேமிப்பு குறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் இயங்கி வரும் வங்கி நிறுவனம் ஒன்று அண்மையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கட்டுரைகள்

சேமிக்க வேண்டுமய்யா...

இந்தியர்களின் ஓய்வுகால வாழ்க்கைக்கான சேமிப்பு குறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் இயங்கி வரும் வங்கி நிறுவனம் ஒன்று அண்மையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

இந்தியர்களின் ஓய்வுகால வாழ்க்கைக்கான சேமிப்பு குறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் இயங்கி வரும் வங்கி நிறுவனம் ஒன்று அண்மையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், 47% பணி வயது இந்தியர்கள் ஓய்வு காலத்துக்கு சேமிக்கத் தொடங்கவில்லை என்றும், இது சர்வதேச சராசரியான 46 சதவீதத்தைவிட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட சரிபாதி பணி வயது இந்தியர்களிடம் சேமிப்பு பழக்கம் இல்லை என்பது போலும், அவர்கள் ஓய்வு காலத்தில் சிரமப்பட அது காரணமாக இருக்கும் என்ற தோற்றத்தையும் மேலோட்டமாக ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாம் யோசிக்கும் முன்பு அந்த நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய ஆய்வில் ஓய்வுகாலத்துக்காக சேமிப்பது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், எந்த நிலையில் மற்ற நாடுகள் உள்ளன என்று தெரிந்துகொள்வது அவசியம்.

பொதுவாக சர்வதேச அளவில் 63% பேர் குடும்பப் பாதுகாப்பையே நம்புகின்றனர். 56% பேர் மட்டுமே பொருளாதார பாதுகாப்பை விரும்புகின்றனர். இடையே உள்ள வித்தியாசம் இரு மனநிலையிலும் ஒத்துப்போகக்கூடியவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

குடும்பப் பாதுகாப்பை விரும்புவோரில் மெக்சிகோ, அர்ஜென்டினா, மலேசிய மக்கள் முதலிடத்திலும், எகிப்து, கனடா, அமெரிக்கா மக்கள் பாதியளவிலும் உள்ளனர் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்தியா குறித்து இந்த ஆய்வில் எதுவும் காணப்படவில்லை.

இதிலும், மெக்சிகோ மக்கள் பணி வயதில் முன்கூட்டியே சேமிக்கத் தொடங்குவதால், ஓய்வுகாலத்தில் மகிழ்ச்சியாக இருப்போம் என 82% பேர் தெரிவிக்கின்றனர். இங்கு ஓய்வு பெற்றவர்களில் 80% பேர் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

எனினும், மெக்சிகோவில் பணி வயதில் உள்ள 52% பேர் சேமிக்கத் தொடங்கவில்லை என இதே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச சராசரியைவிட ஆறு விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், முன்கூட்டிய சேமிப்பு மிகக் குறைவாக உள்ளதால், ஹாங்ஹாங் மக்களிடம் ஓய்வுகால மகிழ்ச்சி குறித்து குறைந்த அளவே நம்பிக்கை உள்ளது.

ஆனால், இவர்களில் பணிவயது சேமிப்பை தொடங்காதவர்கள் 42% பேரே உள்ளனர். இது சர்வதேச சராசரியைவிட நான்கு விழுக்காடு குறைவு.

ஓய்வுகாலத்தில் மகிழ்ச்சியாக இருப்போம் என நம்பிக்கை தெரிவிப்போரில் ஆஸ்திரேலியா (73%), கனடா (72%), சீனா (71%), பிரிட்டன் (70%), அமெரிக்கா (68%) மக்கள் முன்னணியில் உள்ளனர். இதில், இந்தியா சர்வதேச சராசரியான 67 சதவீதத்திலேயே வளர்ந்த நாடுகளுக்கு அடுத்த நிலையில் உள்ளது.

ஓய்வு பெற்றவர்களில் பிறருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சர்வதேச அளவில் 50% பேர் உள்ளனர். இதில், அரபு எமிரேட்ஸ் மக்கள் 73% பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

அமெரிக்கா (56%), பிரான்ஸ் (54%), சீனா (48%), பிரிட்டன் (43%), சிங்கப்பூர் (34%) ஆகிய நாடுகள் பின்தங்கி உள்ள நிலையில், இந்தியாவில் பிறருக்கு உறுதுணையாக இருப்பவர்கள் 68% பேர் உள்ளனர்.

பணி வயதில் சேமிக்கத் தொடங்காதவர்களின் சர்வதேச சராசரி 46% என்ற நிலையில், வளர்ந்த நாடுகளான சீனா, கனடா (48%), பிரான்ஸ் (53%), மெக்சிகோ (52%) மற்றும் அர்ஜென்டினா (65%), தைவான் (54%) என்ற அளவில் இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளன. மேற்கண்ட ஆய்வு 2015-ல் நடத்தப்பட்டது.

இதே நிறுவனம் 2014-ல் நடத்திய ஆய்வில் சேமிக்கத் தொடங்காதவர்களின் சராசரி 38%. இதில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் (53%), பிரான்ஸ் (48%), மெக்சிகோ, அரபு எமிரேட்ஸ் (46%), தைவான், கனடா (37%), சிங்கப்பூர் (33%), இந்தோனேசியா (28%), இந்தியா (26) ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன.

நூற்றுக்கணக்கான நாடுகளில் சுமார் 20 நாடுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு இணைய வழியில் மட்டும் (ஒரு ஆய்வுக்கு இரு நாடுகளில் மட்டும் நேரடி ஆய்வு) ஆய்வு செய்வதும், ஒவ்வொரு ஆய்வின்போதும் சில நாடுகளை சேர்த்தும், சில நாடுகளை விடுத்தும், (குறிப்பாக கடந்த இரு ஆய்வுகளிலும் ஜப்பான் இல்லை) ஒரு நாட்டிற்கு சுமார் 1500 பேர் என்ற அளவில் மட்டும் நடத்தப்படும் இதுபோன்ற ஆய்வுகள் எந்த அளவுக்கு உண்மையை ஒட்டி அமையும் என்பது தெரியவில்லை.

இந்தியாவில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பெரும்பாலான தனியார் நிறுவன நிரந்தர ஊழியர்கள் அனைவரும் நிச்சயமாக தங்களின் ஓய்வுகால வாழ்க்கைக்காக ஏதேனும் ஒருவழியில் சேமிக்கின்றனர். அதற்கு அரசும் உதவுகிறது.

அதேபோல, தனியார் நிறுவனங்களில் தாற்காலிக ஊழியர்களாக இருப்பவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் தங்களின் வருவாய்க்கு ஏற்ப சேமித்தே வருகின்றனர். ஆனால், இவர்கள் வங்கியில் மட்டுமே சேமிப்பதில்லை. வீட்டுமனைகளாக, வீடுகளாக, விலை மதிப்புமிக்க நகைகளாக சேமிக்கின்றனர்.

இந்த சேமிப்புகள் அனைத்தும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா எனத் தெரியவில்லை. அவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால், இந்தியாவில் சேமிக்காதவர்களின் எண்ணிக்கை 47 சதவீதமாக இருக்க வாய்ப்பில்லை.

கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக சர்வதேச அளவில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு, பல்வேறு வளர்ந்த நாடுகளும் நிதி பிரச்னையில் ஆட்டம்கண்ட போது, நம் நாட்டு மக்களின் அபரிமிதமான சேமிப்பு பழக்கமே இந்தியாவை இந்தப் பிரச்னையில் இருந்து காப்பாற்றியது.

அண்மைக் காலமாகக்கூட உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுவரும் நிலையில், வளரும் நாடான இந்தியா மட்டும் அவற்றையெல்லாம் சமாளித்து ஸ்திரத்தன்மையோடு விளங்குவதற்கு இந்தியர்களின் சேமிப்பு பழக்கமே காரணம்.

இரா. மகாதேவன்

முழு கட்டுரையைப் படிக்க →