இன்றே, இப்போதே...!
அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நான் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவமாகவும்,
அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நான் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவமாகவும், பல அரசியல் உண்மைகளை உணர்த்தும் பாடமாகவும் இருந்தது. தமிழகத்திலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் தேர்தல் சீர்திருத்தம் ஓர் இன்றியமையாத தேவையாக இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
நான் போட்டியிட்ட இராதாபுரம் தொகுதியில் இரண்டு பெரிய கட்சிகள் ஒளிவுமறைவின்றி திறந்த வெளியில் பணப் பட்டுவாடா செய்தன. மூன்று நாள்களாக மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், மதுபானங்கள் தாராளமாகக் கரைபுரண்டு ஓடின.
எங்கு நோக்கினும் என்னிடம் இரண்டாயிரம் வாக்குகள் இருக்கின்றன, இரண்டு லட்சம் பணம் தந்தால் உங்களுக்கு மாற்றி விடுகிறேன் என்று பேரம் பேசும் அரசியல் புரோக்கர்கள் ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்தனர். நடப்பது ஜனநாயகத் தேர்தலா அல்லது கமிஷன் கடை வியாபாரமா என்றே சிந்திக்கத் தோன்றியது.
இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பதவிகள் எல்லாம் அரசியல் கட்சிகளாலும், தேர்தல் தாதாக்களாலும் பொதுவெளியில் ஏலம் விடப்படும் நிலை உருவாகிவிடும். இந்த அவலம் நடந்தேறத் துவங்கிவிட்டது என்பதுதான் உண்மை.
பெரிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப மனுவை அதிக விலையில் விற்கின்றன. இடம் கொடுக்கும்போது எத்தனை கோடிகள் செலவு செய்வீர்கள் என்றே கேட்கின்றன. பணம் படைத்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுக்கின்றன. கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கு கோடிகள் கைமாறுகின்றன. இது ஜனநாயகம் அல்ல, பணநாயகம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டோம்.
நிலைமை கட்டுக்கு மீறி போகாமல் இருக்க வேண்டுமானால், நாம் உடனடியாக இயங்கியாக வேண்டும். முதலாவதாக, தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஆட்சியில் இருக்கும் கட்சி அல்லது கூட்டணி பதவி விலகிவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும். இது ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அத்துமீறாமலிருக்கவும், அதிகார துஷ்பிரயோகங்களை தடுக்கவும். தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றி பணி புரியவும் பெரிதும் உதவும்.
இரண்டாவதாக, ஒரு வேட்பாளர் தேர்தலில் ஒரு சிறிய ஊழல் செய்தாலும், அது தகுதி இழப்புக்கான காரணமாகவும், வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிட முடியாத கட்டாயமாகவும் கொள்ளப்பட வேண்டும். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, பரிசுப் பொருள்கள் வழங்குவது போன்ற செயல்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தேர்தலில் பணம் படுத்தும் பாட்டை அறவே நீக்கியாக வேண்டும். பணம் எடுத்துச் செல்லப்படுவதை, பட்டுவாடா செய்யப்படுவதை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு அந்தப் பணத்தில் 25 விழுக்காட்டை சன்மானமாக வழங்க வேண்டும்.
துரிதமாக, திறமையாக இயங்கி தவறுகளைக் கண்டுபிடிக்கும், தடுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், பண முடிப்பும் கொடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் குடிமக்கள் அனைவருமே காவல் துறையினராக (citizen police) இயங்கும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவை அரசே ஏற்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, அரசுக்கு வரிகட்டுகிற கட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை நிர்ணயம் செய்து, தேர்தல் ஆணையம் அதனை வழங்கலாம். அதற்கு அதிகமாக செலவு செய்வது தடுக்கப்பட வேண்டும். இதனை மேற்பார்வை பார்ப்பதற்கும், முறைப்படி நிர்வகிப்பதற்கும் திறமையான அதிகாரிகளும், கட்டமைப்புகளும் நம்மிடம் இருக்கின்றன.
சிறிய கட்சிகள், புதிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் போன்றோர் ஒரு குறிப்பிட்ட அளவு வாக்குகள் வாங்கும்பட்சத்தில், அவர்கள் செய்த அனுமதிக்கப்பட்ட செலவை தேர்தல் ஆணையம் திருப்பி அளிக்கலாம். குறிப்பிட்ட அளவு வாக்குகள் வாங்காதவர்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.
நான்காவதாக, சின்னங்களை ஒழித்தாக வேண்டும். சின்னங்கள் கல்வி அறிவற்ற இந்தியர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட காலாவதியாகிவிட்ட ஒரு முறை. பெரும்பாலான மக்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கும் நிலையில், தற்போது வேட்பாளர்களின் படங்களும் வாக்களிக்கும் இயந்திரத்தில் சீட்டில் இடம்பெறுவதால், சின்னங்களுக்கான தேவை இல்லாமல் ஆகிப் போகிறது.
சக்திமிக்க அரசியல் கட்சிகளின் சின்னங்கள் சிலுவை, பிள்ளையார், பிறை எனும் மத அடையாளங்கள் போன்று மாறிக் கிடப்பதால், அந்தக் கட்சிகள் அதிக ஆதாயம் அடைகின்றன. அல்லது குறைந்தபட்சம் கட்சிகளின் நிரந்தர சின்னங்கள் நீக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படும் முறை கொண்டுவரப்பட வேண்டும்.
ஐந்தாவதாக, வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, பழைய முறையான வாக்குச் சீட்டுகளையே பயன்படுத்த வேண்டும். இந்த அரசு இயந்திரங்கள் பற்றி வேட்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் முழு நம்பிக்கையும், திருப்தியும் இல்லவே இல்லை. இவை பற்றி பல கேள்விகளும், சந்தேகங்களும் நிலவுகின்றன.
எனவே, ஜனநாயகத் தேர்தலில் வாக்காளர்களுக்கு முழு ஈடுபாடு, அர்ப்பணிப்பு வரவேண்டுமென்றால், அவர்கள் நம்பிக்கையைப் பெறுகிற முறையில் வாக்களிக்கும் முறை மாற்றப்பட வேண்டும். அஞ்சல் வாக்குகளிலும், அயல்நாடுகளில் வசிப்போர் வாக்களிப்பதிலும் உள்ள குழப்பங்கள் நீக்கப்பட வேண்டும்.
ஆறாவதாக, ஒருவர் ஒரு பதவியை இரண்டு முறைக்கு மேல் வகிக்க முடியாது என்றொரு விதிமுறையைக் கொண்டு வந்தாக வேண்டும். இப்படிப்பட்ட நிபந்தனைகள், வரைமுறைகள் இல்லாமலிருப்பது அரசியல் பதவிகளை ஒரு சிலர் நீண்ட காலம் அனுபவித்து, அவற்றை தங்கள் குடும்பங்களுக்குள் முடக்கிவைத்து, அதிகாரம் செலுத்துவதற்கும், அத்துமீறுவதற்கும், பெரும் ஊழல்கள் செய்வதற்கும் வழி வகுக்கிறது.
ஏழாவதாக, ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும். இது மக்கள் பணத்தை விரயம் செய்வதாலும், ஜனநாயகத் தேர்தலை பதவி விளையாட்டாகக் கருதுவதாலும் இந்த ஏற்பாடு தடுக்கப்பட்டாக வேண்டும்.
அதேபோல, ஏற்கெனவே ஒரு பதவியில் இருப்பவர், அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் இன்னொரு தேர்தலில் நிற்க முடியும் என்கிற விதிமுறை கொண்டுவரப்பட வேண்டும். தேவையின்றி மக்கள் பணத்தை விரயம் செய்து, ஒருவர் தனக்கான சுயநல பதவி வேட்டை நடத்துவதை நிச்சயமாக அனுமதிக்கக் கூடாது.
எட்டாவதாக, வாக்குச் சாவடிகளில் முகவர்களை நியமிப்பதைத் தடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலும், அடையாள அட்டைகளும் தவறுகளின்றி தயாரிக்கப்படுவதால், இவற்றை சரிபார்ப்பதற்கென தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், வாக்குச் சாவடி முகவர்கள் தேவையற்றவர்களாகிறார்கள்.
பெரிய கட்சிகள் தங்கள் கட்சிக்காரர்களை வாக்குச் சாவடிக்குள்ளே அனுப்புவதற்கும், அராஜகம் செய்வதற்கும்தான் இந்த ஏற்பாடு உதவுகிறதே தவிர அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மக்களுக்கோ குறிப்பிடத்தக்க அளவில் இது பயனளிக்கவில்லை.
ஒன்பதாவதாக, சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுவதை முறைப்படுத்த வேண்டும். பல நேரங்களில், பெரிய கட்சிகள் தங்கள் ஆள்களையே சுயேச்சையாக போட்டியிடச் செய்து கூடுதலாக வாக்குச் சாவடி முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். இதனால் தேர்தல் நேரத்தில் பரபரப்பும், பதட்டமும், வன்முறையும் நிகழ்கின்றன.
சுயேச்சை வேட்பாளர்கள் அரசியல் நோக்கம் ஏதுமின்றி, வெறும் கைக்கூலிகளாக போட்டியிடுவதைத் தடுக்க தகுந்த வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
பத்தாவதாக, தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். குறிப்பாக, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கட்டாயமாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட வேண்டும். இராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கென செட்டிக்குளம் கிராமத்தில் இரண்டு வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒட்டுமொத்த தொகுதியிலேயே இந்த இரண்டு மையங்களில் மட்டும்தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாயின. வாக்களிக்காத அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மறுக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட வேண்டும்.
இன்றே, இப்போதே, இங்கேயே தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டாக வேண்டும். இல்லையென்றால், தேர்தல்கள் இன்னும் மிக மோசமாகச் சீரழியும். பணநாயகம் வளர்ந்து, ஜனநாயகம் அழிந்து, சர்வாதிகாரம் தலைதூக்கும், சர்வநாசமும் வந்து சேரும்.
கட்டுரையாளர்:
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
பச்சைத் தமிழகம் கட்சி.