அண்டை மாநிலமான கேரளத்தில் மணல் வளம் அதிகமாக இருந்தாலும் அங்கு மணல் அள்ள முடியாது. தமிழகத்திலிருந்து செல்கின்ற மணலை கேரளத்தில் கட்டடப் பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். உணவு விடுதியில், பண்டங்களின் விலையை பலகையில் எழுதி வைப்பதுபோல கேரளத்தில் மணல் விற்பனை நிலையங்களில் தாமிரபரணி மணல், கரூர் மணல், பாலாற்று மணல் என தனித்தனியாக விலைகளை எழுதி வைத்துள்ளனர்.
கேரளம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரம், மும்பை வரை சூறையாடிய மணல் லாரிகளில் நதிநீர் வடிய ஏற்றிக்கொண்டு செல்வதைப் பார்த்தால் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. கப்பலில் மாலத் தீவுக்கும் மணல் கடத்தப்படுகின்றது.
தனிப்பட்ட நபர்களின் நலனுக்காக நாட்டின் செல்வத்தையே கொள்ளையடிக்கின்றனர். எவ்வளவோ போராட்டங்கள். நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்பதுதான் கொடுமை. தற்போது கரூர் அருகே காவிரி ஆற்றின் தவிட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி போன்ற இடங்களில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளத் தொடங்கிவிட்டனர். இதற்காக காவிரி ஆற்றுக்குள்ளே நான்கு கி.மீ. அளவுக்கு பாதை அமைத்துள்ளனர்.
தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில், கருர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலம் மணல் குவாரியால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை. தேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதால் மணல் அள்ளிச் செல்லும் லாரிகளால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் கரூர் அருகே உள்ள கட்டிப்பாளையம், கொம்புப்பாளையம், தவிட்டுப்பாளையம், புகழூர், வேலாயுதம்பாளையம், தளவாய்பாளையம், செம்பாடபாளையம் போன்ற பகுதி மக்கள் இதை தடுத்து நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இங்கு மணல் கொள்ளையைத் தடுத்து காவிரியைக் காப்போம் என்ற இயக்கத்தை அவ்வட்டார மக்களே நடத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்க துவக்கிவிட்டனர்.
கரூர் அருகே இப்பகுதியில் மணல் அள்ளினால் பல்வேறுப் பாதிப்புக்கள் ஏற்படும். ஏற்கெனவே சாயப்பட்டறை கழிவு நீரும் கலக்கின்றது.
திருப்பூர் சாயப்பட்டரை கழிவுநீர் கலந்து கடும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியதால் செத்த நதி என அறிவிக்கப்பட்ட நொய்யல் ஆறு, கரூர் அருகே, புதிய மணல் குவாரி அமைய இருக்கும் இடத்தின் அருகில்தான் காவிரியில் கலக்கிறது.
இதன் நச்சுத்தன்மை காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஊர்களுக்கும், இங்கு இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெறும் அனைத்து ஊர்களுக்கும் பரவாமல் இருக்க இதுவரை இங்குள்ள மணல்தான் வடிகட்டியாக இருந்து சுத்திகரிப்பு செய்து கொடுக்கிறது.
மணல்குவாரி அமைந்து இயங்க தொடங்கினால், நச்சுத்தன்மை கொண்ட நீர் சுத்திகரிக்க வழியின்றி நொய்யல் ஆற்றின் நச்சுத்தன்மையை காவிரி ஆற்றில் கலக்கும். ஆற்றின் இரு கரையிலும் 30 கி.மீ. தூரம் பாதிப்பு ஏற்பட்டு கரூர், நாமக்கல் மாவட்டம் முழுக்க நிலத்தடி நீர் நச்சுத்தன்மையாகும். மக்களின் வாழ்வாதாரமும், நீரேற்றுப் பாசனம் மூலம் விவசாயம் செய்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.
காவிரியில் கலக்கும் இந்த நச்சுத்தன்மை கொண்ட நீரால் கரையில் உள்ள ஊர்களுக்கும், காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெறும் அனைத்து ஊர்களும் பாதிக்கப்படும்.
நச்சுத்தன்மை கொண்ட நொய்யல் நீரை அருந்துவதால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, மலட்டுத்தன்மையால் நமது சந்ததி இழப்பது உட்பட கடுமையான நோய்கள் எதிர்வரும் பத்தாண்டுகளில்
ஏற்படும்.
ஆண்டு முழுக்க வந்து காவிரியில் கலக்கும் நச்சுத்தன்மை கொண்ட நொய்யல் நீர் ஆற்றுமணலால் சுத்திகரிக்க வழியின்றி, திருச்சி - தஞ்சை மாவட்டத்திற்கும் செல்லும். இதனால் திருச்சி - தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெறும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மக்களும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
ஆற்றினுள் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ள பகுதிகள் எவை என்பதை கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும் நட்டுப் எல்லையை வரையறுத்து பிரித்துக் காட்ட வேண்டும் என்று சொன்னாலும் அப்படி எங்கும் இதுவரை அமைத்து செயல்பட்டது இல்லை. ஆறு முழுக்கவே களிமண் மட்டம் வரை மணல் அள்ளுவது என்பதுதான் இங்கும் நடக்கும்.
காவிரி ஆற்றில் இருந்து ஆண்டு முழுக்க பாசன வசதி பெறும் வாங்கல் வாய்க்காலின் ரெகுலேட்டர் பகுதி, ஆற்றுமணல் அள்ளப்பட்டதால் ஐந்து அடி கீழே ஆழமான பள்ளத்தில் உள்ளது.
நூற்றாண்டு காலமாக பாசனம் நடைபெற்று வரும் வாங்கல் வாய்க்காலில், தற்போது காவேரி ஆற்றில் வெள்ளம் வரும் போது மட்டும்தான் பாசனம் நடைபெறுகிறது. மணல்குவாரி அமைத்து இயங்க தொடங்கினால் களிமண் மட்டம் வரை மணல் அள்ளப்பட்டு விடும். இதனால் பாரம்பரிய வாங்கல் வாய்க்காலின் பாசனம் முற்றாக அழியும்.
குவாரி அமையும் பகுதிக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலமும் (சஏ-7), புதிதாக கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலமும்(சஏ-7), ஆற்றில் நீர் ஓடும் அதன் தூண்களின் அடிதளத்திற்க்கு (பவுண்ட்டேசன்) கீழே 5 அடி முதல் 10 அடி வரை மணல் அரிக்கப்பட்டு உள்ளது.
மணல்குவாரி அமைத்து இயங்க தொடங்கினால் பாலம் முழுக்க மணல் அரிக்கப்பட்டு பாலம் உடையும் நிலை ஏற்படும்.
கர்நாடக அரசின் அடாவடியால், காவிரி ஆற்றின் குறுக்கே பல்வேறு அணைகள் கட்டப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நீர்வரத்து முறையாக இல்லாததால் ஆற்றில் மணல் வரத்து என்பது இல்லாமல் உள்ளது. அப்படியே எப்போதாவது மணல் வந்தாலும் குவாரி அமையும் பகுதிக்கு 10 கிலோ மீட்டர் முன்பு உள்ள ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் மணல் தேங்கும்.
எனவே புகளூர் பகுதியில் மணல்குவாரி அமைத்து மணல் அள்ளப்பட்டால் இப்பகுதி அழிவது நிச்சயம். இங்கு அமைய இருக்கும் மணல்குவாரிக்கு முன்புறம் திருச்சி முக்கொம்பு வரை முழுக்க ஆற்றில் மணல் அள்ளப்பட்டு விட்டதால் வரும் மணல் பெரும்பாலும் முன்புறம் ஆற்றில் தோண்டப்பட்டுள்ள குழிகளுக்கு அடித்து செல்லப்படும். இப்பகுதியில் மீண்டும் மணல் சேருவது என்பது நூறு ஆண்டுகள் ஆனாலும் நடக்காது. இதனால் எதிர்காலத் தலைமுறையே இங்கு வாழ முடியாது.
ஆற்றில் ஓடிவரும் நீரை மணல்தான் பிடித்து வைக்கிறது. மணல்குவாரிகள் களிமண் வரும் அளவிற்கு மணலை அள்ளுவதுதான் நடைமுறையாக உள்ளது. இங்கும் அதுதான் நடக்கும். களிமண் வரும் வரையிலும் மணல் சுரண்டப்பட்டுவிட்டால், ஆறு ஆற்றலை இழந்துவிடும். அதன் பிறகு, ஆறும் நமதுவீட்டு குழாயும் ஒன்றுதான்.
வீட்டுக் குழாய்கள் திறந்தவுடன் தண்ணீரைச் சடசடவெனக் கொட்டித் தீர்ப்பது போல, ஓடிவரும் நீரை விரைவாகக் கடலுக்குள்கொண்டு சேர்த்துவிடும். நமது பகுதியில் வெறும் உயிரற்ற தண்ணீர் கடத்தியாக நமது காவிரி ஆறு மாறிவிடும்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலத்தை (NH-7) ஒட்டியே ஆற்றிற்குள் இறங்கவும், புதிதாக கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தை (NH-7) ஒட்டியே ஆற்றில் இருந்து மேலே ஏறவும் ஆற்றுக்குள் நிரந்தரமான சாலைகளை மணல்குவாரிக் காரர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.
மணலை எடுத்துச் செல்வதற்கு ஆற்றுக்குள் நிரந்தரமான சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்தக் கூடாது என்ற விதியை மீறுவதுடன், குவாரியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் (NH-7) தொடக்கதில் இருபக்கமும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பாதை பிரிவதால் அந்த இடத்தில் பல்வேறு விபத்துகளால் நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர். இனி ஆயிரக்கணக்கில் மக்கள் இறப்பார்கள்.
நெடுஞ்சாலையை ஒட்டி மணல் லாரிகள் வர பாதை அமைக்க கூடாது என்ற விதி மீறப்படுகிறது.
ஏற்கெனவே பாதி ஆற்றில் களிமண் மட்டம் வரை மணல் அள்ளப்பட்டு விட்டதால் அங்கு நீரோட்டம் பாதிக்கப்பட்டு அதனால் ஆற்றின் கரைகள், அக்கரைகளையொட்டி வளர்ந்திருக்கும் தாவர வகைகள், ஆற்றினுள் வளர்ந்து நிற்கும் புல் வகைகள், ஆற்று நீரில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்துவரும் மைக்ரோப்ஸ் (microbes) எனப்படும் நுண்ணுயிரிகள், அவற்றை உண்டு வாழும் மீன்கள் இவையெல்லாம் அழியும்.
ஆறு உற்பத்தியாகும் இடம் தொடங்கி, அது சமவெளிப் பகுதியில் பாய்ந்து கடலில் கலக்கும் வரையிலும் அதன் இரு கரைகளிலும் வளர்ந்து நிற்கும் தாவரவகைகள் ஆற்றின் நீரோட்டத்திற்கு அவசியமானவை.
அத்தாவரங்கள் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்காலங்களில் தமது தேவைக்கும் அதிகமான நீரை உறிஞ்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் அரணாக விளங்குகின்றன. கோடைக் காலங்களில் தம்மிடமிருந்து நீரைவெளியேற்றுவதன் மூலம் ஆறு வறண்டு போய்விடாமல் காப்பாற்றுகின்றன.
ஆற்றுப் படுகையையொட்டியுள்ள மண்ணின் தன்மைக்கேற்ப இயற்கையாக வளரும் தாவர இனங்களுக்கு மட்டும்தான் ஆற்றின் நீரோட்டத்திற்கு உதவும் ஆற்றல் உண்டு. இந்த இயற்கை தாவரங்கள் அழிக்கப்பட்டால் அல்லது நதிக்கு அந்நியமான தாவர இனங்கள் அதன் கரைகளில் வளர்க்கப்பட்டால் இந்த தொடர் சங்கிலி விளைவுகள் அற்றுப் போய்விடும்.
நமது ஊரில் ஆற்றில் பல இடங்களில் எங்கு பார்த்தாலும் சீமைக் கருவேலம் மரமாக மட்டுமே உள்ளது.
மணல் குவாரியால் ஆற்றுமணல் தரைமட்டம் வரை அள்ளப்படும். ஆற்று மணலை அடியோடு அள்ளுவதால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, மணலை அள்ளும்பொழுது ஆற்றின் கரைகளுக்கும் சேதம் ஏற்படும். ஆற்றின் கரைகள் பலவீனப்படும்பொழுது, ஆற்றின்கொள்ளளவு குறையும்.
அதன் காரணமாகவும் மணல் அள்ளும் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடும் பாதிப்படையும்.
காவேரி ஆற்றில் - புகளூர், நடையனுர், தோட்டக் குறிச்சி, கடம்பன் குறிச்சி ஆகிய இடங்களில் புதிதாக மணல் குவாரி அமைக்க அனுமதி கொடுத்து அதற்கான வேலைகளும் நடந்து வருவதை அனைவரும் பார்த்து வருகிறோம்.
காவிரி ஆற்றில் ஏற்கெனவே மணல் குவாரி இயங்கிய பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு மணல்அள்ளப்பட்டுள்ளது.
நம்மை வாழவைக்கும் காவிரி ஆறு, மணல் கொள்ளையால் அழிக்கப்படுவதை நாம் வேடிக்கை பார்க்கலாமா?
கட்டுரையாளர்:
வழக்குரைஞர்.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.