கட்டுரைகள்

காற்று மாசு: கட்டுப்படுத்த வேண்டும்

காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2040-க்குள் அபாயகரமான அளவில் அதிகரிக்கும் - என சர்வதேச எரிசக்தி கழகம் எச்சரித்துள்ளது.

என்.எஸ். சுகுமார்

காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2040-க்குள் அபாயகரமான அளவில் அதிகரிக்கும் - என சர்வதேச எரிசக்தி கழகம் எச்சரித்துள்ளது.

உலகளவில் ரத்த அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், புகை பிடித்தல் ஆகிய மூன்று விஷயங்கள் மனித உடல்நலத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

இவை தவிர, நான்காவதாக காற்று மாசுபாட்டால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வசிப்பிடத்திலும், வெளியிலும் காற்று மாசு அதிகரிப்பதே இறப்புக்கு முக்கியக் காரணம். அமிலம்,

உலோகம், மண், தூசு, சல்பர் ஆக்ûஸடு, போன்றவை காற்றில் அதிகமாகக் கலக்கும் போது அவை மரணத்தை ஏற்படுத்துகின்றன.

காற்றில் கலந்துள்ள மிகச்சிறிய பொருள்களை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், இருதய கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க எரிசக்தி பயன்பாட்டில் மாற்றங்கள் கொண்டு வந்தால்தான் முடியும்.

எரிசக்தியை நாம் முறையின்றியும், கட்டுப்பாடில்லாமலும் பயன்படுத்துவதால் வாழ்நாளில் முன்கூட்டியே மரணங்கள் நிகழ்கின்றன. இதில் ஆசிய நாட்டினர் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

உலகளவில் புகை வெளியிடுதலை குறைக்க நடவடிக்கை எடுத்தாலும் போதாது. காற்றின் தரத்தை உயர்த்துவது ஒன்றுதான் இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் என சர்வதேச எரிசக்தி கழக அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றானது பலதரப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. காற்று இல்லாமல் உயிரினங்கள் வாழ்வது இயலாதது. எனவே தான் காற்று "பிராண வாயு' என்றும் அழைக்கப்படுகிறது.

இயற்கை வழங்கிய இந்தக் காற்றை மாசுபடுத்தினால் இழப்பு நமக்குத்தான்.

காற்றின் வழியாக மிக எளிதில் நோய் பரவும் வாய்ப்புள்ளது. எடை குறைந்த குழந்தைகள் பிறக்க காற்று மாசு காரணமாக இருப்பதாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுரையீரல் தொற்று, சுவாசப் பிரச்னைகள் உள்ளிட்டவை ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில மாசுபாடும், நீர் மாசுபாடும் குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு உள்பட்டது. அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும், சுகாதாரக் கேடுகளும் குறிப்பிட்ட சில இடங்களையே பாதிக்கும். ஆனால் காற்று மாசுக்கு

குறிப்பிட்ட எல்லை என்று ஒன்று இல்லை. வாகனப் புகையால் மட்டும் ஆண்டுக்கு பல லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.

நீர் மாசும், நில மாசும் குறிப்பிட்ட ஒரு நாட்டில் ஏற்படும்போது அந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் காற்று மாசுபடும்போது அதன் தாக்கம் பிற நாடுகளையும் பாதிக்கும்.

உதாரணமாக 2010-ஆம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்ததால் எழுந்த புகை மண்டலத்தால் வான்வெளியில் விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது ஐஸ்லாந்து

மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் பலவும் விமானப் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதுபோல் கரியமிலவாயு போன்ற செயற்கையாக காற்று மாசுபாட்டை அதிகளவில் வெளிப்படுத்தும் நாடு, பிற நாடுகளையும் பாதிப்படையச் செய்கிறது. கரியமில வாயுவை அதிகளவில்

வெளியேற்றுவதில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.

அந்நாட்டின் தனிநபர் கரியமிலவாயு வெளியேற்றம் அதிகம். பசுமைக் குடில் வாயுக்களில் ஒன்றான கரியமில வாயு புவிவெப்பமடைவதற்கு முக்கியக் காரணமாகும்.

ஆனால் புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயர்ந்து மூழ்கும் வாய்ப்பு என்னவோ கடல் மட்டத்துக்கு அருகில் உள்ள தாழ்வான நிலப்பரப்பில் உள்ள நாடு தான். எனவே காற்று மாசுக்கு குறிப்பிட்ட

எல்லை என்று ஒன்று கிடையாது.

பொதுவாகவே காற்றுக்கு தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. காட்டுத் தீ உள்ளிட்ட இயற்கையான சீற்றங்களால் காற்று மாசுபடும் போதிலும் தானாக சுத்திகரிப்பு செய்து கொள்ளும்.

அதற்கேற்ப மரங்கள், வனங்கள், மலைப்பகுதிகள் அதிகரித்துக் காணப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட ஓர் அளவுக்கு மேல் காற்று மாசினை அதிகப்படுத்தும்போது வளிமண்டலத்தால் தக்க வைத்துக்கொள்ள

முடியவில்லை.

காரணம் இயற்கைச் சீற்றங்களைக் காட்டிலும் செயற்கை முறையிலான நச்சுக்காற்று வெளியேற்றப்படுவது அதிகரித்துள்ளது.

கரியமில வாயு போன்ற நச்சு வாயுக்களை வெளியிடும் வாகனங்கள், தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், ஆக்ஸிஜனை வெளியிடும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

காற்று மாசைக் குறைக்க பழைய டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க சில மாநிலங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. எனினும் காற்று மாசைக் குறைக்க வாகனங்களில் குறைந்த அளவு

கரியமில வாயுவை வெளியேற்றும் வகையிலான என்ஜின்களை தயாரித்து பயன்படுத்துதற்கான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அதுபோல் தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்களில் குறைந்த அளவு காற்று மாசை ஏற்படுத்தும் வகையிலான தொழில்நுட்ப முறைகளைப் புகுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக அளவு கரியமில வாயுவை உட்கொள்ளும் மரங்களை வளர்ப்பது காற்று மாசைக் குறைக்க உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

காரிலிருந்த ரூ. ஒரு லட்சம் நூதன முறையில் திருட்டு

மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT