கட்டுரைகள்

“உலகில் அதிகம் சம்பளம் பெறத் தகுதியான உத்தியோகம் எது?” - இந்தியாவின் மனுஷி சில்லாரை உலக அழகியாக்கிய அந்தப் பதில்...

பவித்ரா முகுந்தன்

1951-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உலக அழகி போட்டியில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல அழகிகள் பங்கு பெறுவதுண்டு. இன்னிலையில், 2017-ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி சீனாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் 108 நாடுகளின் சார்பில் 118 பேர் அந்த ஒரு பட்டத்திற்கு போட்டியிட்ட நிலையில் இந்தியாவின் மனுஷி சில்லார் மகுடம் சூடினார். 

ஏற்கனவே உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா மூகே (1999), பிரியங்கா சோப்ரா (2000) ஆகியோரின் வரிசையில் 17 ஆண்டுகள் கழித்து இடம் பிடித்துள்ளார் மனுஷி சில்லார். உலக அழகி என்பவர் வெறும் வெளித் தோற்றத்தை வைத்து மட்டும் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை, உலகி அழகி எனப்பட்டும் அந்தப் பட்டத்தை வெல்ல புற அழகைக் காட்டிலும் அக அழகு அதிகம் தேவைப் படுகிறது. போட்டியாளர்களின் புத்தி கூர்மை, பேச்சு திறன், முடிவெடுக்கும் சாதுரியம் ஆகியவையும் நடுவர்களால் மிகவும் கவனமாக பரிசீலிக்கப்படுகிறது. அதனாலேயே உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி 5 போட்டியாளர்களிடம் மிகவும் சாமர்த்தியமாக யோசித்துப் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் கேட்கப்படும்.

இந்த ஆண்டு கேட்கப்பட்ட அந்த 5 கேள்விகளும் அதற்கு அழகிகள் கூறிய பதில்களும் என்னென்ன தெரியுமா?

1.  ஸ்டஃபனி ஹில் - இங்கிலாந்து:

கேள்வி: உலகில் உள்ள அனைத்துத் தலைவர்கள் முன்னிலையிலும் நீங்கள் பேச வேண்டும் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பு என்னவாக இருக்கும்?

பதில்: அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நான் நிச்சயம் உலக சுகாதாரம் குறித்தும், சுகாதார வசதிகளில் நாடுகளுக்கு இடையே இருக்கும் முரண்பாடுகளைக் கலைவது குறித்தும் பேசுவேன். என்னுடைய நாடு மருத்துவ வசதிகளில் வழங்குவதில் மிகவும் சிறப்பாக செயல்படும் ஒன்று, ஆனால் உலகில் பல நாடுகளில் வாழும் மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை, இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பது குறித்தே நான் பேசுவேன்.

2. ஏரோரே கிச்செனின் - ஃபிரான்ஸ்:

கேள்வி: உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது? ஏன்?

பதில்: என்னைப் பொருத்த வரையில் அது போக்குவரத்து தான். அந்தக் கண்டுபிடிப்பே நாடுகளுக்கு இடையே நாம் தொடர்பு கொள்ள உதவுகிறது.

3. மனிஷி சில்லார் - இந்தியா:

கேள்வி: உலகில் அதிகம் சம்பளம் பெறுவதற்கான தகுதியுடைய உத்தியோகம் எது? ஏன்?

பதில்: உலகிலேயே அதிகம் மதிப்பிற்குரியவர் தாய், மிகவும் அதிக சம்பளம் பெறும் தகுதியுடையவர்களும் அவர்கள் தான். மேலும் சம்பளம் என்பது வெறும் பணம் மட்டும் கிடையாது என்னைப் பொருத்தவரை அது அன்பும், மரியாதையும். நமக்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள் அவர்கள், ஆகையால் உலகிலேயே அதிகமான சம்பளமாக அன்பையும், மரியாதையையும் பெற தகுதியானவர்கள் அவர்கள் தான்.

4. மாக்லின் ஜெருடோ - கென்யா:

கேள்வி: ‘சைபர் புல்லிங்’ இன்று உலகளவில் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது, நீங்கள் அதற்கு எப்படித் தீர்வு காண்பீர்கள்?

பதில்: சைபர் புல்லிங் செய்பவர்கள் பதிக்கப்படுபவர்களைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும், தன்னுடைய ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றுவதற்கு முன்பு ஒவ்வொருவரும் சற்று சிந்திக்க வேண்டும்.

5. ஆண்டிரியா மீஸா - மெக்சிகோ:

கேள்வி: உலக அழகிக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு என்ன?

பதில்: அது அன்பு, தன் மீது அன்பு செலுத்துவதோடு உலகில் உள்ள மற்றவர்களிடமும் அதை வெளிப்படுத்த வேண்டும். இதுவே உலக அழகிக்குத் தேவையான முக்கிய பண்பு.

ஒவ்வொரு ஆண்டும் இந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றவர் கூறும் பதில்கள் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருக்கும், இதற்கு முன்  ஐஸ்வர்யா ராய் கூறிய பதில் பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும், அதே போல் மனுஷி கூறி இருக்கும் இந்தப் பதில் அரங்கையே அதிர வைத்துள்ளது. இறுதி முடிவுகள் சொல்லும் தருவாயில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரங்கத்தில் இருந்த அனைவரும் ஒருமித்த குரலில் ‘இந்தியா’ ‘இந்தியா’ என கோஷம் எழுப்பினர். மிகவும் தந்திரமான இந்தக் கேள்விக்கு சற்றும் தடுமாறாமல் சாதுரியமான மனுஷியின் இந்தப் பதிலே இன்று அவருக்கு ‘உலக அழகி 2017’ என்ற பட்டத்தை பெற்று தந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT