கட்டுரைகள்

இரட்டை குடியுரிமை கிடைக்குமா?

தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகளைப் பொறுத்தவரைக்கும் இன்னும் திசைதெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பொ. ஜெயசந்திரன்

தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகளைப் பொறுத்தவரைக்கும் இன்னும் திசைதெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் வெள்ளைக்கார நாட்டைத்தேடி சென் றவர்கள் அந்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி, அரசியல் பதவி, பெரிய நிறுவனங்கள் நடத்துதல் இப்படி அனைத்தையும் அனுபவிக்கிறார்கள். கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து இப்படி சில நாடுகளில் இலங்கைத் தமிழர்களின் கை ஓங்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

இவர்களின் வாக்குகள் அங்குள்ள அரசியல்வாதிகளின் வெற்றி, தோல்வியை உறுதி செய்வதற்கு பெரிய பங்காற்றுகின்றன. ஆனால், உள்நாட்டுப் போர் நடந்த 1990களில் தமிழ்நாட்டைத் தேடி அடைக்கலம் வந்தவர்களின் நிலைமை தற்போது எப்படி இருக்கிறது என்று சற்றே யோசித்து பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

சில முகாம்களில் இருக்கும் வீடுகள் வெறும் 10க்கு 10 என்ற அளவில் மட்டுமே தான் இருக்கின்றன; அந்த வீட்டில் குறைந்தபட்சம் 4 நபர்கள் இருக்கிறார்கள். அந்த வீட்டிற்கும் பக்கத்தில் உள்ள வீட்டிற்கும் இடைவெளியே இருக்காது. இரு சக்கர வாகனம் போகிற பாதை மட்டுமே இருக்கும்.

அதுவும் இப்போது அந்த இடத்தில் தண்ணீர்க் குழாய் பதிப்பதற்கு தோண்டி விட்டார்கள். இதனால் சில இடங்களில் இரு சக்கர வாகனம் போகிற அளவிற்கு கூட பாதை இருக்காது.

எந்த வீடு எப்போது உடைந்து விழும் என்ற பயத்துடன் குடும்பம் நடத்துகிற குடும்பங்களும் இருக்கின்றன. அப்படி இருக்கிற அந்த வீடுகளை சீரமைப்பதற்கு தமிழக அரசு நிதியுதவி அளித்து ஒவ்வொரு முகாம்களுக்கும் கணக்கெடுத்து சீர்செய்தனர். அதையும் அரசியல் செல்வாக்குடன் "டெண்டர்' எடுத்தவர்கள் கடமைக்குத்தான் செய்துள்ளார்கள்.

இது போன்ற பல இன்னல்களைத் தாங்கும் அகதிகளுக்கு அதைவிட தொந்தரவு அரசு அதிகாரிகள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இவ்வாண்டு மார்ச் 6-ஆம் தேதி நண்பகல் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் இருக்கிற ஓர் அகதி முகாமில், வருவாய்த்துறை அதிகாரிகள் தணிக்கை என்ற பெயரில் அகதிகளைத் துன்புறுத்தியதாகவும் அதன் காரணமாக ஒருவர் செல்லிடப் பேசி கோபுரத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார் எனப்படுகிறது. இதை நேரடியாக பதிவு செய்து ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

அடுத்த நொடியே உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்கள் மத்தியிலும் இக்காட்சி சோகமடைய வைத்தது. சமூக வலைத்தளங்களில் தமிழக அரசுக்குப் பலர் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி கொட்டித்தீர்த்தனர்.

இது போன்ற சில துயரங்கள் நிகழ்ந்தாலும், அரசு நலத்திட்டங்களை வழங்குவதில் எந்த குளறுபடியும் தற்போது இருப்பதில்லை. குறிப்பாக மாதாந்திர பணக்கொடை முன்பு குறைந்த தொகை வழங்கினாலும் பிறகு 4.8.2011 முதல் குடும்பத் தலைவருக்கு ரூ.1,000, 12 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு ரூ.750, 12 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு ரூ.400 வீதமும் வழங்கப்படுகின்றன. அதுபோல் 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 6 கிலோ அரிசி அளவிலும், ஒவ்வொரு குடும்பம் பெறும் மொத்த அளவில் முதல் 20 கிலோ அரிசி இலவசமாகவும், மீதமுள்ள அரிசி ஒரு கிலோ ரூ. 0.57 காசு என்ற மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. ஆண்டிற்கு ஒருமுறை கோ-ஆப்டெக்ஸ் மூலமாக கூப்பன் முறையில் துணிகள் வழங்கப்படுகின்றன. முகாமில் வசிப்போர் எவரேனும் இறக்க நேரிட்டால். அவர்களது ஈமக் கிரியை செலவீனமாக அக்குடும்பத்திற்கு ஈமக் கிரியை உதவித்தொகை ரூ.5,000 வழங்கப்படுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மருத்துவ வசதி பெறும் 19 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் ரூ.12,000 வழங்கப்படுகிறது. இதுபோல் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், 12-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வியுடன் இலவசப் பாடப் புத்தகங்கள், மதிய உணவு, இலவச சீருடை, இலவச பேருந்துப் பயண அட்டை, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி போன்ற சலுகைகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.

இப்படி அனைத்து திட்டங்கள் இருந்தாலும் அவர்களுக்கான சுதந்திரம் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. முகாம்களில் இருப்பவர்கள் வெளியில் திருமணம் செய்வதற்கு முன்வருகிறார்கள். ஆனால், இங்கு அவர்களுக்கான சொந்தம் இடம், குடியுரிமை போன்ற எந்த ஒரு நிலைப்பாடும் இல்லாத காரணத்தால் சில விஷயங்கள் தடைபடுகின்றன. சுமாராக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்தபோது ஒருவருக்கு 15 வயதாக இருந்தால் அவருக்கு தற்போது 41 வயதாக இருக்கிறது. ஆனால், அவர் இன்னும் தமிழனாக வாக்களிக்க முடியவில்லை என்ற எண்ணம் இருக்கிறது. எவ்வளவு நலத்திட்டங்கள் வழங்கினாலும் இது போன்ற ஒரு உரிமை கொடுக்கவில்லை என்றால் அனைத்தும் வீண் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவேன் என்ற அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார். அதன்படியே அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அகதி என்ற வார்த்தைக்கு விரைவில் முற்றுப்புள்ளிக் கிடைக்கும் என நம்புவோம்.

(இன்று உலக அகதிகள் தினம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT